திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை
இணைச் சட்டம்
[தொகு]அதிகாரங்கள் 23 முதல் 24 வரை
அதிகாரம் 23
[தொகு]ஆண்டவரின் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டவர்கள்
[தொகு]
1 விதையடிக்கப்பட்டவனும் ஆண் குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.
2 வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.
3 அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எவரும் எக்காலத்திலும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையக்கூடாது.
4 ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்வழியில் அவர்கள் அப்பங்களோடும் தண்ணீரோடும் உங்களை எதிர்கொள்ளவில்லை. அத்தோடு, ஆராம் நகராயிலுள்ள பெத்தோர் எனும் ஊரிலிருந்து பெகோரின் மகன் பிலயாமை உன்னைச் சபிக்கும்படி கூலிக்கு அமர்த்தினார்கள். [1]
5 ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவர் பிலயாமுக்குச் செவிகொடுக்க மனமின்றி, சாபத்தை உனக்கு ஆசியாக மாற்றினார். ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்மீது அன்புகூர்கிறார். [2] [3]
6 உன் வாழ்நாள் எல்லாம் நீ அவர்களது நல்லுறவையும் நலத்தையும் நாடாதே.
7 ஏதோமியனை வெறுக்காதே; ஏனெனில் அவன் உன் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதே; ஏனெனில் அவன் நாட்டில் நீ அன்னியனாய் வாழ்ந்தாய்.
8 அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறை தொடங்கி ஆண்டவரின் திருப்பேரவைக்குள் வரலாம்.
பாளையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல்
[தொகு]
9 நீ உன் பகைவருக்கு எதிராகச் சென்று பாளையம் இறங்கியிருக்கையில் எல்லாத் தீச்செயல்களிலிருந்தும் விலகியிரு.
10 உங்களில் ஒருவன் இரவில் நிகழ்ந்த செயலால் தீட்டுப்பட்டிருந்தால், அவன் பாளையத்திற்கு வெளியே செல்லட்டும். பாளையத்திற்குள்ளே வரக்கூடாது.
11 மாலையானதும் நீரில் குளித்து கதிரவன் மறைந்ததும் அவன் பாளையத்துக்குள் வரட்டும்.
12 நீ வெளிக்குச் செல்வதற்கெனப் பாளையத்திற்கு வெளியே ஓர் இடம் இருக்கட்டும்.
13 படைக்கலன்களோடு ஒரு மண்வெட்டியும் வைத்துக்கொள். நீ வெளிக்குச் செல்கையில் அதனால் ஒரு குழி தோண்டு. நீ கழித்ததை அதனால் மூடிவிட்டுத் திரும்பு.
1
4 ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காக்கவும் உன் பகைவர்களை உன்னிடம் ஒப்படைக்கவும் பாளையத்துக்குள்ளே உலா வருகிறார். அவர் உன்னிடத்தில் கழிவைக்கண்டு உன்னைவிட்டு விலகாதவாறு உன் பாளையம் தூய்மையாய் இருக்கட்டும்.
பிற சட்டங்கள்
[தொகு]
15 தம் தலைவனிடமிருந்து தப்பிவந்து உன்னிடம் அடைக்கலம் தேடியுள்ள அடிமைகளை அவனிடம் ஒப்படைக்காதே.
16 உன் குடியிருப்பு ஒன்றில் தமக்குப் பிடித்தமானதைத் தேர்ந்து கொண்டு அவர்கள் உன்னோடு உன்னிடையே இருப்பாராக. நீ அவர்களைக் கொடுமைப்படுத்தாதே.
17 இஸ்ரயேலின் புதல்வியருள் எவளும் விலைமகளாய் இருத்தலாகாது. இஸ்ரயேலின் புதல்வர் எவனும் விலைமகனாய் இருத்தலாகாது. [4]
18 விலைமாதின் வாடகையையோ, விலை மகளின் கூலியையோ எவ்வித நேர்ச்சையின் பொருட்டும் உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வராதே. ஏனெனில், இவை இரண்டுமே அவருக்கு அருவருப்பானவை.
19 உன் இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே.
20 வேற்று இனத்தானிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே. [5]
21 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்திருந்தால், அதைச் செலுத்துவதற்குக் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், அது உனக்குப் பாவமாகும். உன் கடவுளாகிய ஆண்டவரும் அதை உன்னிடம் கேட்பார் என்பது உறுதி. [6]
22 ஆனால் நேர்ச்சை செய்யாதிருந்தால் அது உனக்குப் பாவமாகாது.
23 உனது வாயால் வாக்களித்து, உன் சொந்த விருப்பத்தினால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்வதால் உன் வாயால் சொல்வதைச் செயலில் காட்டக் கருத்தாயிரு.
24 உனக்கு அடுத்திருப்பவனின் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றால், உன் விருப்பம்போல் திராட்சையை உண்ணலாம்; ஆனால் உன் கூடையில் எதையும் வைத்தலாகாது.
25 உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன்கையால் கதிர்களைக் கொய்யலாம்; ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே.
- குறிப்புகள்
[1] 23:4 = எண் 22:1-6.
[2] 23:3-5 = நெகே 13:1-2.
[3] 23:5 = எண் 23:7-24:9.
[4] 23:17 = லேவி 19:29.
[5] 23:19-20 = விப 22:25; லேவி 25:36-37; இச 15:7-11.
[6] 23:21 = எண் 30:1-16; மத் 5:33.
அதிகாரம் 24
[தொகு]மணவிலக்கும் மறு மணமும்
[தொகு]
1 ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். [1]
2 அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள்.
3 இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, முறிவுச்சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான், அல்லது அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்ட இரண்டாம் கணவன் இறந்துவிடுகிறான்.
4 இந்நிலையில், அவள் தீட்டுப்பட்டுவிட்ட காரணத்தால், அவளைத் தள்ளிவைத்த முதல் கணவன் அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அது ஆண்டவர் முன்னிலையில் வெறுப்பானதாகும். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டை நீ பாவத்துக்கு உள்ளாக்காதே!
பிற சட்டங்கள்
[தொகு]
5 ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம் செய்திருந்தால், அவன் போருக்குப் போக வேண்டாம். அவன்மீது யாதொரு பொறுப்பும் சுமத்தப்படலாகாது. அவன் ஓராண்டு காலம் எவ்வித இடையூறுமின்றித் தன்வீட்டில் இருந்துகொண்டு தன் மனைவியை மகிழ்விப்பான்.
6 மாவரைக்கும் கல்லின் கீழ்க்கல்லையாவது மேற்கல்லையாவது அடகாக வாங்காதே. அது அவன் மனித உயிரை அடகாக வாங்குவது போலாகும்.
7 இஸ்ரயேலின் மக்களாகிய தன் இனத்தாருள் ஒருவரைக் கடத்திக் கொண்டு போய் அவரை அடிமையாக நடத்துவதாக அல்லது விற்பதாக ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கடத்தல்காரன் சாகட்டும். இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று. [2]
8 தொழுநோயைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. லேவிய குருக்கள் உனக்குக் கற்பிப்பதுபோல் அனைத்தையும் செய்வதில் மிகக் கவனமாயிரு. நான் அவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளவாறு செய்வதில் கருத்தாயிரு. [3]
9 எகிப்திலிருந்து நீ புறப்பட்டு வரும் வழியில் உன் கடவுளாகிய ஆண்டவர் மிரியாமுக்குச் செய்ததை நினைவில் இருத்து. [4]
10 உனக்கு அடுத்திருப்பவருக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அதற்கு அடகாக எதையும் வாங்க அவரது வீட்டினுள் நுழையாதே.
11 வெளியே நில். உன்னிடம் கடன் வாங்கியவர், வெளியே உன்னிடம் அடகைக் கொண்டுவரட்டும்.
12 அவர் வறியவராயின், நீ அந்த அடகை வைத்துக்கொண்டு தூங்கச் செல்லாதே.
13 மாறாக, கதிரவன் மறைவதற்குள் அந்த அடகை அவரிடம் நீ திருப்பிக்கொடுத்தாக வேண்டும். அதனால், அவர் தம் மேலாடையை விரித்துப் படுக்கும்போது உனக்கு ஆசி வழங்குவார். உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீ ஏற்புடையவன் ஆவாய். [5]
14 வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன்நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அன்னியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே.
15 அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது. இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார். அப்போது அது உனக்குப் பாவமாகும். [6]
16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும். [7]
17 அன்னியர் அல்லது அனாதைக்கு உரிய நீதியைப் புரட்டாதே. கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே.
18 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை விடுவித்ததையும் நீ நினைவில் இருத்தி, இவற்றைச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். [8]
19 உன் வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
20 நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.
21 நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. [9]
22 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
- குறிப்புகள்
[1] 24:1 = மத் 5:31; 19:7; மாற் 10:4.
[2] 24:7 = விப 21:16.
[3] 24:8 = லேவி 13:1-14:54.
[4] 24:9 = எண் 12:10.
[5] 24:10-13 = விப 22:26-27.
[6] 24:14-15 = லேவி 19:13.
[7] 24:16 = 2 அர 14:6; 2 குறி 25:4; எசே 18:20.
[8] 24:17-18 = விப 23:9; லேவி 19:33-34; இச 27:19.
[9] 24:19-21 = லேவி 19:9-10; 23:22.
(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை