திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஒசேயா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"ஆண்டவர் ஒசேயா வழியாக முதற்கண் பேசியபோது, அவர் அவரை நோக்கி, "நீ போய் விலைமகள் ஒருத்தியைச் சேர்த்துக்கொள்; வேசிப் பிள்ளைகளைப் பெற்றெடு; ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது" என்றார். அப்படியே அவர் போய்த் திப்லயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டார்." - ஒசேயா 1:2-3

ஒசேயா (The Book of Hosea) [1][தொகு]

முன்னுரை

இறைவாக்கினர் ஒசேயா வடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர்; சமாரியா வீழ்ச்சியுற்ற கி.மு. 722-க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இஸ்ரயேலரின் சிலைவழிபாட்டைக் கடிந்ன்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரை விட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மணஉறவைப் பின்னணியாகக் கொண்டு ஒசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். கடவுளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார்; ஆயினும் இறைவனின் பேரன்பு இறுதிவரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக்கொள்ளும்; அதன்மூலம், முறிந்த உறவு மலரும். இதுவே இவரது நூலின் செய்தியாகும்.

ஒசேயா[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. ஒசேயாவின் திருமணமும் இல்வாழ்வும் 1:1 - 3:5 1315 - 1318
2. இஸ்ரயேலின் குற்றங்களும் அவற்றுக்குரிய தண்டனைத் தீர்ப்பும் 4:1 - 13:16 1318 - 1330
3. மனமாற்றத்திற்கு அழைப்பும் வாக்குறுதியும் 14:1-9 1330 -1331

ஒசேயா (The Book of Hosea)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]


1 யூதாவின் அரசர்களாகிய உசியா, யோத்தாம், ஆகாசு,
எசேக்கியா என்பவர்களின் நாள்களிலும்,
யோவாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய எரொபவாமின் நாள்களிலும்,
பெயேரியின் மகன் ஒசேயாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே. [1]

ஒசேயாவின் மனைவி, மக்கள்[தொகு]


2 ஆண்டவர் ஒசேயா வழியாக முதற்கண் பேசியபோது,
அவர் அவரை நோக்கி,
"நீ போய் விலைமகள் ஒருத்தியைச் சேர்த்துக்கொள்;
வேசிப் பிள்ளைகளைப் பெற்றெடு;
ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி
வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது" என்றார்.


3 அப்படியே அவர் போய்த் திப்லயிமின் மகளாகிய
கோமேரைச் சேர்த்துக்கொண்டார்.
அவள் கருவுற்று அவருக்கொரு மகனைப் பெற்றெடுத்தாள்.
4 அப்போது ஆண்டவர் ஒசேயாவை நோக்கி,
"இவனுக்கு 'இஸ்ரியேல்' எனப் பெயரிடு;
ஏனெனில் இன்னும் சிறிது காலத்தில் நான் இஸ்ரயேலின்
இரத்தப் பழிக்காக ஏகூவின் குடும்பத்தாரைத் தண்டிப்பேன்;
இஸ்ரயேல் குடும்பத்தின் ஆட்சியை ஒழித்துக் கட்டுவேன். [2]
5 அந்நாளில், நான் இஸ்ரியேல் பள்ளத்தாக்கில்
இஸ்ரயேலின் வில்லை முறித்துப்போடுவேன்" என்றார்.


6 கோமேர் மறுபடியும் கருவுற்றுப்
பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்;
அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து,
"இதற்கு 'லோ ருகாமா' [3] எனப் பெயரிடு;
ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு
நான் இனிக் கருணை காட்ட மாட்டேன்;
அவர்களை மன்னிக்கவே மாட்டேன்.


7 ஆனால் யூதா குடும்பத்தாருக்குக் கருணை காட்டுவேன்;
அவர்களின் கடவுளாகிய ஆண்டவராலேயே
அவர்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்வேன்;
வில், வாள், போர்க் குதிரைகள், குதிரை வீரர்கள்
ஆகியவற்றைக் கொண்டு நான் விடுவிக்கப்போவதில்லை" என்றார்.


8 அவள் லோ ருகாமாவைப் பால்குடி மறக்கச் செய்த பின்
திரும்பவும் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.


9 அப்போது ஆண்டவர் ஒசேயாவைப் பார்த்து,
"இவனுக்கு 'லோ அம்மீ' [4] எனப் பெயரிடு;
ஏனெனில், நீங்கள் என் மக்கள் அல்ல; நானும் உங்களுடையவர் அல்ல" என்றார்.

இஸ்ரயேலின் ஒருங்கிணைப்பு[தொகு]


10 ஆயினும் இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை
அளக்கவும் எண்ணவும் முடியாத கடற்கரை மணலுக்கு ஒப்பாகும்.
'நீங்கள் என்னுடைய மக்களல்ல' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக,
'வாழும் கடவுளின் மக்கள்' என்று அவர்களுக்குக் கூறப்படும். [5]


11 யூதாவின் மக்களும் இஸ்ரயேலின் மக்களும்
ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவர்.
அவர்கள் தங்களுக்கென ஒரே தலைவனை ஏற்படுத்திக் கொண்டு,
நாட்டிலிருந்து புறப்பட்டு வருவார்கள்;
இதுவே இஸ்ரயேலின் மாபெரும் நாள்.


குறிப்புகள்

[1] 1:1 = 2 அர 14:23-15:7; 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 26:1-27:8; 28:1-32:33.
[2] 1:4 = 2 அர 10:11.
[3] 1:6 - "லோ ருகாமா" என்பதற்கு "கருணை பெறாதவள்" என்பது பொருள்.
[4] 1:9 - "லோ அம்மீ" என்பதற்கு "என் மக்கள் அல்ல" என்பது பொருள்.
[5] 1:10 = உரோ 9:26.


அதிகாரம் 2[தொகு]


1 'அம்மீ' [1] என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள்.
'ருகாமா' [2] என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள்.

இஸ்ரயேல் ஓர் உண்மையற்ற மனைவி[தொகு]


2 "வழக்காடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்;
அவள் எனக்கு மனைவியுமல்ல; நான் அவளுக்குக் கணவனுமல்ல;
அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும்,
விபசார குறிகளைத் தன் மார்பினின்றும் அகற்றட்டும்.


3 இல்லாவிடில், நான் அவளைத் துகிலுரித்து
திறந்தமேனியாக்குவேன்;
பிறந்த நாளில் இருந்த கோலமாய் அவளை ஆக்குவேன்;
பாலைநிலம்போல் ஆக்கி,
வறண்ட நிலமாகச்செய்து தாகத்தினால் அவளைச் சாகடிப்பேன்.


4 அவள் பிள்ளைகளுக்கும் நான் கருணை காட்டமாட்டேன்;
ஏனெனில் அவர்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.


5 அவர்களின் தாய் வேசியாய் வாழ்ந்தாள்;
அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்;
'எனக்கு உணவும் தண்ணீரும், ஆட்டு மயிரும் சணலும்,
எண்ணெயும் பானமும் தருகின்ற என் காதலரைப் பின் செல்வேன்' என்றாள்.


6 ஆதலால், நான் அவள் [3] வழியை முள்ளால் அடைப்பேன்;
அவள் எதிரில் சுவர் ஒன்றை எழுப்புவேன்;
அவளால் வழி கண்டுபிடித்துப் போக இயலாது.


7 அவள் தன் காதலர்களைப் பின்தொடர்ந்து ஓடுவாள்;
ஆனால் அவர்களிடம் போய்ச் சேரமாட்டாள்.
அவர்களைத் தேடித் திரிவாள்;
ஆனால் அவர்களைக் காணமாட்டாள்.
அப்போது அவள், 'என் முதல் கணவனிடமே நான் திரும்பிப் போவேன்;
இப்போது இருப்பதைவிட, அப்போது எனக்கு நன்றாயிருந்தது' என்பாள்.


8 கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும்
அவளுக்குக் கொடுத்தது நானே என்பதை அவள் அறியவில்லை.
நான் வாரி வழங்கிய பொன், வெள்ளியைக் கொண்டே
பாகாலுக்குச் சிலை செய்தார்கள்.


9 ஆதலால், நான் எனது கோதுமையை அதன் காலத்திலும்,
எனது திராட்சை இரசத்தை அதன் பருவத்திலும்
திரும்ப எடுத்துக்கொள்வேன்;
அவள் திறந்த மேனியை மறைக்க நான் கொடுத்திருந்த கம்பளி ஆடையையும்
சணலாடையையும் பறித்துக் கொள்வேன்.


10 இப்பொழுதே அவளுடைய காதலர் கண்முன்
அவளது வெட்கக் கேட்டை வெளிப்படுத்துவேன்;
என்னுடைய கையிலிருந்து அவளை விடுவிப்பவன் எவனுமில்லை.


11 அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும்
அமாவாசைகளையும் ஓய்வு நாளையும்
அவளுடைய திருநாள்கள் அனைத்தையுமே ஒழித்துவிடுவேன்.


12 'இவை என் காதலர் எனக்குக் கூலியாகக் கொடுத்தவை' என்று
அவள் சொல்லிக் கொண்ட அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும்,
அத்தி மரங்களையும் பாழாக்குவேன்;
அவற்றைக் காடாக்கிவிடுவேன்;
காட்டு விலங்குகளுக்கு அவை இரையாகும்.


13 பாகால்களின் விழாக்களைக் கொண்டாடிய நாள்களில்
அவள் அவற்றுக்கு நறுமணப்புகை எழுப்பினாள்;
வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து,
தன் காதலர்பின் போய் என்னை மறந்தாள்;
இவற்றுக்காக அவளை நான் தண்டிப்பேன்" என்கிறார் ஆண்டவர்.


தம் மக்கள் மேல் ஆண்டவரின் அன்பு[தொகு]


14 "ஆதலால் நான் அவளை நயமாகக் கவர்ந்திழுப்பேன்;
பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்;
நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்.


15 அவளுடைய திராட்சைத் தோட்டங்களை
அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்;
ஆகோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்;
அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும்,
எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியதுபோல் பாடுவாள். [4]


16 அந்நாளில், 'என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்;
'என் பாகாலே' [5] என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்" என்கிறார் ஆண்டவர்.


17 அவளுடைய நாவினின்று பாகால்களின் பெயர்களை நீக்கிவிடுவேன்;
இனிமேல் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டாள்.


18 அந்நாளில், காட்டு விலங்குகளோடும், வானத்துப் பறவைகளோடும்,
நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவர்களுக்காக நான் ஓர் உடன்படிக்கை செய்வேன்;
வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்று அகற்றிவிடுவேன்;
அச்சமின்றி அவர்கள் படுத்திருக்கச் செய்வேன்.


19 "இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும்
உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்;
நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும்
உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்.


20 மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்;
ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்.


21 மேலும் அந்நாளில் நான் மறுமொழி அளிப்பேன்" என்கிறார் ஆண்டவர்.
"நான் வானத்தின் வழியாய் மறுமொழி அளிப்பேன்;
அது நிலத்தின் வழியாய் மறுமொழி தரும்.


22 நிலம், கோதுமை, திராட்சை இரசம்,
எண்ணெய் வழியாய் மறுமொழி தரும்.
அவை இஸ்ரியேல் [6] வழியாய் மறுமொழி தரும்" என்கிறார் ஆண்டவர்.


23 நான் அவனை [7] எனக்கென்று நிலத்தில் விதைப்பேன்,
'லோ ருகாமா'வுக்குக் [8] கருணை காட்டுவேன்;
'லோ அம்மீ'யை [9] நோக்கி, 'நீங்கள் என் மக்கள்' என்பேன்;
அவனும் 'நீரே என் கடவுள்' என்பான்.


குறிப்புகள்

[1] 2:1 - "அம்மீ" என்பதற்கு "என் மக்கள்" என்பது பொருள்.
[2] 2:1 - "ருகாமா" என்பதற்கு "கருணை பெற்றவர்" என்பது பொருள்.
[3] 2:6 - "உன்" என்பது எபிரேய பாடம்.
[4] 2:15 = யோசு 7:24-26.
[5] 2:16 - "என் தலைவரே" என்பது பொருள்.
[6] 2:22 - "இஸ்ரியேல்" என்பதற்கு "இறைவன் விதைக்கிறார்" என்பது பொருள்.
[7] 2:23 - "அவளை" என்பது எபிரேய பாடம்.
[8] 2:23 - "லோ ருகாமா" என்பது எபிரேயத்தில் "என் கருணை பெறாதவன்" என்று பொருள்படும்.
[9] 2:23 - "லோ அம்மீ" என்பது எபிரேயத்தில் "என் மக்கள் அல்ல" என்று பொருள்படும்.


(தொடர்ச்சி): ஒசேயா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை