திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/செப்பனியா/அதிகாரங்கள் 1 முதல் 3 வரை
கி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செப்பனியா இறைவாக்கு உரைத்தார். அவர் இறைவாக்கு உரைத்த காலம் யோசியா அரசன் கி.மு. 621இல் செயல்படுத்திய சமயச் சீர்திருத்தத்திற்கு முன்னைய பத்தாண்டாக இருக்கலாம்.
ஏனைய இறைவாக்கு நூல்களில் மிகுதியாகக் காணப்படும் கருத்துகளையே இந்நூலும் கொண்டுள்ளது; அழிவின் நாள் நெருங்கிவிட்டது; அப்பொழுது யூதா வேற்றுத் தெய்வங்களை வழிபட்டதற்காகத் தண்டிக்கப்படும்; எருசலேம் அழிவுற்றாலும் மீண்டும் ஒரு நாள் முன்னைய நன்னிலைக்கு உயர்த்தப்படும்; பணிவும் நேர்மையும் மிக்க மக்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.
செப்பனியா
[தொகு]நூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் | 1:1 - 2:3 | 1384 - 1385 |
2. வேற்றினத்தாரின் அழிவு | 2:4-15 | 1385 - 1386 |
3. எருசலேமின் அழிவும் மீட்பும் | 3:1-20 | 1386 - 1388 |
செப்பனியா (The Book of Zephaniah)
[தொகு]அதிகாரங்கள் 1 முதல் 3 வரை
அதிகாரம் 1
[தொகு]
1 ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது
செப்பனியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும்
அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான
கூசியாவின் மைந்தர் ஆவார். [*]
ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள்
[தொகு]
2 "மண்ணுலகில் எதுவும் இராதவாறு
3 அனைத்தையும் அழித்துவிடுவேன்," என்கிறார் ஆண்டவர்.
மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்;
வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்;
கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்;
மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன்,"
என்கிறார் ஆண்டவர்.
4 யூதாவுக்கும் எருசலேமில் வாழும் அனைவர்க்கும்
எதிராக நான் கையை ஓங்குவேன்.
பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும்
அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன்.
5 வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும்,
ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும்
மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன்.
6 ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும்
ஆண்டவரைத் தேடாது, அவரை அறிய முயலாது
இருப்போரையும் அழித்துவிடுவேன்.
7 தலைவராகிய ஆண்டவர் திருமுன் மௌனமாயிருங்கள்;
ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;
பலி ஒன்றை ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்;
தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார்
8 ஆண்டவரது பலியின் நாளில் தலைவர்களையும்
அரசனுடைய புதல்வர்களையும்
வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள அனைவரையும் தண்டிப்பேன்.
9 வாயிற்படியை மிதிக்காமல் தாண்டி வந்து,
தங்கள் தலைவனின் வீட்டை வன்செயலாலும் வஞ்சனையாலும் நிரப்புகிறவர்களை
அந்நாளில் தண்டிப்பேன்.
10 ஆண்டவர் கூறுகின்றார்:
"அந்நாளில் எருசலேமின் மீன் வாயிலிருந்து கூக்குரலும்,
புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும்,
குன்றுகளிலிருந்து இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும்.
11 நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே! கதறி அழுங்கள்;
ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது;
பணம் படைத்தவர் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்;
12 அக்காலத்தில், நான் கையில் விளக்கேந்திக் கொண்டு
எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்;
'ஆண்டவர் நன்மையும் செய்யார்; தீமையும் செய்யார்' என்று
தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு
பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்.
13 அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படும்;
வீடுகள் பாழாக்கப்படும்;
அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்வார்கள்;
ஆனால் அவற்றில் குடியிருக்கப்போவதில்லை;
திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்தாலும்,
அவற்றின் இரசத்தைக் குடிக்கப் போவதில்லை."
14 ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது;
அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது;
ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்;
மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும்.
15 அந்த நாள் கடும் சினத்தின் நாள்;
துன்பமும் துயரமும் நிறைந்த நாள்;
பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்;
இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;
16 அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக
எக்காளமும் போர் முழக்கமும் கேட்கும் நாள்.
17 மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்;
பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்;
ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தனர்;
அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்;
சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும்.
18 ஆண்டவரது சினத்தின் நாளில்,
அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா.
உலகம் முழுவதும் அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும்.
உலகில் வாழும் அனைவரையும் அவர்
நொடிப்பொழுதில் முற்றிலும் அழித்துவிடுவார்.
- குறிப்பு
[*] 1:1 = 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.
அதிகாரம் 2
[தொகு]மனந்திரும்ப அழைப்பு
[தொகு]
1 பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள்.
2 பதரைப்போல் நீங்கள் தூற்றப்படுமுன்னே,
ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே,
ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே,
3 நாட்டிலிருக்கும் எளியோரே!
ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே!
அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்;
நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்;
ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை
உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.
வேற்றினத்தாரின் அழிவு
[தொகு]
4 காசா குடியற்றுப்போகும்;
அஸ்கலோன் பாழடைந்துபோகும்;
அஸ்தோது நண்பகலில் விரட்டியடிக்கப்படும்;
எக்ரோன் வேரோடு பிடுங்கியெறியப்படும்.
5 கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கெரேத்தியரே!
உங்களுக்கு ஐயோ கேடு!
ஆண்டவரின் வாக்கு உங்களுக்கு எதிராய் உள்ளது;
பெலிஸ்தியரின் நாடே! கானானே!
எவனும் குடியிராதபடி நான் உன்னை அழித்து விடுவேன்.
6 இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு
இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே ஏற்றதாகும்.
7 அந்தக் கடற்கரை யூதாவின் குடும்பத்தவருள்
எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்;
அங்கே அவர்கள் தங்கள் ஆடுகளை மேய்த்து,
மாலையில் அஸ்கலோன் வீடுகளில் படுத்திருப்பார்கள்;
ஏனெனில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்
அவர்கள்மீது அக்கறை கொண்டு,
முன்னைய நன்னிலைக்கு அவர்களை உயர்த்துவார். [1]
8 மோவாபின் பழிப்புரைகளையும்
அம்மோனியரின் வசைமொழிகளையும் நான் கேட்டேன்;
அவர்கள் என் மக்களை இழித்துரைத்து,
அவர்களின் நாட்டு எல்லைகளைக் குறித்து
வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.
9 ஆதலால், படைகளின் ஆண்டவரும்,
இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய நான்
ஆணையிட்டுக் கூறுகின்றேன்:
மோவாபு சோதோமைப்போல் ஆகும்;
அம்மோனியர் கொமோராவைப்போல் ஆவர்; இது உறுதி.
இந்நாடுகள் காஞ்சொறி படரும் காடாகவும்,
உப்புப் பள்ளம் நிறைந்த பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும்.
என் மக்களில் எஞ்சியோர் அவர்களைக் கொள்ளையடிப்பர்;
என் மக்களுள் தப்பியோர் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர். [2]
10 அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே;
ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக
அவர்கள் பழித்துரைத்தார்கள்; வீம்பு பேசினார்கள்.
11 ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்;
நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் குன்றிப்போகச் செய்வார்.
வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம்
தீவுகளில் இருந்து கொண்டு அவரையே வணங்குவர். [3]
12 எத்தியோப்பியரே! நீங்களும் எனது வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள். [4]
13 வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி,
ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்;
நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார்.
14 அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்;
தூண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்;
பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்;
நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்;
கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.
15 "நான் ஒப்புயர்வு அற்றவன்" என்று
கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ?
இப்பொழுது அது காட்டு விலங்குகளின் குகையாகி
எவ்வளவு பாழாய்ப் போயிற்று!
அதைக் கடந்துபோகும் ஒவ்வொருவனும்
சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.[5]
- குறிப்புகள்
[1] 2:4-7 = எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17;
யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7.
[2] 2:9 = தொநூ 19:24.
[3] 2:8-11 = எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49:6;
எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15.
[4] 2:12 = எசா 18:1-7.
[5] 2:13-15 = எசா 10:5-34; 14:24-27; நாகூ 1:1-3:19.
அதிகாரம் 3
[தொகு]எருசலேமின் பாவமும் மீட்பும்
[தொகு]
1 கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும்
மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு!
2 எந்தச் சொல்லுக்கும் அவள் செவி சாய்ப்பதில்லை;
கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை;
ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை;
தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
3 அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்;
அதன் நீதிபதிகள், மாலையில் கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்.
4 அதன் இறைவாக்கினர் வீண் பெருமை பேசும் வஞ்சகமிக்க மனிதர்;
அதன் குருக்கள் புனிதமானதைக் களங்கப்படுத்தித்
திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.
5 அதனுள் இருக்கும் ஆண்டவரோ நீதியுள்ளவர்;
அவர் கொடுமை செய்யாதவர்;
காலைதோறும் அவர் தமது தீர்ப்பை வழங்குகின்றார்;
வைகறைதோறும் அது தவறாமல் வெளிப்படும்;
ஆனால் கொடியவனுக்கு வெட்கமே இல்லை.
6 வேற்றினத்தாரை நான் வெட்டி வீழ்த்தினேன்;
அவர்களுடைய கோட்டைகளைத் தகர்த்தெறிந்தேன்;
அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினேன்;
அவற்றில் நடந்துசெல்பவர் எவருமில்லை;
யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி
அவர்களுடைய நகர்கள் பாழடைந்து போயின.
7 "உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்;
எனது கண்டிப்புரையை ஏற்றுக் கொள்வாய்;
நான் வழங்கிய தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் நீ மறக்கமாட்டாய்"
என்று நான் எண்ணினேன்;
அவர்களோ தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க
இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
8 ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்:
"நான் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு;
வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து,
அரசுகளையும் ஒன்று திரட்டி,
என் கடும்சினத்தையும் கோபத்தீயின் கொடுமை முழுவதையும்,
அவர்கள் மேல் கொட்டிவிடத் திட்டமிட்டுள்ளேன்;
ஏனெனில், என் வெஞ்சினத்தீக்கு உலகெல்லாம் இரையாகும்.
9 அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத்
தூய நாவினை அருள்வேன்;
அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி
ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்.
10 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் -
சிதறுண்ட என் மக்கள் -
எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள்.
11 எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு
அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்;
ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை
உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்;
இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய்.
12 ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்;
அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்.
13 இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்;
வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது;
அச்சுறுத்துவார் யாருமின்றி,
அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்." [*]
மகிழ்ச்சிப் பாடல்
[தொகு]
14 மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;
இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;
மகளே எருசலேம்!
உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
15 ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்;
உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்;
நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
16 அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்:
"சீயோனே, அஞ்சவேண்டாம்;
உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.
17 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்;
அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;
உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்;
தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்;
உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.
18 அது திருவிழாக் காலம்போல் இருக்கும்.
உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;
ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.
19 இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்;
கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்;
ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்;
அவமானமுற்ற அவர்களை உலகெங்கும்
பெயரும் புகழும் பெறச்செய்வேன்.
20 அக்காலத்தில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து
உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்;
ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை
முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி,
உலகின் எல்லா மக்களிடையேயும்
நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன்"
என்கிறார் ஆண்டவர்.
- குறிப்புகள்
[*] 3:13 = திவெ 14:5.
(செப்பனியா நூல் நிறைவுற்றது)
(தொடர்ச்சி): ஆகாய்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை