திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 61 முதல் 62 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்." - எசாயா 61:10.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 61 முதல் 62 வரை

அதிகாரம் 61[தொகு]

விடுதலை பற்றிய நற்செய்தி[தொகு]


1 ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது;
ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்;
ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்,
உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும்,
சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும்,
கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும்
என்னை அனுப்பியுள்ளார். [1]


2 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும்,
நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும்,
துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், [2]


3 சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும்,
சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும்,
புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும்,
நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் 'புகழ்'
என்னும் ஆடையைக் கொடுக்கவும்
என்னை அனுப்பியுள்ளார்.
'நேர்மையின் தேவதாருகள்' என்றும்
'தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை' என்றும்
அவர்கள் பெயர் பெறுவர்.


4 நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை
அவர்கள் கட்டியெழுப்புவார்கள்;
முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை
நிலைநிறுத்துவார்கள்;
தலைமுறை தலைமுறையாக இடிந்து
அழிந்துகிடந்த நகர்களைச் சீராக்குவார்கள்.


5 அன்னியர் உங்கள் மந்தையை மேய்த்து நிற்பர்;
வேற்று நாட்டு மக்கள் உங்கள் உழவராயும்
திராட்சைத் தோட்டப் பணியாளராயும் இருப்பர்.


6 நீங்களோ, ஆண்டவரின் குருக்கள்
என்று அழைக்கப்படுவீர்கள்;
நம் கடவுளின் திருப்பணியாளர்
என்று பெயர் பெறுவீர்கள்;
பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு
நீங்கள் உண்பீர்கள்;
அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.


7 அவமானத்திற்குப் பதிலாக
நீங்கள் இருபங்கு நன்மை அடைவீர்கள்;
அவமதிப்புக்குப் பதிலாக
உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்;
ஆதலால், நாட்டில் உங்கள் செல்வம் இருமடங்காகும்;
முடிவில்லா மகிழ்ச்சியும் உங்களுக்கு உரியதாகும்.


8 ஆண்டவராகிய நான் நீதியை விரும்புகின்றேன்;
கொள்ளையையும் குற்றத்தையும் வெறுக்கின்றேன்;
அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை
உண்மையாகவே வழங்குவேன்;
அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வேன்;


9 அவர்கள் வழிமரபினர் பிறஇனத்தாரிடையேயும்,
அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும்
புகழ் அடைவார்கள்;
அவர்களை காண்பவர் யாவரும்
அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர்
என ஏற்றுக்கொள்வார்கள்.


10 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்;
என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்;
மலர்மாலை அணிந்த மணமகன் போலும்,
நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும்,
விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்;
நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். [3]


11 நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும்,
தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும்,
ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில்
நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.


குறிப்புகள்

[1] 61:1 = மத் 11:5; லூக் 7:22.
[2] 61:1-2 = லூக் 4:18-19.
[3] 61:10 = திவெ 21:2.

அதிகாரம் 62[தொகு]


1 சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும்,
அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை,
அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்;
எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன்.


2 பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்;
மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்;
ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்
புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.


3 ஆண்டவரின் கையில் நீ
அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்;
உன் கடவுளின் கரத்தில்
அரச மகுடமாய் விளங்குவாய்.


4 'கைவிடப்பட்டவள்' என்று
இனி நீ பெயர்பெற மாட்டாய்;
'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது;
நீ 'எப்சிபா' [1] என்று அழைக்கப்படுவாய்;
உன் நாடு 'பெயுலா' [2] என்று பெயர் பெறும்.
ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்;
உன் நாடு மணவாழ்வு பெறும்.


5 இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல
உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்;
மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல்
உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.


6 எருசலேமே,
உன் மதில்கள்மேல் காவலரை நிறுத்தியுள்ளேன்;
இராப்பகலாய் ஒருபோதும் அவர்கள் அமைதியாய் இரார்;
ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே!
நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.


7 அவர் எருசலேமை நிலைநாட்டி,
பூவுலகில் அது புகழ் பெறும்வரை
அவரை ஓய்வெடுக்க விடாதீர்.


8 ஆண்டவர் தம் வலக்கையின் மேலும்
வலிமைமிக்க தம் புயத்தின் மேலும்
ஆணையிட்டுக் கூறியது:
உன் தானியத்தை இனி நான்
உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்;
உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை
வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.


9 அறுவடை செய்தவர்களே அதை உண்டு
ஆண்டவரைப் போற்றுவர்.
பழம் பறித்தவர்களே என் தூயகச்
சுற்றுமுற்றங்களில் இரசம் பருகுவர்.


10 செல்லுங்கள்,
வாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்;
மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்;
அமையுங்கள்,
நெடுஞ்சாலையைச் சீராக அமையுங்கள்;
கற்களை அகற்றுங்கள்;
மக்களினங்கள்முன் கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.


11 உலகின் கடைக்கோடி வரை
ஆண்டவர் பறைசாற்றியது:
"மகள் சீயோனிடம் சொல்லுங்கள்:
இதோ, உன் மீட்பு வருகின்றது,
அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது;
அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது." [3]


12 'புனித மக்களினம்' என்றும்
'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும்
அவர்கள் அழைக்கப்படுவார்கள்;
நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும்
இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.


குறிப்புகள்

[1] 62:4 எபிரேயத்தில் 'அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்பது பொருள்.
[2] 62:4 எபிரேயத்தில் 'மணமுடித்தவள்' என்பது பொருள்.
[3] 62:11 = எசா 40:10; திவெ 22:12.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 63 முதல் 64 வரை