திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை
எசாயா (The Book of Isaiah)
[தொகு]அதிகாரங்கள் 29 முதல் 30 வரை
அதிகாரம் 29
[தொகு]எருசலேமின் நிலைமை
[தொகு]
1 தாவீது பாசறை அமைத்த நகராகிய அரியேல்! [1] அரியேல்!
உனக்கு ஐயோ கேடு!
ஆண்டிற்குப்பின் ஆண்டு கடந்து வரட்டும்;
விழாக்கள் முறைமுறையாய் வந்து போகட்டும்.
2 அரியேலுக்கு நான் இடுக்கண் விளைவிப்பேன்;
அங்கு அழுகையும் புலம்பலும் நிறைந்திருக்கும்;
அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.
3 உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்;
உன்னைப் போர்க் கோபுரங்களால் சூழ்ந்து வளைப்பேன்;
உனக்கெதிராய் முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.
4 தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்;
நலிந்த உன் குரல் புழுதியிலிருந்து எழும்பும்;
உன் குரல், இறந்தவன் ஆவியின் ஒலிபோல,
மண்ணிலிருந்து வெளிவரும்;
உன் பேச்சு புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.
5 உன் பகைவனின் திரள் நுண்ணிய தூசிபோல் இருக்கும்;
கொடியவர் கூட்டம் பறக்கும் பதர் போலிருக்கும்;
இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.
6 இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல்,
சூறாவளி, புயல்காற்று விழுங்கும் நெருப்புப் பிழம்பு
ஆகியவற்றால் படைகளின் ஆண்டவர் உன்னைத் தண்டிப்பார்.
7 அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும்
திரளான வேற்றினத்தார் அனைவரும்
அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப் போரிட்டு
அதைத் துன்புறுத்திய அனைவரும்
கனவு போலும், கனவில் காணும் காட்சிபோலும் மறைவர்.
8 பசியாய் இருப்பவர் உண்பதாய்க் கனவு கண்டு விழித்தெழுந்து
வெறும் வயிற்றினராய் வாடுவது போலும்,
தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க் கனாக்கண்டு விழித்தெழுந்து
தீராத்தாகத்தால் தவிப்பது போலும்,
சீயோன் மலைமேல் போர் தொடுக்கும்
திரளான வேற்றினத்தார் அனைவரும் ஆவர்.
எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்படல்
[தொகு]
9 திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்;
குருடரைப்போல் இருங்கள்; பார்வையற்றவராகுங்கள்.
ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல;
தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.
10 ஏனெனில் ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை
ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்;
இறைவாக்கினராகிய உங்கள் கண்களை மூடியுள்ளார்;
திருக்காட்சியாளராகிய உங்கள் பார்வையை மறைத்துள்ளார். [2]
11 ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு
மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும்.
எழுத்தறிந்த ஒருவரிடம் "இதைப் படியும்" என்றால்,
அவர் "என்னால் இயலாது; இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே" என்பார்.
12 எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து
"இதைப் படியும்" என்றால் அவர் "எனக்குப் படிக்கத் தெரியாதே" என்பார்.
13 என் தலைவர் கூறுவது இதுவே:
வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்;
உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்;
அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது;
அவர்களது இறையச்சம் மனனம் செய்த
வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே! [3]
14 ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக
மீண்டும் வியத்தகு செயல் புரிவேன்.
அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும்.
அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்;
அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம். [4]
வருங்கால நம்பிக்கை
[தொகு]
15 ஆண்டவரிடமிருந்து தங்கள் திட்டங்களை
மனத்தின் ஆழங்களில் மறைத்துக்கொண்டு,
தங்கள் செயல்களை இருளில் செய்து,
"நம்மை எவர் காணப்போகின்றார்?
நம்மை எவர் அறியப் போகின்றார்?"
எனச் சொல்வோருக்கு ஐயோ கேடு!
16 நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன?
குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ?
கைவேலை தன் கைவினைஞனை நோக்கி
"நீர் என்னை உருவாக்கவில்லை" என்று கூறலாமோ?
வனையப்பட்டது தன்னை வனைந்தவனை நோக்கி
"உமக்கு அறிவில்லை" என்று சொல்லலாமோ? [5]
17 இன்னும் சிறிது காலத்தில்
லெபனோன் வளம் மிகு தோட்டமாக மாறுமன்றோ?
வளம் மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ?
18 அந்நாளில் காது கேளாதோர்
ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்;
பார்வையற்றோரின் கண்கள் காரிருளிலிருந்தும்
மையிருளிலிருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும்.
19 ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;
மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.
20 கொடியோர் இல்லாதொழிவர்;
இகழ்வோர் இல்லாமற் போவர்;
தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர்.
21 அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி,
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்;
பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.
22 ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர்
யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது:
இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை;
அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை.
23 அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்;
நான் செய்யவிருக்கும் என் கைவேலைப்பாடுகளைக் காணும்போது
யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்;
இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.
24 தவறிழைக்கும் சிந்தை கொண்டோர் உணர்வடைவர்;
முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.
- குறிப்புகள்
[1] 29:1 - "அரியேல்" என்பது எபிரேயத்தில்,
"இறைவனின் பெண் சிங்கம்" எனவும்
"இறைவனின் பீடம்" எனவும் பொருள்படும்.
[2] 29:10 = உரோ 11:8.
[3] 29:13 = மத் 15:8-9; மாற் 7:6-7.
[4] 29:14 = 1 கொரி 1:19.
[5] 29:16 = எசா 45:9.
அதிகாரம் 30
[தொகு]எகிப்துடன் செய்துள்ள பயனற்ற உடன்பாடு
[தொகு]
1 கலகக்காரரான புதல்வருக்கு ஐயோ கேடு! என்கிறார் ஆண்டவர்.
என்னிடமிருந்து பெறாத திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்;
என் தூண்டுதல் இன்றி உடன்படிக்கை செய்கின்றனர்;
இவ்வாறு பாவத்தின் மேல் பாவத்தைக் குவிக்கின்றனர்.
2 என்னைக் கேளாமலேயே எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;
பார்வோன் ஆற்றலில் அடைக்கலம் பெறவும்
எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும் போகின்றனர்.
3 பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு
மானக்கேட்டைக் கொணரும்;
எகிப்தின் நிழலில் புகலிடம் தேடுவது
உங்களுக்கு இகழ்ச்சி ஆகும்.
4 யூதாவின் தலைவர் சோவானுக்கு வந்தனர்;
அதன் தூதர் ஆனேசுக்குச் சென்றனர்.
5 பயனற்ற மக்களினத்தை முன்னிட்டு
அனைவரும் மானக்கேடடைவர்;
அவர்களால் யாதொரு உதவியோ பயனோ இராது;
ஆனால் மானக்கேடும் அவமதிப்புமே மிஞ்சும்.
6 நெகேபிலுள்ள விலங்கினங்களைப் பற்றிய இறைவாக்கு:
கடுந்துயரும் வேதனையும் நிறைந்த நாடு அது;
பெண்சிங்கமும் ஆண்சிங்கமும்,
விரியன் பாம்பும் பறக்கும் நாகமும் உள்ள நாடு அது!
இத்தகைய நாட்டின் வழியாய்,
கழுதைகளின் முதுகின்மேல் அவர்கள்
தங்கள் செல்வங்களையும்
ஒட்டகங்களின் திமில்கள்மேல்
தங்கள் அரும்பொருட்களையும் சுமத்தி,
முற்றிலும் பயனற்ற மக்களினங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.
7 எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது;
ஆதலால் நான் அவர்களைச்
'செயலற்ற இராகாபு' என அழைத்தேன்.
கீழ்ப்படியாத மக்கள்
[தொகு]
8 இப்பொழுது நீ சென்று அவர்கள் முன் பலகையில் பதித்து வை;
ஏட்டுச்சுருள் ஒன்றில் எழுதிவை;
வருங்காலத்திற்கென என்றுமுள சான்றாக அது விளங்கும்.
9 ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் மக்களாயும்
பொய்யுரைக்கும் பிள்ளைகளாயும்,
ஆண்டவரின் திருச்சட்டத்திற்குச்
செவிசாய்ப்பதை விரும்பாத பிள்ளைகளாயும் உள்ளனர்.
10 திருப்பார்வையாளரிடம் அவர்கள்
"திருப்பார்வை காண வேண்டாம்" என்றும்,
திருக்காட்சியாளரிடம்,
"எங்களுக்கென உண்மையானவற்றைக் காட்சி காணவேண்டாம்;
இனிமையானவற்றை எங்களுக்குக் கூறுங்கள்;
மாயமானவற்றையே கண்டு சொல்லுங்கள்;
11 தடம் மாறிச் செல்லுங்கள்;
நெறியை விட்டு விலகுங்கள்;
இஸ்ரயேலின் தூயவரை
எங்கள் பார்வையிலிருந்து அகற்றுங்கள்" என்கிறார்கள்.
12 ஆதலால் இஸ்ரயேலின் தூயவர் கூறுவது இதுவே:
என் எச்சரிக்கையை நீங்கள் அவமதித்தீர்கள்;
அடக்கி ஆள்வதிலும் ஒடுக்குவதிலும் நம்பிக்கை வைத்தீர்கள்;
அவற்றையே பற்றிக் கொண்டிருந்தீர்கள்.
13 ஆதலால், உயர்ந்த மதிற்சுவரில்
இடிந்துவிழும் தறுவாயிலுள்ள பிளவு
திடீரென்று நொடிப்பொழுதில் சரிந்து விழுவதுபோல்
இந்தத் தீச்செயல் உங்கள்மேல் விழும்.
14 அது இடிந்து வீழ்வது,
குயவனின் மட்கலம் சுக்குநூறாய் உடைந்து போவதுபோல் இருக்கும்;
அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ
பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ
உடைந்த துண்டுகளில் எதுவுமே உதவாது.
15 என் தலைவரும் இஸ்ரயேலின் தூயவருமான
ஆண்டவர் கூறுவது இதுவே:
நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால்
விடுதலை பெறுவீர்கள்;
அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்;
நீங்களோ ஏற்க மறுத்தீர்கள்.
16 "முடியாது, நாங்கள் குதிரை ஏறி
விரைந்தோடத்தான் செய்வோம்" என்கிறீர்கள்;
ஆம், தப்பியோடத்தான் போகிறீர்கள்;
"விரைந்தோடும் தேரில் ஏறிச்செல்வோம்" என்கிறீர்கள்;
ஆம், உங்களைத் துரத்தி வருபவர் விரைந்து வருவார்.
17 ஒருவன் மிரட்ட, நீங்கள் ஆயிரம் பேர் ஓடுவீர்கள்;
ஐவர் அச்சுறுத்த நீங்கள் உயிர் தப்பி ஓடுவீர்கள்;
மலை உச்சிக் கொடிமரம் போல்,
குன்றின்மேல் சின்னம்போல் எஞ்சி நிற்பீர்கள்.
18 ஆதலால் உங்களுக்குக் கருணை காட்ட
ஆண்டவர் காத்திருப்பார்;
உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார்;
ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள்;
அவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.
ஆண்டவர் தம் மக்களுக்கு வழங்கும் ஆசி
[தொகு]
19 சீயோன்வாழ் மக்களே,
எருசலேமில் குடியிருப்போரே,
நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்;
அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார்.
நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவி சாய்த்து
உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.
20 என் தலைவராகிய உங்கள் போதகர்
உங்களுக்கு துன்பமெனும் அப்பத்தையும்
ஒடுக்குதலெனும் நீரையும் கொடுத்திருந்தாலும்,
இனித் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்;
உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.
21 நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும்
"இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்"
என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.
22 அப்போது வெள்ளி பொதிந்த உங்கள் சிலைகளையும்
பொன் வேய்ந்த உங்கள் வார்ப்புப் படிமங்களையும்
தீட்டாகக் கருதுவீர்கள்;
தீட்டானவையாக அவற்றைக் கருதி
வெளியே வீசித் 'தொலைந்து போ' என்பீர்கள்.
23 நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது
ஆண்டவர் மழை பொழிவார்;
நிலத்தின் விளைவான உணவு
செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்;
அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும்.
24 முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச்
சுவையூட்டப்பட்ட தீனியை
நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும்.
25 கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவுநாளில்
வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும்
உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும்
கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும்.
26 ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி,
தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில்,
நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்;
கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல
ஏழு மடங்காகும்.
அசீரியாவுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
[தொகு]
27 இதோ, ஆண்டவரின் திருப்பெயர் தொலையிலிருந்து வருகின்றது;
அவர் கனல்கக்கும் சினத்தோடும்
பொறுக்க ஒண்ணாச் சீற்றத்தோடும் வருகின்றார்;
அவர் உதடுகள் கடும் சினத்தால் துடிக்கின்றன;
அவர் நாக்கு பொசுக்கும் நெருப்பைப் போன்றது.
28 அவர் மூச்சு, கழுத்தளவு பாயும் வெள்ளம்போல வருகின்றது;
அழிவு என்னும் சல்லடையில் மக்களினங்களைச் சலித்து
வழிதவறச் செய்யும் கடிவாளத்தை
மக்களின் வாயில் மாட்ட வருகின்றார்.
29 புனித விழாக் கொண்டாடும் இரவில் பாடுவதுபோல்
நீங்கள் மகிழ்ச்சிப் பாடல் பாடுவீர்கள்;
இஸ்ரயேலின் பாறையான ஆண்டவர் மலைக்குச் செல்லும்போது
குழலிசைத்துச் செல்வோரைப்போல் உங்கள் உள்ளம் அக்களிக்கும்.
30 ஆண்டவர் தம் மாட்சிமிகு குரலை எங்கும் ஒலிக்கச் செய்வார்;
அவர், பொங்கியெழும் சீற்றம் கொண்டு,
விழுங்கும் நெருப்பு, பெருமழை, சூறாவளிக்காற்று,
கல்மழை இவற்றால் தம் தண்டிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவார்.
31 ஆண்டவரின் குரலொலி கேட்டு அசீரியர் நடுநடுங்குவர்;
ஆண்டவர் தம் கோலால் அவர்களை அடிப்பார்.
32 உங்களின் யாழிசைக்கும்,
தம்புருவின் ஓசைக்கும் ஏற்ப,
ஆண்டவர் தம் கோலால் அடிமேல் அடி அடித்து
அவர்களை நொறுக்குவார்;
அவர்களோடு கைகளைச் சுழற்றி வன்மையாகப் போரிடுவார்.
33 ஏனெனில், முன்னரே அவர்களுக்காக
நெருப்புக்குழி ஒன்று ஏற்பாடாகியுள்ளது.
அது அரசனுக்கென்று தயார் செய்யப்பட்டது.
ஆழமும், அகலமுமான நெருப்புக்குழியால் உருவாக்கப்பட்ட அதில்
நெருப்பும், விறகுக்கட்டையும் ஏராளமாக நிறைந்துள்ளன.
ஆண்டவரின் மூச்சு கந்தக மழைபோல் அவற்றின் மேல் நெருப்பு மூட்டும்.
(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 31 முதல் 32 வரை