திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஒசேயா/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
"சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்." - ஒசேயா 10:7


ஒசேயா (The Book of Hosea)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

இஸ்ரயேலுக்கு வரும் தண்டனைத் தீர்ப்பு[தொகு]


1 இஸ்ரயேலே! நீ களிப்புறாதே;
மற்ற மக்களைப்போல் நீ அக்களிக்காதே.
உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித் தொழில் புரிந்தாய்;
கதிரடிக்கும் களமெல்லாம் நீ விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.


2 கதிரடிக்கும் களமும், திராட்சைக் கனி பிழியும் ஆலையும்
அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா;
புதிய திராட்சை இரசமும் இல்லாமற் போகும்.


3 ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்;
எப்ராயிம் எகிப்துக்குத் திரும்பிப் போவான்;
அவர்கள் அசீரியாவில் தீட்டுப்பட்டதை உண்பார்கள்.


4 திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்;
அவர்களின் பலிகள் அவருக்கு உகந்தவை ஆகமாட்டா;
அவை அவர்களுக்கு இழவு வீட்டு உணவு போலிருக்கும்;
அவற்றை உண்பவர் யாவரும் தீட்டுப்படுவர்;
ஏனெனில், அவை அவர்களின் பசி தீர்க்கும் உணவே ஆகும்.
ஆண்டவரின் கோவிலில் அவை படைக்கப்படுவதில்லை.


5 விழா நாள்களில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்?
ஆண்டவரின் திருநாளன்று அவர்கள் செய்வதென்ன?


6 அவர்கள் அழிவுக்குத் தப்பி ஓடுவார்கள்;
எகிப்து அவர்களைச் சேர்த்துக் கொள்ளும்;
மெம்பிசில் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்.
அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியால் செய்த
அரிய பொருள்கள் காஞ்சொறிச் செடிகளுக்கு உரிமைச் சொத்தாகும்.
அவர்களின் கூடாரங்களில் முட்புதர்கள் வளரும்.

இஸ்ரயேலரின் பாவமும் அதற்கான தண்டனையும்[தொகு]


7 தண்டனைத் தீர்ப்புப் பெறும் நாள்கள் வந்துவிட்டன;
பதிலடி கிடைக்கும் நாள்கள் வந்துவிட்டன;
இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர்.
உன் தீச்செயலின் மிகுதியாலும், பெரும் பகையுணர்ச்சியாலும்
'இறைவாக்கினன் மூடனாய் இருக்கிறான்;
இறை ஆவி பெற்றவன் வெறிக்கொண்டு உளறுகின்றான்,' என்கின்றாய். [1]


8 என் கடவுளின் மக்களாகிய எப்ராயிமுக்கு
இறைவாக்கினன் காவலாளியாய் இருக்கின்றான்;
ஆயினும் வேடன் ஒருவனின் வலை அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது;
அவனுடைய கடவுளின் கோவிலிலும் பகைமை நிலவுகின்றது.


9 கிபயாவின் நாள்களில் நடந்ததுபோலவே,
அவர்கள் கொடுமை செய்வதில் ஆழ்ந்திருக்கின்றார்கள்;
அவர்களுடைய தீச்செயலை ஆண்டவர் நினைவில் கொள்வார்;
அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார். [2]


10 பாலைநிலத்தில் திராட்சைக் குலைகளைக் கண்டது போல்
நான் இஸ்ரயேலைக் கண்டுபிடித்தேன்.
பருவகாலத் தொடக்கத்தின் முதல் அத்திப் பழங்களைப் போல்
உங்கள் தந்தையரைக் கண்டு பிடித்தேன்.
அவர்களோ பாகால் பெயோருக்கு வந்து,
மானக்கேடானவற்றுக்குத் தங்களையே நேர்ந்து கொண்டார்கள். [3]


11 எப்ராயிமின் மேன்மை பறவைபோல் பறந்தோடிவிடும்;
அவர்களுக்குள் பிறப்போ, கருத்தாங்குவதோ,
கருத்தரிப்பதோ எதுவுமே இராது.


12 அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும்,
ஒருவனும் எஞ்சியிராமல் அப்பிள்ளைகளை இழக்கச் செய்வேன்;
நான் அவர்களைவிட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஐயோ கேடு!


13 நான் பார்த்ததற்கிணங்க,
எப்ராயிம் தம் மக்களைக் கொள்ளைப் பொருளாய் ஆக்கியிருக்கின்றான்;
எப்ராயிம் தம் மக்களையெல்லாம் கொலைக் களத்திற்குக் கூட்டிச் செல்வான்.


14 ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும்,
எதைக் கொடுப்பீர்?
கருச்சிதைவையும் கருப்பையையும்
பால் சுரவா முலைகளையும் கொடுத்தருளும்.

கில்காலில் செய்த பாவத்திற்குத் தண்டனை[தொகு]


15 அவர்களின் கொடுஞ்செயல்கள் யாவும் கில்காலில் உருவாயின;
அங்கேதான் நான் அவர்களைப் பகைக்கத் தொடங்கினேன்;
அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு
என் வீட்டினின்றும் நான் அவர்களை விரட்டியடிப்பேன்;
இனி அவர்கள்மேல் அன்புகொள்ள மாட்டேன்,
அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரராய் இருக்கிறார்கள்.


16 எப்ராயிம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்;
அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று;
இனிமேல் அவர்கள் கனி கொடுக்கமாட்டார்கள்;
அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும்,
நான் அவர்களுடைய அன்புக் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்.


17 என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார்;
ஏனெனில், அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை;
வேற்றினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.


குறிப்புகள்

[1] 9:7 = லூக் 21:22.
[2] 9:9 = நீத 19:1-30.
[3] 9:10 = எண் 25:1-5.


அதிகாரம் 10[தொகு]

இஸ்ரயேலின் உண்மையற்ற இதயம்[தொகு]


1 இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி,
அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது;
எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ,
அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது;
எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ,
அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன.


2 இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள்,
தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்;
ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்;
அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார்.


3 அப்போது அவர்கள், "நமக்கு அரசன் இல்லை;
ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை;
அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?" என்பார்கள்.


4 வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகின்றார்கள்.
பொய்யாணை இட்டு உடன்படிக்கை செய்கின்றார்கள்;
ஆதலால், வயலின் உழவுச் சால்களில் முளைக்கும்
நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.


5 சமாரியாவில் குடியிருப்போர்
பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை முன்னிட்டு நடுங்குவர்;
அதன் மேன்மை இப்பொழுது மறைந்துபோயிற்று;
அதைக் குறித்து அதன் மக்கள் துயர் அடைவார்கள்;
அதன் குருக்களும் அதற்காகப் புலம்புவார்கள்.


6 அதுவே அசீரியாவிலுள்ள யாரேபு மன்னனுக்கு
அன்பளிப்பாகக் கொண்டுபோகப்படும்.
எப்ராயிம் வெட்கமடைவான்,
இஸ்ரயேல் தன் ஆலோசனையால் நாணமடைவான்.


7 சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்.


8 இஸ்ரயேலின் பாவமாகிய சிலை வழிபாட்டின்
உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்;
முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்;
அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து,
'எங்களை மூடிக்கொள்ளுங்கள்'
குன்றுகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்' என்று சொல்வார்கள். [1]

தண்டனைத் தீர்ப்புப் பற்றிய ஆண்டவரின் அறிவிப்பு[தொகு]


9 இஸ்ரயேலர் கிபயாவில் தங்கியிருந்த நாளிலிருந்தே
பாவம் செய்து வந்தார்கள்;
கிபயாவில் பொல்லார்மேல் எழுந்த கடும் போர்
அவர்கள்மேலும் வராதா? [2]


10 நான் வந்து அவர்களைத் தண்டிப்பேன்;
அவர்கள் செய்த இரட்டைத் தீச்செயல்களுக்குத்
தண்டனை வழங்கும் பொருட்டு
அவர்களுக்கு எதிராக வேற்றினத்தார் ஒன்றுகூடுவர்.


11 எப்ராயிம், நன்றாகப் பழக்கப்பட்டதும்,
புணையடிக்க விரும்புவதுமான பசுவாய் இருக்கின்றான்;
நானோ அதன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்;
எப்ராயிமை ஏரில் பூட்டுவேன்;
யூதா உழுவான்; யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.


12 நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்;
அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்;
உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்;
ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு
நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது. [3]


13 நீங்கள் கொடுமையை உழுதீர்கள்;
தீவினையை அறுவடை செய்தீர்கள்;
பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்;
உங்கள் தேர்ப்படைகளின் [4] மேலும்,
வீரர்களின் எண்ணிக்கையின் மேலும்
நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.


14 ஆதலால் உங்கள் மக்களிடையே போர்க் குரல் எழும்பும்;
உங்கள் அரண்கள் யாவும் அழிக்கப்படும்;
போரின் நாளில் பெத்தர்பேலைச் சல்மான் அழித்தபோது
அன்னையர் தம் பிள்ளைகளோடு மோதியடிக்கப்பட்டது போல அது இருக்கும்.


15 பெத்தேலே! உன் கொடிய தீவினைக்காக
உனக்கும் இவ்வாறே செய்யப்படும்.
பொழுது விடியும்போது இஸ்ரயேலின் அரசன் அழிந்து போவது உறுதி.


குறிப்புகள்

[1] 10:8 = லூக் 23:30; திவெ 6:16.
[2] 10:9 = நீதி 19:1-30.
[3] 10:12 = எரே 4:3.
[4] 10:13 - "உன் வழியில்" என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி): ஒசேயா:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை