திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
தாவீது பகைவரை வீழ்த்துகிறார். விவிலிய ஏட்டுக் கலை ஓவியம். காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: கோந்தே அருங்காட்சியகம், ஷாந்திய்யி, பிரான்சு.


1 குறிப்பேடு (The First Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

அம்மோனியர் மற்றும் சிரியர் மேல் வெற்றி[தொகு]

(2 சாமு 10:1-19)


1 இவற்றின்பின் அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அரசனானான்.
2 அப்பொழுது தாவீது, "அனூனின் தந்தையாகிய நாகாசு எனக்கு அன்பு காட்டியதுபோல், நானும் அவன் மகனாகிய இவனுக்கு அன்பு காட்டுவேன்" என்று கூறி, அவர் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கும்படி தூதர்களை அனுப்பினார். அவர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை அடைந்தனர்.


3 அப்போது அம்மோனியரின் தலைவர்கள் ஆனூனை நோக்கி, "தாவீது ஆறுதல் கூறுபவர்களை உம்மிடம் அனுப்பியுள்ளது உம் தந்தையைச் சிறப்பிப்பதற்கென்று நினைக்கிறீரா? உமது நாட்டைத் துருவி ஆராயவும், அதை நிலை குலையச் செய்யவும் உளவு பார்க்கவுமே அவன் அலுவலர் வந்துள்ளனர் அன்றோ?" என்று கூறினர்.


4 எனவே ஆனூன் தாவீதின் அலுவலரைக் கைது செய்து, அவர்கள் தாடியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்பிலிருந்து கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.
5 அவர்களுக்குச் செய்யப்பட்டதைச் சிலர் வந்து தாவீதுக்குத் தெரிவித்தனர். அவர்கள் மிகவும் கேவலப்பட்டிருந்ததால், தாவீது அவர்களுக்கு ஆளனுப்பி, "எரிகோவில் தங்கியிருந்து உங்கள் தாடி வளர்ந்தபின் திரும்பி வாருங்கள்" என்று கூறினார்.


6 அம்மோனியர் தாங்கள் தாவீதின் பகைமையைத் தேடிக் கொண்டதை உணர்ந்தனர். உடனே ஆனூனும், அம்மோனியரும் மெசப்பொத்தாமியா, மாக்கா, சோபா என்ற சிரிய நாட்டுப் பகுதிகளினின்று தங்களுக்குத் தேர்ப்படையையும் குதிரைப்படையையும் கூலிக்கு அமர்த்துமாறு, ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பிவைத்தனர்.
7 அவ்வாறே, கூலிக்கு அமர்த்தப்பட்ட முப்பத்து இரண்டாயிரம் தேர்களும் மாக்கா மன்னனின் படைகளும் வந்து மேதபாவுக்கு முன்பாக பாளையம் இறங்கினர். அம்மோனியரும் அவர்களுடைய எல்லா நகர்களிலிருந்தும் திரண்டு வந்து போருக்குத் தயாராயினர்.


8 தாவீது அதைக் கேள்வியுற்றபோது, யோவாபையும் ஆற்றல் மிக்க தம் படை முழுவதையும் அனுப்பினார்.
9 அம்மோனியர் புறப்பட்டு வந்து நகர வாயிலில் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு உதவியாக வந்த மன்னர்கள் திறந்த வெளியில் அணிவகுத்து நின்றனர்.


10 யோவாபு தமக்கு முன்னும் பின்னும் பகைவர் படை தாக்கவிருப்பதைக் கண்டபோது, இஸ்ரயேல் அனைத்திலும் ஆற்றல்மிகு வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.
11 மற்றப் படைவீரரைத் தம் சகோதரன் அபிசாயின் தலைமையில் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.
12 யோவாகு அவனை நோக்கி, "சிரியர் என்னை விட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நீ எனக்கு உதவியாக வரவேண்டும்; அம்மோனியர் உன்னைவிட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நான் உனக்கு உதவியாக வருவேன்.
13 மனஉறுதியுடன் இரு! நம் மக்களுக்காகவும் கடவுளின் நகர்களுக்காகவும் வலிமையுடன் போராடுவோம். ஆண்டவர் தமக்கு நலமாய்த் தோன்றுவதைச் செய்வாராக!" என்றார்.


14 பின்பு யோவாபும் அவரோடிருந்த மக்களும் சிரியரோடு போரிட நெருங்கினார்கள். அவர்களோ அவருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர்.
15 சிரியர் புறமுதுகிட்டு ஓடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறியோடி நகருக்குள் புகுந்தனர். யோவாபும் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.


16 தாங்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்ட சிரியர், தூதர்களை அனுப்பி நதிக்கு அப்பாலிருந்த சிரியரையும் வரவழைத்தனர். அதரேசரின் படைத்தலைவன் சோபாகு அவர்களை முன்னின்று நடத்தினான்.
17 அதைக் கேள்வியுற்ற தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து சென்று, சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார். அவ்வாறு தாவீது போருக்கு அணிவகுத்து நிற்கையில் சிரியப் படைகள் அவரோடு மோதின.
18 சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப்படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள்படையினரையும், வெட்டி வீழ்த்தினார்; படைத் தலைவன் சோபாகையும் கொன்றார்.
19 அதரேசரின் அலுவலர், தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு, தாவீதோடு சமாதானம் செய்து அவருக்கு அடிபணிந்தனர். அதன்பின் அம்மோனியருக்கு உதவி செய்ய சிரியர் என்றுமே விரும்பவில்லை.

அதிகாரம் 20[தொகு]

இரபாவின்மேல் வெற்றி[தொகு]

(2 சாமு 12:26-31)


1 ஓர் ஆண்டு கழிந்தபின் அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாபு ஆற்றல்மிக்க படையோடு சென்று அம்மோனியர் நாட்டை அழித்தார். பின்பு இரபாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டார். தாவீதோ எருசலேமில் தங்கிவிட்டார். யோவாபு இரபாவைத் தாக்கி அதை வீழ்த்தினார். [1]
2 தாவீது அவர்கள் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்துக் கொண்டார். அது ஒரு தாலந்து பொன் எடையுடையது. அதில் ஒர் இரத்தினம் இருந்தது. அதைத் தாவீது தம் மகுடத்தில் பதித்துக்கொண்டார். மேலும் நகரினின்று ஏராளமான கொள்ளைப் பொருள்களையும் கொண்டு வந்தார்.
3 தாவீது அங்குக் குடியிருந்த மக்களைச் சிறைப்படுத்தி இரம்பம், கடப்பாரை, கோடரி ஆகியவற்றால் அவர்களை வேலை செய்ய வைத்தார். தாவீது அம்மோனியரின் எல்லா நகர் மக்களுக்கும் இவ்விதமே செய்தார். பின்னர் அவர்தம் மக்கள் அனைவருடனும் எருசலேமுக்குத் திரும்பினார்.

பெலிஸ்தியர்மேல் படையெடுப்பு[தொகு]

(2 சாமு 21:15-22)


4 அதன் பின்னர் கெசேரில் பெலிஸ்தியரோடு போர்நடந்தது. அதில் ஊசாவியனான சிபக்காய் அரக்கர் இனத்தானான சிபாயைக் கொன்றான். அதனால் பெலிஸ்தியரும் அடிபணிந்தனர்.


5 மேலும் ஒரு போர் பெலிஸ்திரோடு நடந்தது. யாயிரின் மகன் எல்கானான் இத்தியனான கோலியாத்தின் சகோதரன் இலகுமியைக் கொன்றான். இவனது ஈட்டியின் பிடி தறிக்கட்டை அளவு பெரிதாயிருந்தது. [2]


6 காத்தில் மற்றொரு போரும் நடந்தது. ஒவ்வொரு கையிலும் காலிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்தி நான்கு விரல்களைக் கொண்ட அரக்கர் இனத்தானான நெட்டையன் ஒருவன் அவ்வூரில் இருந்தான்.
7 அவன் இஸ்ரயேலைப் பழித்துரைத்தான். தாவீதின் சகோதரராகிய சிமயா மகன் யோனத்தான் அவனைக் கொன்றார்.
8 காத்து ஊரிலிருந்த அரக்கருக்குப் பிறந்த இவர்கள் தாவீதாலும் அவர் அலுவலராலும் சாகடிக்கப்பட்டனர்.

குறிப்புகள்

[1] 20:1 = 2 சாமு 11:1.
[2] 20:5 = 1 சாமு 17:4-7.

(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை