உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
யூதா மன்னன் அகசியா. "சிறப்புற்றோர் படிமங்கள்". ஆண்டு 1553

2 குறிப்பேடு (The Second Book of Chronicles)

[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21

[தொகு]


1 யோசபாத்து தம் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அவர்களோடு அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய மகன் யோராம் அவருக்குப்பின் ஆட்சி செய்தான்.

யூதாவின் அரசன் யோராம்

[தொகு]

(2 அர 8:17-24)


2 யோராமின் சகோதரர்களான அசரியா, எகியேல், செக்கரியா, அசரியா, மிக்காவேல், செபத்தியா என்பவர்கள் இஸ்ரயேலின் அரசராயிருந்த யோசபாத்தின் புதல்வர்கள்.
3 அவர்களுடைய தந்தை பொன், வெள்ளி அன்பளிப்புகளையும், விலையேறப்பெற்ற பொருள்களையும் யூதாவின் அரண்சூழ் நகர்களையும் அவர்களுக்கு அளித்தார். யோராம் தலைமகனானதால், அவருக்கு அரசையே அளித்தார்.
4 யோராம் தன் தந்தையின் அரசை நிலைநாட்டத் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டபின், தன் சகோதரர் எல்லாரையும் இஸ்ரயேலின் தலைவர்களில் சிலரையும் தனது வாளுக்கு இரையாக்கினான்.


5 யோராம் அரசனானபோது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் எருசலேமில் எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
6 அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போலவே செய்து வந்தான். ஏனெனில், ஆகாபின் மகளே அவனுக்கு மனைவியாயிருந்தாள். எனவே, அவன் ஆண்டவர் பார்வையில் தீயன செய்துவந்தான்.
7 ஆனால், ஆண்டவர் தாவீதின் வீட்டாரை அழித்துவிட விரும்பவில்லை; ஏனெனில், அவர் தாவீதோடு ஓர் உடன்படிக்கை செய்து, அவருக்கும் அவர் மைந்தர்களுக்கும் எந்நாளும் ஒரு குல விளக்கைத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். [1]


8 அவனது ஆட்சியில் ஏதோம் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து தன்னை ஆட்சி செய்ய ஓர் அரசனை ஏற்படுத்திக்கொண்டது. [2]
9 யோராம் தன் படைத் தலைவர்களையும் தேர்ப்படைகள் அனைத்தையும் இரவோடு இரவாய் அழைத்துச் சென்று, தன்னை முற்றுகையிட்டிருந்த ஏதோமியரையும் தேர்ப்படைத் தலைவர்களையும் முறியடித்தான்.
10 ஆனால் யூதாவின் அதிகாரத்திற்கு அடிபணியாது ஏதோமியர் இன்றுவரை கிளர்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். யோராம் தன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்ததால், அந்நாளில் லிப்னாவும் அவனது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது.
11 மேலும், யூதாவின் மலைகளில் தொழுகைமேடுகளை அமைத்து எருசலேம்வாழ் மக்கள் விபசாரம் செய்யவும், யூதா நெறிதவறவும் காரணமாயிருந்தான்.


12 அப்பொழுது இறைவாக்கினர் எலியாவிடமிருந்து யோராமுக்கு வந்த மடல்: "உன் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: "நீ உன் தந்தை யோசபாத்தின் வழிமுறைகளையும் யூதா அரசன் ஆசாவின் நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை.
13 மாறாக, இஸ்ரயேல் அரசர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி ஆகாபு வீட்டாரைப் போல் யூதா, எருசலேம் வாழ்மக்களை விபசாரத்தில் ஈடுபடச்செய்தாய். உன்னைவிட நல்லவர்களான உன் தந்தை வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்றுபோட்டாய்!
14 எனவே ஆண்டவர் உன் குடிமக்களையும், உன் புதல்வரையும் மனைவியரையும் உன் உடைமைகள் அனைத்தையும் பெரும் கொள்ளை நோயால் வாதிப்பார்.
15 நீயோ மிகக் கொடிய குடல் நோயினால் பீடிக்கப்பட்டு உன் குடல்கள் நாளுக்குநாள் அழுகி விழுமட்டும் வதைக்கப்படுவாய்."

யோராமின் இறப்பு

[தொகு]


16 அதன்படி, பெலிஸ்தியர், எத்தியோப்பியருக்கு அருகேயுள்ள அரேபியர் ஆகியோரின் பகையுணர்ச்சியை யோராமுக்கு எதிராக ஆண்டவர் தூண்டிவிட்டார்.
17 அவர்கள் யூதாவில் நுழைந்து, அதைப் பாழ்படுத்தி, அரண்மனையில் அகப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சூறையாடினர்; அவனுடைய கடைசி மகனான [3] யோவகாசைத் தவிர மற்றப் பிள்ளைகள், மனைவியர் எல்லாரையும் கடத்திச் சென்றனர்.
18 இதுதவிர, தீராத குடல் நோயினால் ஆண்டவர் அவனை வாட்டி வதைத்தார்.
19 நாள்கள் நகர்ந்து, இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. நோயின் கடுமையால் யோராமின் குடல்கள் வெளிவந்தன. அதனால் அவன் கொடிய வேதனையுற்று மடிந்தான். அவனுடைய மூதாதையருக்கு நெருப்பு வளர்த்தது போல் செய்யாமல் அவனுடைய மக்கள் அவனை அடக்கம் செய்தனர்.
20 அவன் அரசனான போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. எருசலேமில் எட்டு ஆண்டுகள் அரசாண்ட அவன், வருந்துவார் எவருமின்றி, மறைந்து போனான். அவனை அரசர்கள் கல்லறையில் அடக்கம் செய்யாமல் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர்

குறிப்புகள்

[1] 21:7 = 1 அர 11:36.
[2] 21:8 = தொநூ 27:40.
[3] 21:17 'அகசியா' என்பது மறுபெயர்.

அதிகாரம் 22

[தொகு]

யூதாவின் அரசன் அகசியா

[தொகு]

(2 அர 8:25-29; 9:21-28)


1 எருசலேம் வாழ் மக்கள் யோராமுக்குப் பதிலாக அவனுடைய இளையமகன் அகசியாவை அரசனாக்கினார்கள். ஏனெனில், அரேபியருடன் பாளையத்திற்குள் நுழைந்த கொள்ளைக் கூட்டத்தினர் மூத்த பிள்ளைகள் அனைவரையும் கொன்றுவிட்டனர். இவ்வாறு யூதாவின் அரசன் யோராமின் மகன் அகசியா ஆட்சியேற்றான்.
2 அவன் ஆட்சியேற்றபோது அவனுக்கு வயது நாற்பத்திரண்டு. ஒரே ஆண்டுதான் அவன் எருசலேமில் ஆட்சி செய்தான். ஓம்ரியின் மகளான அத்தலியா என்பவளே அவன் தாய்.
3 அவனும், ஆகாபு வீட்டாரின் வழிமுறைகளைப் பின்பற்றினான். அவன் தீயவழியில் நடப்பதற்கு அவன் தாயின் கெடுமதியே காரணம்.
4 ஆகவே, அவன் ஆகாபின் வீட்டாரைப்போல் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தான். ஏனெனில் அவன் தந்தை இறந்தபின் அந்தக் குடும்பத்தாரே அவனுக்கு ஆலோசகராக இருந்தனர்.
5 அகசியா, அவர்களுடைய ஆலோசனையின்படி நடந்து, ஆகாபின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோராமுடன் சேர்ந்து கொண்டு, சிரியா மன்னன் அசாவேலுக்கு எதிராக இராமோத்தில் போர் தொடுத்தான். அங்கே சிரியர் யோராமைத் தாக்கினர்.
6 சிரியா அரசன் அசாவேலுடன் இராமாவில் [1] போரிட்டபோது தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்திக்கொள்ள யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பினான். ஆகாபின் மகன் யோராம் நோயுற்றிருந்ததைக் காண்பதற்காக யூதாவின் அரசனும் யோராமின் மகனுமான அகசியா இஸ்ரயேலுக்குச் சென்றான்.
7 அகசியா யோராமைப் பார்க்கச் சென்றது கடவுளின் திருவுளப்படி அவனது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. எப்படியெனில், அவன் இஸ்ரயேலுக்கு வந்ததும், யோராமுடன் நிம்சியின் மகன் ஏகூவிடம் சென்றான். ஆகாபின் குடும்பத்தை அழிப்பதற்காகக் கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இந்த ஏகூ.
8 ஏகூ ஆகாபின் குடும்பத்தார்க்குரிய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அகசியாவிடம் பணியாற்றிய யூதாவின் தலைவர்களையும், அகசியாவுடைய சகோதரரின் பிள்ளைகளையும், அவன் அலுவலர்களையும் கண்டு அவர்களைக் கொன்றொழித்தான்.
9 பின்னர் அவன் அகசியாவைத் தேடினான். சமாரியாவில் ஒளிந்திருக்கும் போது அகசியா பிடிப்பட்டான்; உடனே ஏகூவிடம் அவனை அழைத்து வர, ஏகூ அவனையும் கொன்றான். 'இவன்ஆண்டவரை முழு இதயத்தோடு நாடிய யோசபாத்தின் மகன்' என்பதனால் அவர்கள் அவனை அடக்கம் செய்தனர். இதனால் அரசுப் பொறுப்பை ஏற்க அவன் குடும்பத்தில் யாருமே இல்லை.

யூதாவின் அரசி அத்தலியா

[தொகு]

(2 அர 11:1-3)


10 அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்ததை அறிந்ததும், கொதித்தெழுந்து யூதா வீட்டு அரச வழிமரபினர் அனைவரையும் கொன்றழித்தாள்.
11 ஆனால் அரசனின் மகள் யோசபியாத்து, [2] கொல்லப்படவிருந்த அரச புதல்வர்களுள் அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டுபோய் அவனையும் அவன் செவிலித் தாயையும் படுக்கையறையில் மறைத்து வைத்தாள். இந்த யோசபியாத்து, அரசன் யோராமின் மகளும் தலைமைக் குரு யோயாதாவின் மனைவியும் அகசியாவின் சகோதரியும் ஆவாள். அவள் யோவாசை அத்தலியாவிடமிருந்து மறைத்ததால் அவளால் அவனைக் கொல்ல இயலவில்லை.
12 நாட்டை அத்தலியா ஆட்சி செய்த ஆறு ஆண்டளவும் அரசனின் மகன் அவர்களோடு கடவுளின் இல்லத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.

குறிப்புகள்

[1] 22:6 'இராமோத்து' என்பது மறுபெயர்.
[2] 22:11 'சேபா' என்பது மறுபெயர்.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 23 முதல் 24 வரை