உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
சாமுவேல். விவிலியச் சிலை. சாலிஸ்பரி பெருங்கோவில், ஐக்கிய இராச்சியம்.


1 சாமுவேல்

[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7

[தொகு]

சாமுவேல் இஸ்ரயேலரை ஆளுதல்

[தொகு]


1 கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவரின் பேழையை காக்கும்படி அவன் மகன் எல்யாசரைத் திருநிலைப்படுத்தினர். [1]
2 பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது. இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவரை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தனர்.


3 இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: "நீங்கள் முழு உள்ளத்தோடு ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காகத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார்."
4 இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.


5 மேலும் சாமுவேல், "இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன்" என்றார்.
6 ஆகவே அவர்கள் மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து 'ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம்' என்று அறிக்கையிட்டார்கள். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.


7 இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். அப்போது பெலிஸ்தியர் தலைவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராகப் புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள்.
8 இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: "நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மைக் காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடும்".
9 ஆகவே பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவருக்கு ஒரு முழு எரி பலியாகச் செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர்தம் மன்றாட்டைக் கேட்டார்.
10 சாமுவேல் இவ்வாறு எரிபலி செலுத்திக் கொண்டிருந்தபோது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுடன் போரிட நெருங்கினர். அன்று ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்து அவர்களைக் கலங்கடிக்க, அவர்கள் இஸ்ரயேல் முன்பாகத் தோல்லியுற்றனர்.
11 இஸ்ரயேலர் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் துரத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.


12 சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கும் சொனாவுக்கும் நடுவில் நிறுத்தி, "ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார்" என்று கூறி அதற்கு 'எபனேசர்' [2] என்று பெயரிட்டார்.
13 பெலிஸ்தியர் சிறுமையுற்று அதன்பின் மீண்டும் இஸ்ரயேல் எல்லைக்குள் வரவில்லை. சாமுவேலின் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரின் கரம் பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது.
14 எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்குத் திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியரின் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக்கொண்டனர். மேலும் இஸ்ரயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.


15 சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலுக்குத் தலைவராய் இருந்தார்.
16 அவர் ஆண்டுதோறும் சுற்றுப் பயணம் செய்து, பெத்தேல், கில்கால், மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்.
17 பின்பு அவர் தம் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி, அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்; அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.

குறிப்புகள்

[1] 7:1 = 2 சாமு 6:2-4; 1 குறி 13:5-7.
[2] 7:12 எபிரேயத்தில் 'உதவியின் கல்' என்பது பொருள்.

அதிகாரம் 8

[தொகு]

இஸ்ரயேலர் தங்களுக்கு ஓர் அரசனை வேண்டல்

[தொகு]


1 சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவர்களக அமர்த்தினார்.
2 அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்; இளையவனின் பெயர் அபியா; இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.
3 ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர்தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.


4 எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர்.
5 அவர்கள் அவரிடம், "இதோ உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்" என்று கேட்டுக் கொண்டனர். [1]


6 'எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத் தாரும்' என்று அவர்கள் கேட்டது சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார்.
7 ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: "மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத்தான் புறக்கணித்துவிட்டனர்.
8 நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்து அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள்.
9 இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால் அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து".


10 ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்:
11 "உங்கள் மீது ஆட்சி செய்யும் அரசனின் உரிமைகளாவன: அவன் உங்கள் புதல்வர்களைத் தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான்.
12 அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஐம்பதின்மர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விளைச்சலை அறுவடை செய்பவராகவும், தன் போர்க்கருவிகளையும் தேர்க்கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.
13 மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறவர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சுடுபவர்களாகவும், வைத்துக்கொள்வான்.
14 அவன், உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலருக்குக் கொடுப்பான்.
15 உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும் கொடுப்பான்.
16 உங்கள் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில் [2] சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான்.
17 உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்குப் பணியாளர்களாய் இருப்பீர்கள்.
18 அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்."


19 மக்களோ சாமுவேலின் குரலுக்குச் செவிகொடுக்க மறுத்து, "இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.
20 அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார்" என்றனர்.
21 மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார்.
22 ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: "அவர்கள் குரலுக்குச் செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய்". பின்பு சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, "ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும்" என்றார்.

குறிப்புகள்

[1] 8:5 = இச 17:14.
[2] 8:16 'இளைஞர்கள்' என்பது எபிரேய பாடம்.

(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை