திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவியராகமம்)/அதிகாரங்கள் 20 முதல் 22 வரை
லேவியர் (The Book of Leviticus)
[தொகு]அதிகாரங்கள் 20 முதல் 22 வரை
அதிகாரம் 20
[தொகு]கீழ்ப்படியாமைக்கான தண்டனைகள்
[தொகு]
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 "இஸ்ரயேல் புதல்வரிலோ இஸ்ரயேலில் தங்கும் அன்னியரிலோ யாரேனும் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்குக்குக் கொடுத்தால், நாட்டு மக்கள் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.
3 அவனை எதிர்த்து நான் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி, திருப்பெயரை மாசுபடுத்தித் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்கிற்குக் கொடுத்ததால், அவனை அவன் இனத்தில் இராதபடி அழிப்பேன்.
4 தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்குக்குக் கொடுத்தும், நாட்டு மக்கள் அவனைக் கொலை செய்யாது விட்டுவிட, அவன் தலைமறைவாயிருந்தால்,
5 நான் அவனையும் அவன் குடும்பத்தையும் எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக் கொள்வேன். மோலேக்கின் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட அனைவரையும் அவனைப் பின்பற்றிய யாவரையும் அழிப்பேன்.
6 குறிசொல்வோரையும், மைபோடுவோரையும் பின்பற்றி வழி தவறியோரை எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவர்களை அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன்.
7 எனவே நீங்கள் உங்களைப் புனிதப்படுத்தி, தூயவர் ஆகுங்கள். ஏனெனில், நான் உங்கள் கடவுள்!
8 கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி நடங்கள். நானே உங்களைத் தூய்மைப்படுத்தும் ஆண்டவர்!
9 தம் தந்தையையும் தாயையும் சபிக்கும் எவரும் கொலை செய்யப்பட வேண்டும். தம் தந்தையையும் தாயையும் சபிப்பவரின் குருதிப்பழி அவர்மேலேயே இருக்கும். [1]
10 அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும். [2]
11 தன் தந்தையின் மனைவியோடு உடலுறவு கொள்பவன் தன் தந்தையை வெற்றுடம்பாக்கினான். எனவே இருவரும் கொலை செய்யப்படுவர். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும். [3]
12 ஒருவன் தன் மருமகளோடு உடலுறவுகொண்டு முறைகேடாக நடந்துகொண்டால், இருவரும் கொல்லப்படுவர். அவர்களது குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும். [4]
13 பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு. இருவரும் கொல்லப்பட வேண்டும். இருவரின் குருதிப்பழியும் அவர்கள் மேலேயே இருக்கும். [5]
14 ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு. அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். [6]
15 விலங்கோடு ஒருவன் புணர்ந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அந்த விலங்கையும் கொல்ல வேண்டும்.
16 ஒரு பெண் ஏதேனும் ஒரு விலங்கோடு புணர்ந்தால், அந்தப் பெண்ணையும் விலங்கையும் கொல்லவேண்டும். அத்தகைய எந்த உயிரும் சாக வேண்டும். அவற்றின் குருதிப்பழி அவற்றின் மேலேயே இருக்கும். [7]
17 யாரேனும் ஒருவன் தன் தந்தைக்கு, அல்லது தாய்க்குப் பிறந்த மகளோடு அதாவது அவன் சகோதரியோடு உடலுறவு கொண்டால், அவளும் அதற்கு இணங்கினால் அது வெட்கக்கேடான செயல். அவர்கள் தங்கள் இனத்தோரின் முன்னிலையில் அழிக்கப்படுவார்கள். தன் சகோதரியை வெற்றுடம்பாக்கிய அவன் தன் தீவினையைச் சுமப்பான். [8]
18 மாதவிலக்கில் இருக்கும் ஒருத்தியுடன் ஒருவன் உடலுறவு கொண்டால், இருவரும் தங்கள் உதிர ஊற்றைத் திறந்ததால் அவர்கள் தங்கள் இனத்தாரிடையே இல்லாதபடி அழிக்கப்படுவார்கள்.
19 உன் தாயின் சகோதரியையோ, உன் தந்தையின் சகோதரியையோ வெற்றுடம்பாக்காதே. மீறுபவர் தங்கள் உடலை இழிவுபடுத்தியதால் தங்கள் பழியைத் தாமே சுமப்பர்.
20 ஒருவன் தன் தந்தையின் சகோதரனின் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்கினான். எனவே, அவர்கள் தங்கள் பாவத்தைத் தாமே சுமப்பர்; பிள்ளையின்றி இறப்பர். [9]
21 ஒருவன் தன் சகோதரன் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் சகோதரனை வெற்றுடம்பாக்குகிறான். எனவே, அவர்கள் பிள்ளையின்றி இருப்பர். [10]
22 நீங்கள் குடியிருப்பதற்காக உங்களை நான் கொண்டு போகிற நாடு உங்களைக் கக்கிவிடாதபடி, நீங்கள் என் அனைத்து நியமங்களைப் பற்றிக்கொண்டு அவற்றிற்கேற்ப வாழுங்கள்.
23 உங்களுக்கு முன்பாக நான் விரட்டியிருக்கிற வேற்றினத்தாரின் செயற்படி நடக்க வேண்டாம்; மேற்குறிப்பிட்ட செயல்களையெல்லாம் அவர்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களை வெறுத்தேன்.
24 அவர்களின் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்வீர்கள் என்று கூறினேன். பாலும் தேனும் ஓடும் அந்த நாட்டை உங்களுக்கு உடைமையாக்கினேன். உங்களை மக்களினங்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரே நான்!
25 எனவே நீங்கள் தீட்டற்ற விலங்குகளுக்கும் தீட்டான விலங்குகளுக்கும், தீட்டான பறவைகளுக்கும் தீட்டற்ற பறவைகளுக்கும், வேறுபாடு கண்டு தீட்டென்று நான் உங்களுக்குச் சொல்லிய விலக்கப்பட்ட விலங்காலும் பறவையாலும் தரையில் ஊர்ந்து செல்லுகின்ற எந்த ஒருபூச்சியாலும் உங்களை இழிவுபடுத்திக் கொள்ளாது இருப்பீர்களாக!
26 எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக! ஏனெனில், ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுத்தேன்.
27 குறிசொல்லும் அல்லது மைபோட்டுப் பார்க்கும் எந்த ஆணும் பெண்ணும் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்".
- குறிப்புகள்
[1] 20:9 = விப 21:17; மத் 15:4; மாற் 7:10.
[2] 20:10 = விப 20:14; லேவி 18:20; இச 5:18.
[3] 20:11 = லேவி 18:8; இச 22:30; 27:20.
[4] 20:12 = லேவி 18:15.
[5] 20:13 = லேவி 18:22.
[6] 20:14 = லேவி 18:17; இச 27:23.
[7] 20:15-16 = விப 22:19; லேவி 18:23; இச 27:21.
[8] 20:17 = லேவி 18:9; இச 27:22.
[9] 20:19-20 = லேவி 18:12-14.
[10] 20:21 = லேவி 18:16.
அதிகாரம் 21
[தொகு]குருக்களின் தூய்மை
[தொகு]
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: "ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்: அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம்.
2 தனக்கு இரத்த உறவான தாய், தந்தை, மகன், மகள், சகோதரன்,
3 மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி - ஆகியவர்களைத் தவிர
4 வேறேவராலும் திருமணத்தால் உறவானவர் உட்பட - தன்னைத் தூய்மைக் கேட்டிற்கு உட்படுத்தித் தீட்டுப்படவேண்டாம்.
5 அவர்கள் தலையை மொட்டையடித்துக் கொள்ளாமலும், தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், உடலைக் கீறிக் கொள்ளாமலும் இருப்பார்கள். [*]
6 அவர்கள் தங்கள் கடவுளின் பெயரைக் கெடுக்காமல் அவருக்கு ஏற்ற தூயோராய் இருப்பார்கள். ஆண்டவரின் பலியான தங்கள் கடவுளின் அப்பத்தைச் செலுத்துவதால் அவர்கள் தூய்மையாய் இருக்க வேண்டும்.
7 விலைமாதையோ தூய்மைக் கேடு உற்றவளையோ அவர்கள் மணம் புரியலாகாது. கணவனால் மணமுறிவு செய்யப்பட்ட பெண்ணையும் மணம்புரியலாகாது. ஏனெனில், குரு தன் கடவுளுக்கு ஏற்ற தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும்.
8 அவர்கள் தூயோர்கள். ஏனெனில், அவர்கள் உங்களின் கடவுளுக்கு உணவு படைக்கிறார்கள். உங்களைத் தூய்மையாக்கும் நான் தூயவனாய் இருப்பதால், உங்களுக்குத் தூயோராய் அவர்கள் இருப்பார்கள்.
9 குருவின் மகள் வேசியானால், அவள் தன் தந்தைக்குத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்துகிறாள். அவளை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
10 தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும்; தன் உடைகளைக் கிழித்தலாகாது.
11 எந்தப் பிணமானாலும் அது தந்தையுடையதாயினும் தாயுடையதாயினும் அதன் அருகில் சென்று அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
12 தூய கூடத்திலிருந்து வெளிவராமலும் தன் கடவுளின் தூயகத்தை இழிவுபடுத்தாமலும் இருக்க வேண்டும். ஏனெனில் அவனுடைய கடவுளின் திருப்பொழிவு எண்ணெய் தாங்கும் சிறப்பு அவனுக்கு உரியது. நானே ஆண்டவர்!
13 கன்னிப்பெண்ணையே அவன் மணம் புரிய வேண்டும்.
14 அவன் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்றவளையோ, கற்பொழுக்கம் அற்றவளையோ, விலைமாதையோ மணம் புரியாமல், தன் இனத்திலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்.
15 தன் வழிமரபை இரத்தக் கலப்பற்றதாகப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் நானே அவனைத் தூய்மையாக்கும் ஆண்டவர்."
16 ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது:
17 "நீ ஆரோனிடம் கூறவேண்டியது: உன் வழிமரபினரில் உடல் ஊனமுற்றவன் தன் கடவுளுக்கு உணவுப் படையலைச் செலுத்துதல் ஆகாது.
18 உடல் ஊனமுற்றவன் எவனும் அருகில் வரவேண்டாம்; பார்வையற்றவன், முடவன், குறைந்த அல்லது நீண்ட உறுப்பு உடையவன்,
19 கால் கை ஒடிந்தவன்,
20 கூனன், குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிரங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம்.
21 குருவான ஆரோனின் வழி மரபில் உடல் ஊனமுற்ற எவனும் ஆண்டவரின் நெருப்புப் பலியைச் செலுத்த அருகில் வரவேண்டாம். மேலும் உடல் ஊனம் அவனுக்கு இருப்பதால், அவன் தன் கடவுளின் உணவுப் படையலைச் செலுத்தவும் வரக்கூடாது.
22 தன் கடவுளின் தூய அப்பத்தை அவன் உண்ணலாம்.
23 ஆனால் தொங்கு திரை அருகில் வர வேண்டாம்; பீடத்தை அணுக வேண்டாம். ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது. என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம். ஏனெனில் நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்."
24 மோசே இவற்றை ஆரோனிடமும் அவர் புதல்வரிடமும், இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூறினார்.
- குறிப்பு
[*] 21:5 = லேவி 10:27-28; இச 14:1.
அதிகாரம் 22
[தொகு]காணிக்கைகளின் தூய்மை
[தொகு]
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு. நானே ஆண்டவர்.
3 அவர்களிடம் நீ கூற வேண்டியது: உங்கள் வழிமரபினருள் எவனும் தீட்டுப்பட்டிருந்து, இஸ்ரயேல் மக்கள் நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்கள் அருகில் வந்தால், அவன் என் முன் இராதபடி அழிவான். நானே ஆண்டவர்.
4 ஆரோன் குடும்பத்தினரில் தொழு நோயாளியோ விந்து ஒழுக்கு உடையவனோ இருந்தால் குணமாகும் மட்டும் அவன் தூய பொருள்களை உண்ண வேண்டாம். பிணத்தால் தீட்டானதைத் தொட்டவனும் விந்தொழுகியவனும்,
5 தீட்டு என ஒதுக்கிய ஊர்வனவற்றையோ, தீட்டான மனிதரையோ தொட்டவனும்,
6 மாலைமட்டும் தீட்டுடன் இருப்பான். அவன் தூய பொருள்களை உண்ணாமல் தன் உடலைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.
7 கதிரவன் மறைந்தபின் தூய்மை அடைவான், அப்பொழுது அவன் தூய பொருள்களை உண்ணலாம். ஏனெனில் அது அவன் உணவு.
8 தானாய்ச் செத்ததையும், பீறிக் கிழிக்கப்பட்டதையும் அவன் உண்டு தீட்டாக வேண்டாம். நானே ஆண்டவர்.
9 எனவே தூய்மையானதைத் தீட்டாக்குவதால் தங்கள் மேல் பாவத்தைச் சுமத்திக்கொண்டு சாகாதவாறு, நான் ஒப்படைத்தவற்றை அவர்கள் காப்பார்களாக! நானே அவர்களைத் தூயோராக்கும் ஆண்டவர்!
10 வேற்றினத்தார் எவரும் தூய பொருள்களை உண்ண வேண்டாம். குரு வீட்டிலுள்ள விருந்தினரும் கூலிக்காக வேலை செய்பவரும் தூய பொருளை உண்ண வேண்டாம்.
11 குருவின் பணம் கொடுத்து வாங்கிய அடிமையும், அவன் வீட்டில் பிறந்தவனும் குருவின் உணவை உண்ணலாம்.
12 குருவின் மணமுடித்த மகள் தூயபொருள்களை உண்ண வேண்டாம்.
13 குருவின் குழந்தைகளற்ற கைம்பெண் அல்லது மணவிலக்குப் பெற்றவளான மகள் திரும்பிவந்து இளமையிலிருந்து தன் தந்தையோடு வாழ்ந்ததுபோல வாழ்ந்தாளாயின், தந்தையின் உணவில் பங்கு பெறலாம். ஆனால் பொது நிலையர் எவரும் அதை உண்ணலாகாது.
14 தூய பொருளை அறியாமல் உண்பவர், அப்பொருளின் விலையில் ஐந்தில் ஒரு பங்கைக் கூடுதலாகக் கொடுத்து தூய பொருளுடன் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.
15 ஆண்டவருக்கு இஸ்ரயேலர் நேர்ச்சையாக அளிக்கும் புனிதப் பொருள்களைக் குருக்கள் இழிவுக்கு உள்ளாக்கக்கூடாது.
16 அப்புனிதப் பொருள்களை உண்டு இழிவுக்கு உள்ளாக்குவதால், அவர்கள் தண்டம் செலுத்தும் குற்றப்பழிக்கு ஆளாவர். ஏனெனில், நானே அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்!
17 ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது:
18 "ஆரோன், அவன் புதல்வர் மற்றும் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூற வேண்டியது: இஸ்ரயேலரோ இஸ்ரயேலரிடையே தங்கியிருக்கும் அன்னியர்களோ தங்கள் பொருத்தனைக்கேற்ப அல்லது ஆர்வமிகுதியால் எரிபலியாகச் செலுத்தும் காணிக்கை
19 அவரவர் விருப்பப்படியே மாடு, ஆடு, வெள்ளாடு எவற்றிலேனும் பழுதற்ற ஓர் ஆணாய் இருப்பதாக!
20 பழுதான எதையும் உங்களுக்காகச் செலுத்தலாகாது. அது ஆண்டவருக்கு உகந்தது அன்று. [*]
21 சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும்.
22 குருடு, ஊனம், நெரிவு, கழிச்சல் நோய், சொறி, சிரங்கு முதலிய குறைபாடுள்ளவற்றைச் செலுத்தாமலும் அவற்றை ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலியாக்காமலும் இருப்பீர்களாக.
23 உறுப்பு ஒழுங்கற்ற ஆடோ, மாடோ, மகிழ்வுப்பலி ஆகலாம். ஆனால் அது பொருத்தனைக்கு ஏற்றதன்று.
24 விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும், காயம்பட்டதையும் விதை அடிக்கப்பட்டதையும் ஆண்டவருக்கு நீங்கள் காணிக்கை ஆக்காமலும் உங்கள் நாட்டில் பலியிடாமலும் இருப்பீர்களாக!
25 வேற்றின் மக்களிடமிருந்து இத்தகையவற்றை வாங்கி உங்கள் கடவுளுக்கு உணவுப் படையலாகச் செலுத்தாதீர். அவற்றில் கேடும் பழுதும் உள்ளன. அவை உங்கள் சார்பாக எற்றுக்கொள்ளப்பட மாட்டா."
26 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
27 ஒரு கன்று, செம்மறி, அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால், ஏழு நாளளவும் தன் தாயிடம் அது இருக்கட்டும். எட்டாம் நாளிலிருந்து அது ஆண்டவருக்குரிய எரிபலியாகச் செலத்தப்படும். இது விரும்பத்தக்கது.
28 பசுவையும் அதன் கன்றையும் அல்லது ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் பலியிட வேண்டாம்.
29 நன்றிப்பலியை ஆண்டவருக்குச் செலுத்தினால், அது உங்கள் சார்பாக ஏற்கத் தகுந்ததாக இருக்கட்டும்.
30 அன்றே அது உண்ணப்படவேண்டும். விடியற்காலை மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வேண்டாம். நானே ஆண்டவர்!
31 கட்டளைகளைக் கடைப்பிடித்து அவற்றிற்கேற்ப ஒழுகுங்கள். நானே ஆண்டவர்!
32 இஸ்ரயேல் மக்களிடையே நான் தூயவராகக் கருதப்படுமாறு, என் திருப்பெயரை இழிவுப் படுத்தாதிருங்கள். நானே உங்களைப் புனிதர் ஆக்கும் ஆண்டவர்!
33 உங்களுக்குக் கடவுளாய் இருக்குமாறு உங்களை எகிப்தினின்று அழைத்து வந்தேன். நானே ஆண்டவர்! என்று சொல்."
- குறிப்பு
[*] 22:20 = இச 17:1.
(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 23 முதல் 25 வரை