திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 71 முதல் 72 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" - திருப்பாடல் 22. ஆல்பனி விவிலியப் பாடல் நூல். காலம்: 12ஆம் நூற்றாண்டு.

திருப்பாடல்கள்[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 71 முதல் 72 வரை

திருப்பாடல் 71[தொகு]

முதியோரின் மன்றாட்டு[தொகு]


1 ஆண்டவரே!
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்;
ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.


2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்;
எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.


3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்;
கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்;
ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும்
அரணாகவும் இருக்கின்றீர்.


4 என் கடவுளே,
பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்;
நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று
என்னைக் காத்தருளும்.


5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;
ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.


6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்;
தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;
உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.


7 பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்;
நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.


8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே;
நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.


9 முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்;
என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்.


10 ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே;
என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்;


11 "கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்;
அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்;
அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை"
என்று அவர்கள் சொல்கின்றார்கள்.


12 கடவுளே!
என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;
என் கடவுளே!
எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.


13 என்னைப் பழிப்பவர்கள் வெட்கி அழிவார்களாக!
எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை
இழிவும் மானக்கேடும் சூழட்டும்!


14 ஆனால், நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்;
மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.


15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும்
நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்;
உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது.


16 தலைவராகிய ஆண்டவரே!
உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்;
உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.


17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;
இனிவரும் நாள்களிலும்
உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.


18 கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும்
இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு
வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும்.


19 கடவுளே, உமது நீதி வானம் வரைக்கும் எட்டுகின்றது;
மாபெரும் செயல்களை நீர் செய்திருக்கிறீர்;
கடவுளே, உமக்கு நிகர் யார்?


20 இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும்
நான் காணுமாறு செய்த நீரே,
எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்;
பாதாளத்தினின்று என்னைத் தூக்கி விடுவீர்.


21 என் மேன்மையைப் பெருகச் செய்து
மீண்டும் என்னைத் தேற்றுவீர்.


22 என் கடவுளே,
நான் வீணையைக் கொண்டு உம்மையும்
உமது உண்மையையும் புகழ்வேன்;
இஸ்ரயேலின் தூயரே,
யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.


23 நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்;
நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்.


24 என் வாழ்நாளெல்லாம் என் நா
உமது நீதியை எடுத்துரைக்கும்.
ஏனெனில் எனக்குத் தீங்குசெய்யப் பார்த்தவர்கள்
வெட்கமும் மானக்கேடும் அடைந்து விட்டார்கள்.


திருப்பாடல் 72[தொகு]

அரசருக்காக மன்றாடல்[தொகு]

(சாலமோனுக்கு உரியது)


1 கடவுளே,
அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.


2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!


3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்;
குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.


4 எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக!
ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக;
பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!


5 கதிரவனும் நிலாவும் உள்ளவரையில்,
உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக
உமக்கு அஞ்சி நடப்பார்களாக.


6 அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக;
நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக.


7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.


8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும்
அவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும்
அவர் அரசாள்வார். [*]


9 பாலைவெளி வாழ்வோர் அவர்முன் குனிந்து வணங்குவர்;
அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.


10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும்
காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;
சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள்
நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.


11 எல்லா அரசர்களும் அவர்முன்
தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.


12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்
திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.


13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.


14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும்
வன்முறையினின்றும் விடுவிப்பார்;
அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.


15 அவர் நீடுழி வாழ்க!
சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்;
அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக!
அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு
நாள் முழுதும் மன்றாடப்படுவதாக!


16 நாட்டில் தானியம் மிகுந்திடுக!
மலைகளின் உச்சிகளில் பயிர்கள் அசைந்தாடுக!
லெபனோனைப்போல் அவை பயன் தருக!
வயல்வெளிப் புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக!


17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக!
அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக!
எல்லா நாட்டினரும் அவரை
நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!


18 ஆண்டவராகிய கடவுள்,
இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி!
அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!


19 மாட்சி பொருந்திய அவரது பெயர்
என்றென்றும் புகழப்பெறுவதாக!
அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக!
ஆமென், ஆமென்.
20 (ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுகள் நிறைவுற்றன.)


குறிப்பு

[*] 72:8 = செக் 9:10.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 73 முதல் 74 வரை