திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து கொணரப்பட்ட திராட்சைப் பழங்கள். ஓவியர்: மத்தியாஸ் தெ அர்த்தெயேகா இ அல்ஃபாரோ. ஆண்டு: 1861.

யோசுவா[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

யாபினையும் பிற மன்னர்களையும் தோற்கடித்தல்[தொகு]


1 ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான்.
2 மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும்
3 கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், மலைவாழ் எபூசியர், மிஸ்பா நாட்டில் எர்மோனின் அடிவாரத்தில் இருந்த இவ்வியர் ஆகியோருக்கும் ஆளனுப்பினான்.
4 அவர்களும் அவர்களுடைய படைகளும் கடற்கரையில் உள்ள மணலைப் போல் எண்ணிறந்த மக்களும் குதிரைகளும் தேர்களும் சென்றனர்.
5 அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக மேரோம் நீரோடைக் கரையில் இஸ்ரயேலருடன் போரிடப் பாளையம் இறங்கினார்கள்.


6 ஆண்டவர் யோசுவாவிடம், "அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில் நாளை இந்நேரம் நான் அவர்கள் அனைவரையும் கொலையுண்டவர்களாய் இஸ்ரயேல்முன் ஒப்படைப்பேன். அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை நீ வெட்டுவாய். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்குவாய்" என்றார்.
7 யோசுவாவும் அவருடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் திடீரென அவர்களுக்கெதிராக மேரோம் நீரோடைக்கருகில் வந்து அவர்களைத் தாக்கினர்.
8 ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்தார். அவர்களை இஸ்ரயேலர் கொன்றனர். அவர்களைப் புகழ்மிக்க சீதோன் வரையிலும், மிஸ்ரபோத்துமயிம் வரையிலும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரையிலும் எவரும் தப்பி விடாதவாறு தாக்கினர்.
9 ஆண்டவர் சொன்னபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தார். குதிரைகளின் குதிகால் நரம்புகளை வெட்டினார். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்கினார்.


10 இச்சமயம் யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார். அதன் மன்னனை வாளால் தாக்கினார். ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது.
11 இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை; ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர்.
12 யோசுவா, அந்த எல்லா நகர்களையும் அவற்றின் மன்னர்களையும் கைப்பற்றினார். ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டிருந்தபடி அவர்களை வாள்முனையில் கொன்று அடியோடு அழித்தார்.
13 மேட்டுப் பகுதியில் நிறுவப்பட்ட நகர்களை இஸ்ரயேல் மக்கள் எரிக்கவில்லை. யோசுவா ஆட்சோரை மட்டும் எரித்தார்.
14 அந்நகர்களில் கைப்பற்றிய பொருள்களையும் கால்நடைகளையும் இஸ்ரயேலர் கொள்ளைப் பொருளாகக் கொண்டனர். மனிதர்களை மட்டும், எவரும் தப்பாமல் அடியோடு அழியும்வரை, வாள்முனையில் கொன்றனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை.
15 தம் ஊழியர் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார். யோசுவா அதன்படியே செய்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவை அனைத்திலும் யோசுவா ஒன்றையும் விட்டுவிடவில்லை.

யோசுவா கைப்பற்றிய நிலப்பகுதிகள்[தொகு]


16 யோசுவா இந்த எல்லா நாடுகளையும், மலைகளையும், நெகேபு அனைத்தையும், கோசேன் நாடு முழுவதையும், சமவெளிப் பகுதிகளையும், அராபாவையும், இஸ்ரயேல் மலைகளையும் அதன் சமவெளிப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
17 ஆலாக்கு மலையிலிருந்து சேயிர் வரை உயர்ந்து செல்லும் எர்மோன் மலைக்குக்கீழ் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காது வரை இருந்த பகுதிகளைக் கைப்பற்றி, அவற்றின் அரசர்களைப் பிடித்து, வெட்டிக் கொன்றார்.
18 யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார்.
19 கிபயோன் குடிமக்களான இவ்வியரைத்தவிர வேறெந்த நகரினரும் இஸ்ரயேலருடன் நல்லுறவு கொள்ளவில்லை. எல்லோரையும் போரில் இஸ்ரயேலர் தோற்கடித்தனர்.
20 இஸ்ரயேலருடன் போர் புரியுமாறு அவர்கள் இதயங்களை ஆண்டவர் கடினப்படுத்தினார். அதனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டதுபோல் அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டனர். [*]
21 இச்சமயம் யோசுவா சென்று, மலைநாடு, எபிரோன், தெபீர், அனாபு, யூதாவின் அனைத்து மலைப்பகுதிகள், இஸ்ரயேலின் அனைத்து மலைப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்த அனாக்கியரை அழித்தார். அவர்களை அவர்களின் நகர்களுடன் யோசுவா முற்றிலும் அழித்தார்.
22 இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை. காசா, காத்து, அஸ்தோது ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர்.
23 ஆண்டவர் மோசேக்குக் கூறிய அனைத்தின்படி, யோசுவா எல்லா நிலத்தையும் கைப்பற்றினார். யோசுவா அதை அவர்கள் குலப் பிரிவுகளின்படி இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். நாடு முழுவதும் போரின்றி அமைதிகண்டது.

குறிப்பு

[*] 11:20 = இச 7:16.

அதிகாரம் 12[தொகு]

மோசே தோற்கடித்திருந்த அரசர்கள்[தொகு]


1 யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே:
2 எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் கிலயாதின் பகுதிவரையிலும் அம்மோனியரின் எல்லையான யப்போக்குப் பள்ளத்தாக்குவரையிலும்
3 அராபாவிலிருந்து கிழக்கே கினரோத்துக் கடல்வரையிலும் உப்புக்கடலான அராபா கடல்வரையிலும், கிழக்கு நோக்கி பெத்தசிமோத்து வரையிலும், தெற்கில் பிஸ்கா மலைச்சரிவு வரையிலும் அரசாண்டான்.
4 இரபாயியருள் எஞ்சி இருந்தவனும் பாசானின் மன்னனுமான ஓகின் எல்லை இதுவே: அவன் அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வாழ்ந்தான்.
5 எர்மோன்மலை, சல்காமலை, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைவரையிலும் எஸ்போன் மன்னன் சீகோனின் எல்லையான கிலயாதின் பாதிவரையிலும் ஆண்டான். [1]
6 ஆண்டவரின் ஊழியரான மோசேயும் இஸ்ரயேலரும் அவர்களைத் தோற்கடித்தனர். ஆண்டவரின் ஊழியரான மோசே அதை ரூபனுக்கும் காத்துக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உரிமையாகக் கொடுத்தார். [2]

யோசுவா தோற்கடித்த மன்னர்கள்[தொகு]


7 யோசுவாவும் இஸ்ரயேலரும் கைப்பற்றிய நாடுகளின் மன்னர்கள் இவர்களே. யோர்தானுக்கு மேற்கே பாகால்காதில் லெபனோன் பள்ளத்தாக்கிலிருந்து சேயிர் பக்கம் செல்லும் ஆலாக்கு மலைவரை இருந்த மன்னர்களின் நாட்டை யோசுவா இஸ்ரயேலருக்கு அவர்களின் குலப் பிரிவின்படி உடைமையாக அளித்தார்.
8 மலைச்சரிவு, பள்ளத்தாக்கு, அராபா மலைச்சரிவு, பாலைநிலம், நெகேபு, இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரின் நாடுகள்.
9 எரிகோ மன்னன் ஒருவன்; பெத்தேலுக்கு அருகில் இருந்த ஆயி மன்னன் ஒருவன்.
10 எருசலேம் மன்னன் ஒருவன்; எபிரோன் மன்னன் ஒருவன்.
11 யார்முத்து மன்னன் ஒருவன்; இலாக்கிசு மன்னன் ஒருவன்.
12 எக்லோன் மன்னன் ஒருவன்; கெசேர் மன்னன் ஒருவன்.
13 தெபீர் மன்னன் ஒருவன்; கெதேர் மன்னன் ஒருவன்.
14 ஒர்மா மன்னன் ஒருவன்; அராது மன்னன் ஒருவன்.
15 லிப்னா மன்னன் ஒருவன்; அதுல்லாம் மன்னன் ஒருவன்.
16 மக்கேதா மன்னன் ஒருவன்; பெத்தேல் மன்னன் ஒருவன்.
17 தப்புவாகு மன்னன் ஒருவன்; ஏபேர் மன்னன் ஒருவன்.
18 அப்பேக்கு மன்னன் ஒருவன்; இலாசரோன் மன்னன் ஒருவன்.
19 மாதோன் மன்னன் ஒருவன்; ஆட்சோர் மன்னன் ஒருவன்.
20 சிம்ரோன் மெரோன் மன்னன் ஒருவன்; அக்சாபு மன்னன் ஒருவன்.
21 தானாக்கு மன்னன் ஒருவன்; மெகிதோ மன்னன் ஒருவன்.
22 கெதேசு மன்னன் ஒருவன்; யோக்னயாம் கர்மேல் மன்னன் ஒருவன்.
23 நாபோத்தோரில் இருந்த தோர் மன்னன் ஒருவன்; கில்காலில் இருந்த கோயிம் மன்னன் ஒருவன்.
24 திர்சா மன்னன் ஒருவன்; ஆக மொத்தம் முப்பத்தொரு மன்னர்கள்.

குறிப்புகள்

[1] 12:1-5 = எண் 21:21-35; இச 2:26; 3:11.
[2] 12:6 = எண் 32:33; இச 3:12.

(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை