திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதித் தலைவர்கள் (நீதிபதிகள் ஆகமம்)/அதிகாரங்கள் 19 முதல் 21 வரை

விக்கிமூலம் இலிருந்து
கிலயாது பள்ளத்தாக்கு.

நீதித் தலைவர்கள் (Judges)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 21 வரை

அதிகாரம் 19[தொகு]

லேவியரும் அவர் மறுமனைவியும்[தொகு]


1 இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார். யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார்.
2 அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள்.
3 அவளிடம் நயந்து பேசி, அவளைத் தன்னுடன் மீண்டும் அழைத்து வர அவள் கணவன் அவளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அவர் தம்முடன் தம் வேலையாளையும் இரு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு சென்று அவள் தந்தையின் வீட்டை வந்தடைந்தார். அவரைக் கண்டதும் பெண்ணின் தந்தை மகிழ்வுடன் வரவேற்றார்.
4 பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே அவர் அவருடன் மூன்று நாள்கள் தங்கினார்.
5 நான்காம் நாள் அவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள். அவர் புறப்படுகையில் பெண்ணின் தந்தை தம் மருமகனிடம், "சிறிது உணவருந்தித் திடம் கொண்டபின் போகலாம்" என்றார்.
6 அவர்கள் இருவரும் ஒன்றாக அங்கே அமர்ந்து உண்டு குடித்தனர். பெண்ணின் தந்தை அவரிடம், "உம் இதயம் மகிழுமாறு இரவும் இங்கே தங்கும்" என்றார்.
7 அவர் போவதற்கு எழுந்தார். அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே, அவர் அங்கேயே தங்கி இரவைக் கழித்தார்.
8 அவர், ஐந்தாம் நாள் புறப்படுவதற்காக அதிகாலையில் எழுந்தார். அப்போது பெண்ணின் தந்தை உம் இதயம் மகிழுமாறு பொழுது சாயும்வரை இங்கே தங்கும்" என்றார். இருவரும் உண்டனர்.
9 அவரும் அவர் மறுமனைவியும் அவருடைய வேலையாளும் புறப்படத் தயாராயினர், பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரிடம், "இதோ! நாள் முடிந்து மாலையாகி விட்டது. நாள் முடிவடைந்துவிட்டது. இரவு இங்கே தங்கி, உம் இதயத்தை மகிழ்வியும்; நாளை அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டுக்குப் பயணமாகலாம்" என்றான்.


10 அம்மனிதர் இரவு தங்க விரும்பவில்லை. எனவே அவர் சேணமிட்ட இரு கழுதைகளுடனும் தம் மறு மனைவியுடனும் புறப்பட்டு எருசலேம் என்ற எபூசுக்கு அருகே வந்தார்.
11 அவர்கள் எபூசை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது. வேலையாள் தம் தலைவரிடம், "நாம் எபூசுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம்" என்றான்.
12 அவன் தலைவர் அவனிடம், "நாம் இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்றினத்தார் நகர்ப்பக்கம் செல்லாமல், கிபயாவுக்குக் கடந்து செல்வோம்" என்றார்.
13 அவர் தம் வேலையாளிடம், "கிபயா அல்லது இராமாவுக்குச் சென்று அவற்றுள் ஏதாவது ஓரிடத்தில் இரவைக் கழிப்போம்" என்றார்.
14 அவ்வாறே அவர்கள் சென்று பென்யமினைச் சார்ந்த கிபயாவை அடைந்தபொழுது கதிரவன் மறைந்தான்.
15 அவர்கள் கிபயாவில் இரவைக் கழிக்க அங்கே சென்றனர். ஆனால் இரவைக் கழிக்கத் தன் வீட்டிற்குள் வருமாறு அவர்களை ஒருவனும் அழைக்கவில்லை. ஆகவே நகரின் சதுக்கத்தில் அமர்ந்தனர்.


16 மாலையில் ஒரு முதியவர் தம் வேலையை முடித்துவிட்டு, வயலிலிருந்து வந்தார். அவர் எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்தவர். அவர் கிபயாவிற்கு வந்து தங்கியிருந்தார். ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் பென்யமின் மக்கள்.
17 அவர் உற்றுப்பார்த்த பொழுது, வழிப்போக்கரான அந்த மனிதரை நகரின் சதுக்கத்தில் கண்டார். அம்முதியவர் அவரிடம், "எங்கே போகின்றாய்? எங்கிருந்து வருகின்றாய்?" என்று கேட்டார்.
18 அவரிடம், "நாங்கள் யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்து எப்ராயிமின் மலை நாட்டு எல்லைப்புறத்திற்குச் செல்கின்றோம். நான் அப்பகுதியைச் சேர்ந்தவன். யூதாநாட்டுப் பெத்லகேமிற்குச் சென்றிருந்தேன். நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன். இங்கே தன் வீட்டுக்குள் வருமாறு என்னை ஒருவனும் அழைக்கவில்லை.
19 எங்கள் கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலும், தீவனமும் உம் ஊழியர்களாகிய எனக்கும் என் மறுமனைவிக்கும் வேலையாளுக்கும் வேண்டிய அப்பமும் திராட்சை இரசமும் எங்களிடம் உள்ளன. எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை" என்றார்.
20 அப்பொழுது முதியவர், "உனக்கு நலம் உண்டாகுக! உன் தேவைகள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன். இரவில் சதுக்கத்தில் மட்டும் தங்காதே" என்றார்.
21 அவர் அவரைத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். கழுதைகளுக்குத் தீவனம் அளித்தார். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவினர்; உண்டு குடித்தனர்.


22 அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ! அந்நகரின் இழிமனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், "உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும்" என்றனர்.
23 வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம், "வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம். இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்.
24 இதோ! கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள். ஆனால் இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்" என்றார். [1]
25 அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார். அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர். அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர்.
26 வைகறையில் அப்பெண் வந்து தன் கணவன் இருந்த வீட்டின் கதவருகில் காலைவரை விழுந்துகிடந்தாள்.
27 காலையில் அவள் கணவர் எழுந்து, பயணத்தைத் தொடர, வீட்டின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் மறுமனைவியான அப்பெண் வீட்டின் கதவருகில் விழுந்துகிடந்தாள். அவள் கைகள் கதவு நிலையின்மீது இருந்தன.
28 அவர் அவளிடம், "எழுந்திரு! புறப்படுவோம் என்றார். பதில் இல்லை. எனவே அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார்.
29 அவர் தம் வீட்டிற்கு வந்ததும் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலைப் பன்னிரு துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரயேலின் எல்லா நிலப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார். [2]
30 அதைக் கண்ட அனைவரும், "இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து, இந்நாள் வரை இது போன்றது நடந்ததில்லை; இது போன்றதைக் கண்டதுமில்லை; இதைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள்; கலந்து பேசுங்கள்; உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்" என்று சொல்லிக் கொண்டனர்.

குறிப்புகள்

[1] 19:22-24 = தொநூ 19:5-8.
[2] 19:29 = 1 சாமு 11:7.

அதிகாரம் 20[தொகு]

இஸ்ரயேல் மக்கள் போருக்குப் புறப்படல்[தொகு]


1 தாண் தொடங்கிப் பெயேர்செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர்.
2 இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களைச் சார்ந்த எல்லா மக்களின் தலைவர்களும் கடவுளின் மக்களது சபையாக வந்து நின்றனர். அவர்கள் வாளேந்திய நான்கு இலட்சம் போர் வீரர்கள்.
3 இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவுக்குச் சென்றனர் என்பதை பென்யமின் மக்கள் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள், "இந்தக் கொடிய நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதைக் கூறுங்கள்" என்று கேட்டனர்.
4 கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான லேவியர் பதிலளித்துக் கூறியது: "நானும் என் மறுமனைவியும் இரவில் தங்குவதற்குப் பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவுக்கு வந்தோம்.
5 கிபயா ஆள்கள் எனக்கெதிராகப் புறப்பட்டு வந்து இரவில் என்னையும் வீட்டையும் சூழ்ந்துகொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்தனர். அவர்கள் என் மறுமனைவியை இழிவுபடுத்தவே, அவள் இறந்து போனாள்.
6 என் மறுமனைவியின் சடலத்தை எடுத்து வந்து அதைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரயேலின் உரிமைச் சொத்தான அனைத்துப்பகுதிகளுக்கும் அனுப்பினேன். ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக ஒழுக்கக் கேடான அருவருக்கத்தக்க செயலைச் செய்தனர்.
7 இதோ! இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் கலந்து பேசி உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்".
8 எல்லா மக்களும் ஒரே மனத்தவராயக் கூறியது: நம்மில் எவனும் - அவன் கூடாரத்தில் தங்கியிருந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும் - திரும்பிச் செல்லமாட்டான்.
9 இப்பொழுது நாம் கிபயாவுக்குச் செய்யப்போவது இதுதான்: நம்மில் சீட்டு விழுந்தவர்கள் அதற்கு எதிராகச் செல்வர்.
10 இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நூற்றுக்குப் பத்துப்பேரையும், ஆயிரத்துக்கு நூறுபேரையும், பத்தாயிரத்துக்கு ஆயிரம் பேரையும் தேர்ந்தெடுப்போம். இவர்கள் சென்று பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவின் ஆள்கள் இஸ்ரயேலுக்கு எதிராகச் செய்த அருவருக்கத்தக்க செயலுக்குப் பழிவாங்கச் செல்பவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு வரட்டும்.
11 இஸ்ரயேலின் எல்லா ஆள்களும் ஒன்றிணைந்து நகரை நோக்கிச் சென்றனர்.


12 இஸ்ரயேலின் குலங்களைச் சார்நந்தவர்கள் பென்யமின் குலம் முழுவதற்கும் ஆளனுப்பி, "இந்தத் தீய செயல் உங்கள் நடுவில் நடைபெற்றது ஏன்?
13 இப்பொழுது கிபயாவில் உள்ள இழிமனிதரை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று இஸ்ரயேல் நடுவிலிருந்து தீயதை அழிப்போம்" என்றனர். தங்கள் சகோதரரான இஸ்ரயேல் மக்கள் சொன்னதைப் பென்யமின் மக்கள் ஏற்கவில்லை.
14 பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களுடன் போரிடுமாறு தங்கள் நகர்களிலிருந்து புறப்பட்டுக் கிபயாவில் வந்து கூடினர்.
15 தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு கிபயா வாழ் மக்கள் போருக்கு தயாராக இருந்ததுபோக, அன்று பென்யமின் மக்களுள் அதன் நகர்களிலிருந்து வாளேந்திப் போருக்கென ஒன்று திரண்டவர் இருபத்தாறாயிரம் பேர்.
16 இவர்களைத் தவிர கிபயா வாழ் மக்கள் எழுநூறு பேர் தலைமுடி இழையளவும் குறி தவறாது இடக்கையால் கவண் எறிவர்.
17 இந்தப் பென்யமின் ஆள்களைத் தவிர இஸ்ரயேல் மக்களுள் நான்கு இலட்சம் பேர் ஒன்று திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் போர் வீரர்கள்.

பென்யமின் மக்களுடன் போர்[தொகு]


18 அவர்கள் எழுந்து பெத்தேலுக்குச் சென்றனர். இஸ்ரயேல் மக்கள் "யார் எங்களுக்காக முதலில் பென்யமின் மக்களுடன் போருக்குச் செல்வர்?" என்று கடவுளிடம் கேட்டனர். ஆண்டவர், "முதலில் யூதா செல்லட்டும்" என்றார்.


19 இஸ்ரயேல் மக்கள் காலையில் எழுந்து, கிபயாவுக்கு எதிரில் பாளையம் இறங்கினர்.
20 இஸ்ரயேல் ஆள்கள் பென்யமின் மக்களுடன் போர்புரியச் சென்றனர்; கிபயாவை நோக்கி அணிவகுத்து நின்றனர்.
21 பென்யமின் மக்கள் கிபயாவிலிருந்து வெளியே வந்து, அந்நாளில் இருபதாயிரம் இஸ்ரயேல் மக்களை வெட்டி வீழ்த்தினர்.
22 இஸ்ரயேல் வீரர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு, முதல் நாள் கூடிய அதே இடத்தில் மீண்டும் போருக்கு அணி வகுத்து நின்றனர்.
23 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மாலைவரை அழுதனர். இஸ்ரயேல் மக்கள் தம் சகோதரர்களாகிய் பென்யமின் மக்களுடன் மீண்டும் போரிடச் செல்லலாமா என்று ஆண்டவரிடம் கேட்டனர். ஆண்டவர், "அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்" என்றார்.


24 இரண்டாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நெருங்கினர்.
25 அன்று பென்யமின் மக்களும் அவர்களுக்கு எதிராகக் கிபயாவிலிருந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் மீண்டும் இஸ்ரயேல் மக்களுள் பதினெட்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினர். இவர்கள் அனைவரும் போர்வீரர்.
26 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பெத்தேலுக்கு வந்து அழுதனர். அங்கே ஆண்டவர் திருமுன் அமர்ந்து அன்று மாலைவரை உண்ணாநோன்பு இருந்தனர். மேலும் அவர்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர்.
27 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் அறிவுரை கேட்டனர். ஏனெனில் அந்நாள்களில் கடவுளின் உடன்படிக்கையின் பேழை அங்கு இருந்தது.
28 ஆரோனின் புதல்வன் எலயாசரின் மகன் பினகாசு அன்று அதற்குமுன் நின்று, "என் சகோதரர்களாகிய பென்யமின் மக்களுடன் போரிட நான் மீண்டும் செல்ல வேண்டாமா?" என்று கேட்டான். ஆண்டவர், "செல்லுங்கள், நாளைக்கு அவர்களை உங்களை கையில் ஒப்படைப்பேன்" என்றார்.


29 இஸ்ரயேல் மக்கள் கிபயாவைச் சுற்றி பதுங்கிடம் அமைத்தனர்.
30 மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களுக்கு எதிராகச் சென்றனர். இம்முறையும் முன்புபோல் கிபயாவுக்கு எதிராக அணிவகுத்து நின்றனர்.
31 பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களை எதிர்க்க வெளியே வந்தனர். அவர்கள் நகரிலிருந்து வெகு தொலைவுக்கு வந்து விட்டனர். முன்புபோல் இம்முறையும் அவர்கள் பெத்தேலுக்கு செல்லும் நெடுஞ்சாலையிலும், கிபயாவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலும் தாக்கத் துவங்கித் திறந்த வெளியில் ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றனர்.
32 எனவே பென்யமின் மக்கள் முன்பு போலவே 'நம் முன்னிலையில் இஸ்ரயேல் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர்' என்று கூறிக்கொண்டனர். இஸ்ரயேல் மக்களோ 'நாம் தப்பி ஓடுவதுபோல நடித்து அவர்களை நகரிலிருந்து நெடுஞ்சாலைக்கு இழுப்போம்' என்று திட்டமிட்டிருந்தனர்.
33 எனவே இஸ்ரயேல் வீரர்கள் அனைவரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பின்வாங்கிப் பால்தாமாரில் அணிவகுத்து நின்றனர். இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தாயிரம் பேர் கிபயாவுக்கு அருகில் தங்கள் பதுங்கிடங்களிலிருந்து வெளிவந்து நகரைக் கிழக்கிலிருந்து தாக்கினர்.
34 போர் கடுமையாக இருந்தது. ஆனால் பென்யமின் மக்கள் தங்களுக்குத் தீமை வரப்போகிறது என்பதை உணரவில்லை.
35 ஆண்டவர் இஸ்ரயேலின் பொருட்டுப் பென்யமினைத் தோற்கடித்தார். அன்று இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றனர். அவர்கள் அனைவரும் போர்வீரர்கள்.

இஸ்ரயேலர் வெற்றிகொள்ளல்[தொகு]


36 பென்யமின் மக்கள் தாங்கள் தோல்வியுற்றதைக் கண்டனர். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்கிடங்களில் நம்பிக்கை வைத்திருந்ததால் பென்யமின் மக்கள் முன்னேற இடம் அளித்தனர்.
37 பதுங்கியிருந்தோர் திடீரென கிபயாமீது பாய்ந்தனர். அவர்கள் அணிவகுத்துச் சென்று நகரத்தவர் அனைவரையும் வாளுக்கு இரையாக்கினர்.
38 பதுங்கியிருந்தோர் இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளமாக பெரும்புகைப் படலத்தை நகரிலிருந்து மேல் எழச்செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய முன்னேற்பாடு.
39 இஸ்ரயேல் மக்கள் போரில் பின்வாங்கியபோது, அவர்களுள் ஏறக்குறைய முப்பது பேரைப் பென்யமின் மக்கள் கொன்றுவிட்டனர். முன்புபோல், அவர்கள் நம் முன்னிலையில் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறிக்கொண்டனர்.
40 நகரிலிருந்து பெரும் புகைப்படலம் அடையாளமாக மேல் எழும்பத் தொடங்கியபொழுது, பென்யமின் மக்கள் பின்புறம் திரும்பிப்பார்த்தனர். அந்தோ! நகர் முழுவதும் புகை விண்ணை நோக்கி எழும்பிக் கொண்டிருந்தது.
41 இஸ்ரயேல் வீரர்கள் திரும்பித் தாக்கவே, பென்யமின் வீரர் தங்களுக்கு அழிவு நெருங்குவதைக் கண்டு அஞ்சி நடுங்கினர்.
42 அவர்கள் இஸ்ரயேல் வீரர் முன்னிலையில் பாலைநிலப்பாதையில் புறமுதுகிட்டு ஓடினர். போரினின்று அவர்களால் தப்ப முடியவில்லை. இஸ்ரயேல் நகர்களிலிருந்து வந்தோர் அவர்களை வெட்டி வீழ்த்தினர்.
43 அவர்கள் பென்யமின் மக்களை அடித்து நொறுக்கி, அவர்களைத் துரத்திச் சென்று கதிரவன் உதிக்கும் திசையில் கிபயாவின் எதிர்ப்புறம் வரை விடாது துரத்திச் சென்று அழித்தனர்.
44 பென்யமின் மக்களுள் பதினெட்டாயிரம்பேர் மடிந்தனர். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வீரர்கள்.
45 ஏனையோர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்கு ஓடிவந்தனர். இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் ஐயாயிரம் பேரை நெடுஞ்சாலைகளில் கொன்றனர். தொடர்ந்து கிதாம்வரை துரத்திச் சென்று அவர்களுள் இரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.
46 அந்நாள்களில் பென்யமின் மக்களுள் மடிந்தோரின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தையாயிரம். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வாளேந்திய வீரர்கள்.
47 எஞ்சியிருந்த அறுநூறு பேர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்குத் தப்பி ஓடி அங்கே நான்கு மாதங்கள் வாழ்ந்தனர்.
48 இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நோக்கித் திரும்பி, நகரில் கண்ட அனைவரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்கினர். தாங்கள் கண்ட நகர்கள் அனைத்தையும் நெருப்பில் எரித்தனர்.

அதிகாரம் 21[தொகு]

பென்யமின் புதல்வர் மகளிரைக் கவர்ந்து செல்லல்[தொகு]


1 மிஸ்பாவில் இருந்த இஸ்ரயேல் வீரர்கள், "எங்களில் ஒருவனும் தன் மகளைப் பென்யமினுக்கு மணமுடித்து கொடுக்கமாட்டான்" என்று ஆணையிட்டுக் கூறினர்.
2 ஆயினும் மக்கள் பெத்தேலுக்கு வந்து மாலைவரை அங்கே கடவுளின் திருமுன் அமர்ந்து ஓலமிட்டு அழுதனர்.
3 அவர்கள், "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் இந்நாளில் குறைந்திருக்கும் இந்நிலை ஏற்பட்டது ஏன்? என்று கேட்டனர்.
4 மறுநாள், பொழுது புலர்ந்ததும் அவர்கள் எழுந்து அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
5 இஸ்ரயேலின் புதல்வர், "இஸ்ரயேல் குலங்கள் அனைத்திலிருந்தும் ஆண்டவர் திருமுன் கூடிய சபைக்கு யார் வரவில்லை?" என்று கேட்டனர். ஏனெனில் அவர்கள் மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடும் சபைக்கு வராதவனைக் கண்டிப்பாகக் கொல்வோம் என்று ஆணையிட்டுக் கடும் சபதம் எடுத்திருந்தனர்.
6 அவர்கள் தங்கள் சகோதரர்களாகிய பென்யமின் புதல்வர் மீது இரக்கம் கொண்டனர். "இன்று இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் துண்டிக்கப்பட்டு விட்டது.
7 நாம் நம் பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்க மாட்டோம் என்று ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுக் கூறியுள்ளோம். அவர்களில் எஞ்சியிருப்போருக்கு மனைவியர் கிடைக்க நாம் என்ன செய்யலாம்" என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.


8 இஸ்ரயேலின் குலங்களிலிருந்து மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடிய சபைக்கு எந்தக் குலம் வரவில்லை என்று பார்த்தபொழுது கிலயாதைச் சார்ந்த யாபேசிலிருந்து சபைக்கு ஒருவரும் வரவில்லை என்று கண்டனர்.
9 மக்கள் எண்ணப்பட்டனர். கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஒருவரும் அங்கே இல்லை.
10 இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆற்றல்மிகு வீரர்களுள் பன்னீராயிரம் பேர்களிடம், "புறப்பட்டுச் செல்லுங்கள், கிலயாதைச் சார்ந்த யாபேசில் வாழும் ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் வெட்டி வீழ்த்துங்கள்" என்று கட்டளையிட்டு அனுப்பினர்.
11 மேலும் அவர்கள் கூறியது: "நீங்கள் செய்ய வேண்டியது, எல்லா ஆண்களையும் ஆணுடன் உறவு கொண்ட பெண்களையும் கொன்று விடுங்கள்."


12 அவ்வாறே வீரர்கள் கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஆணுடன் உறவு கொண்டிராத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்துக் கானான் நாட்டில் இருந்த சீலோ பாசறைக்குக் கொண்டு சென்றனர்.
13 இஸ்ரயேல் கூட்டமைப்பினர் அனைவரும் ரிம்மோன் பாறையில் இருந்து பென்யமின் மக்களுக்குத் தூதனுப்பி, அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர்.
14 உடனே பென்யமின் புதல்வர் அங்குத் திரும்பி வந்தனர். இஸ்ரயேலர் கிலயாதைச் சார்ந்த யாபேசில் உயிருடன் இருந்த பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் மணமுடித்துக் கொடுக்க பெண்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.


15 மக்கள் பென்யமின் புதல்வரைக் குறித்து மனம் வருந்தினர். ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேல் குலங்களில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
16 கூட்டமைப்பின் முதியோர்கள் "பென்யமின் மக்களில் பெண்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எஞ்சியோருக்கு மனைவியாகக் கிடைக்கும்படி என்ன செய்யலாம்?" என்று கேட்டனர்.
17 மேலும் அவர்கள் கூறியது: "பென்யமின் மக்களுக்குச் சொந்த வாரிசு வேண்டும். இல்லையேல், இஸ்ரயேலில் ஒரு குலம் அழிந்துவிடும்.
18 நாம் நம் புதல்வியரை அவர்களுக்கு மனைவியாக அளிக்க முடியாது, ஏனெனில் 'பென்யமின் புதல்வருக்குப் பெண் கொடுப்பவன் சபிக்கப்பட்டவன்' என்று ஆணையிட்டுக் கூறியுள்ளோம்.
19 இதோ! பெத்தேலுக்கு வடக்கே, லெபனோனுக்குத் தெற்கே, பெத்தேலிலிருந்து செக்கேமுக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் கிழக்கே இருக்கும் சீலோவில் ஆண்டுதோறும் ஆண்டவருக்கு விழா நடைபெறுகின்றது",
20 எனவே அவர்கள் பென்யமின் புதல்வரை நோக்கி, "செல்லுங்கள். திராட்சைத் தோட்டங்களில் ஒளிந்துகொண்டு,
21 கவனமாக உற்று நோக்குங்கள். சீலோ மகளிர் நடனமாட வெளியே வரும்பொழுது, நீங்கள் திராட்சைத் தோட்டங்களிலிருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொருவனும் சீலோவின் மகளிருள் ஒருத்தியை உங்களுக்கு மனைவியாகத் தூக்கித் கொண்டு பென்யமின் நாட்டுக்கு ஓடிவிடுங்கள்.
22 அவர்கள் தந்தையரோ சகோதரரோ எங்களிடம் முறையிட வந்தால் நாங்கள் அவர்களிடம் 'பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் போரில் எங்களுள் எவனும் மனைவியாக எப்பெண்ணையும் கவர்ந்து கொள்ளவில்லை. நீங்களும் அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. எனவே நீங்கள்தாம் குற்றவாளிகள்' என்று பதில் அளிப்போம்" என்றனர்.
23 பென்யமின் புதல்வரும் அவ்வாறே செய்தனர். தங்கள் எண்ணிக்கைக்கேற்ப நடனமாடியவர்களிலிருந்து கவர்ந்த பெண்களைத் தூக்கிக் கொண்டு தங்கள் உரிமைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு நகர்களைக் கட்டியெழுப்பி அவற்றில் குடியேறினர்.
24 அப்பொழுது இஸ்ரயேல் புதல்வர்களுள் ஒவ்வொருவனும் தன் குலத்திற்கும் குடும்பத்திற்கும் திரும்பிச் சென்றான். அங்கிருந்து ஒவ்வொருவனும் தன் உரிமைப் பகுதிக்கு சென்றான்.
25 அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர். [*}

குறிப்பு

[*] 21:25 = நீத 17:6.


(நீதித் தலைவர்கள் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): ரூத்து:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை