திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 143 முதல் 144 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்" (திருப்பாடல் 144:9). பளிங்குக் கல் கலை. ஆண்டு: 1438. காப்பிடம்: புளோரன்சு நகர் பெருங்கோவில்.

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 143 முதல் 144 வரை

திருப்பாடல் 143[தொகு]

உதவிக்காக மன்றாடல்[தொகு]

(தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்;
நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால்,
உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்
மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.


2 தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்;
ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும்
உமது திருமுன் நீதிமான் இல்லை. [*]


3 எதிரி என்னைத் துரத்தினான்;
என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்;
என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல்
என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.


4 எனவே, என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று;
என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.


5 பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்;
உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச்
சிந்தனை செய்கின்றேன்;
உம் கைவினைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.


6 உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்;
வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல்
என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது. (சேலா)


7 ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்;
ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது;
என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்;
இல்லையெனில், படுகுழி செல்வோருள் ஒருவராகிவிடுவேன்.


8 உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்;
ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்;
நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்;
ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.


9 ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.


10 உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் கடவுள்;
உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!


11 ஆண்டவரே! உமது பெயரின் பொருட்டு என் உயிரைக் காத்தருளும்!
உமது நீதியின் பொருட்டு என்னை நெருக்கடியினின்று விடுவித்தருளும்.


12 உமது பேரன்பை முன்னிட்டு என் பகைவரை அழித்துவிடும்;
என் பகைவர் அனைவரையும் ஒழித்துவிடும்;
ஏனெனில், நான் உமக்கே அடிமை!


குறிப்பு

[*] 143:2 = உரோ 3:20; கலா 2:16.


திருப்பாடல் 144[தொகு]

வெற்றிக்கு நன்றி[தொகு]

(தாவீதுக்கு உரியது)


1 என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே!
போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே!


2 என் கற்பாறையும் [1] கோட்டையும் அவரே!
எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே!
என் கேடயமும் புகலிடமும் அவரே!
மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே!


3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்?
மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்? [2]


4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்;
அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை.


5 ஆண்டவரே! உம் வான்வெளியை வளைத்து இறங்கிவாரும்;
மலைகளைத் தொடும்; அவை புகை கக்கும்.


6 மின்னலை மின்னச் செய்து, அவர்களைச் சிதறடியும்;
உம் அம்புகளை எய்து, அவர்களைக் கலங்கடியும்.


7 வானின்று உமது கையை நீட்டி எனக்கு விடுதலை வழங்கும்;
பெருவெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று
என்னை விடுவித்தருளும்.


8 அவர்களது வாய் பேசுவது பொய்!
அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!


9 இறைவா,
நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்;
பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.


10 அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே!
உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!


11 எனக்கு விடுதலை வழங்கும்;
வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்தருளும்;
அவர்களது வாய் பேசுவது பொய்!
அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!


12 எம் புதல்வர்கள் இளமையில் செழித்து வளரும்
செடிகள்போல் இருப்பார்களாக!
எம் புதல்வியர் அரண்மனைக்கு அழகூட்டும்
செதுக்கிய சிலைகள்போல் இருப்பார்களாக!


13 எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக!
வகைவகையான தானியங்களால் நிறைந்திருப்பனவாக!
எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம்,
பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்!


14 எங்கள் மாடுகள் சுமை சுமப்பனவாக!
எவ்விதச் சிதைவோ இழப்போ இல்லாதிருக்கட்டும்!
எங்கள் தெருக்களில் அழுகுரல் இல்லாதிருக்கட்டும்.


15 இவற்றைக் உண்மையாகவே அடையும் மக்கள் பேறுபெற்றோர்!
ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.


குறிப்பு

[1] 144:2 'பேரன்பும்' என்றும் பொருள்படும்.
[2] 144:3 = யோபு 7:17-18; திபா 8:4.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 145 முதல் 146 வரை