திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 37 முதல் 38 வரை

விக்கிமூலம் இலிருந்து
"சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்;
மாடப்புறாப்போல் விம்முகிறேன்." - எசாயா 38:14.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 37 முதல் 38 வரை

அதிகாரம் 37[தொகு]

எசாயாவின் அறிவுரையை அரசன் நாடல்[தொகு]

(2 அர 19:1-7)


1 எசேக்கியா அரசர் அதைக் கேட்டவுடன்
தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
சாக்கு உடையால் தம்மை மூடிக்கொண்டு
ஆண்டவரின் இல்லம் சென்றார்.
2 அவர் அரண்மனை மேற்பார்வையாளர் எலியாக்கிமையும்,
எழுத்தர் செபுனாவையும் குருக்களுள் முதியோரையும்
சாக்கு உடை போர்த்தியவர்களாய்
ஆமோட்சின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பிவைத்தார்.
3 அவர்கள் அவரிடம், "எசேக்கியா கூறியது இதுவே:
இந்த நாள் துன்பமும் கண்டனமும் இழி சொல்லும் நிறைந்த நாள்;
பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது;
ஆனால் பெற்றெடுப்பதற்கு ஆற்றல் இல்லை.


4 தன் தலைவனாகிய அசீரிய மன்னனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே
உயிராற்றல் நிறை கடவுளை இழித்துரைத்த சொற்களை
ஒருவேளை உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருக்கக் கூடும்.
உம் கடவுளாகிய ஆண்டவர் அச்சொற்களை முன்னிட்டு
அவர்களைக் கண்டித்தாலும் கண்டிப்பார்.
ஆதலால், இன்னும் உயிரோடிருக்கும் எஞ்சியோருக்காக
உம் மன்றாட்டை எழுப்பியருளும்" என்றார்கள்.
5 இவ்வாறு எசேக்கியா அரசனின் அலுவலர்
எசாயாவிடம் வந்து கூறியபோது,
6 அவர் அவர்களிடம் கூறியது:
"நீங்கள் உங்கள் தலைவரிடம் சொல்ல வேண்டியது இதுவே:
அசீரிய அரசனின் ஆள்கள் என்னை இழித்துரைத்த
சொற்களைக் கேட்டு நீ அஞ்சாதே.
7 இதோ நான் ஓர் ஆவியை அவனிடம் அனுப்பி
அவன் வதந்தி ஒன்றைக் கேட்குமாறு செய்வேன்;
அவனும் தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்வான்,
அவன் நாட்டிலேயே அவனை
வாளுக்கு இரையாக்குவேன்" என்கிறார் ஆண்டவர்.

அசீரியரின் அச்சுறுத்தல்[தொகு]

(2 அர 19:8-19)


8 இதற்கிடையில் அசீரிய மன்னன் இலாக்கிசு நகரைவிட்டுப் புறப்பட்டு
லிப்னாவுக்கு எதிராகப் போர் புரிந்து கொண்டிருந்ததை
இரப்சாக்கே கேள்விப்பட்டான்.
எனவே அவனும் அங்கே சென்று அசீரிய மன்னனைக் கண்டான்.
9 'எத்தியோப்பியா மன்னன் திர்காக்கா உனக்கெதிராய்ப்
போர் தொடுக்கப் புறப்பட்டு வருகிறான்'
என்ற செய்தியை அசீரிய மன்னன் கேள்விப்பட்டு
எசேக்கியாவிடம் தூதரை அனுப்பி,
10 யூதா அரசர், எசேக்கியாவிற்கு அறிவித்தது:
நீ நம்பிக்கை வைத்துள்ள உன் கடவுள்,
'எருசலேம் அசீரிய மன்னன் கையில் ஒப்புவிக்கப்படமாட்டாது'
என்று சொல்லி உன்னை ஏமாற்ற விடாதே.
11 அசீரிய மன்னர்கள் தாங்கள் முற்றிலும் அழிக்க விரும்பும்
நாடுகளுக்குச் செய்த அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய்;
நீ மட்டும் தப்பித்துக் கொள்ள முடியுமா?
12 என் மூதாதையர் அழித்துவிட்ட கோசான், ஆரான்,
இரட்சேபு மக்களையும் தெலாசாரில் உள்ள ஏதேன் மக்களையும்
அந்நாட்டுத் தெய்வங்களால் காப்பாற்ற முடிந்ததா?
13 ஆமாத்தின் மன்னன் எங்கே?
அர்ப்பாதின் மன்னன் எங்கே?
செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் மன்னர்கள் எங்கே?


14 எசேக்கியா தூதரிடமிருந்து மடலை வாங்கிப் படித்தார்;
அவர் ஆண்டவரின் இல்லம் சென்று
ஆண்டவர் திருமுன் அதை விரித்து வைத்தார்.
15 எசேக்கியா ஆண்டவரிடம் மன்றாடினார்:
16 "இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரே,
கெருபுகள் மேல் வீற்றிருப்பவரே,
உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் நீர் ஒருவரே கடவுள்;
விண்ணுலகையும், மண்ணுலகையும் உருவாக்கியவர் நீரே. [*]
17 ஆண்டவரே, செவிசாய்த்துக் கேளும்.
ஆண்டவரே, கண் திறந்து பாரும்.
கடவுளை இழித்துரைக்குமாறு சனகெரிபு சொல்லி அனுப்பிய
சொற்கள் அனைத்தையும் கேளும்.
18 ஆண்டவரே, அசீரிய மன்னர்கள் அனைத்து நாடுகளையும்
அவற்றின் நிலங்களையும் பாழடையச் செய்தது உண்மையே!
19 அவற்றின் தெய்வங்களை நெருப்புக்குள் எறிந்ததும் உண்மையே.
ஏனெனில் அவை தெய்வங்கள் அல்ல;
மனிதரின் கைவினைப் பொருள்களே; மரமும் கல்லுமே!
எனவேதான் அவற்றை அவர்கள் அழித்தொழித்தனர்.
20 ஆகவே, எங்கள் கடவுளாகிய ஆண்டவரே,
நீர் ஒருவரே ஆண்டவர் என்று
உலகின் அரசுகள் அனைத்தும் அறிந்து கொள்ளுமாறு
எங்களை அசீரியன் கையினின்று விடுவித்தருளும்.

அரசருக்கு எசாயாவின் செய்தி[தொகு]

(2 அர 19:20-37)


21 அப்போது, ஆமோட்சின் மகன் எசாயா
எசேக்கியாவுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினார்:
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
"அசீரிய மன்னன் சனகெரிபை முன்னிட்டு
நீ என்னை நோக்கி மன்றாடினாய்.
22 அவனைக் குறித்து ஆண்டவர் சொல்லிய வாக்கு இதுவே:


'கன்னி மகள் சீயோன் உன்னை அவமதித்து எள்ளி நகையாடுகிறாள்;
மகள் எருசலேம் உன் பின்னால் நின்று இகழ்ச்சியுடன் தலையசைக்கிறாள்.


23 யாரை நீ பழித்து இடித்துரைத்தாய்?
யாருக்கு எதிராய் நீ உன் குரலை உயர்த்தினாய்?
யாரைச் செருக்குடன் நீ உற்றுப் பார்த்தாய்?
இஸ்ரயேலரின் தூயவருக்கு எதிராக அன்றோ!


24 நீ உன் பணியாளர்களைக் கொண்டு என் தலைவரைப் பழித்துரைத்து,
என் பெரும் தேர்ப்படையுடன் நான் மலை உச்சிகளுக்கும்
லெபனோனின் மலைச்சரிவுகளுக்கும் ஏறினேன்;
வானளாவிய அதன் கேதுரு மரங்களையும்
மிகச்சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டி வீழ்த்தினேன்;
கடை எல்லையிலுள்ள அதன் உச்சிக்கும்
அடர்த்தியான அதன் காட்டுப் பகுதிக்கும் வந்தேன்.


25 நான் கிணறு வெட்டி அதன் நீரைப் பருகினேன்;
என் காலடியால் எகிப்தின் நீரோடைகள் அனைத்தையும்
வற்றிப்போகச் செய்தேன்' என்று சொன்னாய்.


26 நானே தொடக்கத்திலிருந்து முடிவெடுத்து செயல்படுகிறேன்
என்று நீ கேள்விப்பட்டதில்லையா?
முற்காலம் தொட்டுத் திட்டமிட்டதை
இன்று நான் செயல்படுத்துகிறேன்;
அதனால்தான் அரண்சூழ் நகர்களை
நீ பாழடைந்த மண்மேடுகளாகச் செய்தாய்.


27 அவற்றில்வாழ் மக்கள் ஆற்றல்குன்றி
நடுநடுங்கி நாணிக்குறுகினர்;
வளருமுன் அனல்காற்றால் கருகிவிடும்
வயல்வெளிச் செடிபோன்றும்,
அறுகம் புல் போன்றும்,
கூரைமேல் வளர் புல் போன்றும், அவர்கள் ஆயினர்.


28 நீ இருப்பது, நீ போவது, நீ வருவது,
எனக்கெதிராய் நீ கொந்தளிப்பது -
அனைத்தையும் நான் அறிவேன்.


29 எனக்கெதிராய் நீ கொந்தளித்ததும்
செருக்குடன் நீ பேசியதும் என் செவிகளுக்கு எட்டியது;
எனவே உன் மூக்கில் என் வளையத்தையும்
உன் வாயில் என் கடிவாளத்தையும் மாட்டுவேன்;
நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விடுவேன்.


30 இதுவே உனக்கு அடையாளம்:
தானாய் விழுந்து முளைப்பதை இந்த ஆண்டும்,
அதிலிருந்து வளர்வதை இரண்டாம் ஆண்டும் உண்பாய்.
மூன்றாம் ஆண்டோ விதைத்து அறுவடை செய்வாய்;
திராட்சைச் செடி நட்டு அதன் கனிகளை உண்பாய்.


31 யூதா வீட்டாருள் தப்பிப்பிழைத்த எஞ்சியோர்
ஆழ வேர்விட்டு மேலே கனி தருவர்.


32 ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்தும்
தப்பித்தோர் சீயோன் மலையினின்றும் புறப்பட்டு வருவர்;
படைகளின் ஆண்டவரது பேரார்வமே இதைச் செய்து முடிக்கும்.


33 ஆதலால் அசீரிய மன்னனை முன்னிட்டு
ஆண்டவர் கூறுவது இதுவே:
அவன் இந்த நகருக்குள் நுழையமாட்டான்;
ஓர் அம்பும் எய்ய மாட்டான்;
அவன் கேடயம் தாங்கி நகர்முன் வரத் துணியமாட்டான்;
அதை முற்றுகையிடவும் மாட்டான்.


34 வந்த வழியே அவன் திரும்பிச் செல்வான்;
இந்நகருக்குள் அவன் நுழையவே மாட்டான்," என்கிறார் ஆண்டவர்.


35 என் பொருட்டும் என் ஊழியன் தாவீது பொருட்டும்
இந்நகரைக் காத்தருள்வேன், விடுவிப்பேன்.


36 ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச்சென்று
அசீரியரின் பாசறையிலிருந்து ஓர் இலட்சத்து எண்பத்தையாயிரம்
பேரைச் சாகடித்தார்.
மறுநாள் காலையில் ஏனையோர் விழித்தெழுந்தனர்.
இதோ, எங்கும் பிணங்களைக் கண்டனர்.
37 உடனே அசீரிய மன்னன் சனகெரிபு அங்கிருந்து திரும்பி
நினிவே சென்று தங்கியிருந்தான்.
38 ஒருநாள் அவன் நிஸ்ரோக்கு என்னும் தன் தெய்வத்தின் கோவிலில்
வழிபாடு செய்து கொண்டிருந்தபோது
அதிரமெலக்கு, சரேட்சர் என்ற அவன் புதல்வர்கள்
வாள்முனையில் அவனைக் கொன்றுவிட்டு
அரராத்து நாட்டிற்குத் தப்பியோடினர்.
அவனுக்குப்பின் ஏசர்கத்தோன் என்ற அவன் மகன் ஆட்சி செய்தான்.


குறிப்பு

[*] 37:16 = விப 25:22.


அதிகாரம் 38[தொகு]

எசேக்கியாவின் நோய் குணமாதல்[தொகு]

(2 அர 20:1-11; 2 குறி 32:24-26)


1 அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு
சாகும் நிலையில் இருந்தார்;
ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர்
அவரைக் காணவந்து
அவரை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே;
நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்;
ஏனெனில் நீர் சாகப்போகிறீர்; பிழைக்க மாட்டீர்" என்றார்.
2 எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு
ஆண்டவரிடம் மன்றாடி,
3 "ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மைவழியில்
மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும்
உம் பார்வைக்கு நலமானவற்றைச்
செய்ததையும் நினைந்தருளும்"
என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார்.
4 அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது;
5 "நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது;
உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் கண்ணீரைக் கண்டேன்.
இதோ நீ வாழும் காலத்தை
இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.
6 உன்னையும் இந்த நகரையும்
அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்;
இந்த நகரைப் பாதுகாப்பேன்.
7 தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர்
நிறைவேற்றுவார் என்பதற்கு
அவர் உமக்களிக்கும் அடையாளம்:
8 இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில்
பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்."
அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல்
அக் கடிகையில் பத்துப்பாத அளவு பின்னிட்டது.


9 யூதா அரசர் எசேக்கியா நோயுற்று,
நோயினின்று குணமடைந்தபின் தீட்டிய எழுத்தோவியம்:


10 'என் வாழ்நாள்களின் நடுவில்
இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே!
நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப்
பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!' என்றேன்.


11 'வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே!
மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும்
என்னால் பார்க்க முடியாதே!' என்றேன்.


12 என் உறைவிடம் மேய்ப்பவனின் கூடாரத்தைப்போல பெயர்க்கப்பட்டு
என்னைவிட்டு அகற்றப்படுகிறது.
நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன்.
தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்;
காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.


13 துணை வேண்டிக் காலைவரை கதறினேன்;
சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்;
காலை தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர்.


14 சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்;
மாடப்புறாப்போல் விம்முகிறேன்;
மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன;
என் தலைவரே, நான் ஒடுக்கப்படுகிறேன்;
எனக்குத் துணையாய் இரும்.


15 நான் அவரிடம் என்ன சொல்வேன்? என்ன கூறுவேன்?
ஏனெனில் அவரே இதைச் செய்தார்;
மனக்கசப்பால் உறக்கமே எனக்கு இல்லாமற் போயிற்று.


16 என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்;
என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது;
எனக்கு உடல்நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர்.


17 இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்;
மனங்கனிந்து அழிவின் குழியிலிருந்து என் உயிரைக் காத்தீர்;
என் பாவங்கள் அனைத்தையும்
உன் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.


18 பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது;
சாவு உம்மைப் புகழ்ந்து ஏத்தாது;
பாதாளக் குழிக்குள் இறங்குவோர்,
நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை!


19 நான் இன்று உம்மைப் புகழ்வது போல்
வாழ்வோரே, வாழ்வோர் மட்டுமே
உம்மைப் போற்றிப் பாடுவர்.
தந்தையர் தம் பிள்ளைகளுக்கு
உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர்.


20 ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம்கொண்டார்;
ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை
வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.


21 "எசேக்கியா நலமுடைய,
ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து
பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்"
என்று எசாயா பதில் கூறியிருந்தார்.
22 ஏனெனில், "ஆண்டவரின் இல்லத்திற்கு
என்னால் போக முடியும் என்பதற்கு
எனக்கு அடையாளம் யாது?"
என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார்.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 39 முதல் 40 வரை