உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து


கலைத் திறனோடு உருவாக்கப்பட்ட இலத்தீன் கையெழுத்துப் படி. எண்ணிக்கை 1:24-26. ஆண்டு: 1407. காப்பிடம்: இங்கிலாந்து.


எண்ணிக்கை(The Book of Numbers) [1]

[தொகு]

முன்னுரை

திருவிவிலியத்தின் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் நான்காம் நூலாக அமைந்தது எண்ணிக்கை ஆகும். "எண்ணிக்கை" என்னும் இத்திருநூல் இஸ்ரயேலரின் வரலற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்ததுவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும். சீனாய் மலையினின்று புறப்படும் முன்னும் யோர்தானுக்குக் கிழக்கே மோவாபில் ஒரு தலைமுறை கடந்த பின்னும் மோசே செய்த கணக்கெடுப்பின் காரணமாக இந்நூல் இப்பெயரைப் பெறுகிறது.

மேலும் காதேசு-பர்னேயாவில் இஸ்ரயேலருக்கு நேர்ந்த இன்னல்களும், அம்மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகச் செய்த கிளர்ச்சியும் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் கடவுள், மக்கள்மேல் அக்கறைகொண்ட் அவர்களின் குறைகளைப் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொள்ளும் அன்பையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது. அதுபோன்று, கடவுளுக்கும் மக்களுக்கும் மோசே உண்மையுடன் பணியாற்றுவது இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றது.

எண்ணிக்கை

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையைவிட்டுப் புறப்பட ஆயத்தப்படுதல்

அ) மக்கள்தொகை முதல் கணக்கெடுப்பு
ஆ) சட்டங்களும் விதிமுறைகளும்
இ) இரண்டாம் பாஸ்கா

1:1 - 9:23

1:1 - 4:49
5:1 - 8:26
9:1-23

197 - 215

197 - 205
205 - 214
214 - 215

2. சீனாய் மலை முதல் மோவாபு வரை 10:1 - 21:35 215 -237
3. மோவாபில் நிகழ்ந்தவை 22:1 - 32:42 237 - 257
4. எகிப்து தொடங்கி மோவாபு வரையிலான விடுதலைப் பயண நிகழ்ச்சிகளின் சுருக்கம் 33:1-49 257 - 258
5. யோர்தானைக் கடக்குமுன் கொடுக்கப்பட்ட கட்டளைகள் 33:50 - 36:13 258 - 263


எண்ணிக்கை

[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

[தொகு]

இஸ்ரயேலின் முதல் கணக்கெடுப்பு

[தொகு]


1 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு,
இரண்டாம் மாதம், முதல் நாளன்று,
சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில்
ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது:


2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள்.


3 இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய
போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக
நீயும், ஆரோனும் எண்ணுங்கள்.


4 ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்;
அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும்.


5 உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன:
ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்; இவன் செதேயூர் மகன்;


6 சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்; இவன் சுரிசத்தாய் மகன்;


7 யூதா குலத்திலிருந்து நகுசோன்; இவன் அம்மினதாபின் மகன்;


8 இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்; இவன் சூவார் மகன்;


9 செபுலோன் குலத்திலிருந்து எலியாபு; இவன் கேலோன் மகன்;


10 யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா;
இவன் அம்மிகூதின் மகன்;
மனாசே குலத்திலிருந்து கமாலியேல்; இவன் பெதாசூரின் மகன்;


11 பென்யமின் குலத்திலிருந்து அபிதான்; இவன் கிதயோனின் மகன்;


12 தாண் குலத்திலிருந்து அகியசேர்; இவன் அம்மிசத்தாயின் மகன்;


13 ஆசேர் குலத்திலிருந்து பகியேல்; இவன் ஒக்ரானின் மகன்;


14 காத்து குலத்திலிருந்து எல்யாசாபு; இவன் தெகுவேலின் மகன்;


15 நப்தலி குலத்திலிருந்து அகிரா; இவன் ஏனானின் மகன்;


16 மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே.
இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும்
இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர்.


17 பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும்
தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.


18 இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள்
மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர்.
அவர்கள் தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி,
தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர்.


19 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே:
அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார்.


20 இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில்,
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி,
தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய
போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்:
21 ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.


22 சிமியோன் மக்களின் தலைமுறைகளில்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய
போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்:


23 சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர்.


24 காத்து மக்களின் தலைமுறைகளில்,
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:


25 காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர்.


26 யூதா மக்களின் தலைமுறைகளில்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
27 யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர்.


28 இசக்கார் மக்களின் தலைமுறைகளில்,
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:


29 இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர்.


30 செபுலோன் மக்களின் தலைமுறைகளில்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
31 செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்.


32 யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
33 எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர்.


34 மனாசே மக்களின் தலைமுறைகளில்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
35 மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.


36 பென்யமின் மக்களின் தலைமுறைகளில்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
37 பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானூறு பேர்.


38 தாண் மக்களின் தலைமுறைகளில்,
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
39 தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர்.


40 ஆசேர் மக்களின் தலைமுறைகளில்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
41 ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர்.


42 நப்தலி மக்களின் தலைமுறைகளில்
அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி
இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
43 நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.


44 மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான
தலைவர் பன்னிருவரின் துணையுடன்
மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே.
45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக
இருபது வயதுக்கும் அதற்கு மேலும்
போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:
46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். [*]


47 ஆனால் இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை.
48 ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம் சொன்னது:
49 லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்;
இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்;
50 லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள்,
அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள்
ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து;
அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும்
சுமந்து செல்ல வேண்டியவர்கள்;
அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள்.
51 புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்;
கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர்.
வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான்.
52 இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று
ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர்.
53 லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி
உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்;
உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே.
54 இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்;
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர்.


குறிப்பு

[*] 1:1-46 = எண் 26:1-51.


அதிகாரம் 2

[தொகு]

பாளையத்தில் குலங்களின் ஒழுங்கமைப்பு

[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும்
தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள்
இவற்றின்படி பாளையமிறங்குவர்;
எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு
அவர்கள் பாளையமிறங்குவர்.
3 கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்டியவர்
யூதாவின் கொடியையுடைய பாளையத்தவரும்
அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்.
யூதா மக்களின் தலைவன் நக்சோன்; இவன் அம்மினதாபின மகன்.
4 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.
5 அவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் இசக்கார் குலத்தார்;
இசக்கார் மக்களின் தலைவன் நெத்தனியேல்; இவன் சூவாரின் மகன்;
6 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.
7 அடுத்து வருவது செபுலோன் குலம்; செபுலோன் மக்களின் தலைவன் எலியாபு;
இவன் கேலோனின் மகன்;
8 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தேழாயிரத்து நானூறு.
9 இவ்வாறாக யூதா அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத்தொகை
ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு;
இவர்கள் முதலாவதாக அணிவகுத்துச் செல்வர்.


10 தெற்கே பாளையமிறங்க வேண்டியவர்
ரூபனின் கொடியுடைய பாளையத்தவரும்
அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்;
ரூபன் மக்களின் தலைவன் எலிட்சூர்; இவன் செதேயூரின் மகன்;
11 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு.
12 இவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் சிமியோன் குலத்தார்;
சிமியோன் மக்களின் தலைவன் செலுமியேல்; இவன் சுரிசத்தாயின் மகன்;
13 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு.
14 அடுத்து வருவது காத்து குலம்;
காத்து மக்களின் தலைவன் எல்யாசாபு; இவன் இரகுவேலின் மகன்;
15 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது.
16 இவ்வாறாக ரூபன் அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத் தொகை
ஒரு இலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது;
இவர்கள் இரண்டாவதாக அணிவகுத்துச் செல்வர்.


17 அதன் பின் சந்திப்புக்கூடாரம் லேவியர் அணியினரோடு
ஏனைய அணியினர் நடுவே செல்லும்.
அவர்கள் பாளையமிறங்கும்போது செய்வது போன்றே
தம் தம் வரிசையில் தம் தம் கொடியேந்தி அணிவகுத்துச் செல்வர்.


18 மேற்கே பாளையமிறங்க வேண்டியவர்
எப்ராயிம் கொடியுடைய பாளையத்தவரும்
அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்;
எபிராயிம் மக்களின் தலைவன் எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன்.
19 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பதாயிரத்து ஐந்நூறு.
20 அவனையடுத்திருப்போர் மனாசே குலத்தார்;
மனாசே மக்களின் தலைவன் கமாலியேல்; இவன் பெதாசூரின் மகன்;
21 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தீராயிரத்து இருநூறு.
22 அடுத்து வருவது பென்யமின் குலம்;
பென்யமின் மக்களின் தலைவன் அபிதான்; இவன் கிதயோனியின் மகன்;
23 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தையாயிரத்து நானூறு.
24 இவ்வாறாக எப்ராயிம் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை
ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து நூறு. அவர்கள் மூன்றாவதாக அணிவகுத்துச் செல்வர்.


25 வடக்கே பாளையமிறங்க வேண்டியவர்
தாண் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்;
தாண் மக்களின் தலைவன் அகியேசர்; இவன் அம்மி சத்தாயின் மகன்;
26 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை அறுபத்தீராயிரத்து எழுநூறு.
27 அவனை அடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் ஆசேர் குலத்தார்;
ஆசேர் மக்களின் தலைவன் பகியேல்; இவன் ஒக்ரானின் மகன்;
28 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு.
29 அடுத்து வருவது நப்தலிக் குலம்;
நப்தலி மக்களின் தலைவன் அகிரா; இவன் ஏனானின் மகன்;
30 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து மூவாயிரத்து நானூறு.
31 இவ்வாறாக, தாண் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை
ஒரு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு.
இவர்கள் அணிவகுப்பில் இறுதியாகச் செல்வர்.


32 தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாக எண்ணப்பட்ட
இஸ்ரயேல் மக்கள் இவர்களே;
அனைத்துப் பாளையங்களிலும்
தங்களைச் சார்ந்த அணியினரோடு எண்ணப்பட்டோரின் தொகை
ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.
33 ஆனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி
லேவியர் இஸ்ரயேல் மக்களுள் எண்ணப்படவில்லை.
34 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கொடிகளைச் சுற்றிப் பாளையமிறங்கி
தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின்படி அணிவகுத்துச் சென்றனர்.


(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை