உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஒசேயா/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அவர்களின் இதயம் சதித்திட்டத்தால் அடுப்பைப்போல் எரிகின்றது; அவர்களின் கோபத்தீ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்; அது காலையில் நெருப்பைப் போலக் கொழுந்துவிட்டு எரியும்.." - ஒசேயா 7:6


ஒசேயா (The Book of Hosea)

[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7

[தொகு]


1 நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது,
எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்;
சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்;
அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்;
திருடன் உள்ளே நுழைகின்றான்;
கொள்ளையர் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.


2 அவர்களுடைய தீவினைகளையெல்லாம்
நான் நினைவில் வைத்திருக்கின்றேன் என்பதை
அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.
இப்பொழுது அவர்கள் செயல்களே அவர்களை வளைத்துக் கொண்டன.
அவை என் கண்முன் இருக்கின்றன.

இஸ்ரயேல் அரண்மனையில் சதித்திட்டம்

[தொகு]


3 தங்கள் தீமையினால் அரசனையும்,
தங்கள் பொய்களினால் தலைவர்களையும்
அவர்கள் மகிழ்விக்கின்றார்கள்.


4 அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்;
எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்;
அப்பம் சுடுபவன் மாவைப் பிசைந்தது முதல்
புளிப்பேறும்வரையில் கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள்.


5 'நம் அரசனின் திருநாள்!' என்று சொல்லித் தலைவர்கள்
திராட்சை இரசத்தால் போதையேறிக் கிடந்தார்கள்;
அரசனும் ஏளனக்காரரோடு கூடிக் குலாவினான்.


6 அவர்களின் இதயம் சதித்திட்டத்தால் அடுப்பைப்போல் எரிகின்றது;
அவர்களின் கோபத்தீ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்;
அது காலையில் நெருப்பைப் போலக் கொழுந்துவிட்டு எரியும்.


7 அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாய் இருக்கின்றார்கள்;
தங்களின் ஆட்சியாளர்களை விழுங்குகின்றார்கள்;
அவர்களின் அரசர்கள் அனைவரும் வீழ்ச்சியுற்றார்கள்;
அவர்களுள் எவனுமே என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.

வேற்றினத்தாரை நம்பியதன் விளைவு

[தொகு]


8 எப்ராயிம் வேற்றினத்தாருடன் கலந்து வாழ்கின்றான்;
எப்ராயிம் ஒருபுறம் வெந்த அப்பமாயிருக்கின்றான்;


9 அன்னியர் அவன் ஆற்றலை உறிஞ்சிவிட்டனர்;
அதை அவன் அறியவில்லை.
அவனுக்கு நரைவிழுந்துவிட்டது;
அதையும் அவன் அறியவில்லை.


10 இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று சொல்கின்றது;
ஆயினும், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை;
இவை அனைத்திற்குப் பிறகும் அவரைத் தேடவில்லை.


11 எப்ராயிம் அறிவில்லாப் பேதைப் புறாவைப்போல் இருக்கின்றான்;
அவர்கள் எகிப்தைத் துணைக்கு அழைக்கின்றார்கள்;
அசீரியாவிடம் புகலிடம் தேடுகின்றார்கள்.


12 அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் விரித்திடுவேன்;
வானத்துப் பறவைகளைப்போல அவர்களைக் கீழே விழச் செய்வேன்;
அவர்கள் தீச்செயல்களுக்காக [1] அவர்களைத் தண்டிப்பேன்.


13 அவர்களுக்கு ஐயோ கேடு!
என்னை விட்டு விலகி, அலைந்து திரிகின்றார்கள்;
அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கின்றது,
அவர்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்;
நான் அவர்களை மீட்டு வந்தேன்;
ஆனால் அவர்கள் எனக்கு எதிராகப் பொய் சொல்கின்றார்கள்.


14 தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை,
அதற்கு மாறாக, தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகின்றார்கள்;
கோதுமைக்காகவும் திராட்சை இரசத்திற்காகவும்,
தங்களையே பிய்த்துப் பிடுங்கிபக் கொள்கின்றார்கள்;


15 நானே அவர்களைப் பயிற்றுவித்து,
அவர்கள் புயங்களை வலிமையுறச் செய்திருந்தும்
எனக்கு எதிராகத் தீங்கு நினைக்கின்றார்கள்.


16 பாகாலை நோக்கியே [2] திரும்புகின்றார்கள்;
நம்பமுடியாத வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்;
அவர்களுடைய தலைவர்கள் நாவால் பேசிய
இறுமாப்பை முன்னிட்டு வாளால் மடிவார்கள்;
இதுவே எகிப்தை முன்னிட்டு அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும்.


குறிப்புகள்

[1] 7:12 - "சபையில் கேட்டவற்றிற்காக" எனவும் பொருள்படும்.
[2] 7:16 - எபிரேயத்தில் "மேல் நோக்கியல்ல" எனவும் பொருள்படும்.

அதிகாரம் 8

[தொகு]


1 எக்காளத்தை ஊது!
கழுகு ஒன்று ஆண்டவருடைய வீட்டின்மேல் பாய்ந்து வருகின்றது;
அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்;
என் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.


2 இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு,
"எங்கள் கடவுளே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்" என்று சொல்கின்றார்கள்.


3 இஸ்ரயேலரோ நலமானதை வெறுத்து விட்டார்கள்;
பகைவன் அவர்களைத் துரத்துவான்.

அரசியல் குழப்பமும் சிலைவழிபாடும்

[தொகு]


4 அவர்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்;
அது என்னாலே அன்று;
அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்;
அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன்.
தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கெனச் சிலைகளைச் செய்தார்கள்;
தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.


5 சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்;
என் கோபத்தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது.
இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?


6 அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ!
அது கடவுளல்லவே!
கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்!
சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.


7 அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்;
கடும்புயலை அறுப்பார்கள்.
வளரும் பயிர் முற்றுவதில்லை;
கோதுமை நன்றாக விளைவதில்லை;
அப்படியே விளைந்தாலும் அன்னியரே அதை விழுங்குவர்.

வேற்றினத்தாரை நம்பிப் பாழாய்ப் போன இஸ்ரயேல்

[தொகு]


8 இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று;
இப்பொழுது அவர்கள் வேற்றினத்தார் நடுவில்
உதவாத பாத்திரம்போல் இருக்கின்றார்கள்.


9 அவர்கள் தனிமையில் திரிகிற காட்டுக் கழுதைபோல்
அசீரியாவைத் தேடிப் போனார்கள்.
எப்ராயிம் மக்கள் தங்கள் காதலர்க்குப் பொருள் கொடுத்து வருகிறார்கள்.


10 கைக்கூலி கொடுத்து வேற்றினத்தாரை
அவர்கள் துணைக்கு அமர்த்திக் கொண்டாலும்,
இப்பொழுதே நான் அவர்களையும் சேர்த்துச் சிதறடிப்பேன். [1]
தலைவர்கள் ஏற்படுத்திய மன்னன் சுமத்தும் சுமையில்
சிறிது காலம் துயருறுவார்கள். [2]


11 எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்துகொண்டான்;
அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின.
12 ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும்,
அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள்.


13 பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி
கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்;
அவற்றின்மேல் ஆண்டவர் விருப்பங்கொள்ளவில்லை;
அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை
நினைவில் கொள்கின்றார்;
அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்;
அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.


14 இஸ்ரயேல் தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டு
அரண்மனைகளைக் கட்டினான்;
யூதாவோ அரண்சூழ் நகர்கள் பலவற்றை எழுப்பினான்;
நானோ அவனுடைய நகர்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்;
அவனுடைய அரண்களை அது பொசுக்கிவிடும்.


குறிப்புகள்

[1] 8:10 - "கூட்டிச் சேர்ப்பேன்" என்பது எபிரேய பாடம்.
[2] 8:10 - "சிறிது காலம் அரசனையும் தலைவர்களையும்
திருப்பொழிவு செய்யாது ஓய்ந்திருப்பார்கள்" எனவும் பொருள்படும்.


(தொடர்ச்சி): ஒசேயா:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை