உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 49 முதல் 50 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர் பாடல் இசைக்கிறார்; அருகில் பெண் உருவில் "இசை" அமர்ந்திருக்க, விலங்குகளும் இசைவயப்பட்டு நிற்கின்றன; "எதிரொலி"யும் சிறுவனாக உருவகிக்கப்பட்டுள்ளது. "பாரிசு திருப்பாடல்கள் ஓவிய நூல்". காலம்: 10ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பாரிசு.

திருப்பாடல்கள்

[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 49 முதல் 50 வரை

திருப்பாடல் 49

[தொகு]

செல்வம் பயன் அற்றது

[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
கோராகியரின் புகழ்ப்பா)


1 மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்;
மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.


2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே,
அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.


3 என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்;
என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும்.


4 நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில் நான் கருத்தாய் உள்ளேன்;
யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்.


5 துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்?
என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு
நான் அஞ்சுவானேன்?


6 தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ
தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர்.


7 உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது;
தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது.


8 மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது;
எவராலும் அதனைச் செலுத்த இயலாது.


9 ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா?
படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா?


10 ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல,
ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ!
அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.


11 கல்லறைகளே [1] அவர்களுக்கு நிலையான வீடுகள்!
அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு!
அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை.


12 ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது;
அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார்.


13 தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே;
தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே. (சேலா)


14 பலியாடுகளைப் போலவே அவர்களும்
சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்;
சாவே அவர்களின் மேய்ப்பன்;
அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்; [2]
அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்;
பாதாளமே அவர்களது குடியிருப்பு.


15 ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி;
பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து
என்னைத் தூக்கி நிறுத்துவார். (சேலா)


16 சிலர் செல்வர் ஆனாலோ,
அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ,
அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!


17 ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை;
அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை.


18 உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும்,
'நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,


19 அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்;
ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை.


20 மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது;
அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்.


குறிப்புகள்

[1] 49:11 'கல்லறைகளே' என்பது 'உள்ளுறுப்புகள்' என்று எபிரேய பாடத்தில் உள்ளது.
[2] 49:14 'அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்' என்பது
'நீதிமான்கள் வைகறையில் அவர்கள்மேல் வெற்றி கொள்வர்'
என்று எபிரேய பாடத்தில் உள்ளது.


திருப்பாடல் 50

[தொகு]

உண்மை வழிபாடு

[தொகு]

(ஆசாபின் புகழ்ப்பா)


1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்;
கதிரவன் எழும் முனையினின்று
மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத்
தீர்ப்புப் பெற அழைத்தார்.


2 எழிலின் நிறைவாம் சீயோனின்று,
ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்.


3 நம் கடவுள் வருகின்றார்; மௌனமாய் இருக்கமாட்டார்;
அவருக்கு முன்னே, சுட்டெரிக்கும் தழல் நெருப்பு!
அவரைச் சுற்றிலும், கடுமையான புயற்காற்று!


4 உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து,
தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்.


5 'பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட
என் அடியார்களை என்முன் ஒன்று கூட்டுங்கள்.'


6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்;
ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)


7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்;
இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்;
கடவுளாகிய நானே உன் இறைவன்;


8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு
நான் உங்களைக் கண்டிக்கவில்லை;
உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.


9 உங்கள் வீட்டின் காளைகளையோ,
உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக் கொள்வதில்லை.


10 ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்;
ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை.


11 குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்;
சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை.


12 எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை;
ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே.


13 எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ?
ஆட்டுக் கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ?


14 கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்;
உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.


15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்;
உங்களைக் காத்திடுவேன்;
அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்.


16 ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்:
'என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?
என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?


17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்;
என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.


18 திருடர்களைக் கண்டால் அவர்களோடு
விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்;
கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு.


19 உங்கள் வாய் உரைப்பது தீமையே;
உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.


20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்;
உங்கள் தாயின் மக்களைப் பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்.


21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,
நான் மௌனமாய் இருந்தேன்;
நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்;
ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்;
உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்
ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.


22 கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்;
இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்;
உங்களை விடுவிக்க யாரும் இரார்.


23 நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர்.
தம் வழியைச் செம்மைப்படுத்துவோர்
கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 51 முதல் 52 வரை