திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அரசன் ஆகாபும் அரசி ஈசபேலும் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைக் கவர திட்டம் வகுத்தல். ஓவியர்: ஃப்ரெடெரிக் லைட்டன். ஆண்டு: சுமார் 1863. காப்பிடம்: ஸ்கார்பரோ, ஐக்கிய இராச்சியம்.

1 அரசர்கள் (The First Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

நாபோத்தின் திராட்சைத் தோட்டம்[தொகு]


1 இவற்றுக்குப் பின் நிகழ்ந்ததாவது: இஸ்ரியேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரியேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
2 ஆகாபு நாபோத்திடம், "உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகிலிருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்து விடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்" என்றான்.
3 அதற்கு நாபோத்து ஆகாபிடம், "என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!" என்றான்.
4 "என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்" என்று இஸ்ரியேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான்.
5 அப்போது அவனுடைய மனைவி ஈசபேல அவனிடம் வந்து "நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?" என்று அவனைக் கேட்டாள்.
6 அதற்கு அவன் அவளிடம், "நான் இஸ்ரியேலனாகிய நாபோத்திடம் பேசினேன். 'உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்து விடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்' என்றேன். அதற்கு அவன் 'என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்' என்று சொல்லிவிட்டான்" என்றான்.
7 அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நேக்கி "இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்" என்றாள்.
8 எனவே அவன் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள்.
9 அம்மடல்களில் அவள், "நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள். [1]
10 அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவி விட்டு, 'நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்' என்று அவன் மீது குற்றம் சாட்டச்செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்" என்று எழுதியிருந்தாள்.


11 நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர்.
12 அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர்.
13 அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, "நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்" என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர்.
14 பிறகு அவர்கள் "நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்" என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர்.
15 நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, "நீர் எழுந்து சென்று இஸ்ரியேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்" என்றாள்.
16 நாபோத்து இறந்துபோனதை ஆகாபு கேட்டு, இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.


17 அந்நேரத்தில் திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு:
18 "நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான்.
19 நீ அவனிடம் சொல்ல வேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்."
20 அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, "என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?" என்று கேட்டான். அதற்கு அவர் "ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய்.
21 இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாகினும், அடிமைகளாயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன்.
22 நெபாற்றின் மகன் எரொபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல, உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில் நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய்.
23 மேலும் ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்லுவது: இஸ்ரயேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும். [2]
24 ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால், நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்" என்றார்.


25 ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றவிட்ட ஆகாபைப்போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில் அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் தூண்டிவிட்டாள்.
26 மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்து கொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான்.


27 அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; பணிவோடு நடந்துகொண்டான்.
28 அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு:
29 "என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைத் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்."

குறிப்புகள்

[1] 21:9 = 1 அர 22:38.
[2] 21:23 = 2 அர 9:36.

அதிகாரம் 22[தொகு]

இறைவாக்கினர் மீக்காயா ஆகாபைக் கண்டித்தல்[தொகு]

(2 குறி 18:2-27)


1 மூன்று ஆண்டுகளாகச் சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்குமிடையே போர் எதுவும் நடக்கவில்லை.
2 ஆனால் மூன்றாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்து இஸ்ரயேலின் அரசனான ஆகாபைக் காண வந்தான்.
3 இஸ்ரயேலின் அரசன் தன் அலுவலரை நோக்கி, "இராமோத்து-கிலயாது நமக்குரியது என்று அறியீர்களோ? ஆயினும் அதைச் சிரியாவின் மன்னனிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏதும் நாம் செய்யாதிருக்கிறோமே?" என்று கூறியிருந்தான்.
4 எனவே அவன் யோசபாத்திடம், "இராமோத்து-கிலாயாதோடு போரிட என்னுடன் வருகின்றீரா?" என்று கேட்டான். அதற்கு யோசபாத்து இஸ்ரயேலின் அரசனை நோக்கி, "உம்மைப் போலவே நானும் தயார்; உம் மக்களைப் போலவே என் மக்களும்; உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும்" என்றான்.


5 யோசபாத்து மீண்டும் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, "ஆண்டவரின் வாக்கு யாது என்று இன்று நீர் கேட்டறிய வேண்டும்" என்றான்.
6 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, "நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்" என்றனர்.


7 பின்பு யோசபாத்து, "ஆண்டவரின் திருவாக்கினருள், ஒருவரேனும் இங்கில்லையா? அவரிடமும் இதுபற்றி நாம் கேட்டறியலாமே?" என்றான்.
8 அப்போது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "இம்லாவின் மகன் மீக்காயா என்னும் ஒருவன் இருக்கிறான். அவன்மூலம் ஆண்டவரைக் கேட்டறிந்து கொள்ளலாம். ஆனால் அவனை நான் வெறுக்கிறேன். ஏனெனில் அவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைக்கிறான்" என்றான். அதற்கு யோசபாத்து, "அரசே! நீர் அப்படிச் சொல்ல வேண்டாம்" என்றான்.
9 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஒர் அண்ணகனைக் கூப்பிட்டு, "இம்லாவின் மகன் மீக்காயாவை விரைவில் அழைத்து வா" என்றான்.
10 இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச உடை பூண்டு தம்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் பொய்வாக்கினரும் அவர்களுக்கு முன்பாக வாக்குரைத்துக் கொண்டிருந்தனர்.
11 கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, "'இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அவர்களை அழித்துவிடுவீர்,' என்று ஆண்டவர் கூறுகின்றார்" என்றான்.
12 அவ்வாறே மற்றெல்லாப் பொய்வாக்கினரும் வாக்குரைத்துக்கொண்டிருந்தனர்; "இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி கொள்வீர். ஏனெனில் அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்" என்றனர்.


13 மீக்காயாவை அழைக்கச் சென்ற தூதன் அவரிடம், "இதோ! இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்பட அரசருக்கு உகந்ததாகவே இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கு அவர்களது வாக்கைப் போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்!" என்றான்.
14 அதற்கு மீக்காயா, "ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்வதையே நான் உரைப்பேன்" என்றார்.
15 அவர் அரசன் முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி "மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின்மீது போரிடப் போகலாமா? கூடாதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "போகலாம்! வெற்றிகொள்வீர்! அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்!" என்றார்.
16 அப்பொழுது அரசன் அவரிடம், "ஆண்டவர் பெயரால் உண்மையைத் தவிர வேறெதையும் என்னிடம் சொல்லலாகாது என்று எத்தனை முறை உன்னை ஆணையிட வைப்பது?" என்றான்.
17 அதற்கு அவர், "இஸ்ரயேலர் அனைவரும் ஆயன் இல்லா ஆடுகளைப் போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர் கூறியது: இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவனும் அமைதியாகத் தன் சொந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும்" என்றார். [1]
18 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "'இவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைப்பான்' என்று உம்மிடம் நான் கூறவில்லையா?" என்றான்.
19 மீக்காயா மீண்டும் கூறியது: "ஆண்டவரின் வாக்கைக் கேளும்; ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும் இடத்திலும் நின்றனர். [2]
20 அப்பொழுது ஆண்டவர் 'இராமோத்து-கிலயாதைத் தாக்கி வீழ்ச்சியுறும்படி ஆகாபைத் தூண்டிவிடக் கூடியவன் யாரேனும் உண்டா?' என்று கேட்டார். அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, வேறொருவன் வேறொன்றைச் சொன்னான்.
21 இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, 'நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.' என்றது. அதற்கு ஆண்டவர், 'அது எப்படி?' என்றார்.
22 அப்பொழுது அது, 'நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்' என்றது. அதற்கு அவர், 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்' என்றார்.
23 ஆதலால், இங்குள்ள உம்முடைய எல்லாப் போலி இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும்படி ஆவியை ஆண்டவர் ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்குத் தீங்கானவற்றையே கூறியிருக்கிறார்" என்றார்.


24 அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா, மீக்காயாவின் அருகே வந்து, அவரைக் கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி உன்னிடம் பேசும்படி எப்படி என்னை விட்டுவிட்டு வந்தது?" என்று கேட்டான்.
25 அதற்கு மீக்காயா, "நீ உன் அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளன்று, அதைத் தெரிந்து கொள்வாய்" என்றார்.
26 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் கட்டளையிட்டது: "மீக்காயாவைக் கைது செய்து அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும் அரசனின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.
27 நீங்கள், 'அரசர் கூறுவது இதுவே: போரை முடித்து நலமாய் நான் திரும்பும் வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள். இவனுக்குச் சிறிதளவு அப்பமும் தண்ணீருமே கொடுத்து வாருங்கள்' என்றும் கூறுங்கள்."
28 அப்பொழுது மீக்காயா, "நலமாய் நீர் திரும்பி வந்தீரானால், ஆண்டவர் என் மூலம் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே! நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

ஆகாபின் சாவு[தொகு]

(2 குறி 18:28-34)


29 பின்பு இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் இராமோத்து-கிலயாதை நோக்கிச் சென்றனர்.
30 இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "நான் மாறுவேடம் பூண்டு போர்க்களத்திற்கு வருவேன். ஆனால் நீர் அரச உடைகளை அணிந்துகொள்ளும்; என்று சொன்னான். அவ்வாறே இஸ்ரயேலின் அரசன் மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.


31 இப்படியிருக்க, சிரியாவின் மன்னன் தன் முப்பத்திரண்டு தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி, "நீங்கள் சிறியோர், பெரியோர் யாரோடும் போரிடாமல் இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான்.
32 ஆதலால் தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், இவன்தான் இஸ்ரயேலின் அரசன் என்று நினைத்து அவனைத் தாக்குவதற்காக அவன்மேல் பாய்ந்தார்கள். அப்பொழுது யோசபாத்து பெரும் கூக்குரலிட்டான்.
33 அதனால், அவன் இஸ்ரயேலின் அரசன் இல்லை என்று கண்டுகொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை மேலும் தொடரவில்லை.
34 ஆயினும் ஒருவன் வில்லை நாணேற்றிச் சரியாய்க் குறிவைக்காது அம்பை எய்தான். அது இஸ்ரயேல் அரசனது கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. எனவே அவன் தன் தேரோட்டியை நோக்கி, "தேரைத் திருப்பிப் போர் முனையினின்று வெளியே என்னைக் கொண்டு போ; ஏனெனில் நான் காயமுற்றிருக்கிறேன்" என்றான்.
35 அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால், தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான்.
36 கதிரவன் மறைந்த நேரத்தில் 'ஒவ்வொருவரும் அவரவர் தம் நாட்டுக்கும், தம் நகருக்கும் திரும்பட்டும்' என்ற குரல் படை முழுவதும் எதிரொலித்தது.
37 இவ்வாறு அரசன் இறந்து, சமாரியாவிற்குக் கொண்டு வரப்பட்டான். சமாரியாவில் அவனை அடக்கம் செய்தனர்.
38 சமாரியாக் குளத்தில் அவனது தேரையும் கவசத்தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின.


39 ஆகாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் மாளிகை கட்டியதும், பல்வேறு நகர்கள் எழுப்பியதும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
40 ஆகாபு தன் மூதாதையரோடு துயில் கொண்ட பின், அவன் மகன் அகசியா அரியணை ஏறினான்.

யூதா அரசன் யோசபாத்து[தொகு]

(2 குறி 20:31-21:1)


41 இஸ்ரயேலின் அரசன் ஆகாபு ஆட்சி தொடங்கிய நான்காம் ஆண்டில், ஆசாவின் மகன் யோசபாத்து யூதாவின் அரசன் ஆனான்.
42 யோசபாத்து ஆட்சி தொடங்கிய பொழுது, அவனுக்கு வயது முப்பத்தைந்து. அவன் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான். சில்கியின் மகளான அசுபா என்பவளே அவனுடைய தாய்.
43 அவன் தன் தந்தை ஆசாவின் வழிகள் அனைத்திலும் நடந்தான். அவற்றினின்று அவன் பிறழவில்லை. ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்துகொண்டான். ஆயினும் அவன் தொழுகை மேடுகளை உடைத்தெறியவில்லை. மக்கள் அம்மேடைகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தனர்.


44 யோசபாத்து இஸ்ரயேலின் அரசனுடன் நல்லுறவு கொண்டிருந்தான்.
45 யோசபாத்தின் பிற செயல்களும், அவன் காட்டிய வீரமும், அவன் புரிந்த போர்களும் 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?


46 அவன் தந்தை ஆசாவின் காலத்தில் எஞ்சியிருந்த விலை ஆடவர்களுள் ஒருவரும் நாட்டில் இராதவாறு யோசபாத்து அவர்களை ஒழித்துக்கட்டினான்.
47 அப்போது ஏதோமில் மன்னன் இல்லாததால் ஒரு பிரதிநிதியே மன்னனாய் இருந்தான்.
48 யோசபாத்து தங்கம் கொண்டு வருவதற்காக ஓபீருக்குச் செல்லும் தர்சீசுக் கப்பல்களைக் கட்டினான். ஆனால் அவை அங்குப் போய்ச் சேரவில்லை. ஏனெனில் அவை எசியோன் கெபேரில் உடைந்து போயின.
49 அப்போது ஆகாபின் மகன் அகசியா யோசபாத்தை நோக்கி, "என்னுடைய பணியாளர் உம் பணியாளரோடு கப்பலில் செல்லட்டும்" என்று கேட்டுக்கொண்டான். ஆனால் அதற்கு யோசபாத்து இணங்கவில்லை.

இஸ்ரயேலின் அரசன் அகசியா[தொகு]


50 யோசபாத்து தன் மூதாதையருடன் துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் யோராம் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.
51 யூதாவின் அரசன் யோசபாத்தின் பதினேழாம் ஆட்சி ஆண்டில் ஆகாபின் மகன் அகசியா இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
52 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலும் தம் தாயின் வழியிலும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் வழியிலும் நடந்தான்.
53 மேலும், அவன் பாகாலையும் வணங்கி வழிபட்டு எல்லாவற்றிலும் தன் தந்தை வழிநின்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.

குறிப்புகள்

[1] 22:17 = எண் 27:17; மத் 9:36; மாற் 6:34.
[2] 22:19 = எசா 6:1; யோபு 1:6.


(அரசர்கள் - முதல் நூல் நிறைவுற்றது)(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை