திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 91 முதல் 92 வரை
திருப்பாடல்கள்
[தொகு]நான்காம் பகுதி (90-106)
திருப்பாடல்கள் 91 முதல் 92 வரை
திருப்பாடல் 91
[தொகு]நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
[தொகு]
1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர்,
எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்,
2 ஆண்டவரை நோக்கி, 'நீரே என் புகலிடம்; என் அரண்;
நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார்.
3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும்
கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.
4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்;
அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்;
அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.
5 இரவின் திகிலுக்கும்
பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர்.
6 இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும்
நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்.
7 உம் பக்கம் ஆயிரம்பேர் வீழ்ந்தாலும்,
உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும்,
எதுவும் உம்மை அணுகாது.
8 பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்;
உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.
9 ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;
உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர்.
10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;
வாதை உம் கூடாரத்தை நெருங்காது.
11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி,
தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். [1]
12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி,
அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். [2]
13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்;
இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். [3]
14 'அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,
அவர்களை விடுவிப்பேன்;
அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,
அவர்களைப் பாதுகாப்பேன்;
15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது,
அவர்களுக்குப் பதிலளிப்பேன்;
அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்;
அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;
16 நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்;
என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.'
- குறிப்புகள்
[1] 91:11 = மத் 4:6; லூக் 4:10.
[2] 91:12 = மத் 4:6; லூக் 4:11.
[3] 91:13 = லூக் 10:19.
திருப்பாடல் 92
[தொகு]புகழ்ச்சிப் பாடல்
[தொகு](ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்)
1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று;
உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.
2 காலையில் உமது பேரன்பையும்
இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்
3 பத்துநரம்பு வீணையோடும்
தம்புரு, சுரமண்டல இசையோடும்
எடுத்துரைப்பது நன்று.
4 ஏனெனில், ஆண்டவரே!
உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்;
உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து
நான் மகிழ்ந்து பாடுவேன்.
5 ஆண்டவரே!
உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை;
உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.
6 அறிவிலிகள் அறியாததும்
மூடர் உணராததும் இதுவே:
7 பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்;
தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்!
ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே;
8 நீரோ ஆண்டவரே!
என்றுமே உயர்ந்தவர்.
9 ஏனெனில், ஆண்டவரே!
உம் எதிரிகள் - ஆம், உம் எதிரிகள் - அழிவது திண்ணம்;
தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர்.
10 காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்;
புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.
11 என் எதிரிகளின் வீழ்ச்சியை
நான் கண்ணாரக் கண்டேன்;
எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை
நான் காதாரக் கேட்டேன்.
12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்;
லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.
13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்
நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்.
14 அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்;
என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
15 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்;
அவரே என் பாறை;
அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர்.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 93 முதல் 94 வரை