திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
சாமுவேல் தம் தாய் அன்னாவிடம் இறைவேண்டல் கற்கிறார். ஓவியர்: ரெம்ப்ராண்ட். காலம்: 17ஆம் நூற்றாண்டு.

1 சாமுவேல் (The First Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல்[தொகு]


1 அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபேசை முற்றுகையிட்டான். யாபேசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, "எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்" என்றனர்.
2 அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, "நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை: உங்களுக்குள் எவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கப்படும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன்" என்றான்.


3 யாபேசின் பெரியோர் அவனிடம் கூறியது: "ஏழு நாள்கள் எங்களுக்கு தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பார் எவரும் இல்லையெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்."
4 தூதர்கள் சவுலின் ஊராகிய கிபயாவுக்கு வந்து, மக்கள் செவிபடச் செய்தியைச் சொல்ல, மக்கள் அனைவரும் குரலெழுப்பி அழுதனர்.
5 அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். "மக்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்?" என்று சவுல் கேட்டார். யாபேசின் ஆள்கள் சொன்னதை அவரிடம் சொன்னார்கள்.


6 இச்செய்தியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கடவுளின் ஆவி அவரை வலிமையுடன் ஆட்கொள்ள, அவரது சினம் கனன்றது.
7 அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றைத் தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட்கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.


8 அவர் அவர்களை பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர்.
9 வந்திருந்த தூதர்களிடம், "நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபேசின் மக்களுக்குத் தெரிவியுங்கள்" என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் அவ்வாறே யாபோசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
10 ஆகவே யாபேசின் ஆள்கள் "நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும்" என்றனர்.


11 மறுநாள் சவுல் மக்களை மூன்று படைகளாகப் பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோதே அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்கபட்டார்கள்.


12 பிறகு மக்கள் சாமுவேலை நோக்கி, "'சவுலா எங்களை ஆள்வது?' என்று கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்களைக் கொன்று போடுவோம் "என்றனர்.
13 ஆனால் சவுல், "இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார்" என்றார்.
14 சாமுவேல் மக்களை நோக்கி, "வாருங்கள் கில்காலுக்கு சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம்" என்றார்.
15 மக்கள் அனைவரும் கில்காலுக்குச் சென்று அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதிகாரம் 12[தொகு]

சவுல் மக்களுக்கு அளித்த அறிவுரை[தொகு]


1 அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது: "நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின்படி நடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.
2 இதோ! ஓர் அரசர்! இவர் உங்களை வழிநடத்துவார். எனக்கோ வயதாகித் தலைநரைத்து விட்டது. என் புதல்வர்தாம் இருக்கின்றனர். என் இளமைமுதல் இந்நாள்வரை நான் உங்களை வழி நடத்தியிருக்கிறேன்.
3 இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். ஆண்டவர் முன்பும் அவர் திருப்பொழிவு செய்தவர் முன்பும் என்மீது குற்றம் சாட்ட முடியுமா? யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டேனா? யாருடைய கழுதையையாவது நான் எடுத்துக் கொண்டேனா? யாரையாவது நான் ஏமாற்றினேனா? யாரையாவது நான் ஒடுக்கினேனா? யாரிடமிருந்தாவது கையூட்டுப் பெற்று நான் அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா? சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்."
4 அதற்கு அவர்கள், "நீர் எங்களை ஏமாற்றவில்லை, ஒடுக்கவில்லை, கையூட்டு யாரிடமும் பெறவில்லை" என்றார்கள்.
5 அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் என்னிடம் எக்குற்றமும் காணவில்லை என்பதற்கு இன்று ஆண்டவர் சாட்சி. அவர் திருப்பொழிவு செய்தவரும் சாட்சி!" அதற்கு அவர்கள், "அவரே சாட்சி!" என்றார்கள்.


6 மீண்டும் சாமுவேல் மக்களிடம் கூறியது: "ஆண்டவர் தாம் மோசையையும் ஆரோனையும் நியமித்து, உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டினின்று கொண்டு வந்தார். [1]
7 ஆண்டவர் திருமுன் நில்லுங்கள். உங்களுக்காகவும் உங்கள் மூதாதையருக்காகவும் ஆண்டவர் செய்த அனைத்து மீட்பின் செயல்களையும் முன் வைத்து அவர் முன்னிலையில் உங்களோடு வழக்காடுவேன்.
8 யாக்கோபு எகிப்திற்குச் சென்ற பின்,உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினர். அவர்கள் உங்கள் மூதாதயரை எகிப்தினின்று கொண்டுவந்து இவ்விடத்தில் குடியேறச் செய்தனர். [2]
9 உங்கள் மூதாதையர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தபோது, அவர் அவர்களை ஆசோரின் படைத்தலைவன் சீசராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும் மோவாபு அரசரின் கையிலும் விட்டு விட்டார். இவர்கள் அவர்களோடு போரிட்டனர். [3]
10 அவர்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்டு, 'நாங்கள் ஆண்டவரைப் புறக்கணித்தோம், பாகால்களையும் அஸ்தரோதுகளையும் வழிபட்டுப் பாவம் செய்துள்ளோம். இப்போது எங்களை எங்கள் எதிரிகளிடமிருந்து விடுவியும். நாங்கள் உம்மையே வழிபடுவோம்' என்றனர். [4]
11 ஆண்டவர் எருபாகால், பேதான், இப்தாகு, சாமுவேல் ஆகியோரை அனுப்பி, சுற்றிலுமிருந்த உங்கள் எதிரிகளின் கையினின்று உங்களை விடுவித்தார். நீங்களும் அச்சமின்றி வாழ்ந்தீர்கள். [5]
12 அம்மோனிய அரசன் நாகாசு உங்களை எதிர்த்து வருவதைக் கண்டபொழுது நீங்கள், 'இல்லை, எங்களை அரசாள எங்களுக்கு ஓர் அரசர் வேண்டும்! என்று என்னிடம் கூறினீர்கள். [6]


13 இதோ நீங்கள் விரும்பித் தேர்ந்து கொண்ட அரசர்! நீங்கள் வேண்டியவாறு உங்களை ஆள ஆண்டவர் ஓர் அரசரைத் தந்துள்ளார்.
14 நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிந்து, அவர் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் கட்டளைக்கு எதிராகக் கலகம் விளைவிக்காமலிருந்தால், நீங்களும் உங்களை ஆளும் அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுபவராக இருப்பீர்கள்.
15 ஆனால் நீங்கள் ஆண்டவர் குரலுக்குச் செவிக் கொடுக்காமல், அவர் தம் கட்டளைக்கு எதிராகக் கலகம் விளைவித்தால், ஆண்டவரின் கை உங்கள் மூதாதையருக்கு எதிராக இருந்தது போல், உங்களுக்கும் எதிராகவும் இருக்கும்.
16 இப்பொழுது ஆண்டவர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யவிருக்கும் மாபெரும் நிகழ்ச்சியை நின்று பாருங்கள்.
17 இன்று கோதுமை அறுவடையன்றோ? இடியும் மழையும் அனுப்பும்படி நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன். உங்களுக்காக ஓர் அரசனைக் கேட்டது, ஆண்டவர் கண்முன் நீங்கள் செய்த மாபெரும் குற்றம் என்பதை இதனால் நீங்கள் கண்டுணர்வீர்கள்."


18 சாமுவேல் ஆண்டவரிடம் மன்றாட, ஆண்டவர் அன்று இடியும் மழையும் அனுப்பினார். மக்கள் அனைவரும் ஆண்டவரிடமும் சாமுவேலிடமும் மிகுந்த அச்சம் கொண்டனர்.
19 அனைத்து மக்களும் சாமுவேலை நோக்கி, "நாங்கள் சாகாவண்ணம், உம் அடியார்களுக்காக உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும். ஏனெனில் நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தோடும் எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்ட இந்தக் குற்றமும் சேர்ந்து கொண்டது என்றனர்.


20 பின் சாமுவேல் மக்களிடம் கூறியது: "அஞ்ச வேண்டாம், நீங்கள் இக்குற்றங்களை எல்லாம் செய்திருப்பினும் ஆண்டவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகாமல் அவரையே உங்கள் முழு மனத்தோடு வழிபடுங்கள்.
21 பயனற்ற, விடுவிக்க இயலாத சிலைகளை நாடிச் செல்லவேண்டாம். அவை வீணே.
22 தம் மாபெரும் பெயரின் பொருட்டு ஆண்டவர் தம் மக்களைப் புறங்கணிக்கமாட்டார். ஏனெனில் உங்களைத் தம் மக்களாக்க அவரே திருவுளங்கொண்டார்.
23 என்னைப் பொறுத்தமட்டில், உங்களுக்காக மன்றாடுவதை நிறுத்துவதனால் ஆண்டவருக்கு எதிராகப் புரியும் குற்றம் என்னை விட்டு விலகி இருக்கட்டும். நான் உங்களுக்கு நல்ல, நேரிய வழியைக் கற்றுக் கொடுப்பேன்.
24 ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி நடந்து, உங்கள் முழு மனத்தோடு உண்மையாகவே அவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்துப் பாருங்கள்.
25 ஆனால் நீங்கள் தொடர்ந்து தீமை செய்தால் நீங்களும் உங்கள் அரசனும் அழிந்து விடுவீர்கள்."

குறிப்புகள்

[1] 12:6 = விப 6:26.
[2] 12:8 = விப 2:23.
[3] 12:9 = நீத 3:12; 4:2; 13:1.
[4] 12:10 = நீத 10:15.
[5] 12:11 = 1 சாமு 3:20; நீத 4:6; 7:1; 11:29.
[6] 12:12 = 1 சாமு 8:19.

(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை