திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/மீக்கா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்; ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்." - மீக்கா 4:3.

மீக்கா (The Book of Micah)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

இஸ்ரயேல் தலைவர்களுக்கு எதிரான
மீக்காவின் கண்டனக் குரல்
[தொகு]


1 அப்பொழுது நான் கூறியது:
"யாக்கோபின் தலைவர்களே!
இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே,
நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ!


2 நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்;
என் மக்களின் தோலை உயிரோடே உரித்து,
அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்;


3 என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்;
அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்;
அவர்களின் எலும்புகளை முறித்து,
சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும்,
கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும்
துண்டு துண்டாக்குகின்றீர்கள்.


4 அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவீர்கள்;
ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார்.
அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை
உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்;
ஏனெனில், உங்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன."


5 இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே:
"அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள்.
வயிறார உண்ணக் கொடுத்தவரிடம்
'அமைதி உண்டாகுக!' என உரக்கச் சொல்கின்றார்கள்;
வாய்க்குத் தீனி போடாதவரிடம்
'புனிதப் போர் வரும்' எனக் கூறுகின்றார்கள்."


6 ஆதலால் "இறைவாக்கினரே,
திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது;
முன்னுரைத்தல் இராது;
காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்;
இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது;
பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்."


7 காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்;
முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்;
அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்;
ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது.


8 ஆனால், நான் யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும்,
இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க,
வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும்,
நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன்.


9 யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே,
இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்;
நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்;
நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள்.


10 இரத்தப்பழியால் சீயோனையும்,
அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள்.


11 அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு
தீர்ப்பு வழங்குகிறார்கள்;
அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்;
இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்;
ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி,
'ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா?
எனவே தீமை நம்மை அணுகாது' என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.


12 ஆதலால், உங்களை முன்னிட்டுச்
சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்;
எருசலேம் பாழடைந்த மண்மேடாக மாறும்;
கோவிலுள்ள மலையோ அடர்ந்த காடாகும்." [*]


குறிப்புகள்

[*] 3:12 = எரே 26:18.


அதிகாரம் 4[தொகு]

ஆண்டவரின் அனைத்துலக அருளாட்சி[தொகு]

(எசா 2:1-4)


1 "இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை:
மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்:
குன்றுகளுக்கெல்லாம் மேலாய் உயர்த்தப்படும்;
மக்களினங்கள் அதை நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்.


2 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து,
"புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;
யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்;
அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்;
நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள்;
ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்;
எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.


3 அவரே பல மக்களினங்களுக்கு இடையே
உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்;
தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்;
அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும்
தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்;
ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது;
அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். [1]


4 அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும்,
அத்தி மரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர்;
அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை;
ஏனெனில், படைகளின் ஆண்டவரது திருவாய் இதை மொழிந்தது. [2]


5 மக்களினங்கள் யாவும் தம் தெய்வத்தின் பெயரை வழிபடும்.
நாமோ, நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு
என்றென்றும் பணிந்திருப்போம்.


6 அந்நாளில், "நான் முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்;
விரட்டியடிக்கப்பட்டோரையும் என்னால்
தண்டிக்கப்பட்டோரையும் ஒன்றுகூட்டுவேன்" என்கிறார் ஆண்டவர்.


7 முடமாக்கப்பட்டோரை எஞ்சியோராய் ஆக்குவேன்;
விரட்டியடிக்கப்பட்டோரை வலியதோர் இனமாக உருவாக்குவேன்;
அன்றுமுதல் என்றென்றும் ஆண்டவராகிய நானே
சீயோன் மலைமேலிருந்து அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.


8 மந்தையின் காவல் மாடமே!
மகள் சீயோனின் குன்றே!
முன்னைய அரசுரிமை உன்னை வந்துசேரும்;
மகள் எருசலேமின் அரசு உன்னை வந்தடையும்.


9 இப்போது நீ கூக்குரலிட்டுக் கதறுவானேன்?
பேறுகாலப் பெண்ணைப்போல் ஏன் வேதனைப்படுகின்றாய்?
அரசன் உன்னிடத்தில் இல்லாமற் போனானோ?
உனக்கு அறிவு புகட்டுபவன் அழிந்தொழிந்தானோ?


10 மகளே சீயோன்! பேறுகாலப் பெண்ணைப்போல நீயும்
புழுவாய்த் துடித்து வேதனைப்படு;
ஏனெனில், இப்பொழுதே நீ நகரைவிட்டு வெளியேறுவாய்;
வயல்வெளிகளில் குடியிருப்பாய்;
பாபிலோனுக்குப் போவாய்;
அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்;
உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.


11 இப்பொழுது, வேற்றினத்தார் பலர்
உனக்கு எதிராய் ஒன்று கூடியிருக்கின்றார்கள்;
"சீயோன் தீட்டுப்படட்டும்; அதன் வீழ்ச்சியை நம் கண்கள் காணட்டும்"
என்று சொல்லுகின்றார்கள்.


12 ஆனால் அவர்கள் ஆண்டவரின் எண்ணங்களை அறியவில்லை.
அவரது திட்டத்தையும் புரிந்து கொள்ளவில்லை.
ஏனெனில் புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல்
அவர் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கின்றார்.


13 மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி;
நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்;
உன்னுடைய குளம்புகளை வெண்கலம் ஆக்குவேன்;
மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்கிப் போடுகிறாய்;
அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்;
அவர்களது செல்வங்களை அனைத்துலகின் ஆண்டவரிடம் ஒப்படைப்பாய்."


குறிப்புகள்

[1] 4:3 = யோவே 3:10.
[2] 4:4 = செக் 3:10


(தொடர்ச்சி): மீக்கா:அதிகாரங்கள் 5 முதல் 7 வரை