திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 40 முதல் 41 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பார்வோனின் கனவுகளுக்கு யோசேப்பு விளக்கமளிக்கிறார் (தொநூ 41:1-36). ஓவியர்: ழான் ஏட்ரியன் கிக்னே(1816-1854). பிரான்சு.

தொடக்க நூல்[தொகு]

அதிகாரங்கள் 40 முதல் 41 வரை

அதிகாரம் 40[தொகு]

கைதிகளின் கனவுகளும் யோசேப்பின் விளக்கங்களும்[தொகு]


1 இவை நிகழ்ந்தபின்,
எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும்,
அப்பம் தயாரிப்போனும்
தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர்.
2 பார்வோன் தன் மது பரிமாறுவோரின் தலைவனும்
அப்பம் தயாரிப்போரின் தலைவனும்
ஆகிய இரு அதிகாரிகள் மீதும் கடும் கோபம் கொண்டு,
3 காவலர் தலைவன் வீட்டிலிருந்த சிறைச்சாலைகளில்
அவர்களை அடைத்து வைத்தான்.
யோசேப்பு அடைபட்டிருந்த இடமும் அதுவே.
4 காவலர் தலைவனோ,
அவர்களை யோசேப்புடன் சிறையிருக்குமாறு குறித்தான்.
யோசேப்பும் அவர்களைக் கண்காணித்து வந்தார்.
அவர்கள் பல நாள்கள் சிறையில் இருந்தனர்.
5 எகிப்திய மன்னனால் சிறைப்பட்டிருந்த மது பரிமாறுவோன்,
அப்பம் தயாரிப்போன் இருவரும்
ஒரே இரவில் கனவு கண்டனர்.
ஒவ்வொரு கனவும் வெவ்வேறு பொருள் கொண்டிருந்தது.
6 காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது
அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டார்.
7 தம்முடன் தம் தலைவன் வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அதிகாரிகளை நோக்கி, அவர்,
'இன்று உங்கள் முகம் இவ்வளவு வாடியிருப்பதேன்?' என்று வினவினார்.
8 அவர்கள், "நாங்கள் இருவரும் கனவு கண்டோம்;
அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை" என்று பதில் கூறினர்.
யோசேப்பு அவர்களை நோக்கி,
'கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா?
என்னிடம் விவரமாகச் சொல்லுங்கள்' என்றார்.


9 அப்போது மதுபரிமாறுவோர் தலைவன்
தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்:
'என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது.
10 அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன.
அவை அரும்பிப் பூத்து,
கொத்துக் கொத்தாய்ப் பழுக்கக் கண்டேன்.
11 கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது.
நான் பழங்களைப் பறித்து,
பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து,
அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன்' என்றான்.
12 யோசேப்பு அவனை நோக்கி,
'கனவின் பொருள் இதுவே:
மூன்று கிளைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
13 இன்னும் மூன்று நாள்களில் பார்வோன்
உன்னைத் தலைநிமிரச் செய்து
உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான்.
முன்பு நீ பார்வோனின் மதுபரிமாறுவோனாய்
இருந்த காலத்தில் செய்ததுபோல
அவன் கிண்ணத்தை அவன் கையில் கொடுப்பாய்.
14 உனக்கு வாழ்வு நலமாய் அமைந்தபின்,
என்னை மறவாமல் எனக்குத் தயைகாட்ட வேண்டுகிறேன்.
பார்வோனிடம் சொல்லி என்னை இச்சிறையிலிருந்து விடுவி.
15 ஏனெனில், நான் எபிரேயரின் நாட்டிலிருந்து
கடத்திக்கொண்டு வரப்பட்டேன்.
என்னைக் காவற்கிடங்கில் தள்ளிவிடுமளவிற்கு
நான் யாதொன்றும் செய்யவில்லை' என்றார்.


16 யோசேப்பு இவ்வாறு தகுந்த விளக்கம் அளித்ததைக் கண்டு,
அப்பம் தயாரிப்போரின் தலைவன் அவரிடம்
'நானும் ஒரு கனவு கண்டேன்.
இதோ மூன்று அப்பக் கூடைகள் என் தலையில் இருந்தன.
17 மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட
பலவகை அப்பங்கள் இருந்தன.
பறவைகள் வந்து என் தலை மேலிருந்த
கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன' என்றான்.
18 அதற்கு யோசேப்பு,
'கனவின் பொருள் இதுவே:
மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
19 இன்னும் மூன்று நாள்களில் பார்வோன்
உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான்.
பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும்' என்றார்.
20 மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா.
அன்று தன் அலுவலர் அனைவருக்கும் அவன் விருந்து அளித்தான்.
அந்த அலுவலர் முன்னிலையில்
மது பரிமாறுவோரின் தலைவன்,
அப்பம் தயாரிப்போரின் தலைவன்
ஆகிய இருவரின் தலைகளையும் நிமிர்த்தினான்.
21 மது பரிமாறுவோரின் தலைவனை முன்னைய பதவிக்கு உயர்த்த,
முன்புபோல் அவன் பார்வோனின் கையில் கிண்ணத்தைக் கொடுக்கலானான்.
22 ஆனால், அப்பம் தயாரிப்போரின் தலைவனைப்
பார்வோன் கழுமரத்தில் ஏற்றினான்.
யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே இவ்வாறு நடந்தது.
23 ஆனால் மதுபரிமாறுவோரின் தலைவன்
யோசேப்பைப் பற்றிய நினைவேயில்லாமல் அவரை மறந்து விட்டான்.


அதிகாரம் 41[தொகு]

பார்வோனின் கனவுகளும் யோசேப்பின் விளக்கமும்[தொகு]


1 இரண்டு முழு ஆண்டுகள் கழிந்தபின்,
பார்வோன் ஒரு கனவு கண்டான்.
அக்கனவில் அவன் நைல் நதிக் கரையில் நின்று கொண்டிருந்தான்.
2 அப்பொழுது அழகிய கொழுத்த ஏழு பசுக்கள்
நதியிலிருந்து கரைக்கு வந்து
கோரைப் புற்களிடையே மேய்ந்து கொண்டிருந்தன.
3 அவற்றைத் தொடர்ந்து,
நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள்
நைல் நதியிலிருந்து வெளி வந்து
கரையில் இருந்த மற்ற பசுக்களோடு நின்று கொண்டன.
4 நலிந்து மெலிந்த பசுக்கள் அழகிய, கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன.
அதன்பின் பார்வோன் துயில் கலைந்தான்.
5 மீண்டும் அவன் கண்ணயர்ந்தபோது
இரண்டாவது கனவு கண்டான்.
அக்கனவில் செழுமையான பொன் நிறமான
ஏழு கதிர்கள் ஒரே தாளில் காய்த்திருந்தன.
6 அதன் பின் கீழைக் காற்றினால்
தீய்ந்துபோன கதிர்கள் தோன்றின.
7 அந்தப் பதரான கதிர்கள் ஏழும்
செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன.
பார்வோன் கண்விழித்து,
தான் கண்டது கனவு என்று உணர்ந்தான்.
8 காலையில் அவன் மனம் கலக்கமுற,
எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும்
ஞானிகளையும் வரவழைத்துத்
தன் கனவுகளை எடுத்துரைத்தான்.
ஆனால் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறுவார் எவருமில்லை. [1]


9 அப்போது மதுபரிமாறுவோரின் தலைவன்
பார்வோனை நோக்கி,
"என் பிழை இன்றுதான் என் நினைவிற்கு வருகிறது.
10 பார்வோனாகிய தாங்கள் முன்னொரு சமயம்
உம் ஊழியர்மீது கடுஞ்சினமுற்று
அடியேனையும் அப்பம் தயாரிப்போரின் தலைவனையும்
காவலர் தலைவனின் வீட்டில் சிறைவைத்தீர்.
11 அச்சமயம் ஒரே இரவில்
வெவ்வேறு பொருள் கொண்ட கனவுகளை நானும் அவனும் கண்டோம்.
12 அங்கே காவலர் தலைவரின் ஊழியனாகிய
எபிரேய இளைஞன் ஒருவன் எங்களோடு இருந்தான்.
நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளை விவரித்துச் சொன்னோம்.
அவன் எங்கள் கனவுகளுக்கு,
அவனவன் கனவுக்கேற்ப விளக்கம் கூறினான்.
13 அவன் எங்களுக்கு விளக்கிக் கூறியபடியே யாவும் நடந்தன.
முன்னைய பதவி எனக்கு மீண்டும் அளிக்கப்பட்டது;
அவனோ கழுமரத்தில் ஏற்றப்பட்டான்" என்றான்.


14 பார்வோன் ஆளனுப்பி யோசேப்பை அழைத்துவரச் செய்தான்.
அவர்களும் அவரைக் காவற்கிடங்கிலிருந்து
விரைவாக வெளிக் கொணர்ந்தனர்.
அவர் முடி திருத்திக் கொண்டு,
புத்தாடை அணிந்து பார்வோன் முன்னிலைக்கு வந்தார்.
15 பார்வோன் யோசேப்பை நோக்கி,
'நான் கனவு கண்டேன்.
ஆனால் அதற்கு விளக்கம் சொல்வார் யாருமில்லை.
கனவைக் கேட்டால் நீ தகுந்த விளக்கம் கூறுவாய் என்று
உன்னைப்பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டேன்" என்றான்.
16 யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக,
'நானல்ல, கடவுளே பார்வோனுக்கு நலமிகு மறுமொழி வழங்குவார்' என்றார்.
17 அப்பொழுது பார்வோன் யோசேப்பிடம் சொன்னதாவது:
"என் கனவில் நைல் நதிக்கரையில் நான் நின்று கொண்டிருந்தேன்.
18 அப்பொழுது கொழுத்த, ஏழு அழகிய பசுக்கள்
நதியிலிருந்து வெளியேறி வந்து,
கோரைப் புற்களிடையே மேய்ந்துகொண்டிருந்தன.
19 அவற்றிற்குப்பின், வற்றிய, மிகவும் நலிந்து மெலிந்த
வேறு ஏழு பசுக்கள் கரையேறி வந்தன.
அத்தகைய அருவருப்பான பசுக்களை
எகிப்து நாட்டில் நான் எங்கும் எப்போதும் கண்டதில்லை.
20 நலிந்து மெலிந்த இந்தப் பசுக்கள்
முதலில் வந்த கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன.
21 ஆனால் இவை அவற்றை விழுங்கிய பின்னும்
விழுங்கியனவாகவே தெரியவில்லை;
முன்புபோலவே மெலிந்து தோன்றின.
அதன்பின் நான் துயில் கலைந்தேன்.
22 மீண்டும் ஒரு கனவு கண்டேன்.
அதில் செழுமையான, முற்றிய ஏழு கதிர்கள்
ஒரே தாளில் தோன்றக் கண்டேன்.
23 அவற்றிற்குப்பின் தீய்ந்த,
பதராகிக் கீழைக் காற்றினால் கருகிப்போன
வேறு ஏழு கதிர்கள் வெளிவந்தன.
24 இந்தப் பதரான ஏழு கதிர்கள்
அழகிய ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன.
இதைப்பற்றி மந்திரவாதிகளிடம் சொன்னேன்.
ஆனால், எவராலும் எனக்குப் பொருள்கூற முடியவில்லை."


25 அதற்கு யோசேப்பு பார்வோனை நோக்கி,
"பார்வோனாகிய தாங்கள் கண்ட கனவுகள் குறிப்பன ஒன்றே.
கடவுள் தாம் செய்யவிருப்பதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
26 ஏழு நல்ல பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.
ஏழு நல்ல கதிர்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.
ஆக, கனவுகள் குறிப்பன ஒன்றே.
27 அவற்றிற்குப்பின் வந்த மெலிந்த,
அருவருப்பான ஏழு பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.
பதராகி வெப்பக் காற்றினால் தீய்ந்துபோன ஏழு கதிர்கள்
பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.
28 நான் பார்வோனாகிய தங்களுக்குச் சொன்னது போலவே,
கடவுள் தாம் செய்ய இருப்பதைப்
பார்வோனாகிய தங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
29 எகிப்து நாடெங்கும் மிக வளமான
ஏழு ஆண்டுகள் வரவிருக்கின்றன.
30 அதன்பின் ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும்.
அப்பொழுது எகிப்து நாட்டின் அனைத்து வளமும்
மறந்து போகுமளவிற்கு அந்நாட்டைப் பஞ்சம் பாழாக்கும்.
31 நாட்டின் வளமை நினைவுக்கே வராது;
வரவிருக்கும் பஞ்சம் அந்த அளவிற்குக் கடுமையாய் இருக்கும்.
32 இது கடவுளால் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதற்கும்
அவரால் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதற்கும்
அறிகுறியாகவே பார்வோனுக்குக் கனவு இருமுறை வந்தது.
33 எனவே, பார்வோன் உடனடியாக
மதிநுட்பமும் ஞானமும் செறிந்த ஒருவனைக் கண்டுபிடித்து
எகிப்து நாட்டின் அதிகாரியாக அமர்த்தவேண்டும்.
34 மேலும், ஏழு வளமான ஆண்டுகளில்
எகிப்து நாட்டின் விளைச்சலில்
ஐந்திலொரு பகுதியைக் கொள்முதல் செய்யுமாறு
மேற்பார்வையாளர்களையும் பார்வோன் தொடர்ந்து நியமிக்கட்டும்.
35 வரவிருக்கும் வளமான இந்த ஆண்டுகளிலேயே,
தானியம் முழுவதையும் பார்வோனின் அதிகாரத்தில்
அவர்கள் கொள்முதல் செய்து,
பின்னர் உண்ணக் கொடுப்பதற்கென நகர்களில் சேமித்து வைக்கட்டும்.
36 எகிப்து நாட்டில் பஞ்சம் வரவிருக்கும் ஏழாண்டுகளில்
பயன்படுத்துமாறு தானியம் இவ்வாறு சேமித்து வைக்கப்படட்டும்.
நாடும் பஞ்சத்தினால் அழியாதிருக்கும்" என்றார்.

யோசேப்பு எகிப்தின் ஆளுநர் ஆதல்[தொகு]


37 அவர் சொன்னது பார்வோனுக்கும்
அவன் அலுவலர் அனைவருக்கும் நலமெனத் தோன்றியது.
38 பார்வோன் தன் அலுவலர்களை நோக்கி,
'இறையாவி பெற்றுள்ள இவரைப் போல்
வேறெவரையும் நாம் காணமுடியுமோ?' என்றான்.
39 பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி,
'இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார்.
உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்.
40 எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர்.
உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும்.
அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்' என்றான். [2]
41 பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி,
'இதோ! எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன்' என்று சொன்னான்.
42 உடனே பார்வோன் தன்கையில் அணிந்திருந்த
அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து,
அவருக்குப் பட்டாடை உடுத்தி,
பொன் கழுத்தணியை அவருக்கு அணிவித்தான். [3]
43 மேலும் அவரைத் தன் இரண்டாம் தேரில் வலம்வரச் செய்து
'இவருக்கு முழந்தாளிடுங்கள்' என்று
ஏவலர் கட்டியம் கூறச் செய்தான்;
இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.
44 மேலும் அவன் யோசேப்பை நோக்கி,
'பார்வோனாகிய நான் கூறுகிறேன்.
உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும்
எவனும் கையையோ காலையோ உயர்த்தக்கூடாது' என்றான்.
45 பின் பார்வோன் யோசேப்பிற்கு
'சாபனாத்துபனேகா' என்று புதிய பெயர் சூட்டி,
ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகளான ஆசினத்தை
அவருக்கு மணமுடித்து வைத்தான்.
எகிப்து நாடு முழுவதற்கும் யோசேப்பு ஆளுநர் ஆனார்.


46 எகிப்தின் மன்னனாகிய பார்வோனிடம் பணியேற்றபொழுது,
யோசேப்பிற்கு வயது முப்பது.
அவர் பார்வோனிடம் விடைபெற்று
எகிப்து நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.
47 வளமிக்க ஏழாண்டுகளில் நிலம் மிகுதியான விளைச்சல் தந்தது.
48 அந்த ஏழாண்டுகளில் எகிப்து நாட்டில் விளைந்த
எல்லா உணவுப் பொருள்களையும்
நகர்களில் அவர் சேகரித்து வைத்தார்.
ஒவ்வொரு நகரிலும் அதைச் சுற்றியுள்ள வயல்களில் விளைந்த
உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்தார்.
49 கடற்கரை மணல் அளவுக்கு மிகுதியான தானியத்தை
யோசேப்பு கொணர்ந்து குவித்தார்.
கணிக்க இயலாத அளவிற்கு உணவுப் பொருள்கள் சேர்ந்தமையால்,
கணிப்பதை நிறுத்தினார்.
50 பஞ்சத்தின் ஆண்டு வருமுன்னே யோசேப்பிற்கு,
ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகள் ஆசினத்து,
மைந்தர் இருவரைப் பெற்றெடுத்தாள்.
51 யோசேப்பு 'எல்லாத் துன்பங்களையும்
என் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார்'
என்று சொல்லித் தலைமகனுக்கு 'மனாசே' [4] என்று பெயரிட்டார்.
52 பின் 'நான் துன்புற்ற இந்த நாட்டில்
கடவுள் என்னைப் பலுகச் செய்தார்' என்று சொல்லி,
அடுத்தவனுக்கு 'எப்ராயிம்' [5] என்று பெயரிட்டார்.
53 எகிப்து நாட்டின் வளமான ஏழாண்டுகள் முடிவுற்றன.
54 யோசேப்பு முன்னறிவித்தபடி,
ஏழாண்டுப் பஞ்சம் தொடங்கியது.
எல்லா நாடுகளிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது.
ஆனால் எகிப்து நாடு முழுவதற்கும் உணவு கிடைத்தது. [6]
55 எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது,
மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர்.
பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி,
"யோசேப்பிடம் செல்லுங்கள்;
அவர் சொல்வதைச் செய்யுங்கள்" என்று கூறினான். [7]
56 நாடு முழுவதும் பஞ்சம் பரவிய பொழுது,
யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து,
எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார்.
ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது.
57 உலகமெங்கும் கொடும் பஞ்சம் நிலவியது.
அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க
எகிப்திற்கு வந்தார்கள்.


குறிப்புகள்

[1] 41:8 = தானி (இ) 2:2.
[2] 41:40 = திப 7:10.
[3] 41:42 = தானி (இ) 5:29.
[4] 41:51 எபிரேயத்தில், 'மறத்தல்' என்பது பொருள்.
[5] 41:52 எபிரேயத்தில், 'பலுகுதல்' என்பது பொருள்.
[6] 41:54 = திப 7:11.
[7] 41:55 = யோவா 2:5.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 42 முதல் 43 வரை