உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
ஆபிரகாம் மூன்று மனிதருக்கு விருந்தளிக்கிறார் (தொநூ 18:16). ஓவியர்: லுடோவிகோ கராச்சி (1555-1619. இத்தாலியா.

தொடக்க நூல்

[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை


அதிகாரம் 17

[தொகு]

ஆபிரகாமுடன் கடவுளின் உடன்படிக்கை - விருத்தசேதனம்

[தொகு]


1 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது,
ஆண்டவர் அவருக்குத் தோன்றி,
"நான் எல்லாம் வல்ல இறைவன்.
எனக்குப் பணிந்து நடந்து,
மாசற்றவனாய் இரு.
2 உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை
நான் ஏற்படுத்திக்கொள்வேன்;
உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்" என்றார்.
3 அப்பொழுது ஆபிராம் பணிந்து வணங்க,
கடவுள் அவரிடம் கூறியது:
4 "உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே:
எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
5 இனி உன் பெயர் ஆபிராம் அன்று;
'ஆபிரகாம்' என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். [1]
6 மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்;
உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன்.
உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.
7 தலைமுறை தலைமுறையாக உன்னுடனும்,
உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும்
என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.
இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும்
உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். [2]
8 நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும்
என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும்
உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன்.
நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்" என்றார். [3]


9 மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம்,
"நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும்
என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
10 நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும்
உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும்
நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே:
உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். [4]
11 உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.
இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.
12 தலைமுறை தலைமுறையாக
எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும்
நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும்.
அக்குழந்தை வீட்டில் பிறந்திருந்தாலும்,
உன் வழிமரபைச் சாராமல் வேற்றினத்தாரிடமிருந்து
விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும்,
அப்படியே செய்ய வேண்டும்.
13 உன்வீட்டில் பிறந்த குழந்தைக்கும்
விலைக்கு வாங்கியதற்கும்
கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு என் உடன்படிக்கை
உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும்.
14 தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும்,
என் உடன்படிக்கையை மீறியதால்,
தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்" என்றார்.


15 பின்பு கடவுள் ஆபிரகாமிடம்,
"உன் மனைவியைச் 'சாராய்' என அழைக்காதே.
இனிச் 'சாரா' என்பதே அவள் பெயர்.
16 அவளுக்கு ஆசி வழங்குவேன்.
அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன்.
அவளுக்கு நான் ஆசி வழங்க,
அவள் வழியாக நாடுகள் தோன்றும்.
மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்" "என்றார்.
17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி,
நகைத்து, "நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்?
தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?"
என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
18 ஆபிரகாம் கடவுளிடம்,
"உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்" என்றார்.
19 கடவுள் அவரிடம், "அப்படியன்று.
உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள்.
அவனுக்கு நீ 'ஈசாக்கு' எனப் பெயரிடுவாய்.
அவனுடனும் அவனுக்குப்பின் வரும் வழிமரபினருடனும்
என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.
20 இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன்.
அவனுக்கு ஆசி வழங்கி,
அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன்.
பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்;
அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.
21 ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம்
என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்" என்றார்.
22 அவருடன் பேசி முடித்தபின்,
கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.


23 பின் ஆபிரகாம் தம் மகன் இஸ்மயேலுக்கும்
தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும்,
தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும்,
அதாவது, தம் வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும்,
கடவுள் தமக்குக் கூறியபடியே
அதே நாளில் அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்.
24 ஆபிரகாமுக்கு அவர் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது
அவருக்கு வயது தொண்ணூற்றொன்பது.
25 அவர் மகன் இஸ்மயேலுக்கு
அவன் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது,
அவனுக்கு வயது பதின்மூன்று.
26 ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும்
ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
27 அவருக்குச் செய்யப்பட்டதுபோல
அவர் வீட்டில் பிறந்தவர்கள்,
வேற்றினத்தாரிடமிருந்து அவர் விலைக்கு வாங்கியவர்கள்
ஆகிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.


குறிப்புகள்

[1] 17:5 = உரோ 4:17.
[2] 17:7 = லூக் 1:55.
[3] 17:8 = திப 7:5.
[4] 17:10 = திப 7:8; உரோ 4:11.


அதிகாரம் 18

[தொகு]

ஆபிரகாமுக்கு மகன் வாக்களிக்கப்பெறல்

[தொகு]


1 பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில்
தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார்.
பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில்
ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில்,
2 கண்களை உயர்த்திப் பார்த்தார்;
மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார்.
அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக்
கூடார வாயிலைவிட்டு ஓடினார்.
அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,
அவர்களை நோக்கி, [1]
3 "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின்,
நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!
4 இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும்.
உங்கள் கால்களைக் கழுவியபின்,
இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.
5 கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன்.
நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்.
ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்" என்றார்.
"நீ சொன்னபடியே செய்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
6 அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று,
சாராவை நோக்கி,
"விரைவாக மூன்று மரக்கால் [2] நல்ல மாவைப் பிசைந்து,
அப்பங்கள் சுடு" என்றார்.
7 ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச்சென்று,
ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க,
அவன் அதனை விரைவில் சமைத்தான்.
8 பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று
ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார்.
அவர்கள் உண்ணும்பொழுது
அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார்.


9 பின்பு அவர்கள் அவரை நோக்கி,
"உன் மனைவி சாரா எங்கே?" என்று கேட்க,
அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்" என்று பதில் கூறினார்.
10 அப்பொழுது ஆண்டவர்:
"நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன்.
அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார்.
அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். [3]
11 ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர்.
சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.
12 எனவே, சாரா தமக்குள் சிரித்து,
"நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர்.
எனக்கா இன்பம்?" என்றாள். [4]
13 அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி,
"'நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க,
எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி
சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்?
ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! [5]
14 இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில்
நான் உன்னிடம் மீண்டும் வருவேன்.
அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்று சொன்னார்.
15 சாராவோ, "நான் சிரிக்கவில்லை" என்று சொல்லி மறுத்தார்.
ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது.
அதற்கு ஆண்டவர், "இல்லை, நீ சிரித்தாய்" என்றார்.

சோதோமுக்காக ஆபிரகாம் மன்றாடல்

[தொகு]


16 அந்த மனிதர்கள் எழுந்து,
அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள்.
ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.
17 அப்பொழுது ஆண்டவர்,
"நான் செய்யவிருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா?
18 ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும்.
அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.
19 ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று
எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும்,
தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத் தருமாறு
ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை
அவன் நிறைவேற்றுவான்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
20 ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி,
"சோதோம் கொமோராவுக்கு எதிராகப்
பெருங் கண்டனக்குரல் எழும்பியுள்ளது.
அவற்றின் பாவம் மிகவும் கொடியது.
21 என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி
அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள
நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்" என்றார்.


22 அப்பொழுது அந்த மனிதர்கள்
அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள்.
ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.
23 ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது:
"தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
24 ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம்.
அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது
அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?
25 தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று;
நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று.
அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர்
நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்றார்.
26 அதற்கு ஆண்டவர்,
"நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால்,
அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்" என்றார்.
27 அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக,
"தூசியும் சாம்பலுமான நான்
என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்;
28 ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில்
ஐந்து பேர் குறைவாயிருக்கலாம்.
ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார்.
அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால்
அழிக்க மாட்டேன்" என்றார்.
29 மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து,
"ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?" என்று கேட்க,
ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்" என்றார்.
30 அப்பொழுது ஆபிரகாம்:
"என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்;
சினமடைய வேண்டாம்.
ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?" என,
அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால்
அழிக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்.
31 அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன்.
ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?" என,
அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்" என்றார்.
32 அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்;
இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும்.
ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?" என,
அவர், "அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்" என்றார்.
33 ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச்சென்றார்.
ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.


குறிப்புகள்

[1] 18:2 = எபி 13:2.
[2] 18:6 'செயா' என்பது எபிரேய பாடம்.
[3] 18:10 = உரோ 9:9.
[4] 18:12 = 1 பேது 3:6.
[5] 18:13 = லூக் 1:37.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை