திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது". - எசாயா 9:2

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]


1 ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது;
முற்காலத்தில் செபுலோன் நாட்டையும்,
நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்;
பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி,
யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு,
பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு
ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். [1]

வரவிருக்கும் அரசர்[தொகு]


2 காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்;
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல்
சுடர் ஒளி உதித்துள்ளது. [2]


3 ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்;
அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்;
அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல்
உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்;
கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது
அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.


4 மிதியான் நாட்டுக்குச் செய்தது போல
அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;
அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்;
அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.


5 அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன்
அணிந்திருந்த காலணிகளும்,
இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும்
நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.


6 ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்;
ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்;
ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்;
அவர் திருப்பெயரோ 'வியத்தகு ஆலோசகர்,
வலிமைமிகு இறைவன்,
என்றுமுள தந்தை,
அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும்.


7 அவரது ஆட்சியின் உயர்வுக்கும்
அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது;
தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்;
இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து
அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்;
படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும். [3]


8 யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை ஆண்டவர் அனுப்பியுள்ளார்;
அது இஸ்ரயேல் மேல் இறங்கித் தன் செயலைச் செய்யும்.

இஸ்ரயேலுக்குத் தண்டனைத் தீர்ப்பு[தொகு]


9 எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள்
ஆகிய அனைத்து மக்களும் இதை அறிந்து கொள்வார்கள்.


10 செருக்கினாலும் இதயத்தில் எழும் இறுமாப்பினாலும்
அவர்கள் சொல்லுவதாவது:
"செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது;
எனினும், செதுக்கிய கற்களால் நாங்கள் கட்டியெழுப்புவோம்.
காட்டத்தி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன;
எனினும், அவற்றிற்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம்".


11 ஆதலால் ஆண்டவர் இரட்சினின் அதிகாரிகளை
அவர்களுக்கு எதிராய்க் கிளர்ந்தெழச் செய்தார்;
அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.


12 கிழக்கிலிருந்து சிரியரும், மேற்கிலிருந்து பெலிஸ்தியரும் வந்தார்கள்;
தங்கள் வாயை விரிவாய்த் திறந்து இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்;
இவையெல்லாம் நடந்தும், அவரது சீற்றம் தணியவிலலை;
ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.


13 தங்களை நொறுக்க வைத்தவரிடம் மக்கள் திரும்பவில்லை;
படைகளின் ஆண்டவரைத் தேடவுமில்லை.


14 ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில்
உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை அனைவரையும்,
ஒலிவமரக் கிளையையும் நாணலையும்
ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;


15 முதியவரும், மதிப்புமிக்கவருமே உயர்ந்தோர்;
பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.


16 இந்த மக்களை வழிநடத்தியோர் அவர்களை நெறிபிறழச் செய்தனர்;
அவர்களால் வழிநடத்தப்பட்டவரோ அழிந்துபோயினர்.


17 ஆதலால், அவர்களுடைய இளைஞரைக் குறித்து
என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை;
அவர்களிடையே வாழும் திக்கற்றோர்,
கைம்பெண்கள்மேல் இரக்கம் காட்டவில்லை;
அவர்கள் அனைவரும் இறைப்பற்று இல்லாதவர்கள்;
தீச்செயல் புரிபவர்கள்;
எல்லாரும் மதிகேட்டையே பேசினர்;
இவையெல்லாம் நடந்தும் அவர் சீற்றம் தணியவில்லை;
ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.


18 கொடுமை தீயைப்போல் கொழுந்து விட்டு எரிந்தது;
அது முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது;
காட்டின் அடர்ந்த பகுதிகளை அது கொளுத்தி விட்டது;
அதனால் புகைமண்டலம் சுழன்று மேலே எழுந்தது.


19 படைகளின் ஆண்டவரது சினத்தால்
நாடு நெருப்புக்கு இரையானது;
மக்கள் நெருப்புக்கு விறகைப் போல் ஆனார்கள்;
ஒருவரும் தம் அடுத்திருப்பாரை விட்டு வைக்கவில்லை.


20 அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப்
பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை;
இடப்புறம் இருப்பனவற்றை எடுத்து விழுங்கியும்
மனம் நிறைவடையவில்லை;
ஒவ்வொருவரும் தம் குழந்தையின் சதையைக் கூடத் தின்றனர்;


21 மனாசே குடும்பத்தார் எப்ராயிம் குடும்பத்தாரையும்
எப்ராயிம் குடும்பத்தார் மனாசே குடும்பத்தாரையும் கொன்று தின்றனர்;
இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து யூதாவின் மேல் பாய்ந்தனர்;
இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை;
ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை;


குறிப்புகள்

[1] 9:1 = மத் 4:15.
[2] 9:2 = மத் 4:16; லூக் 1:79.
[3] 9:7 = லூக் 1:32-33.


அதிகாரம் 10[தொகு]


1 அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு!
மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு!


2 அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல்,
அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்;
எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்;
கைம்பெண்களைக் கொள்ளைப் பொருளாய் எண்ணிச்
சூறையாடுகின்றார்கள்.
திக்கற்றோரை இரையாக்கிக் கொள்கின்றார்கள்.


3 தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்?
தொலைநாட்டிலிருந்து அழிவாகிய
சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்?
உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்?
உங்கள் செல்வங்களை எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?


4 கட்டுண்ட கைதிகளிடையே தலை கவிழ்ந்து வருவீர்கள்;
இல்லையேல் வெட்டுண்டு மடிந்தோரிடையே வீழ்வீர்கள்.
இதிலெல்லாம் ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை.
ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.

ஆண்டவரின் கருவியே அசீரியா[தொகு]


5 அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது;
தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது.


6 இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்;
எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க
அதற்கு ஆணை கொடுக்கிறேன்;
அம்மக்களைக் கொள்ளையிடவும்
அவர்கள் பொருள்களைச் சூறையாடவும்,
தெருவில் கிடக்கும் சேற்றைப்போல
அவர்களை மிதித்துப் போடவும்,
அதற்குக் கட்டளை தருகிறேன்.


7 அசீரிய அரசன் நினைப்பதோ வேறு,
அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு;
மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத்
தன் இதயத்தில் எண்ணுகிறான்;
பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான்.


8 அவன் இறுமாப்புடன் சொல்வதாவது:
"என் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா?


9 கல்னேர் நகர் கர்கமிசு நகர் போன்றதல்லவா?
ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு இணையல்லவா?
சமாரியா நகர் தமஸ்கு நகரை ஒத்ததல்லவா?


10 சிறப்பு வாய்ந்த, சிலைவணங்கும் அரசுகள் வரை
என் கை எட்டியிருக்கின்றது;
அந்நாட்டுச் சிலைகள் எருசலேம்,
சமாரியா நகர்ச் சிலைகளைவிட எண்ணிக்கையில் மிகுதி.


11 சமாரியாவையும் அதிலுள்ள சிலைகளையும்
அழித்துப் பாழ்படுத்தியவன் நான்;
இப்படியிருக்க, எருசலேமுக்கும் அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும்
அவ்வாறே செய்யமாட்டேனோ? "


12 எனவே சீயோன் மலைமேலும்
எருசலேமிலும் என் வேலைகள் அனைத்தையும் முடித்தபின்,
ஆணவம் நிறைந்த அசீரிய அரசனின்
சிந்தனையை முன்னிட்டும்,
இறுமாப்புடன் அவன் பேசிய பேச்சுகளை முன்னிட்டும்
"அவனை நான் தண்டிப்பேன்" என்கிறார் என் தலைவர்.


13 ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்:
"என் கைவலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்;
என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும்
அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்;
மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்;
அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்;
அரியணையில் வீற்றிருந்தோரை
ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன்.


14 குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல்
என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது;
புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல்
நாடுகள் யாவற்றையும் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன்.
எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை.
வாய் திறக்கவில்லை,
கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை."


15 வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக்
கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ?
அறுப்பவனைவிடத் தன்னைச்
சிறப்புமிக்கதாக வாள் கருத இயலுமோ?
தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீச
கைத்தடியால் கூடுமோ?
மரம் அல்லாத மனிதனைத் தூக்க
மரத்தால் ஆன கோலால் இயலுமோ?


16 ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர்
பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய
கொழுத்த வீரர்கள் இடையே அனுப்புவார்;
அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்;
அவர் நெருப்பு மூட்டுவார்;
அது கொழுந்துவிட்டு எரியும்.


17 இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார்;
அதன் தூயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்;
அது அவனுடைய முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும்,
ஒரே நாளில் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விடும்.


18 வனப்புமிக்க அவனுடைய காடுகள்,
செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள் யாவும்
உள்ளும் புறமும் அழிக்கப்படும்;
அது நோயாளி ஒருவன் உருக்குலைவதை ஒத்திருக்கும்.


19 அவனது காட்டில் மிகச் சில மரங்களே எஞ்சியிருக்கும்;
ஒரு சிறுவன்கூட அவற்றை எண்ணி எழுதிவிடலாம்.

எஞ்சியோரின் மீட்பு[தொகு]


20 அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும்,
யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும்,
தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்;
மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய்,
அவரையே சார்ந்திருப்பார்கள்.


21 யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர்
வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர்.


22 இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள்
கடற்கரை மணலைப்போல் இருப்பினும்,
அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்;
அழிவு நெருங்கி வந்தாயிற்று;
அழிவு வருவது தீர்ப்பாயிற்று.
பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும்.


23 ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்
தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும்
அழிவைக் கொண்டு வருவார். [1]

அசீரியாவுக்கு ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு[தொகு]


24 என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
"சீயோனில் வாழ்கின்ற என் மக்களே,
எகிப்தியர் முன்பு செய்தது போல்
அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும்
கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும்
நீங்கள் அஞ்சாதீர்கள்;
25 ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள்
உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்;
அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்".
26 ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல்,
படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார்.
எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீது தமது கோலை ஓங்கினதுபோல
அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார்.
27 அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்;
உங்கள் தோள்மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும்.
உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும்.

பகைவனின் படையெடுப்பு[தொகு]


28 பகைவன் அய்யாத்துக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளான்;
அவன் மிக்ரோனைக் கடந்து வந்துவிட்டான்;
மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான்.


29 கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்;
கேபாவில் தங்கி இரவைக் கழிக்கின்றார்கள்;
இராமா நகரின் மக்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள்;
சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள் ஓட்டமெடுக்கின்றார்கள்.


30 பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்;
இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்;
அனத்தோத்தின் மக்களே, மறுமொழி கூறுங்கள்.


31 மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்;
கேபிமினில் வாழ்வோர் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.


32 இன்றே அப்பகைவன் நோபு நகரில் தங்குவான்;
அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும்
எருசலேமின் குன்றிற்கும் எதிராகக் கையை ஓங்கி அசைப்பான்.


33 நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர் அச்சுறுத்தும் ஆற்றலால்,
கிளைகளை வெட்டி வீழ்த்துவார்;
உயர்ந்தவற்றின் கிளைகள் துண்டிக்கப்படும்;
செருக்குற்றவை தாழ்த்தப்படும்;
நிமிர்ந்து நிற்பவை தரைமட்டமாக்கப்படும்.


34 அடர்ந்த காட்டை அவர் கோடரியால் வெட்டி வீழ்த்துவார்;
லெபனோன் தன் உயர்ந்த மரங்களுடன் தரையிலே சாயும். [2]


குறிப்புகள்

[1] 10:22-23 = உரோ 9:27.
[2] 10:5-34 = எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை