திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மிரியாமின் வெற்றிப் பாடல் (விப 15:19-21). ஓவியர்: பவுலோ மால்டேய்ஸ். காலம்: 18ஆம் நூற்றாண்டு. மூலம்: யூத கலைக் களஞ்சியம்.

விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

மோசேயின் வெற்றிப் பாடல்[தொகு]


1 அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும்
ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு: [1]
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்:
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.


2 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்.
அவரே என் விடுதலை; என் கடவுள்.
அவரை நான் புகழ்ந்தேத்துவேன்.
அவரே என் மூதாதையரின் கடவுள்;
அவரை நான் ஏத்திப்போற்றுவேன். [2]


3 போரில் வல்லவர் ஆண்டவர்;
'ஆண்டவர்' என்பது அவர் பெயராம்.


4 பார்வோனின் தேர்களையும் படையையும்
அவர் கடலில் தள்ளிவிட்டார்;
அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள்
செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.


5 ஆழங்களில் அவர்கள்
கல்லைப்போல் மூழ்கிப் போயினர்;
ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.6 ஆண்டவரே, உம் வலக்கை
வலிமையில் மாண்புற்றது;
ஆண்டவரே, உமது வலக்கை
பகைவரைச் சிதறடிக்கின்றது.


7 உம் மாபெரும் மாட்சியால்
உம் எதிரிகளைத் தகர்த்தெறிந்தீர்;
உமது சீற்றக் கனலைக் கக்கித்
தாளடிபோல் அவர்களை எரித்துவிட்டீர்.


8 உம் நாசியின் மூச்சால்
நீர்த்திரள்கள் குவிந்தன;
பேரலைகள் சுவரென நின்றன;
கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.


9 எதிரி சொன்னான்:
'துரத்திச் செல்வேன்;
முன் சென்று மடக்குவேன்;
கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்;
என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்;
என் வாளை உருவுவேன்;
என் கை அவர்களை அழிக்கும்.'


10 நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்;
கடல் அவர்களை மூடிக்கொண்டது;
ஆற்றல் மிகு நீர்த்திரளில்
அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.


11 ஆண்டவரே, தெய்வங்களுள்
உமக்கு நிகரானவர் எவர்?
தூய்மையில் மேலோங்கியவர்,
அஞ்சத்தக்கவர்,
புகழ்ச்சிக்குரியவர்,
அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?12 நீர் உமது வலக்கையை நீட்டினீர்.
நிலம் அவர்களை விழுங்கி விட்டது.


13 நீர் மீட்டுக்கொண்ட மக்களை
உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்;
உம் ஆற்றலால் அவர்களை
உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச் சென்றீர்.


14 இதைக் கேள்வியுற்ற மக்களினங்கள்
அனைவரும் கதிகலங்கினர்;
பெலிஸ்தியாவில் குடியிருப்போரை
நடுக்கம் ஆட்கொண்டது.


15 ஏதோம் தலைவர்கள் அச்சமுற்றனர்;
மோவாபு தலைவர்களும் நடுநடுங்கினர்;
கானானில் குடியிருப்போர் நிலை குலைந்தனர்.


16 அச்சமும் திகிலும் அவர்களை ஆட்கொண்டன;
ஆண்டவரே, உம் மக்கள் கடந்து செல்லும் வரை,
அதாவது நீர் உடைமையாக்கிக் கொண்ட மக்கள்
கடந்து செல்லும்வரை,
உம் கைவன்மை கண்டு
அவர்கள் கல்போன்று மலைத்து நின்றனர்.


17 ஆண்டவரே, எம் தலைவரே!
நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும்,
உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள
உம் உரிமைச் சொத்தான மலைக்கு
அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.


18 ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.

மிரியாமின் பாடல்[தொகு]


19 பார்வோனின் குதிரைகள், தேர்கள் குதிரைவீரர்
அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க,
ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார்.
இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
20 இறைவாக்கினளும் ஆரோனின் தங்கையுமான மிரியாம்
கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள்.
பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக் கொண்டும்
நடனமாடிக்கொண்டும் அவள்பின் சென்றனர்.


21 அப்போது மிரியாம்,
"ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்;
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
குதிரையையும் குதிரை வீரனையும்
கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்"
என்று பல்லவியாகப் பாடினாள்.

கசப்பு நீர்[தொகு]


22 பின்பு மோசே இஸ்ரயேலரை செங்கடலிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்தார்.
அவர்கள் மூன்று நாள்கள் சூர் பாலைநிலத்தில் பயணம் செய்தனர்.
அங்குத் தண்ணீர் எதுவுமே தென்படவில்லை.
23 பின்னர் அவர்கள் மாராவைச் சென்றடைந்தனர்.
மாராவிலிருந்த தண்ணீரைப் பருக அவர்களால் இயலவில்லை.
அது கசப்பாக இருந்தது.
இதனால்தான் அவ்விடத்திற்கு மாரா [3] என்ற பெயர் வழங்கியது.
24 'நாங்கள் எதைத்தான் குடிப்போம்' என்று கூறி,
மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.
25 அவரும் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார்.
ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார்.
அதை அவர் தண்ணீரில் எறிய,
தண்ணீரும் சுவைபெற்றது.
அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து
ஆண்டவர் அவர்களைச் சோதித்தார்.
26 மேலும் அவர்,
"உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு
நீ அக்கறையுடன் செவி சாய்த்து,
அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து,
அவர் கட்டளைகளைப் பின்பற்றி,
அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால்,
நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை
உன்மேல் வரவிடமாட்டேன்.
ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்" என்றார்.


27 பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர்.
அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும்
எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன.
தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.


குறிப்புகள்

[1] 15:1 = திவெ 15:3.
[2] 15:2 = திபா 118:14; எசா 12:2.
[3] 15:23 எபிரேயத்தில், 'கசப்பு' என்பது பொருள்.


அதிகாரம் 16[தொகு]

மன்னா, காடை[தொகு]


1 இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும்
ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய்
இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த
இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.
2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும்
அந்தப் பாலைநிலத்தில்
மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.
3 இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி,
"இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து,
அப்பம் உண்டு நிறைவடைந்து,
எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால்
எத்துணை நலமாயிருந்திருக்கும்!
ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ
இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றனர்.


4 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி,
"இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து
அப்பத்தைப் பொழியப் போகிறேன்.
மக்கள் வெளியே போய்த் தேவையானதை
அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும்.
என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை
நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன். [1]
5 ஆனால் ஆறாம் நாளில்,
நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட
இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்" என்றார்.


6 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் நோக்கி,
"நீங்கள், எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே
என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள்.
7 காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள்.
ஏனெனில் ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார்.
இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார்" என்றனர்.
8 பின் மோசே,
"ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை
அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும்,
நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும்
ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார்.
அப்படியிருக்க, நாங்கள் யார்?
உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல;
ஆண்டவருக்கே எதிரானவை" என்றார்.


9 மோசே ஆரோனிடம்,
"நீர் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி,
ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்;
ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார்
என்று சொல்லும்" என்றார்.
10 அவ்வாறே ஆரோனும்
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப்
பேசிக் கொண்டிருக்கையில்,
அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள்.
அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.
11 ஆண்டவர் மோசேயை நோக்கி,
12 "இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன்.
நீ அவர்களிடம், 'மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம்.
காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம்.
நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை
இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்' என்று சொல்" என்றார்.


13 மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன.
காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.
14 பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல்
மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.
15 இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு,
ஒருவரை ஒருவர் நோக்கி மன்னா [2] என்றனர்.
ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
அப்போது மோசே அவர்களை நோக்கி,
"ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே: [3]
16 மேலும் ஆண்டவர் இட்ட கட்டளையாவது:
உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு
இதினின்று சேகரித்துக் கொள்வானாக.
அதாவது தலைக்கு இரண்டு படி [4] வீதம்
அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
17 இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில்
மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு;
குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.
18 ஆனால் இரண்டு படி அளவீட்டில்
அதனை அளந்து பார்த்தபோது
மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை;
குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை.
ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர். [5]
19 மோசே அவர்களைப் பார்த்து,
"இதில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது" என்றார்.
20 ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர்
காலைவரை அதில் மீதி வைத்தனர்.
அது புழுவைத்து நாற்றமெடுத்தது.
மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார்.
21 மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக்
காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள்.
ஏனெனில் வெயில் ஏறஏற அது உருகிவிடும்.


22 ஆனால் ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக,
அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர்.
கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும்
மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.
23 அப்போது அவர் அவர்களை நோக்கி,
"கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்;
ஆண்டவரின் புனிதமான 'சாபத்து' [6].
எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச்
சுட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்;
எஞ்சியிருப்பவை அனைத்தையும்
நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். [7]
24 மோசே கட்டளையிட்டபடி
அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது
அதில் நாற்றம் வீசவும் இல்லை; புழு வைக்கவும் இல்லை.
25 மோசே அவர்களிடம்,
"இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்;
இன்று ஆண்டவரின் ஓய்வுநாள்.
எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.
26 ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்;
ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது"
என்று அறிவித்தார்.


27 ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர்
உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர்.
ஆனால் எதையும் காணவில்லை.
28 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"எவ்வளவு காலம் என் கட்டளைகளையும்
சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?
29 கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார்.
அதனால் ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும்
உங்களுக்கு அளிக்கிறார்.
எனவே ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்;
ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து
எவரும் வெளியில் செல்லலாகாது" என்றார்.
30 ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்.


31 இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை 'மன்னா'
என்று பெயரிட்டழைத்தனர்.
அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும்,
தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது. [8]
32 ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்:
நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக
அதில் இரண்டு படி [9]அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது,
பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை
இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர்.
33 பின்பு மோசே ஆரோனை நோக்கி,
"நீர் ஒரு கலசத்தை எடுத்து அதில் இரண்டுபடி அளவு
மன்னாவை எடுத்து வையும்.
தலைமுறைதோறும் அழியாமல் காக்குமாறு
அதனை ஆண்டவர் திருமுன் எடுத்து வையும்" என்றார்.[10]
34 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி,
ஆரோன் அதனை உடன்படிக்கைப் பேழையில் பாதுகாப்பாக வைத்தார்.
35 இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டளவாக,
குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை,
மன்னா உண்டனர்.
கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.[11]


36 இரண்டு படி [12] என்பது ஏப்பா' [13] என்பதில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.


குறிப்புகள்

[1] 16:4 = யோவா 6:31.
[2] 16:15 எபிரேயத்தில், 'மான்-கூ' என்பது பாடம்:அதற்கு 'இது என்ன?' என்பது பொருள்.
[3] 16:15 = 1 கொரி 10:3.
[4] 16:16 'ஓர் ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[5] 16:18 = 2 கொரி 8:15.
[6] 16:23 எபிரேயத்தில் 'ஓய்வு' என்பது பொருள்.
[7] 16:23 = விப 20:8-11.
[8] 16:31 = எண் 11:7-8.
[9] 16:32 'ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[10] 16:33 = எபி 9:4.
[11] 16:35 = யோசு 5:12.
[12] 16:36 'ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[13] 16:36 'ஏப்பா' என்பது இருபது படி ஆகும்.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை