திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சாலமோன் அரசரின் ஆட்சியின் கீழ் எருசலேம் கோவில் கட்டப்படுதல்: கோவில் வேலை செய்வோர். மூலம்: விவிலிய வரலாறு. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஓலாந்து.


2 குறிப்பேடு (The Second Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

சாலமோன் திருக்கோவிலைக் கட்டுதல்[தொகு]


1 பின்பு சாலமோன் எருசலேமில் அவர் தந்தை தாவீதுக்கு ஆண்டவர் தோன்றிய மோரியா மலைமேல் எபூசியராகிய ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஒர் இல்லம் எழுப்பத் தொடங்கினார். இந்த இடத்தைத் தாவீது ஏற்கெனவே தயார் செய்திருந்தார். [1]
2 தம் ஆட்சியின் நான்காம் ஆண்டு, இரண்டாம் மாதம், இரண்டாம் நாள் சாலமோன் வேலை தொடங்கினார்.
3 கடவுளின் இல்லத்தைக் கட்டுமாறு சாலமோன் இட்ட அடித்தளம், அக்கால அளவின்படி, அறுபது முழ நீளமும் இருபது முழ அகலமும் கொண்டதாயிருந்தது.
4 முகப்பில் இருந்த மண்டபம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமும் கொண்டதாய் இருந்தது. சாலமோன் அதன் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினார்.
5 கோவிலின் மையப் பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும் பொன்னால் பொதிந்தார். அதன் மேல், பேரீச்சை மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன.
6 கோவில் தளத்தை விலை உயர்ந்த கற்களால் அழகுபடுத்தினார்; பர்வாயிமினின்று கொண்டு வரப்பெற்ற பொன்னே பயன்படுத்தப்பட்டது.
7 கோவிலின் உத்திரங்கள், நிலைகள், சுவர்கள், கதவுகள் ஆகியவற்றைப் பொன் தகடுகளால் மூடினார்; சுவர்களில் கெருபுகளைப் பதித்தார்.
8 பிறகு கோவிலின் திருத்தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழம். அதை ஏறக்குறைய இருபத்திநான்கு "டன்" [2] நிறையுள்ள பொன் தகடுகளால் மூடினார். [3]
9 ஆணிகள் அறுநூற்று எழுபது கிராம் [4] நிறையுள்ள பொன்னால் ஆனவை. மேல் அறைகளையும் அவர் பொன்னால் மூடினார்.


10 திருத்தூயகத்தில் இரு கெருபுகளின் உருவங்களைச் செய்துவைத்துப் பொன் தகட்டால் மூடினார். [5]
11 அவற்றின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம்; அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அது கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.
12 அவ்வாறே இரண்டாவது கெருபின் அளவும்; அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அவ்விறக்கை கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.
13 இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்த கெருபுகளுடைய இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை கோவிலின் மையப் பகுதியை நோக்கியவண்ணமாய் இருந்தன. [6]
14 சாலமோன், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய நூல்களினால் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபுகளின் உருவங்கள் பின்னப்பெற்றிருந்தன. [7]


15 கோவிலுக்கு முன்பாக முப்பதைந்து முழம் உயரமான இரண்டு தூண்களைச் செய்தார். அவற்றின் உச்சியில் இருந்த போதிகைகளின் உயரம் ஐந்து முழம்.
16 கழுத்தணி போன்ற சங்கிலிகளைச் செய்து, தூண்களின் போதிகைகளின்மேல் பொருத்தி வைத்தார். மேலும் வெண்கலத்தால் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சங்கிலிகளில் தொங்க விட்டார்.
17 அந்தத் தூண்களைக் கோவில் முன்பாக வலப்பக்கத்திலும் இடப்பக்கதிலுமாக நாட்டினார். வலப்பக்கத் தூணுக்கு 'யாக்கீன்' [8] என்றும், இடப்பக்கத் தூணுக்குப் 'போவாசு' [9] என்றும் பெயரிட்டார்.

குறிப்புகள்

[1] 3:1 = தொநூ 22:2.
[2] 3:8 'அறுநூறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[3] 3:8 = விப 26:33-34.
[4] 3:9 'ஐம்பது செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[5] 3:10 'மூடினர்' என்பது எபிரேய பாடம்.
[6] 3:10-13 = விப 25:18-20.
[7] 3:14 = விப 26:31.
[8] 3:17 எபிரேயத்தில் 'ஆண்டவர் நிலைநாட்டுகிறார்' என்பது பொருள்.
[9] 3:17 எபிரேயத்தில் '(ஆண்டவரின்) ஆற்றலால்' என்பது பொருள்.

அதிகாரம் 4[தொகு]

திருக்கோவிலுக்கான பொருள்கள்[தொகு]

(1 அர 7:23-51)


1 சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் பத்து முழம். [1]
2 மேலும் கடல் என்னும் வட்டவடிவமான வெண்கலத் தொட்டியை அவர் வார்ப்பித்தார். அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.
3 அதன் அடியில் சுற்றிலும் காளை வடிவங்கள் இருந்தன. பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருந்தன. அவை தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.
4 அத்தொட்டி பன்னிரு காளைகளின்மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. காளைகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது.
5 தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப்போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.
6 கழுவுவதற்குப் பத்துக் கொப்பரைகளைச் செய்து, ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் அவர் வைத்தார். எரிபலிக்கான அனைத்தும் அவற்றின் கழுவப்பட்டன. குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் 'கடல்' பயன்படுத்தப்பட்டது. [2]


7 மேலும் அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; [3]
8 பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார்; [4]


9 குருக்களின் முற்றத்தையும், பெரிய முற்றத்தையும் அமைத்தார்; முற்றத்தின் வாயில்களை அமைத்து, அவற்றின் கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினார்;
10 'கடலை' வலப்பக்கம் தென்கிழக்கே நிறுவினார்.


11 ஈராம், பாத்திரங்களையும் சாம்பல் அள்ளுகருவிகளையும் கிண்ணங்களையும் செய்தார். இவ்வாறு அரசர் சாலமோன் கட்டளையிட்டபடி கடவுளின் இல்லத்திற்கான வேலைகளை அவர் செய்து முடித்தார்.
12 அவையாவன: இரு தூண்கள், இரு தூண்களின் உச்சியில் கிண்ண வடிவம் கொண்ட இரு போதிகைகள், தூண்களின் உச்சியிலுள்ள அப்போதிகைகளை மூட இரு வலைப்பின்னல்கள்,
13 அவ்விரு வலைப்பின்னல்களுக்கான நானூறு மாதுளை வடிவங்கள். அவை ஒவ்வொன்றிலும் மாதுளை வடிவங்கள் இரு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. வலைப்பின்னல்கள் தூண்களின் கிண்ண வடிவம் கொண்ட போதிகைகளை மூடியிருந்தன.
14 மேலும் அவர் செய்தவை: கொப்பரைகள், அவற்றுக்கான தள்ளுவண்டிகள்,
15 ஒரு 'கடல்'. அதன்கீழ் பன்னிரு காளைகள்,
16 பாத்திரங்கள், அள்ளுகருவிகள், முட்கரண்டிகள், மற்றும் துணைக்கலன்கள். ஈராம் அபி ஆண்டவரின் இல்லத்திற்கு வேண்டிய பாத்திரங்ளைக் கலப்பற்ற வெணகலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தார்.
17 அரசர் சுக்கோத்துக்கும் செரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தான் சமவெளிக் களிமண் பகுதியில் அவற்றை வார்ப்பித்தார்.
18 சாலமோன் செய்த கலன்கள் எல்லாம் கணக்கிலடங்கா; அவற்றுக்கான வெண்கலத்தை நிறுத்து மாளாது.


19 சாலமோன் கடவுளின் இல்லத்திற்கு வேண்டிய கலன்கள் எல்லாவற்றையும், பொற்பலிபீடத்தையும், திருமுன்னிலை மேசைகளையும்,
20 திருத்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி வைக்கவேண்டிய விளக்குத் தண்டுகளையும், ஏற்றவேண்டிய அகல்களையும் பசும் பொன்னால் செய்தார்;
21 அதேபோன்று மலர்களையும், அகல்களையும், அணைப்பான்களையும் பசும்பொன்னால் செய்தார்;
22 கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் தூபகலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்; மேலும் கோவில் வாயில்களையும், அதாவது திருத்தூயகக் கதவுகளையும் தூயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார்.

குறிப்புகள்

[1] 4:1 = விப 27:1-2.
[2] 4:6 = விப 30:17-21.
[3] 4:7 = விப 25:31-40.
[4] 4:8 = விப 25:23-30.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை