திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 3 முதல் 4 வரை
திருப்பாடல்கள்
[தொகு]முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 3 முதல் 4 வரை
திருப்பாடல் 3
[தொகு]காலை மன்றாட்டு
[தொகு](தாவீதின் புகழ்ப்பா; தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது) [*]
1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்!
என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!
2 'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்' என்று
என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா)
3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்;
நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.
4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;
அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா)
5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;
ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.
6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு
நான் அஞ்சமாட்டேன்.
7 ஆண்டவரே, எழுந்தருளும்;
என் கடவுளே, என்னை மீட்டருளும்;
என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்!
பொல்லாரின் பல்லை உடையும்!
8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;
அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)
- குறிப்பு
[*] 3 தலைப்பு = 2 சாமு 15:13-17:22.
திருப்பாடல் 4
[தொகு]மாலை மன்றாட்டு
[தொகு](பாடகர் தலைவர்க்கு; நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா)
1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,
நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது,
நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;
இப்போதும் எனக்கு இரங்கி,
என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
2 மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு
இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்
பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)
3 ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;
நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;
- இதை அறிந்துகொள்ளுங்கள்.
4 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி
அமைதியாயிருங்கள். (சேலா) [*]
5 முறையான பலிகளைச் செலுத்துங்கள்;
ஆண்டவரை நம்புங்கள்.
6 'நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?" எனக் கேட்பவர் பலர்.
ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
7 தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட
மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
8 இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்;
ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்
நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.
- குறிப்பு
[*] 4:4 = எபே 4:26.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 5 முதல் 6 வரை