திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நெகேமியா/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
எருசலேம் நகரின் சுவர் மீண்டும் கட்டப்படுகிறது. ஓவியர்: ஜூலியசு ஷ்னோர். காலம்: 1847. செருமனி.

நெகேமியா (The Book of Nehemiah)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

1 சாக்கு உடை அணிந்து, புழுதியைத் தங்கள்மேல் பூசிக் கொண்டு நோன்பிருக்குமாறு அம்மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று மக்கள் ஒன்று கூட்டப்பட்டனர்.
2 இஸ்ரயேல் இனத்தார் வேற்றினத்தாரிடமிருந்து பிரிந்து நின்றனர். எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முன்னோரின் குற்றங்களையும் அறிக்கையிட்டனர்.
3 ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டநூலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர்.


4 மீண்டும், லேவியரான ஏசுவா, பானி, கெத்மியேல், செபானியா, பூனி, செரேபியா, பானி, கெனானி ஆகியோர், படியின்மேல் நின்று கொண்டு உரத்த குரலில் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினார்கள்.
5 பின்பு, லேவியரான ஏசுவா, கத்மியேல், பானி, அசபினியா, செரேபியா, ஓதியா, செபானியா, பெத்தகியா எழுந்து, "என்றுமுள உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்" என்றனர். அவர்கள் பதில்மொழியாக உரைத்தது: "எல்லாப் புகழ்ச்சிக்கும், வாழ்த்துக்கும் எட்டாத மாட்சிமிகு உமது பெயர் போற்றி! போற்றி!"

மக்களின் மன்றாட்டு[தொகு]


6 நீர் ஒருவரே ஆண்டவர்! நீரே வானத்தையும், விண்வெளி வானங்களையும், வான அணிகளையும், நிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும், கடலையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர்! அவற்றையெல்லாம் வாழ வைப்பவர்! வானக அணிகள் உமக்கு அடிபணிகின்றன.
7 ஆபிராமைத் தேர்ந்தேடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே! [1]
8 உம்மீது பற்றுக் கொண்ட அவருடைய இதயத்தைக் கண்டீர்! கானானியா, இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழி மரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர்! நீர் நீதி உள்ளவர்! எனவே உமது வார்த்தையை நிறைவு செய்தீர்! [2]


9 எகிப்தில் வாழ்ந்த எங்கள் மூதாதையரின் துன்பத்தைக் கண்ணோக்கினீர். செங்கடலில் அவர்களின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தீர்! [3]
10 பார்வோனிடமும், அவன் அலுவலர்கள் எல்லோரிடமும் அவனது நாட்டின் அனைத்து மக்களிடமும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் விளங்கச் செய்தீர்! ஏனெனில் எம் மூதாதையர்களை அவர்கள் செருக்குடன் நடத்தினார்கள் என்பதை நீர் அறிவீர்! இந்நாளில் இருப்பது போல் உமது பெயரை நீர் விளங்கச் செய்தீர்! [4]
11 அவர்கள்முன் கடலைப் பிளந்தீர்; எனவே, கடலின் நடவே உலர்ந்த தரையில் அவர்கள் கடந்து போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையோ கல்லைப் போன்று ஆழ்கடலின் பாதாளத்திற்குள் வீழ்த்தினீர்! [5]
12 நீர் அவர்களைப் பகலில் மேகத் தூணினால் வழி நடத்தினீர்! இரவில் நெருப்புத் தூணினால் அவர்களின் வழிக்கு ஒளி கொடுத்து அதில் நடக்கச் செய்தீர்! [6]
13 நீர் சீனாய் மலை இறங்கினீர்! விண்ணிலிருந்து அவர்களோடு பேசினீர்! நேர்மையான நீதி நெறிகளையும், உண்மையான சட்டங்களையும், நல்ல நியமங்களையும் விதிமுறைகளையும் தந்தீர்!
14 புனிதமான ஓய்வு நாளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தீர்! விதிமுறைகளையும், நியமங்களையும், சட்டங்களையும், உமது அடியாராகிய மோசே வழியாக அவர்களுக்குக் கட்டளையிட்டீர்! [7]


15 அவர்கள் பசியாயிருக்கையில், விண்ணிலிருந்து உணவு அளித்தீர்! அவர்கள் தாகமாயிருக்கையில், பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தீர்! நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த நாட்டை அடைந்து அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு பணித்தீர். [8]
16 ஆனால் அவர்களும், எங்கள் முன்னோரும், செருக்குடன் நடந்து வணங்காக் கழுத்தினராகி, உமது விதிமுறைகளுக்குச் செவி கொடுக்கவில்லை.
17 அவர்கள் செவி கொடுக்க மறுத்ததுமல்லாமல், நீர் அவர்களிடம் செய்திருந்த உமது அருஞ்செயல்களையும் நினைத்துப் பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராயக் கலகம் செய்து ஒரு தலைவரை ஏற்படுத்தி, அடிமை வாழ்வுக்கு மீண்டும் செல்ல முற்பட்டனர். தயை, சாந்தம், இரக்கம், நீடிய பொறுமை மற்றும் பரிவிரக்கம் கொண்ட கடவுளான நீரோ அவர்களைத் தள்ளிவிடவில்லை. [9][10]


18 அவர்கள் ஒரு வார்ப்புக் கன்றுக் குட்டியைச் செய்து, 'உங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்த உங்கள் கடவுளைப் பாருங்கள்' என்று பெரும் இறைநிந்தனைகளைச் செய்த போதும், [11]
19 நீர் உமது பேரிரக்கத்தினால் அவர்களைப் பாலை நிலத்திலே கைவிட்டு விடவில்லை, அவர்களைப் பகலில் வழிநடத்தி வந்த மேகத் தூணையும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை இரவில் காட்டி வந்த நெருப்புத்தூணையும் அவர்களை விட்டு விலக்கவுமில்லை.
20 அவர்களுக்கு அறிவு புகட்ட உமது நல்ல ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்கு உண்ணக் கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களின் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தீர்.
21 நாற்பது ஆண்டுகளாய்ப் பாலை நிலத்தில் அவர்களைப் பராமரித்தீர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை. அவர்கள் கால்கள் கொப்பளிக்கவுமில்லை. [12]


22 அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர். [13]
23 அவர்களின் மக்களை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்தீர். அவர்கள் உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்ளும்படி அவர்களின் மூதாதையர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துவந்தீர். [14]
24 அவர்களின் மக்கள் அங்குவந்து, அந்நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் முன்னிலையில் அந்நாட்டின் மக்களான கானானியரை அடக்கினீர். அவர்களையும் அவர்கள் மன்னர்களையும், நாட்டின் மக்களையும் அவர்கள் கையில் ஒப்புவித்து, அவர்களின் விருப்பத்தின்படி நடத்த விட்டு விட்டீர். [15]
25 எனவே அவர்கள் அரண்சூழ் நகர்களையும் செழிப்பான நிலத்தையும் கைப்பற்றினிர். எல்லாவித உடைமைகளையும் கொண்ட வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிதரும் மிகுதியான மரங்களையும் சொந்தமாக்கிக் கொண்டனர். உண்டு, நிறைவு கொண்டு, கொழுத்துப் போயினர். மிகுதியான உமது நன்மைத்தனத்தை அனுபவித்து மகிழ்ந்தனர். [16]


26 இருப்பினும், அவர்கள் கீழ்ப்படியாது, உமக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்; உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர். உம்மை நோக்கித் திரும்பும்படி அவர்களை எச்சரித்த உமது இறைவாக்கினர்களைக் கொன்றனர். இவ்வாறு பெரும் இறை நிந்தனைகளைச் செய்தார்கள்.
27 அப்பொழுது நீர் அவர்களை எதிரிகளிடம் கையளித்தீர். அவர்கள் அவர்களைத் துன்புறுத்தினர். தங்களது துன்ப வேளையில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டனர். நீர் விண்ணிலிருந்து கேட்டருளினீர். அளவுகடந்த உமது இரக்கத்தினால் அவர்களுக்கு விடுதலைத் தலைவர்களைத் தந்து, அவர்களின் எதிரிகளிடமிருந்து விடுவித்தீர்.
28 அவர்கள் அமைதி கண்டபின்னர், உமது திருமுன் மீளவும் தீயது செய்யத் தலைப்பட்டனர். நீர் அவர்களை அவர்களின் எதிரிகளிடம் கையளித்தீர். எதிரிகள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். எனவே மீண்டும் உம்மிடம் கூக்குரலிட்டார்கள். நீரோ விண்ணிலிருந்து செவிசாய்த்து உமது பேரிரக்கத்தின்படி பலமுறை அவர்களுக்கு விடுதலையளித்தீர். [17]
29 உமது திருச்சட்டத்துக்கு திரும்பிவர அவர்களை நீர் எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது விதிமுறைகளுக்குச் செவிசாய்க்காமல், உமது நீதிநெறிகளுக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஒருவர் அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வு பெறமுடியும். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாகப் புறக்கணித்தனர்; வணங்காக் கழுத்தினராக அடிபணிய மறுத்தனர். [18]
30 நீரோ பல்லாண்டுகளாய் அவர்கள்மேல் பொறுமையாய் இருந்தீர். இறைவாக்கினர்மூலம் உமது ஆவியால் அவர்களை எச்சரித்து வந்தீர். இருப்பினும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே நாடுகளின் மக்களுக்கு அவர்களைக் கையளித்தீர். [19]
31 ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு, நீர் அவர்களை அழித்து விடவுமில்லை, கைவிட்டு விடவுமில்லை; ஏனெனில், நீரே கனிவும் கருணையும் உள்ள கடவுள்.


32 எங்கள் கடவுளே! மேன்மை மிக்க வரும், வல்லவரும், அஞ்சுவதற்குரியவரும், உடன்படிக்கையையும், பேரிரக்கத்தையும் காப்பவருமான கடவுளே! அசீரிய மன்னர்களின் காலமுதல் இன்றுவரை, எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் குருக்களுக்கும், எங்கள் இறைவாக்கினர்களுக்கும், எங்கள் மூதாதையர்களுக்கும், உம் மக்கள் எல்லாருக்கும் நேரிட்டுள்ள துன்பங்கள் அனைத்தையும் அற்பமாய் எண்ணாதேயும். [20]
33 எமக்கு நேரிட்டவை அனைத்திலுமே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் நீர் உமது சொல்லுறுதியைக் காட்டியுள்ளீர். நாங்களோ தீயவை செய்துள்ளோம்.
34 எங்கள் அரசர்களும், எங்கள் தலைவர்களும், எங்கள் குருக்களும், எங்கள் மூதாதையர்களும், உமது திருச்சட்டத்தைக் கடைப் பிடிக்கவில்லை. உமது விதிமுறைகளையும், நீர் அவர்களுக்குக் கொடுத்துள்ள எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தவில்லை.
35 உமது நல்லுளத்திற்கேற்ப அவர்களுக்குத் தந்துள்ள அவர்களின் நாட்டிலும், அவர்களுக்குத் தந்துள்ள பரந்த, செழிப்பான நிலத்திலும் அவர்கள் உமக்கு ஊழியம் செய்யவுமில்லை, தங்கள் தீச்செயல்களை விட்டு விலகவுமில்லை.
36 நாங்கள் இப்பொழுது அடிமைகளாக இருக்கிறோம். அதன் நற்கனிகளையும் நற்பலன்களையும் அனுபவிக்கும்படி நீர் எம் முன்னோருக்குக் கொடுத்த வளமிகு நாட்டிலேயே நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.
37 எங்கள் பாவங்களால் இந்நாட்டின் மிகுந்த விளைச்சல் நீர் எங்கள் மீது ஏற்படுத்தியுள்ள மன்னர்களுக்கே சேருகிறது. அவர்களோ தங்கள் விருப்பப்படி எங்களையும் எங்கள் கால்நடைகளையும் ஆட்டிப் படைக்கிறார்கள். நாங்களோ மிகுந்த வேதனையில் அமிழ்ந்துள்ளோம்.

ஒப்பந்தத்தில் மக்கள் கையொப்பமிடல்[தொகு]


38 இவற்றின்பொருட்டே நாங்கள் நிலையான உடன்படிக்கை செய்து அதை எழுதிவைத்திருக்கிறோம். எங்கள் தலைவர்கள், லேவியர்கள் மற்றும் குருக்கள் அதில் தங்களது முத்திரையை இட்டுள்ளார்கள்.

குறிப்புகள்

[1] 9:7 = தொநூ 11:31; 12:1; 17:5.
[2] 9:8 = தொநூ 15:18-21.
[3] 9:9 = விப 3:7; 14:10-12.
[4] 9:10 = விப 7:8-12:32.
[5] 9:11 = விப 14:21-29; 15:4-5.
[6] 9:12 = விப 13:21-22.
[7] 9:13-14 = விப 19:18-23:33.
[8] 9:15 = விப 16:4-5; 17:1-7; இச 1:21.
[9] 9:16-17 = எண் 14:1-4; இச 1:33.
[10] 9:17 = விப 34:6; எண் 14:18.
[11] 9:18 = விப 32:1-4.
[12] 9:19-21 = இச 8:2-4.
[13] 9:22 = எண் 21:21-35.
[14] 9:23 = தொநூ 15:5; 22:17; யோசு 3:14-17.
[15] 9:24 = யோசு 11:23.
[16] 9:25 = இச 6:10-11.
[17] 9:26-28 = நீத 2:11-16.
[18] 9:29 = லேவி 18:5.
[19] 9:30 = 2 அர 17:13-18; 2 குறி 36:15-16.
[20] 9:32 = 2 அர 15:19, 29; 17:3-6; எஸ்ரா 4:2,10.

அதிகாரம் 10[தொகு]

1 முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு: அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,
2 குருக்கள்: செராயா, அசரியா, எரேமியா,
3 பஸ்கூர், அமரியா, மல்கியா,
4 அத்தூசு, செபானியா, மல்லூக்கு,
5 ஆரிம், மெரேமோத்து, ஒபதியா, தானியேல், கின்னத்தோன், பாரூக்கு,
6 மெசுல்லாம், அபியா, மியாமின்,
7 மாசியா, பில்காய், செமாயா.
8 லேவியர்: அசனியாவின் மகன் ஏசுவா, ஏனாதாத்தின் புதல்வரில்
9 பின்னூய், கத்மியேல்,
10 இவர்களின் சகோதரர்கள் செபானியா, ஓதியா, கெலிற்றா, பெலாயா, ஆனான்,
11 மீக்கா, இரகோபு, அசபியா,
12 சக்கூர், செரேபியா, செபானியா,
13 ஓதியா, பானி, பெனினு.
14 மக்கள் தலைவர்: பாரோசு, பாகத்து மோவாபு, ஏலாம், சத்தூ, பானி,
15 புன்னி, அஸ்காது, பேபாய்,
16 அதோனியா, பிக்வாய், ஆதின்,
17 அத்தேர், எசேக்கியா, அசூர்,
18 ஓதியா, ஆசும், பெசாய்,
19 ஆரிபு, அனத்தோத்து, நேபாய்,
20 மக்பியாசு, மெசுல்லாம், ஏசீர்,
21 மெசபேல், சாதோக்கு, யாதுவா,
22 பெலாத்தியா, ஆனான், அனாயா,
23 ஓசேயா, அனனியா, அசூபு,
24 அல்லோகேசு, பில்கா, சோபேக்கு,
25 இரகூம், மாசேயா,
26 அகியா, ஆனான், அனான்,
27 மல்லூக்கு, ஆரிம், பானா.

ஒப்பந்தம்[தொகு]


28 ஏனைய மக்களும், குருக்களும், லேவியரும், வாயிற்காப்போரும், பாடகர்களும், கோவிற் பணியாளர்களும், வேற்றின மக்களிடமிருந்து பிரிந்து கடவுளின் திருச்சட்டப்படி வாழ்ந்த அனைவரும், அவர்களின் மனைவியரும், புதல்வரும், புதல்வியரும், அறிவுத் தெளிவு அடைந்த அனைவரும்,
29 மேன்மக்களாகிய தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து, கடவுளின் ஊழியனான மோசே வழியாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் சாபமும் உள்ளிட்ட கடவுளின் திருசட்டத்தை ஏற்றுக் கடைப்பிடிப்பதாகவும், தம் தலைவராகிய ஆண்டவரின் அனைத்து விதிமுறைகளையும் நீதி நெறிகளையும், நியமங்களையும் காத்து நடப்பதாகவும் வாக்குறுதி தந்தார்கள்.
30 சிறப்பாக, "நாங்கள் வேற்றின மக்களுக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்; எங்கள் புதல்வருக்கு அவர்கள் பெண்களை எடுக்கவும் மாட்டோம். [1]
31 வேற்றின மக்கள் ஓய்வு நாளில் சரக்குகளையும், தானிய வகைகளையும் விற்கக் கொண்டு வந்தால், நாங்கள் அவர்களிடமிருந்து ஓய்வு நாளிலும், புனித நாளிலும் வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டின் விளைச்சலை விட்டுக் கொடுப்போம்; எவ்விதக் கடனையும் திரும்பக் கேட்க மாட்டோம். [2]
32 காணிக்கை அப்பங்கள், அன்றாட உணவுப் படையல்கள், ஓய்வுநாள்கள் மற்றும் அமாவாசைகளில் செலுத்தும் வழக்கமான பலிகள், குறிக்கப்பட்ட திருவிழாக்கள், புனிதப் பொருள்கள், இஸ்ரயேலுக்காகச் செலுத்தவேண்டிய பாவம் போக்கும் பலிகள், எங்கள் கடவுளது கோவிலின் அனைத்து வேலைகள் ஆகியவற்றிற்காக [3]
33 ஆண்டுக்கு நான்கு கிராம் வெள்ளியை [4] நாங்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை விதிமுறையாக ஏற்படுத்திக் கொண்டோம்.
34 திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, எம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தின்மீது எரிப்பதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், எம் முன்னோரின் குல வரிசைப்படி, விறகுக் காணிக்கை எம் கடவுளின் கோவிலுக்குக் கொண்டுவர குருக்களும், லேவியரும், மக்களும் ஆகிய நாங்கள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுப்போம்.
35 எங்கள் நிலத்தின் முதற் பலனையும் எல்லா மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டுதோறும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டு வர நேர்ந்து கொண்டோம். [5]
36 திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் மக்களின் தலைப்பிள்ளைகளையும், எங்கள் கால்நடைகளின் தலைப்பேறுகளையும், அதாவது மாட்டு மந்தைகளின் தலைப்பேறுகளையும், ஆட்டுக் கிடைகளின் தலைப்பேறுகளையும், நம் இறைவனின் இல்லத்தில் பணி செய்யும் குருக்களிடம் கொண்டு வர நேர்ந்து கொண்டோம். [6]
37 மேலும், எங்களது முதல் பிசைந்த மாவையும், எங்கள் படையல்களையும், ஒவ்வொரு மரத்தின் கனிகளையும், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும் குருக்களுக்காக, நம் கடவுளின் கோவில் அறைகளில் கொடுப்போம் என்றும், எங்கள் நிலப் பலனில் பத்தில் ஒரு பகுதியை லேவியருக்குக் கொடுப்போம் என்றும் நேர்ந்து கொண்டோம். ஆனால், அதை நாங்கள் உழைக்கும் ஒவ்வொரு நகரிலும் லேவியர் வசூல் செய்வர். [7]
38 பத்தில் ஒரு பகுதியை லேவியர் பெறும்போது, ஆரோனின் வழிமரபினரான குரு ஒருவர் லேவியரோடு இருக்கட்டும். லேவியர்கள் தங்கள் வசூலில் பத்தில் ஒரு பகுதியை நம் கடவுளின் கோவிலுக்கு கொண்டு வந்து, கருவூல அறைகளில் சேர்த்து வைக்கட்டும். [8]
39 ஏனெனில், அக்கருவூல அறைகளில்தான் இஸ்ரயேல் மக்களும், லேவியரும் கொடையாகக் கொடுத்த தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேர்த்து வைத்தனர். அங்கேதான் கோவில் திருப்பணிக்குரிய பாத்திரங்களும் இருந்தன. குருக்களும், பாடகர்களும், வாயிற்காவலரும், திருப்பணியாளர்களும் அங்கு இருந்து வந்தனர். 'எங்கள் கடவுளின் கோவிலைப் புறக்கணிக்க மாட்டோம்' என்று வாக்குறுதி அளித்தனர்.

குறிப்புகள்

[1] 10:30 = விப 34:6; இச 7:3.
[2] 10:31 = விப 23:10-11; லேவி 25:1-7; இச 15:1-2.
[3] 10:32 = விப 30:11-16.
[4] 10:33 'செக்கேலில் மூன்றில் ஒரு பகுதி' என்பது எபிரேய பாடம்.
[5] 10:35 = விப 23:19; 34:26; இச 26:2.
[6] 10:36 = விப 13:2.
[7] 10:37 = எண் 18:21.
[8] 10:38 = எண் 18:26.

(தொடர்ச்சி): நெகேமியா:அதிகாரங்கள் 11 முதல் 13 வரை