திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவரது மாட்சி கெருபுகளிடமிருந்து புறப்பட்டு, கோவிலின் வாயிற்படிக்கு வந்தது. மேகம் கோவிலில் பரவியிருந்தது. முற்றம் முழுவதும் ஆண்டவரது மாட்சியின் பேரொளி நிறைந்து இலங்கிற்று." - எசேக்கியேல் 10:4

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

எருசலேம் தண்டிக்கப்படல்[தொகு]


1 அவர் என் செவிகளில் உரத்த குரலில்
"நகருக்குத் தண்டனை வழங்குவோரே!
நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக்
கையிலேந்தி நெருங்கி வாருங்கள்" என்றார்.
2 இதோ ஆறு ஆள்கள் வடக்கு நோக்கி இருக்கும்
மேல் வாயிலின் வழியாக வந்தனர்.
ஒவ்வொருவர் கையிலும் ஒரு கொலைக் கருவி இருந்தது.
அவர்களுடன் நார்ப்பட்டு உடுத்தி,
எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த
ஒருவனும் இருந்தான்.
இவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றனர்.
3 அப்பொழுது இஸ்ரயேலின் கடவுளது மாட்சி
அது தங்கியிருந்த கெருபுகளை விட்டு
மேலெழுந்து இல்லத்தின் வாயிற்படிக்கு வந்தது.
உடனே ஆண்டவர் நார்ப்பட்டு உடுத்தி
எழுதும் மைக்கூட்டைத் தம் இடையில் வைத்திருந்த
அம்மனிதரை அழைத்தார்.
4 பின் ஆண்டவர் அவரை நோக்கி,
"நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து
அதனுள் செய்யப்படும் எல்லா
அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும்
பெருமூச்சு விட்டுப் புலம்பம் மனிதர்களுக்கு
நெற்றியில் அடையாளம் இடு" என்றார். [*]
5 என் செவிகளில் விழுமாறு
அவர் மற்றவர்களை நோக்கிக் கூறியது:
"நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து தாக்குங்கள்.
உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிடவேண்டாம்;
இரக்கம் காட்ட வேண்டாம்.
6 முதியோர், இளைஞர், கன்னியர்,
குழந்தைகள், பெண்கள் அனைவரையும் கொன்றொழியுங்கள்.
அடையாளம் இடப்பட்ட மனிதர் எவரையும் நெருங்காதீர்கள்.
என் தூயகத்திலிருந்து தொடங்குங்கள்."
அவர்களும் ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த
முதியோரிலிருந்து தொடங்கினர்.
7 அவர் அவர்களை நோக்கி,
"கோவிலைக் கறைப்படுத்துங்கள்;
முற்றங்களைக் கொலையுண்டவர்களால் நிரப்புங்கள்;
புறப்படுங்கள்" என்றார்.
அவர்களும் நகருக்குள் சென்று வெட்டி வீழ்த்தினார்கள்.
8 அவர்கள் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தபோது,
நான்மட்டும் தனியே இருந்தேன்.
நானோ முகங்குப்புற விழுந்து,
"ஆ! தலைவராகிய ஆண்டவரே!
நீர் உம் சீற்றத்தை எருசலேமின் மீது கொட்டி
இஸ்ரயேலில் எஞ்சி இருப்போர் அனைவரையும்
அழித்து விடுவீரோ?" என்று கத்தினேன்.
9 அவர் என்னை நோக்கி,
"இஸ்ரயேல், யூதா வீட்டார்களின் குற்றம் மிக மிகப்பெரிது.
நாடு இரத்தப் பழியால் நிறைந்துள்ளது.
நகரில் புரட்டு மலிந்துள்ளது.
ஏனெனில், 'ஆண்டவர் நாட்டைக் கைநெகிழ்ந்து விட்டார்;
அவர் எதையும் காண்பதில்லை' என்று சொல்லிக்கொள்கின்றனர்.
10 ஆகவே, என் கண் அவர்களுக்கு இரக்கம் காட்டாது.
நான் அவர்களைத் தப்பவிடேன்.
அவர்களின் வழிமுறைகளை
அவர்களின் தலைமீதே சுமத்துவேன்" என்றார்.
11 இதோ, நார்ப்பட்டு உடுத்தி
இடையில் மைக்கூட்டை வைத்திருந்த மனிதர் வந்து,
'நீர் எனக்குக் கட்டளை இட்டவாறே
நான் செய்துமுடித்து விட்டேன்' என்று அறிவித்தார்.


குறிப்பு

[*] 9:4 திவெ 7:3; 9:4; 14:1.

அதிகாரம் 10[தொகு]

ஆண்டவரின் மாட்சி கோவிலை விட்டு விலகல்[தொகு]


1 நான் உற்று நோக்கினேன்;
இதோ! கெருபுகளுக்குமேல்
அவற்றின் தலைக்கு மேலிருந்த விதானத்தில்
நீலமணி இழைத்த அரியணை உருவத்தின் சாயலைப்
போன்றதொன்று தெரிந்தது. [1]
2 அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரிடம்,
"கெருபுகளுக்குக் கீழ் இடுக்கு சக்கரங்களின் நடுவில் நுழைந்து,
கெருபுகளின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கை நிறைய வாரி,
நகரின் மீது வீசு" என்றார்.
என் கண்ணெதிரே அவரும் சென்றார். [2]
3 அந்த மனிதர் உள்ளே சென்றபோது
கோவிலின் வலப்புறத்தில் கெருபுகள் நின்றுகொண்டிருந்தன;
மேகம் உள்முற்றத்தில் பரவியிருந்தது.
4 ஆண்டவரது மாட்சி கெருபுகளிடமிருந்து புறப்பட்டு,
கோவிலின் வாயிற்படிக்கு வந்தது.
மேகம் கோவிலில் பரவியிருந்தது.
முற்றம் முழுவதும் ஆண்டவரது மாட்சியின் பேரொளி
நிறைந்து இலங்கிற்று.
5 கெருபுகளின் இறக்கைகள் எழுப்பிய ஒலி
வெளி முற்றம் வரை கேட்டது.
அது எல்லாம் வல்லவரின் குரலொலிபோன்று இருந்தது.
6 அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரை நோக்கி,
"சக்கரங்களின் இடையே
கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடு"
என்று கட்டளையிட
அவரும் சென்று சக்கரத்தின் அருகில் நின்றார்.
7 அப்பொழுது, கெருபுகளுள் ஒன்று தன் கையை நீட்டிக்
கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடுத்து
நார்ப்பட்டு உடுத்தியவரின் உள்ளங்கையில் வைத்தது.
அவரும் அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
8 கெருபுகளின் இறக்கைகளின் கீழ்
மனிதக் கையின் சாயல் காணப்பட்டது.
9 இதோ! கெருபுகளின் அருகில்
நான்கு சக்கரங்களைக் கண்டேன்.
ஒவ்வொரு கெருபின் அருகிலும் ஒரு சக்கரம் இருந்தது.
சக்கரங்கள் மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின.
10 அவை நான்கும் ஒரே விதத் தோற்றம் கொண்டிருந்தன;
சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பதுபோல் தோன்றின.
11 அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல்
நாற்றிசையிலும் செல்லக்கூடியவை.
முன் சக்கரம் நோக்கும் திசையில்
மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் சென்றன.
12 கெருபுகளின் உடல் முழுவதும் -
முதுகு, கைகள், இறக்கைகள்,
சக்கரங்கள், அதாவது நான்கு சக்கரங்கள் -
கண்களால் நிறைந்திருந்தன. [3]
13 'சுழல் சக்கரங்கள்' என்று அவை
அழைக்கப்பட்டதை நான் கேட்டேன். [4]
14 ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன;
முதலாவது எருது [5] முகம்;
இரண்டாவது மனித முகம்;
மூன்றாவது சிங்க முகம்;
நான்காவது கழுகு முகம். [6]
15 அப்பொழுது கெருபுகள் மேலெழந்தன.
கெபார் ஆற்றோரம் நான் கண்ட உயிரினங்கள் இவையே.
16 கெருபுகள் சென்றபோது சக்கரங்களும் அவற்றோடு சென்றன.
கெருபுகள் நிலத்திலிருந்து மேலெழும்பத்
தங்கள் இறக்கைகளை விரித்தபோது
சக்கரங்கள் திரும்பாமல் அவற்றுடன் இருந்தன.
17 அவை நின்றபோது இவையும் நின்றன.
அவை எழுந்தபோது இவையும் எழுந்தன.
ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
18 ஆண்டவரது மாட்சி கோவிலின் வாயிற்படியை விட்டுக்
கெருபுகளின்மேல் வந்து நின்றது.
19 என் கண்ணெதிரே,
கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரித்து
நிலத்தினின்று மேலெழந்தன.
அவை சென்றபோது சக்கரங்களும் அவற்றுடன் சென்றன.
ஆண்டவரது இல்லத்தின் கிழக்கு நுழைவாயிலில் அவை நின்றன.
இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின் மேல் இருந்தது.
20 கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக்கீழே
நான் கண்ட உயிரினங்கள் இவையே.
அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன்.
21 அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும்,
நான்கு இறக்கைகளும் இருந்தன.
அவற்றின் இறக்கைகளின் கீழ்
மனிதக் கைகளின் சாயல் இருந்தது.
22 அவற்றின் முகச் சாயல் கெபார் ஆற்றோரம் நான் கண்ட
முகங்களைப் போன்றே தோன்றிற்று.
அவை ஒவ்வொன்றும் நேர் முகமாய்ச் சென்றன.


குறிப்புகள்

[1] 10:1 = எசே 1:26; திவெ 4:2.
[2] 10:2 = திவெ 8:5.
[3] 10:12 = திவெ 4:8.
[4] 10:9-13 = எசே 1:15-21.
[5] 10:14 - 'கெருபு' என்பது எபிரேய பாடம்.
[6] 10:14 = எசே 1:10; திவெ 4:7.


தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை