திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 35 முதல் 36 வரை

விக்கிமூலம் இலிருந்து
சிறுவர்கள் மத்தளம் கொட்டி, திருப்பாடலை இசைக்கின்றனர். கலைஞர்: லூக்கா தெல்லா ரோப்பியா. ஆண்டு: சுமார் 1438. காப்பிடம்: புளோரன்சு.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 35 முதல் 36 வரை

திருப்பாடல் 35[தொகு]

உதவிக்காக மன்றாடல்[தொகு]

(தாவீதுக்கு உரியது)


1 ஆண்டவரே, எனக்கெதிராய் வழக்காடுவோருடன் வழக்காடும்;
என்மீது போர் தொடுப்போரோடு போர் புரியும்.


2 கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்;
எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.


3 என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்;
ஈட்டியையும் வேலையும் கையிலெடும்;
'நானே உன் மீட்பர்' என்று என் உள்ளத்திற்குச் சொல்லும்.


4 என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்,
மானக்கேடுற்று இழிவடையட்டும்;
எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர்,
புறமுதுகிட்டு ஓடட்டும்.


5 ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டியடிக்க,
காற்றில் பறக்கும் பதர்போல அவர்கள் சிதறட்டும்.


6 ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட,
அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும்.


7 ஏனெனில், காரணமின்றி எனக்குக் கண்ணி வைத்தனர்;
காரணமின்றி எனக்குக் குழிதோண்டினர்.


8 அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்;
அவர்களுக்கு வைத்த கண்ணியில் அவர்களே சிக்கக்கொள்ளட்டும்;
அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே விழட்டும்.


9 என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்;
அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.


10 "ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?
எளியோரை வலியோரின் கையினின்றும்
எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும்
விடுவிப்பவர் நீரே" என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.


11 பொய்ச்சான்று சொல்வோர் எனக்கெதிராய் எழுகின்றனர்;
எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி என்னிடம் வினவுகின்றனர்.


12 நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்;
அவர்களோ, அதற்குப் பதிலாக எனக்குத் தீங்கிழைத்தனர்.
என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர்.


13 நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது,
சாக்கு உடுத்திக் கொண்டேன்;
நோன்பிருந்து என்னை வருத்திக் கொண்டேன்;
முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்.


14 நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும்
அவர்களுக்காய் மன்றாடினேன்;
தாய்க்காகத் துக்கம் கொண்டாடுவோரைப்போல
வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.


15 நான் தடுக்கி விழுந்தபோது
அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்;
எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்;
யாதொன்றும் அறியாத என்னைச் சின்னாபின்னமாக்கி
ஓயாது பழித்துரைத்தனர்.


16 இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து
அவர்கள் என்னை இகழ்ந்தனர்;
எள்ளி நகையாடினர்;
என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தனர்.


17 என் தலைவரே, இன்னும் எத்தனை நாள்
இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?;
என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும்
என் ஆருயிரைச் சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.


18 மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்;
திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்.


19 வஞ்சகரான என் எதிரிகள்
என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்;
காரணமின்றி என்னை வெறுப்போர்
கண்சாடை காட்டி இகழவிடாதீர். [*]


20 ஏனெனில், அவர்களது பேச்சு சமாதானத்தைப் பற்றியதன்று;
நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக
அவர்கள் வஞ்சகமாய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.


21 எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து,
'ஆ! ஆ! நாங்களே எங்கள் கண்ணால் கண்டோம்' என்கின்றனர்.


22 ஆண்டவரே, நீர் இதைக் கண்டும் மௌனமாய் இராதீர்;
என் தலைவரே, என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதீர்.


23 என் கடவுளே, கிளர்ந்தெழும்!
என் தலைவரே, விழித்தெழுந்து என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும்.


24 என் கடவுளாகிய ஆண்டவரே,
உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்!
அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதேயும்!


25 அவர்கள் தங்கள் உள்ளத்தில் 'ஆம், நாம் விரும்பினது இதுவே'
எனச் சொல்லாதபடி பாரும்!
'அவனை விழுங்கிவிட்டோம்' எனப் பேசிக்கொள்ளாதபடி பாரும் !


26 எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து
மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்!
என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு
வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்!


27 என் நேர்மை நிலைநாட்டப்படுவதை விரும்புவோர்
ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்;
'ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!
அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக் காண விரும்புவார்'
என்று எப்பொழுதும் சொல்லட்டும்.


28 அப்பொழுது, என் நா உம் நீதியை எடுத்துரைத்து,
நாள்முழுதும் உம் புகழ் பாடும்.


குறிப்பு

[*] 35:19 = திபா 69:4; யோவா 16:25.


திருப்பாடல் 36[தொகு]

மானிடரின் தீய குணம்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
ஆண்டவரின் ஊழியரான தாவீதுக்கு உரியது)


1 பொல்லாரின் உள்ளத்தில் [1] தீமையின் குரல்
ஒலித்துக் கொண்டே இருக்கின்றது;
அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை. [2]


2 ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு
வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என,
இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர்.


3 அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை;
நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர்.


4 படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர்,
தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்;
தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.

கடவுளின் கருணை[தொகு]


5 ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு;
முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.


6 ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது;
உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை;
மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே;


7 கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது!
மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.


8 உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்;
உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர்.


9 ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது;
உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.


10 உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும்,
நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும்
தொடர்ந்து வழங்கியருளும்!


11 செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்!
பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும்!


12 தீங்கிழைப்போர் அதோ அங்கே குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர்,
அவர்கள் நசுக்கப்பட்டனர்;
அவர்களால் எழவே இயலாது.


குறிப்புகள்

[1] 36:1 'பொல்லாரின் உள்ளத்தில்' என்பது 'என் உள்ளத்தில்' என எபிரேய பாடத்தில் உள்ளது.
[2] 36:1 = உரோ 3:18.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 37 முதல் 38 வரை