திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தானியேல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நெபுகத்னேசர் அரசன்...சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.." - தானியேல் 3:19-20

தானியேல் (The Book of Daniel)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

பொற்சிலை வழிபாடு[தொகு]


1 நெபுகத்னேசர் அரசன் அறுபது முழ உயரமும்
ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் செய்வித்து,
அதைப் பாபிலோன் நாட்டிலிருந்த 'தூரா' என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான்.
2 பின்பு நெபுகத்னேசர் அரசன் தான் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு
சிற்றரர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும்
நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மற்றெல்லா அலுவலரும்
ஒன்றாய்க் கூடி வரவேண்டுமென்று ஆணையிட்டான்.
3 அவ்வாறே சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும்
அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும்
நீதிபதிகளும் மணியக்காரரும் மாநிலங்களின் மற்றெல்லா அலுவலரும்
நெபுகத்னேசர் அரசன் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு
ஒன்றாய்க் கூடி வந்து சேர்ந்தனர்;
அவர்கள் நெபுகத்னேசர் நிறுவிய சிலை முன் வந்து நின்றனர்.
4 கட்டியக்காரன் ஒருவன் உரத்த குரலில்,
"இதனால் மக்கள் அனைவர்க்கும், எல்லா இனத்தவர்க்கும்,
மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது யாதெனில்:
5 எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை,
பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும்
ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில் நீங்கள் தாழவீழ்ந்து
நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவேண்டும்.
6 எவராகிலும் தாழ வீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில்,
அவர்கள் அந்நேரமே தீச்சூளையில் தூக்கிப்போடப்படுவார்கள்"
என்று கூறி முரசறைந்தான்.
7 ஆகையால், எக்காளம், நாதசுரம், யாழ் கின்னரம், வீணை,
பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடன்,
எல்லா மக்களும் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய
பொற்சிலையைப் பணிந்து தொழுதார்கள்.


8 அப்பொழுது கல்தேயர் சிலர் தாமே முன்வந்து
யூதர்கள் மேல் குற்றம் சாட்டலாயினர்.
9 அவர்கள் நெபுகத்னேசர் அரசனிடம் சொன்னது:
"அரசரே! நீர் நீடூழி வாழ்க!
10 அரசரே! எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை,
பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும்
எந்த மனிதனும் உடனே தாழவீழ்ந்து பொற்சிலையைப் பணியவேண்டும் என்று,
நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?
11 எவராகிலும் தாழவீழ்ந்து பணியாமல் போனால்
அவர்கள் எரிகிற தீச்சூளையில் போடப்படுவார்கள்
என்றும் நீர் ஆணை விடுத்தீர் அல்லவா?
12 அரசரே! பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா?
அந்தப் பேர்வழிகள் உமது கட்டளையை மதிக்கவில்லை;
நீர் நிறுவின பொற் சிலையைப் பணிந்து தொழவும் இல்லை."


13 உடனே நெபுகத்னேசர் கடுஞ்சினமுற்று,
சாத்ராக்கையும், மேசாக்கையும், ஆபேத்நெகோவையும்
பிடித்து வரும்படி கட்டளையிட்டான்.
அவ்வாறே அரசன் முன்னிலைக்கு அவர்களைப் பிடித்துக்கொண்டு வந்தனர்.
14 நெபுகத்னேசர் அவர்களை நோக்கி,
"சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும்
என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும்,
நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா?
15 இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை,
பைக்குழல் முதலிய எல்லாவகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன்,
நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப்
பணிந்து தொழத் தயாராயிருக்கிறீர்களா?
தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில்
தூக்கிப் போடப்படுவீர்கள்.
உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய
தெய்வம் ஒன்று உண்டோ?" என்றான்.


16 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள்
செபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக,
"இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை.
17 அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள்,
எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர்.
18 அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார்.
அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும்,அரசரே!
நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்;
நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை.
இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்" என்றார்கள்.
19 இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன்
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ,
அவனது முகம் சினத்தால் சிவந்தது.
வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத்
தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.
20 பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி,
எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு
தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.
21 அவ்வாறே அந்த வீரர்கள் அவர்களை மேற்போர்வையோடும்
உள்ளாடையோடும் தலைப்பாகையோடும் மற்ற ஆடைகளோடும் சேர்த்துக்கட்டி,
எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போட்டார்கள்.
22 அரசனது கட்டளை மிகக் கண்டிப்பானதாக இருந்ததாலும்
தீச்சூளை செந்தணலாய் இருந்ததாலும்
சாத்ராக், மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைத்
தீச்சூளையில் போடுவதற்குத் தூக்கிச் சென்றவர்களையே
அத்தீப்பிழம்பு சுட்டெரித்துக் கொன்றது.
23 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூவரும் கட்டுண்டவர்களாய்
எரிகிற தீச்சூளையினுள் வீழ்ந்தார்கள்.
24 [*] அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று
விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி,
"மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!" என்றான்.
"ஆம் அரசரே" என்று அவர்கள் விடையளித்தனர்.
25 அதற்கு அவன், "கட்டவிழ்க்கப்பட்டவர்களாய்
நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்!
அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே!
மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" என்றான்.
26 உடனே நெபுகத்னேசர் எரிகிற தீச்சூளையின் வாயிலருகில் வந்து நின்று,
"உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய
சாத்ராக்கு! மேசாக்கு, ஆபேத்நெகோ வெளியே வாருங்கள்" என்றான்.
அவ்வாறே சாத்ராக்கு, மேசாச்கு, ஆபேத்நெகோ ஆகியோர்
நெருப்பைவிட்டு வெளியே வந்தனர்.
27 சிற்றரர்களும் அதிகாரிகளும் ஆளுநரும்
அரசனுக்கு அறிவுரை கூறுவோரும் கூடிவந்து,
அந்த மனிதர்களின் உடலில் தீப்பட்ட அடையாளமே இல்லாமலும்
அவர்களது தலைமுடி கருகாமலும்
அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றாமலும்
நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்.
28 அப்பொழுது நெபுகத்னேசர், "சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ
ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக!
தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து,
அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல்,
அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த
அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்.
29 ஆதலால் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுளுக்கு எதிராகப்
பழிச்சொல் கூறும் எந்த இனத்தவனும் எந்த நாட்டவனும்
எந்த மொழியினனும் கண்டந்துண்டமாக வெட்டப்படுவான்;
அவனுடைய வீடும் தரைமட்டமாக்கப்படும்; இதுவே என் ஆணை!
ஏனெனில், இவ்வண்ணமாய் மீட்கின்ற
ஆற்றல் படைத்த கடவுள் வேறெவரும் இல்லை" என்றான்.
30 பிறகு அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்க்குப்
பாபிலோனின் மாநிலங்களில் பெரும் பதவி அளித்துச் சிறப்புச் செய்தான்.


குறிப்பு

[*] 3:24 - கிரேக்க ஏடுகளில் "அசரியாவின் மன்றாட்டு", "மூவர் பாடல்"
ஆகிய பகுதிகள் இங்கு இடம்பெறுகின்றன.
(காண்: இணைத்திருமுறை தானியேல் - இணைப்புகள்.)


அதிகாரம் 4[தொகு]


1 அரசர் நெபுகத்னேசர் உலகில் எங்கணுமுள்ள
எல்லா இனத்தார்க்கும் நாட்டினர்க்கும் மொழியினருக்கும் அறிவிப்பது:
2 உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக!
மாட்சிமிகு கடவுள் எனக்காகச் செய்தருளிய அடையாளங்களையும்
விந்தைகளையும் வெளிப்படுத்துவது நலமென எனக்குத் தோன்றுகிறது.


3 அவர் தந்த அடையாளங்கள் எத்துணைப் பெரியன!
அவர் ஆற்றிய விந்தைகள் எத்துணை வலியன!
அவரது அரசு என்றுமுள அரசு! அவரது ஆட்சியுரிமை வழிவழி நிலைக்கும்.

நெபுகத்னேசரின் இரண்டாம் கனவு[தொகு]


4 நெபுகத்னேசராகிய நான் வீட்டில் மன அமைதியுடனும்
அரண்மனையில் வளமுடனும் வாழ்ந்து வந்தேன்.
5 நான் ஒரு கனவு கண்டேன்; அது என்னை அச்சுறுத்தியது;
நான் படுத்திருக்கையில் எனக்குத் தோன்றிய கற்பனைகளும்
காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.
6 ஆதலால் நான் கண்ட கனவின் உட்பொருளை
எனக்கு விளக்கிக் கூறும்படி பாபிலோனிய ஞானிகள் அனைவரையும்
என் முன்னிலைக்கு அழைத்துவரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தேன்.
7 அவ்வாறே, மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரரும்
கல்தேயரும் சோதிடரும் வந்து கூடினர்;
நான் கண்ட கனவை அவர்களிடம் கூறினேன்;
ஆனால் அவர்களால் அதன் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறமுடியவில்லை.
8 இதற்காக, என் சொந்தத் தெய்வமாகிய
பெல்தசாச்சாரின் பெயர் சூட்டப்பெற்ற தானியேல் வந்தார்;
அவர் புனிதமிகு கடவுளின் ஆவியால் நிரப்பப்பெற்றவர்;
அவரிடம் நான் கண்ட கனவைக் கூறினேன்;
9 "மந்திரவாதிகளின் தலைவராகிய பெல்தசாச்சார்!
புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது என்பதையும்,
உம்மால் விளக்கமுடியாத மறைபொருள் எதுவுமில்லை என்பதையும் நான் அறிவேன்.
நான் கனவில் கண்ட காட்சி இதுதான்; அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவீர்.
10 நான் படுக்கையில் கிடந்தபோது, என் மனக்கண் முன்னே தோன்றிய காட்சிகளாவன:
'இதோ! நிலவுலகின் நடுவில் மரம் ஒன்றைக் கண்டேன்; அது மிக உயர்ந்து நின்றது.
11 அது வளர்ந்து வலிமை மிக்கதாய், வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.
நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.
12 அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன;
மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன;
அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது;
அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன;
அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன;
அனைத்து உயிர்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது.
13-14 நான் படுக்கையில் கிடந்தபோது என் மனக்கண்முன்னே
இக்காட்சிகளைக் கண்டேன்;
அப்பொழுது, இதோ! காவலராகிய தூயவர் ஒருவர்
வானத்திலிருந்து இறங்கி வந்தார்.
அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது இதுவே:
இந்த மரத்தை வெட்டுங்கள்; கிளைகளைத் தறித்து விடுங்கள்;
இதன் இலைகளை எல்லாம் பறித்தெறியுங்கள்;
இதன் கனிகளைச் சிதறடியுங்கள்;
இதன் கீழ் வாழும் விலங்குகள் ஓடிப்போகட்டும்;
இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.
15 ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்;
இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு,
வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும்.
வானத்தின் பனியால் அந்த மனிதன் நனையட்டும்;
தரையில் புல்வெளியில் விலங்குகளோடு அவன் கிடக்கட்டும்.
16 அவனது மனித உள்ளம் மாற்றப்பட்டு,
அவனுக்கு விலங்கின் மனம் கொடுக்கப்படட்டும்.
17 ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லட்டும்.
காவலர் விதித்த தீர்ப்பு இதுவே;
தூயவர் வாய்மொழியின் முடிவும் இதுவே;
மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்பதையும்,
தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்பதையும்,
மனிதருள் தாழ்ந்தவர்களையே அதற்குத் தலைவர்களாக்குகின்றார் என்பதையும்
உயிர்கள் அனைத்தும் அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது.
18 அரசர் நெபுகத்னேசராகிய நான் கண்ட கனவு இதுவே:
பெல்தசாச்சார்! இதன் உட்பொருளை எனக்குத் தெரிவியும்!
என் நாட்டிலுள்ள எல்லா ஞானிகளாலும்
இதன் உட்பொருளை விளக்கிக் கூற இயலவில்லை.
நீர் ஒருவரே இதைத் தெரிவிக்கக்கூடியவர்;
ஏனெனில் புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது."


19 இதைக் கேட்டவுடன் பெல்தசாச்சார் என்னும் பெயர்கொண்ட
தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார்;
அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன.
அதைக் கண்ட அரசன், "பெல்தசாச்சார்,
கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம்" என்றான்.
பெல்தசாச்சார் மறுமொழியாக,
"என் தலைவரே! இந்தக் கனவு உம் பகைவர்களுக்கும்
இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக!
20 நீர் கண்ட மரம் வளர்ந்து வலிமைமிக்கதாய்
வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்திருந்தது.
நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.
21 அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன.
மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன.
அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது.
அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன.
22 அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல;
மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம்.
உமது புகழ் வளர்ந்து வானைத் தொடுமளவு உயர்ந்துள்ளது.
உமது ஆட்சி உலகின் எல்லைகள் வரை பரவியுள்ளது.
23 மேலும், அரசரே! காவலாகிய தூயவர் ஒருவர்
வானத்திலிருந்து இறங்கி வந்ததை நீர் கண்டீர் அல்லவா!
அவர், 'இந்த மரத்தை வெட்டி அழித்துப்போடுங்கள்;
ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்;
இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு
வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும்;
வானத்தின் பனியால் அவன் நனையட்டும்.
ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லும்வரை
அவன் விலங்கோடு விலங்காய்த் திரிவான் என்று சொன்னதையும் கேட்டீர்.
24 அரசரே! இதுதான் உட்பொருள்:
என் தலைவரும் அரசருமான உமக்கு
உன்னதரது தீர்ப்பின்படி நடக்கவிருப்பதும் இதுவே:
25 மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்;
காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து,
வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர்.
இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும்,
மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்றும்,
தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும்
நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும்.
26 வேர்கள் நிறைந்த அடிமரத்தை விட்டுவைக்க வேண்டும்
என்று கட்டளை பிறந்தது அல்லவா?
அதன்படி, விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன்,
அரசுரிமை மீண்டும் உமக்குக் கிடைக்கும்.
27 எனவே, அரசரே! என் அறிவுரை உம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆக!
நல்லறத்தைப் பேணித் தீச்செயல்களை நீக்குக!
ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி
உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்க!
ஒருவேளை உமது வளமை நீடிப்பதற்கு இது வழியாகலாம்" என்றார்.


28 அவ்வாறே அரசன் நெபுகத்னேசருக்கு அனைத்து நேர்ந்தது.
29 ஓராண்டு சென்றபின், ஒருநாள் அரசன்
பாபிலோன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலவிக்கொண்டிருந்தான்.
30 அப்பொழுது அவன், "என்வலிமையின் ஆற்றலால்
அரசன் வாழும் மாளிகையாகவும்,
எனது மாட்சியும் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ
இந்த மாபெரும் பாபிலோன்!" என்றான்.
31 இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்கும் முன்பே,
வானத்திலிருந்து ஒரு குரலொலிகேட்டது:
"நெபுகத்னேசர் அரசனே! உனக்கே இந்தச் சொல்!
உன்னுடைய அரசு உன்னிடமிருந்து அகன்று விட்டது.
32 மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய்.
காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோலப் புல்லை மேய்வாய்;
மனிதர்களின் அரசை உன்னதரே ஆள்கின்றார் என்றும்,
தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும்
நீ உணாந்து கொள்வதற்குள் ஏழு ஆண்டுகள் உன்னைக் கடந்து செல்லும்."
33 உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று.
மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான்.
மாட்டைப்போலப் புல்லை மேய்ந்தான்;
தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும்,
அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும்
வளரத் தொடங்கும்வரை அவனது உடல் வானத்தின் பனியினால் நனைந்தது.


34 குறித்த காலம் கடந்தபின், நெபுகத்னேசராகிய நான்
என் கண்களை வானத்திற்கு உயர்த்தவே,
என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது.
நானோ உன்னதரை வாழ்த்தி, என்றுமுள கடவுளைப் புகழ்ந்து போற்றினேன்!


அவரது ஆட்சியுரிமை என்றுமே அழியாது!
அவரது அரசு வழிவழி நிலைக்கும்!


35 உலகின் உயிர்கள் அனைத்தும் அவர் திருமுன் ஒன்றுமில்லை!
வான்படை நடுவிலும் உலகில் வாழ்வோர் இடையிலும்
அவர் தாம் விரும்புவதையே செய்கின்றார்!
அவரது வலிய கையைத் தடுக்கவோ
'நீர் என்ன செய்கிறீர்?' என்று அவருடைய செயல்களைப்பற்றி வினவவோ
எவராலும் இயலாது!


36 அதே நேரத்தில், என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது;
என் அரசின் மேன்மைக்காக என் சீரும் சிறப்பும் எனக்கு மீண்டும் கிடைத்தன;
என் அமைச்சர்களும் உயர்குடி மக்களும் என்னைத் தேடி வந்தார்கள்;
எனது அரசுரிமை மீண்டும் உறுதி பெற்றது.
முன்னிலும் அதிக மாண்பு எனக்குக் கிடைத்தது.
37 நெபுகத்னேசராகிய நான் விண்ணக அரசரைப் போற்றிப் புகழ்ந்து,
ஏத்திப் பாடுகின்றேன்:


அவருடைய செயல்கள் யாவும் நேரியவை!
அவருடைய வழிவகைகள் சீரியவை!
ஆணவத்தின் வழிநடப்போரை
அவர் தாழ்வுறச் செய்வார்!



(தொடர்ச்சி): தானியேல்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை