உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து...அதனால் என் வாயைத் தொட்டு, 'இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது' என்றார்" - எசாயா 6:6-7

எசாயா (The Book of Isaiah)

[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5

[தொகு]

திராட்சைத் தோட்டம் பற்றிய கவிதை

[தொகு]


1 என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்;
என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக்
காதல் பாட்டொன்று பாடுவேன்;
செழுமை மிக்கதொரு குன்றின்மேல்
என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.


2 அவர் அதை நன்றாகக் கொத்திக்கிளறிக்
கற்களைக் களைந்தெடுத்தார்;
நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்;
அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்;
திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்;
நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்துக் காத்திருந்தார்;
மாறாக, காட்டுப் பழங்களையே அது தந்தது. [*]


3 இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்:
எருசலேமில் குடியிருப்போரே,
யூதாவில் வாழும் மனிதரே,
எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.


4 என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும்
இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ?
நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க,
காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?


5 என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை
உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்:
"நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்;
அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும்.


6 நான் அதைப் பாழாக்கி விடுவேன்;
அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை;
களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை;
நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்;
அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்."


7 படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே;
அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே;
நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்;
ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி;
நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்;
ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

மக்களின் தீச்செயலும் தண்டனைத் தீர்ப்பும்

[தொகு]


8 வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே,
வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே,
உங்களுக்கு ஐயோ கேடு!
பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும் தனித்து
நாட்டில் வாழ்வீர்களோ?


9 என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர்
ஆணையிட்டுக் கூறியது இதுவே:
"மெய்யாகவே பல இல்லங்கள் பாழடைந்து போகும்;
அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள்
தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.


10 ஏனெனில் பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டம்
ஒரு குடம் இரசம்தான் கொடுக்கும்;
பத்துக் கலம் விதை விதைத்தால்,
ஒரு கலமே விளையும்.


11 விடியற் காலையிலேயே விழித்தெழுந்து,
போதை தரும் மதுவை நாடி அலைந்து,
இரவுவரை குடித்துப்
பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ ஐயோ, கேடு!


12 அவர்கள் கேளிக்கை விருந்துகளில்
கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம் இவையெல்லாம் உண்டு;
ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைவுகூர்வதில்லை;
அவருடைய கைவினைகளை நோக்கிப் பார்ப்பதுமில்லை.


13 ஆதலால் அறியாமையால் என் மக்கள் நாடு கடத்தப்படுகின்றார்கள்;
அவர்களில் பெருமதிப்பிற்குரியோர் பசியால் மடிகின்றார்கள்;
பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றார்கள்;


14 ஆதலால் பாதாளம் தன் வாயை அளவுகடந்து பிளந்துள்ளது;
தன் பசியைப் பெருக்கியிருக்கிறது.
எருசலேமின் உயர்குடிமக்கள், பொதுமக்கள், திரள் கூட்டத்தார்,
அதில் களியாட்டம் புரிவோர் ஆகியோர் ஒருங்கே அதனுள் இறங்குவார்கள்.


15 மனிதர் தலைகுனிவர், மானிடமைந்தர் தாழ்வுறுவர்,
இறுமாப்புக் கொண்டோரின் பார்வை தாழ்ச்சியடையும்.


16 ஆனால் படைகளின் ஆண்டவர் தம் நீதியால் உயர்ந்திருப்பார்;
தூயவராம் இறைவன் தம் நேர்மையால் தம்மைத் தூயவராக வெளிப்படுத்துவார்.


17 அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் தங்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வதுபோல மேயும்,
வெள்ளாட்டுக் குட்டிகளும் இளங்கன்றுகளும் பாழடைந்த இடங்களில் மேயும்.


18 பொய்ம்மை என்னும் கயிறுகளால் தீச்செயலைக் கட்டி இழுத்து,
வண்டியைக் கயிற்றால் இழுப்பது போலப்
பாவத்தையும் கட்டி இழுப்பவர்களுக்கு ஐயோ கேடு!


19 'நாங்கள் பார்க்கும்படி அவர் விரைவாய் வந்து,
தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்;
நாங்கள் அறியும்படி, இஸ்ரயேலின் தூயவர்
தம் நோக்கத்தை வெளிப்படுத்தி அதை நிறைவேற்றட்டும்'
என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!


20 தீமையை நன்மை என்றும்,
நன்மையைத் தீமை என்றும் சொல்லி,
இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி,
கசப்பை இனிப்பாக்கி,
இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு!


21 தங்கள் பார்வையில் ஞானிகள் என்றும்,
தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும்
தங்களையே கருதுபவர்களுக்கு ஐயோ கேடு!


22 திராட்சை இரசம் குடிப்பதில் தீரர்களாகவும்,
மதுபானம் கலப்பதில் திறமைசாலிகளாகவும்
இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!


23 அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு,
குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்;
குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்;


24 ஆதலால், நெருப்புத் தணல் வைக்கோலை
எரித்துச் சாம்பலாக்குவது போல,
காய்ந்த புல் தீக்கிரையாகித் தீய்ந்து போவது போல,
அவர்கள் ஆணிவேர் அழுகிப்போகும்;
அவர்கள் வழிமரபு துரும்புபோல் பறந்து போகும்;
ஏனெனில் அவர்கள், படைகளின் ஆண்டவரது
திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்;
இஸ்ரயேலின் தூயவரது வாக்கை வெறுத்துத் தள்ளினார்கள்.


25 ஆதலால், ஆண்டவரின் சினத் தீ
அவருடைய மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது;
அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார்.
மலைகள் நடுநடுங்கின;
அவர்களுடைய சடலங்கள் நடுத்தெருவில் நாதியற்றுக்
குப்பை போல் கிடந்தன;
இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை.
நீட்டிய சினக்கை இன்னும் மடங்கவில்லை.


26 அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு
ஓர் அடையாளக் கொடியைக் காட்டியுள்ளார்;
மண்ணுலகின் எல்லைகளிலிருந்து
சீழ்க்கை ஒலியால் அதனை அழைத்துள்ளார்,
அந்த இனம் வெகுவிரைவாய் வந்து கொண்டிருக்கின்றது.


27 அவர்களுள் ஒருவனும் களைப்பபடையவில்லை;
இடறி விழவில்லை;
தூங்கவில்லை; உறங்கவுமில்லை;
அவர்களில் யாருக்கேனும் இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை;
மிதியடிகளின் வாரேதும் அறுந்து போகவுமில்லை.


28 அவர்களுடைய அம்புகள் கூர்மையானவை;
அவர்களுடைய விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன;
அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள்
கருங்கற்களைப் போல் காட்சியளிக்கின்றன;
அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள்
சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.


29 அவர்களின் கர்ச்சனை பெண் சிங்கத்தினுடையதை ஒத்தது;
இளஞ் சிங்கங்களைப்போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்;
உறுமிக்கொண்டு தங்கள் இரையைக் கவ்விப் பிடிப்பார்கள்;
யாரும் விடுவிக்க இயலாதவாறு
இரையை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.


30 அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல்
இஸ்ரயேலுக்கு எதிராக இரைந்து உறுமுவார்கள்;
நாட்டை ஒருவன் பார்க்கையில்,
இருளும் துன்பமுமே காண்பான்;
மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.


குறிப்பு

[*] 5:1-2 = மத் 21:33; மாற் 12:1; லூக் 20:9.


அதிகாரம் 6

[தொகு]


1 உசியா அரசர் மறைந்த ஆண்டில்,
மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை
நான் கண்டேன்;
அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. [1]
2 அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்;
ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன;
ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்;
இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்;
மற்ற இரண்டால் பறந்தனர்.


3 அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து:
'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்;
மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது'
என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார். [2]


4 கூறியவரின் குரல் ஒலியால்
வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன;
கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. [3]


5 அப்பொழுது நான்: "ஐயோ, நான் அழிந்தேன்.
ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்;
தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்;
படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே" என்றேன்.
6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர்
பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து
அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு
என்னை நோக்கிப் பறந்து வந்தார்.
7 அதனால் என் வாயைத் தொட்டு,
"இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது.
உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது;
உன் பாவம் மன்னிக்கப்பட்டது," என்றார்.
8 மேலும் "யாரை நான் அனுப்புவேன்?
நமது பணிக்காக யார் போவார்?"
என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன்.
அதற்கு, "இதோ நானிருக்கிறேன்.
அடியேனை அனுப்பும்" என்றேன்.
9 அப்பொழுது அவர், "நீ இந்த மக்களை அணுகி,
'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்;
உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்' என்று சொல்.
10 அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும்,
உள்ளத்தால் உணராமலும்,
மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி
இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்;
காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்" என்றார். [4]


11 அதற்கு நான், "என் தலைவரே! எத்துணை காலத்திற்கு
இது இவ்வாறிருக்கும்?" என்று வினவினேன்.
அதற்கு அவர், "நகரங்கள் அழிந்து குடியிருப்பார் இல்லாதனவாகும்;
வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்;
நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்;


12 ஆண்டவர் மனிதர்களைத்
தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்;
நாட்டில் குடியிருப்பாரின்றி
வெற்றிடங்கள் பல தோன்றும்;
அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.


13 பத்தில் ஒரு பங்கு மட்டும் நாட்டில் எஞ்சியிருந்தாலும்
அதுவும் அழிக்கப்படும்;
தேவதாரு அல்லது கருவாலி மரம் வெட்டி வீழ்த்தப்பட்டபின்
அடிமரம் எஞ்சியிருப்பதுபோல் அது இருக்கும்.
அந்த அடிமரம்தான் தூய வித்தாகும்," என்றார்.


குறிப்புகள்

[1] 6:1 = 2 அர 15:7; 2 குறி 26:23.
[2] 6:3 = திவெ 4:8.
[3] 6:4 திவெ 15:8.
[4] 6:9-10 = மத் 13:14-15; மாற் 4:12;
லூக் 8:12; யோவா 12:40; திப 28:26-27.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை