திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 41 முதல் 42 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நீங்கள் அஞ்சி நடுங்கும் பாபிலோனிய மன்னனுக்கு இனி அஞ்சவேண்டாம், நீங்கள் அவனுக்கு அஞ்ச வேண்டாம், என்கிறார் ஆண்டவர்." - எரேமியா 42:11

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 41 முதல் 42 வரை

அதிகாரம் 41[தொகு]


1 ஏழாம் மாதத்தில் அரச குலத்தவனும்
அரசனின் உயர் அதிகாரிகளுள் ஒருவனுமான
எலிசாமாவின் பேரனும்
நெத்தனியாவின் மகனுமான இஸ்மயேல்
தன்னோடு பத்துப் பேரை அழைத்துக் கொண்டு
மிஸ்பாவில் இருந்த அகிக்காமின் மகன் கெதலியாவிடம் வந்தான்.
அங்கு அவர்கள் அனைவரும்
ஒன்றாக உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில்,
2 நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும்
அவனோடு இருந்த பத்துப் பேரும் எழுந்து
சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவை -
பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக ஏற்படுத்தியிருந்த அவரை -
வாளால் வெட்டிக் கொன்றார்கள்.
3 மேலும் கெதலியாவோடு
மிஸ்பாவில் இருந்த யூதா நாட்டினர் அனைவரையும்
அங்கு இருக்க நேரிட்ட
கல்தேய வீரர்களையும் இஸ்மயேல் வெட்டி வீழ்த்தினான். [1]


4 கெதலியா கொலை செய்யப்பட்டு
இரண்டு நாள் ஆனபின்னும்
அது பற்றி யாருக்கும் தெரியவில்லை.
5 அப்படியிருக்க செக்கேம், சீலோ,
சமாரியா ஆகிய இடங்களிலிருந்து
தாடியைச் சிரைத்துக்கொண்டு,
ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
உடலைக் கீறிக் கொண்ட எண்பது பேர்
ஆண்டவரின் இல்லத்தில் ஒப்புக்கொடுக்குமாறு
தானியப் படையல்களும் தூபமும்
கையில் ஏந்திக் கொண்டு வந்தனர்.
6 அவர்களைச் சந்திக்க
நெத்தனியாவின் மகன் இஸ்மயேல்
மிஸ்பாவினின்று புறப்பட்டு அழுது கொண்டே சென்றான்.
அவர்களைச் சந்தித்தபோது,
"அகிக்காமின் மகன் கெதலியாவை வந்து பாருங்கள்"
என்று அவர்களிடம் கூறினான்.
7 அவர்கள் நகருக்குள் நுழைந்திடவே,
நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும்
அவனோடு இருந்தவர்களும்
அவர்களைக் கொன்று,
நிலவறைக்குள் தள்ளிவிட்டனர்.
8 அவர்களுள் பத்து பேர் இஸ்மயேலை நோக்கி,
"எங்களைக் கொல்லாதீர்;
ஏனெனில் கோதுமை, வாற்கோதுமை,
எண்ணெய், தேன் ஆகியவற்றைச் சேர்த்து
வயலில் மறைத்து வைத்திருக்கிறோம்" என்றார்கள்.
எனவே அவன் அவர்கள் சகோதரர்களோடு
அவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டான்.


9 நெத்தனியாவின் மகன் இஸ்மயேல்
கெதலியாவை முன்னிட்டுக் கொன்று குவித்த
மனிதர்களின் பிணங்கள் எல்லாவற்றையும்
ஒரு நிலவறைக்குள் தள்ளி அதை நிரப்பினான்.
அது இஸ்ரயேல் அரசன் பாசாவினின்று
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு
அரசன் ஆசா வெட்டியிருந்ததாகும்.
10 மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான்
அகிக்காமின் மகன் கெதலியா பொறுப்பில் விட்டிருந்த
அரசனின் புதல்வியரையும்
மிஸ்பாவில் இருந்த மற்ற மக்கள் எல்லாரையும்
இஸ்மயேல் சிறைப்பிடித்துக்கொண்டு
அம்மோனியரின் நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.


11 நெத்தனியாவின் மகன் இஸ்மயேல்
செய்திருந்த கொடுமை அனைத்தையும் பற்றிக்
காரயாகின் மகன் யோகனானும்
அவரோடு இருந்த படைத்தலைவர்கள்
அனைவரும் அறியவந்தபொழுது,
12 அவர்கள் தங்களோடு இருந்த ஆள்கள் எல்லாரையும்
அழைத்துக் கொண்டு,
நெத்தனியாவின் மகன் இஸ்மயேலோடு போரிடப் புறப்பட்டு,
கிபயோனின் பெரிய நீர்நிலை அருகே அவனை நெருங்கினார்கள்.
13 இஸ்மயேலின் பிடியிலிருந்த மக்கள் எல்லாரும்
காரயாகின் மகன் யோகனானையும்
அவரோடு இருந்த படைத்தலைவர்களையும்
கண்டு மகிழ்ச்சியுற்றார்கள்.
14 இஸ்மயேல் சிறைப்படுத்தி
மிஸ்பாவிலிருந்து கூட்டிச் சென்றிருந்த
மக்கள் எல்லோரும் அவனை விட்டுவிட்டுக்
காரயாகின் மகன் யோகனானோடு சேர்ந்து கொண்டார்கள்.
15 ஆனால் நெத்தனியாவின் மகன் இஸ்மயேல்
எட்டுப் பேரோடு யோகனானிடமிருந்து தப்பி,
அம்மோனியரின் நாட்டுக்கு ஓடிப் போனான்.
16 நெத்தனியாவின் மகன் இஸ்மயேல்
அகிக்காமின் மகன் கெதலியாவைக் கொன்றபின்
மிஸ்பாவில் எஞ்சியிருந்தோரை [2] -
படைவீரர், பெண்டிர், சிறுவர்,
அரசவையோர் ஆகியோரை -
சிறைப்பிடித்து இழுத்து வந்திருந்தான்.
இவர்களைக் காரயாகின் மகன் யோகனானும்
அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும்
கிபயோனிலிருந்து அழைத்துவந்தார்கள்.
17-18 அவர்கள் எல்லாரும் புறப்பட்டு,
பெத்லெகேமுக்கு அருகே இருந்த
கேருத்கிம்காமினில் தங்கினார்கள்.
பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக
ஏற்படுத்தியிருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை
நெத்தனியாவின் மகன் இஸ்மயேல்
கொன்று போட்ட காரணத்தினால்,
அவர்கள் கல்தேயருக்கு அஞ்சி
அவர்களிடம் இருந்து தப்பிக்கும்படி
எகிப்துக்குப் போக எண்ணியிருந்தார்கள்.


குறிப்புகள்

[1] 41:1-3 = 2 அர 25:25.
[2] 41:16 - 'இஸ்மாயேலிடமிருந்து அவன் மீட்டிருந்த'
என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 42[தொகு]

எரேமியாவின் மன்றாட்டும் ஆண்டவரின் மறுமொழியும்[தொகு]


1 பின்னர் படைத்தலைவர்கள் அனைவரும்
காரயாகின் மகன் யோகனானும்
ஓசயாவின் மகன் ஏசனியாவும்
சிறியோர் முதல் பெரியோர் வரை
மக்கள் எல்லாரும் அருகில் வந்தார்கள்.
2 அவர்கள் இறைவாக்கினர் எரேமியாவிடம் சொன்னது:
"எம் வேண்டுகோளைக் கேட்டருளும்,
எங்களுக்காகவும்
எஞ்சியிருக்கும் இவர்கள் அனைவருக்காகவும்
உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும் -
ஏனெனில் நீர் காண்பதுபோல்
திரளாக இருந்த எங்களுள்
ஒரு சிலரே எஞ்சியிருக்கிறோம் -
3 நாங்கள் நடக்க வேண்டிய வழியையும்
செய்யவேண்டிய செயல்களையும்
உம் கடவுளாகிய ஆண்டவர்
எங்களுக்குக் காட்டியருள்வாராக."
4 இறைவாக்கினர் எரேமியா அவர்களை நோக்கி,
"நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது.
அதற்கிணங்க, உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்
நான் மன்றாடுவேன்.
ஆண்டவர் உங்களுக்குச் சொல்லவிருக்கும் மறுமொழியை
உங்களிடம் தெரிவிப்பேன்.
உங்களிடமிருந்து ஒன்றையும் மறைக்கமாட்டேன்" என்றார்.
5 அதற்கு அவர்கள் எரேமியாவிடம் கூறியது:
"உம் கடவுளாகிய ஆண்டவர்
உம் வழியாக எங்களுக்கு வெளிப்படுத்தவிருக்கும்
எல்லாச் சொற்களின்படியும்
நாங்கள் நடப்போம் என்பதற்கு,
ஆண்டவரே நமக்கு இடையில்
உண்மையும் நம்பிக்கையும் உள்ள சாட்சி.
6 எங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்,
நாங்கள் எம் கடவுளாகிய
ஆண்டவரின் குரலுக்கே செவிசாய்ப்போம்.
அவரிடமே நாங்கள் உம்மை அனுப்பிவைக்கிறோம்.
ஏனெனில் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு
நாங்கள் செவிசாய்க்கும் பொழுது,
எங்களுக்கு நன்மையே விளையும்."


7 பத்து நாள்களுக்குப் பின்னர்
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.
8 எனவே அவர் காரயாகின் மகன் யோகனானையும்,
தம்மோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரையும்,
சிறியோர் முதல் பெரியோர் வரை
மக்கள் எல்லாரையும் அழைத்தார்.
9 அவர் அவர்களிடம் சொன்னது:
உங்கள் வேண்டுகோளை
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் முன் வைத்து
மன்றாடுமாறு நீங்கள் என்னை அனுப்பினீர்கள்.
அவர் இவ்வாறு கூறுகிறார்:
10 நீங்கள் இந்த நாட்டிலேயே தொடர்ந்து குடியிருந்தால்,
நான் உங்களைக் கட்டி எழுப்புவேனேயன்றி,
அழித்தொழிக்க மாட்டேன்;
நிலைநாட்டுவேனேயன்றி,
பிடுங்கி எறிய மாட்டேன்.
ஏனெனில் நான் உங்களுக்கு அளித்துள்ள
தண்டனைபற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்.
11 நீங்கள் அஞ்சி நடுங்கும் பாபிலோனிய மன்னனுக்கு
இனி அஞ்சவேண்டாம்,
நீங்கள் அவனுக்கு அஞ்ச வேண்டாம்,
என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில் உங்களை மீட்கும் பொருட்டும்,
அவனுடைய கையினின்று
உங்களை விடுவிக்கும் பொருட்டும்
நான் உங்களோடு இருக்கிறேன்.
12 நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன்.
அவனும் உங்கள்மீது மனமிரங்கி,
உங்கள் சொந்த நாட்டுக்கே நீங்கள் திரும்பிவரச் செய்வான்.
13 ஆனால் நீங்கள், நம் கடவுளாகிய ஆண்டவரின்
குரலுக்குச் செவிகொடாது,
'இந்த நாட்டில் நாங்கள் குடியிருக்க மாட்டோம்.
14 நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம்.
அங்கே போர் இருக்காது;
போர்முரசு ஒலிக்காது;
உணவுப் பஞ்சம் இராது;
நாங்கள் அங்கேயே குடியிருப்போம்'
என்று கூறுவீர்களானால்,
15 யூதாவில் எஞ்சியிருப்போரே,
இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்:
இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
நீங்கள் எகிப்துக்குச் சென்று,
அங்கே தங்கியிருக்க முடிவு செய்திருந்தால்,
16 உங்களை இங்கு அச்சுறுத்தும் அதே வாள்
எகிப்து நாட்டிலும் உங்களைத் துரத்திவந்து தாக்கும்;
உங்களுக்குத் திகிலூட்டுகின்ற பஞ்சம்
உங்கள் பின்னாலேயே எகிப்துக்கும் தொடர்ந்துவரும்;
நீங்கள் அங்கேயே மடிவீர்கள்.
17 எகிப்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்க
முடிவு செய்துள்ள ஆள்கள் அனைவரும்
வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவர்.
அவர்களுள் ஒருவனும் எஞ்சியிருக்கமாட்டான்;
நான் அவர்களுக்கு அளிக்கவிருக்கும்
தண்டனையினின்று எவனுமே தப்பமாட்டான்.


18 ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
என் சினமும் சீற்றமும்
எருசலேமின் குடிகள்மீது வெகுண்டெழுந்ததுபோன்று,
நீங்கள் எகிப்துக்குச் செல்லும்பொழுது
என் சீற்றம் உங்கள்மீது மூண்டெழும்.
நீங்கள் சாபம், பேரச்சம், பழிப்பு,
கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவீர்கள்.
நீங்கள் இந்த இடத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.
19 யூதாவில் எஞ்சியிருப்போரே,
'நீங்கள் எகிப்துக்குப் போகாதீர்கள்' என்று
ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
நான் இதுபற்றி உங்களை இன்று எச்சரித்துள்ளேன்
என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.
20 உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டீர்கள்;
ஏனெனில், 'எங்களுக்காக நம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்;
அவர் சொல்வது அனைத்தையும் எங்களுக்குத் தெரியப்படுத்தும்;
நாங்கள் அவ்வாறே நடப்போம்' என்று கூறி,
நீங்களே என்னை உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்
அனுப்பி வைத்தீர்கள்.
21 நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்
திருவுளத்தை இன்று உங்களுக்கு அறிவித்துள்ளேன்.
நீங்களோ அதற்குக் கீழ்ப்படியவில்லை.
அவர் என்னை உங்களிடம் அனுப்பிச்
சொன்னவற்றில் எதையுமே
நீங்கள் கண்டுகொள்ளவில்லை.
22 எனவே நீங்கள் சென்று தங்க விழையும் இடத்திலேயே
நீங்கள் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவீர்கள்
என்பதை இப்போது திண்ணமாய் அறிந்துகொள்ளுங்கள்.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 43 முதல் 44 வரை