உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 15:21 வரை

விக்கிமூலம் இலிருந்து
பளிங்கிலான மோசே சிலை. சிற்பி: மைக்கிலாஞ்செலோ போனறோட்டி (1475-1564). செதுக்கிய ஆண்டு: 1515.தூய பேதுரு சங்கிலிக் கோவில். உரோமை நகர்.

விடுதலைப் பயணம் (The Book of Exodus)

[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 16 வரை

நூலுக்கு முன்னுரை


ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை 'விடுதலைப் பயணம்' என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

ஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இஸ்ரயேல் மக்களைப் பேராற்றலோடு மோசேயின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.


நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இஸ்ரயேலர் எகிப்தினின்று விடுதலை பெறல்

அ) எகிப்தில் அடிமைத்தனம்
ஆ) மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும்
இ) மோசேயின் அழைப்பு
ஈ) மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல்
உ) பாஸ்கா - எகிப்தினின்று வெளியேறல்

1:1 - 15:21

1:1-22
2:1-25
3:1 - 4:31
5:1 - 11:10
12:1 - 15:21

84 - 108

84 - 85
85 - 86
86 - 89
89 - 100
100 - 108

2. செங்கடல் முதல் சீனாய் மலை வரை 15:22 - 18:27 108 - 113
3. பத்துக் கட்டளைகள் - உடன்படிக்கை நூல் 19:1 - 24:18 113 - 122
4. உடன்படிக்கைக் கூடாரம் - வழிபாட்டு ஒழுங்குமுறைகள் 25:1 - 40-38 122 - 151

விடுதலைப் பயணம்

[தொகு]

அதிகாரம் 1

[தொகு]

எகிப்தில் இஸ்ரயேலரின் அடிமை வாழ்க்கை

[தொகு]


1 யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை:
2 ரூபன், சிமியோன், லேவி, யூதா;
3 இசக்கார், செபுலோன், பென்யமின்;
4 தாண், நப்தலி, காத்து, ஆசேர்.[1]
5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர்.[2] யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தார்.
6 பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.
7 இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்; ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்; இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.[3]


8 இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.[4]
9 அவன் தன் குடிமக்களை நோக்கி, "இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
10 அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்; நம்மை எதிர்த்துப் போரிடுவர்; இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்" என்று கூறினான்.[5]
11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
12 ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.
13 எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்;
14 கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.


15 எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:
16 "எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்; ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்; பெண்மகவு என்றால் வாழட்டும்".
17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
18 எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, 'ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?' என்று கேட்டான்.
19 அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, "எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்; ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்; மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது" என்று காரணம் கூறினர்.
20 இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.
21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
22 பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, "பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்" என்று அறிவித்தான்.

குறிப்புகள்:

[தொகு]


[1] 1:1-4 = தொநூ 46:8-27.
[2] 1:5 ஒரு பழைய மொழிபெயர்ப்பில் 'எழுபத்தைந்து' எனக் காணப்படுகிறது (காண். திப 7:14).
[3] 1:7 = திப 7:17.
[4] 1:8 = திப 7:18.
[5] 1:10 = திப 7:19.

அதிகாரம் 2

[தொகு]

மோசேயின் பிறப்பு

[தொகு]


1 இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.
2 அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.[1]
3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.
4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.


5 அப்போது பார்வோனின் மகள் நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது அழுதுகொண்டிருந்தது.
6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். "இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று" என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,
7 "உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?" என்று கேட்டாள்.
8 பார்வோனின் மகள் அவளை நோக்கி, "சரி. சென்று வா" என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
9 பார்வோனின் மகள் அவளை நோக்கி, "இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்" என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.
10 குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள். 'நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி அவள் அவனுக்கு 'மோசே'[2] என்று பெயரிட்டாள்.[3]

மோசே மிதியானுக்குத் தப்பியோடல்

[தொகு]


11 அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்; அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்; மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்;[4]
12 சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.
13 அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி "உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டார்.
14 அதற்கு அவன், "எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?" என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்; "நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே" என்று சொல்லிக் கொண்டார்![5]
15 இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான்.[6]

எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.
16 அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர்.
17 அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர். உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.
18 அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், "என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?" என்றார்.
19 அவர்கள், "எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்; ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்" என்றார்கள்.
20 அவர் தம் புதல்வியரிடம், "எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.
21 அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம் மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.
22 அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். 'நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன்' என்று கூறி மோசே அவனைக் 'கேர்சோம்'[7] என்று பெயரிட்டழைத்தார்.


23 இந்த நீண்ட காலத்தில் எகிப்திய மன்னன் இறந்துவிட்டான். இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர். அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று.
24 அவர்களது புலம்பலைக் கடவுள் கேட்டார். ஆபிரகாமுடனும், யாக்கோபுடனும் தாம் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.[8]
25 கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்களது நிலைமைகளையும் கடவுள் அறிந்து கொண்டார்.

குறிப்புகள்:

[தொகு]


[1] 2:2 = திப 7:20; எபி 11:23.
[2] 2:10 எபிரேயத்தில், 'எடுக்கப்பட்டவன்' என்பது பொருள்.
[3] 2:10 = திப 7:21.
[4] 2:11 = எபி 11:24.
[5] 2:11-14 = திப 7:23-28.
[6] 2:15 = திப 7:29; எபி 11:27.
[7] 2:22 எபிரேயத்தில், 'அன்னியன்' என்பது பொருள்.
[8] 2:24 = தொநூ 15:13-14.

அதிகாரம் 3

[தொகு]

மோசேயின் அழைப்பு

[தொகு]


1 மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.
2 அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.
3 "ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்" என்று மோசே கூறிக்கொண்டார்.
4 அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். 'மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் "இதோ நான்" என்றார்.
5 அவர், "இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" என்றார்.
6 மேலும் அவர், "உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.


7 அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.
8 எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு - அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.
9 இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.
10 எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.[1]
11 மோசே கடவுளிடம், "பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?" என்றார்.
12 அப்போது கடவுள், "நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே" என்றுரைத்தார்.


13 மோசே கடவுளிடம், "இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார்.[2]
14 கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார்.[3]
15 கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!
16 போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், யாக்கோபின் கடவுள் - எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.
17 எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு - உங்களை நடத்திச் செல்வேன்" என்று அறிவிப்பாய்.
18 அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, "எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.
19 கைவன்மையைக் கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும்.
20 எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தினைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.


21 அப்போது இம்மக்களை எகிப்தியர் பார்வையில் விரும்பத்தக்கவர் ஆக்குவேன். நீங்கள் வெறுமையாய்ப் போகப்போவதே இல்லை.
22 ஏனெனில் ஒவ்வொருத்தியும் தன் அண்டை வீட்டுக்காரியிடமும், தன் வீட்டிலுள்ள அன்னியப் பெண்ணிடமும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் மேலாடைகளையும் கேட்டு வாங்கிக் கொள்வாள்.[4]
23 அவற்றை உங்கள் புதல்வருக்கும், உங்கள் புதல்வியருக்கும் அணிவியுங்கள். இவ்வாறு நீங்கள் எகிப்தைச் சூறையாடிச் செல்வீர்கள்".

குறிப்புகள்:

[தொகு]


[1] 3:2-10 = திப 7:30-34.
[2] 3:13 = விப 6:2-3.
[3] 3:14 = திவெ 1:4,8.
[4] 3:21-22 = விப 12:35-36.

அதிகாரம் 4

[தொகு]

மோசே பெற்ற வியத்தகு ஆற்றல்

[தொகு]


1 மோசே மறுமொழியாக, "இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்; என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில் 'ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை' என்று சொல்வார்கள்" என்று கூறினார்.
2 ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டார். 'ஒரு கோல்' என்றார் அவர்.
3 'அதைத் தரையில் விட்டெறி' என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
4 ஆண்டவர் அவரை நோக்கி, "நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு" என்றார். - அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.-
5 "இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே".


6 மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கையை உன் மடிக்குள் இடு" என்றார். அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார். அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.
7 பின்னர் ஆண்டவர், "உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு" என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார். மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.
8 அப்போது ஆண்டவர், "அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
9 அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய். நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்" என்றார்.


10 மோசே ஆண்டவரிடம்; "ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்" என்றார்.
11 ஆண்டவர் அவரிடம், "மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!
12 ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்" என்றார்.
13 அதற்கு அவர், "வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!" என்றுரைத்தார்.
14 இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: "லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.
15 நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய். நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.
16 உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.
17 இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய். இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!"

மோசே எகிப்திற்குத் திரும்புதல்

[தொகு]


18 மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, "எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்" என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, "சமாதானமாய்ப் போய்வா" என்றார்.
19 மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, "எகிப்திற்குத் திரும்பிப் போ; ஏனெனில் உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்" என்றுரைத்தார்.
20 எனவே மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.
21 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு.
22 நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், 'ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை.
23 நான் உனக்குக் கூறிவிட்டேன்: என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன்' என்று சொல்வாய்".[*]


24 ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.
25 அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, "நீர் எனக்கு இரத்த மணமகன்" என்றாள்.
26 பின்பு ஆண்டவர் அவரைவிட்டு விலகினார். அப்போது அவள், "விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன்" என்றாள்.
27 இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, "மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் போ" என்றார். அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.
28 தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப் பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.
29 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.
30 ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார். அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார். மக்களும் நம்பினர்.
31 ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர்.

குறிப்பு:

[தொகு]


[*] 4:23 = விப 12:29.

அதிகாரம் 5

[தொகு]

பார்வோன் முன் மோசேயும் ஆரோனும்

[தொகு]


1 பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, "பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்" என்று அறிவித்தனர்.
2 அதற்குப் பார்வோன், "யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன்; இஸ்ரயேலரை நான் போகவிடவும் மாட்டேன்" என்று கூறினான்.
3 அதற்கு அவர்கள், "எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார். பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும். இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ அவர் எங்களைத் தாக்கிவிடுவார்" என்று கூறினர்.
4 எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, "மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்" என்று கூறினான்.


5 மேலும், பார்வோன், "பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள்" என்றான்.
6 அதே நாளில், பார்வோன் மக்களிடம் அடிமைவேலை வாங்கும் அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளருக்கும் ஆணைவிடுத்து,
7 "செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்! அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.
8 ஆயினும் இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை. அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது. ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள். இதனால்தான், 'நாங்கள் போகவேண்டும்; எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும்' என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
9 அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள். வெற்றுப் பேச்சுகளை நம்பாமல் அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்" என்றான்.


10 எனவே வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் சென்று அவர்களை நோக்கி, "பார்வோன் கூறுவது இதுவே: நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.
11 நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக் கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவித்தனர்.
12 எனவே வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.
13 "வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்" என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.
14 "முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச் செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும் ஏன் செய்துமுடிக்கவில்லை?" என்று கேட்டு, பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள் தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக நியமித்திருந்தவர்களை அடித்தனர்.


15 இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, "ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?
16 உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே 'செங்கல் அறுங்கள்' என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்" என்று கதறினர்.
17 அதற்கு அவன், "சோம்பேறிகள்; நீங்கள் சோம்பேறிகள்; அதனால்தான் 'நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும்' என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
18 எனவே இப்போதே வேலைக்குச் செல்லுங்கள். வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது. எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்" என்று கூறினான்.
19 'அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது' என்று சொல்லக் கேட்டபோது, தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.
20 பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது, தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து அவர்களை நோக்கி,
21 "ஆண்டவர் உங்களைக் கவனித்துக் கொள்ளட்டும்! உங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்! ஏனெனில், பார்வோன் முன்னிலையிலும் அவனுடைய அலுவலர் முன்னிலையிலும் நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்! நம்மைக் கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்துவிட்டீர்கள்" என்றனர்.

மோசேயின் முறையீடு

[தொகு]


22 அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, "என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?
23 உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை" என்று கூறினார்.

அதிகாரம் 6

[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்; என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்; தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்" என்றார்.

மோசேயின் அழைப்பு

[தொகு]


2 கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
3 "நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்குக்கும் 'ஆண்டவர்' என்ற என் பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை எனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே![1]
4 மேலும் அவர்கள் அன்னியராக அலைந்தபோது தங்கியிருந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களுடன் உடன்படிக்கை நிலைநாட்டியதும் நானே!
5 மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்தி வைத்துள்ள இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு என் உடன்படிக்கையை நினைவுகூர்ந்துள்ளேன்.
6 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: நானே ஆண்டவர். எகிப்தியரின் பாரச் சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன். அவர்கள் உங்களை அடிமைப்படுத்துவதிலிருந்து விடுவிப்பேன். ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும் நான் உங்களுக்கு மீட்பளிப்பேன்.
7 உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்வேன். அதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன். நானே ஆண்டவர்!"
9 இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும், மன ஏக்கத்தையும் வேலையின் கொடுமையையும் முன்னிட்டு அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை.


10 ஆண்டவர் மோசேயை நோக்கி,
11 "எகிப்திய மன்னனாகிய பார்வோன் தன் நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிடும்படி நீ அவனிடம் போய்ச் சொல்" என்றுரைத்தார்.
12 மோசே ஆண்டவரிடம் பேசி, "இஸ்ரயேல் மக்களே எனக்குச் செவிசாய்க்காதிருக்க, பார்வோன் எவ்வாறு எனக்குச் செவிசாய்க்கப் போகிறான்? நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்" என்று சொன்னார்.
13 ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மோசே, ஆரோனின் மூதாதையர் அட்டவணை

[தொகு]


14 அவர்களின் மூதாதையர் வழிவந்த குடும்பத் தலைவர்கள் இவர்களே: இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி. இவைகளே ரூபன் வழிவந்த குடும்பங்கள்.
15 சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள்.
16 தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்: கேர்சோன், கோகாத்து, மெராரி. லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.
17 கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி. இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.
18 கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள்.
19 மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள்.[2]
20 அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள். அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.
21 இட்சகாரின் புதல்வர்: கோராகு, நெபேகு, சிக்ரி.
22 உசியேலின் புதல்வர்: மீசாவேல், எல்சாபான், சித்ரி.
23 அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமான எலிசபாவை ஆரோன் மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு அவள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
24 கோராகின் புதல்வர்: அசீர், எல்கானா, அபியசாபு. இவைகளே கோராகின் குடும்பங்கள்.
25 ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள் ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான். அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள். தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே.


26 'தம்தம் அணிவகுப்பின்படி இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்யுங்கள்' என்று ஆண்டவரிடம் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27 இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்வதற்காக எகிப்திய மன்னனாகிய பார்வோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களும் மோசே, ஆரோன் ஆகிய இவர்களே!

மோசே, ஆரோனுக்கு ஆண்டவரின் கட்டளை

[தொகு]


28 அக்காலத்தில் எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேயுடன் பேசியருளினார்.
29 ஆண்டவர் மோசேயுடன் பேசி, "நானே ஆண்டவர். நான் உன்னோடு பேசுவதையெல்லாம் எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு" என்று அறிவித்தபோது,
30 மோசே ஆண்டவரிடம், "பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன். பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?" என்றார்.

குறிப்புகள்:

[தொகு]


[1] 6:2-3 = தொநூ 17:1; 28:3; 35:11; விப 3:13-15.
[2] 6:16-19 = எண் 3:17-20; 26:57-58; 1 குறி 6:16-19.

அதிகாரம் 7

[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான்.
2 நான் உனக்குக் கட்டளை இடுவதையெல்லாம் நீ எடுத்துச் சொல்வாய். பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களைப் போகவிடும்படி அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான்.
3 நான் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்துவதோடு எகிப்து நாட்டில் என்னுடைய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் பெருகச் செய்வேன்.[1]
4 பார்வோன் உங்களுக்குச் செவிசாய்க்க மாட்டான். எனவே நான் எகிப்திற்கு எதிராகக் கை ஓங்குவேன். பெரும் தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றியபின் என் மக்களாகிய இஸ்ரயேல் என்னும் படைத்திரளை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்வேன்.
5 எகிப்திற்கு எதிராகக் கை ஓங்கி அவர்கள் நடுவினின்று இஸ்ரயேல் மக்களை நான் வெளியேறச் செய்யும்போது 'நானே ஆண்டவர்' என எகிப்தியர் அறிந்து கொள்வர்" என்றார்.
6 தங்களுக்கு ஆண்டவர் என்ன கட்டளையிட்டாரோ அதையே மோசேயும் ஆரோனும் செய்தனர்.
7 பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மோசேக்கு வயது எண்பது; ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்று.

ஆரோனின் கோல்

[தொகு]


8 ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி,
9 "அருஞ்செயல் ஒன்று காட்டி உங்களை மெய்ப்பியுங்கள்" என்று பார்வோன் உங்களை நோக்கிக் கூறினால் நீ ஆரோனிடம், 'உன் கோலை எடுத்து, பார்வோன் முன்னிலையில் விட்டெறி. அது பாம்பாக மாறும்' என்று சொல்" என்றார்.
10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்கச் செயல்பட்டனர். ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அதுபாம்பாக மாறியது.
11 பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.
12 அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின. ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.
13 பார்வோனின் மனமோ கடினப்பட்டது. ஆண்டவர் முன்னுரைத்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

எகிப்தில் பத்துப் பெருந்துன்பங்கள்

[தொகு]


14 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது. மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான்.
15 எனவே காலையில் நீ பார்வோனிடம் போ. அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான். அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்; பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.
16 நீ அவனிடம் கூற வேண்டியது: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பிவைத்துள்ளார்; அவர் சொல்வது: 'பாலைநிலத்தில் எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு. நீயோ இதுவரை செவிசாய்க்கவில்லை.
17 என் கையிலுள்ள கோலால் நானே நைல்நதி நீரை அடிப்பேன். அது இரத்தமாக மாறும்.[2]
18 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுக்கும். எகிப்தியர் நைல்நதி நீரைக் குடிக்க முடியாமல் திணறுவர். இவற்றால் 'நானே ஆண்டவர்' என நீ அறிந்துகொள்வாய்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்று சொல்.
19 மேலும் ஆண்டவர் மோசேயிடம், "நீ ஆரோனை நோக்கி 'உனது கோலை எடு; எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு! அவை இரத்தமாக மாறும். ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும் கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும் என்று சொல்" என்றார்.


20 அவ்வாறே, ஆண்டவர் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் செய்தனர். ஆரோன் கோலை உயர்த்திப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் நைல்நதி நீரில் அடித்தார். நைல்நதி முழுவதும் இரத்தமாக மாறியது.
21 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுத்தது. எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று. எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.
22 இது போலவே எகிப்திய மந்திரவாதிகளும் தம் வித்தைகளால் செய்து காட்டினர். எனவே பார்வோனின் மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்திருந்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
23 பார்வோன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். அவன் மனம் இதையும் பொருட்படுத்தவில்லை.
24 எகிப்தியர் எல்லோரும் நைல்நதிப் பகுதிகளில் குடிநீருக்காகத் தோண்டினர். ஏனென்றால், நைல்நதி நீரைப் பருக அவர்களால் முடியவில்லை.
25 ஆண்டவர் நைல்நதியை அடித்து நாள்கள் ஏழு கடந்தன.

குறிப்புகள்:

[தொகு]


[1] 7:3 = திப 7:36.
[2] 7:17 = திவெ 16:4.

அதிகாரம் 8

[தொகு]

தவளைகள்

[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது: "நீ பார்வோனிடம் போய் அவனிடம், 'ஆண்டவர் கூறுகிறார்: எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு'.
2 அவர்களை அனுப்ப நீ மறுத்தால், இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன்.
3 தவளைகள் நைல்நதியை நிரப்பி, பின்னர் உன் வீட்டிற்குள்ளும், உன் படுக்கை அறைக்குள்ளும், உன் படுக்கையிலும், உன் அலுவலர் உன் குடிமக்கள் வீட்டிலும், உன் அடுப்புகளிலும், மாவுபிசையும் தொட்டிகளிலும் ஏறிவந்துவிடும்.
4 உன் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் அலுவலர் அனைவர் மேலும் தவளைகள் ஏறும்' என்று சொல்."
5 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ ஆரோனிடம், 'கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய்' என்று சொல்" என்றார்.
6 ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.
7 மந்திரவாதிகளும் தங்கள் வித்தைகளால் இது போலவே செய்து எகிப்திய நிலத்தின்மேல் தவளைகள் ஏறிவரச் செய்தனர்.
8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து, "என்னிடமிருந்தும், என் குடிமக்களிடமிருந்தும் தவளைகளை அகற்றிவிடுமாறு ஆண்டவரை மன்றாடுங்கள். ஆண்டவருக்குப் பலியிடுமாறு நான் மக்களை அனுப்பிவிடுவேன்" என்று கூறினான்.
9 மோசே பார்வோனை நோக்கி, "தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்" என்று கூறினார்.
10 அவன், "நாளைக்கு" என்றான். அதற்கு மோசே, "எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யாரும் இல்லை என நீர் அறிந்து கொள்வதற்காக உம் சொற்படியே ஆகும்;
11 உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும், உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும் தவளைகள் ஒழிந்துபோகும்; ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்" என்றார்.
12 மோசேயும், ஆரோனும் பார்வோனை விட்டகன்றனர். பின்பு, பார்வோனின் மேல் ஆண்டவர் வரவிட்டிருந்த தவளைகளைக் குறித்து மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
13 ஆண்டவரும் மோசேயின் மன்றாட்டின்படியே செய்தருளினார். ஆக, வீடுகள், முற்றங்கள், வயல்கள் ஆகியவற்றில் தவளைகள் மடிந்து போயின.
14 அவற்றைக் குவியல் குவியலாக திரட்டினர்; எனவே அந்நாடு நாற்றமெடுத்தது.
15 தொல்லை ஓய்ந்தது என்று கண்ட பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். ஆண்டவர் சொன்னபடி அவன் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை.

கொசுக்கள்

[தொகு]


16 மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ ஆரோனிடம், 'நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி! அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும்' என்று சொல்" என்றார்.
17 அவ்வாறே அவர்களும் செய்தனர். கோல் ஏந்திய தம் கையை நீட்டி ஆரோன் நிலத்தின் புழுதியை அடிக்க, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொசுக்கள் தோன்றின. எகிப்து நாடெங்கும், நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறிற்று.
18 கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும் தங்கள் வித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்; ஆனால், அது அவர்களால் இயலாமற் போயிற்று. கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன.
19 மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, "இது கடவுளின் கைவன்மையே" என்றனர். ஆயினும் பார்வோனுடைய மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்தபடியே அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.[*]

ஈக்கள்

[தொகு]


20 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்து நில். அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான். அப்போது அவனை நோக்கிச் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: 'எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு;
21 என் மக்களை நீ போகவிடவில்லையென்றால், இதோ உன்மேலும், உன் அலுவலர் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் வீட்டின் மேலும், ஈக்கள் வரச்செய்வேன். எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும்.
22 அந்நாளில், என் மக்கள் தங்கியிருக்கும் கோசேன் நிலப்பகுதியை வேறுபடுத்திக் காட்டுவேன். அங்கு ஈக்கள் எவையுமே இரா. இதனால் இந்நாட்டில் நானே ஆண்டவர் என நீ அறிந்து கொள்வாய்.
23 மேலும் என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்'" என்றார்.
24 அவ்வாறே ஆண்டவரும் செய்து முடித்தார். ஈக்கள் பார்வோன் வீட்டிலும், அவனுடைய அலுவலர் வீட்டிலும், எகிப்து நாடெங்கும் திரளாய்ப் பெருகின. ஈக்களால் நாடே பாழாகிவிட்டது.


25 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, "போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்குப் பலியிடுங்கள்" என்றான்.
26 அதற்கு மோசே, "அது முறையல்ல; அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும். எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படிப் பலியிட்டால் அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?
27 பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்" என்றார்.
28 அப்பொழுது பார்வோன், "உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நீங்கள் பாலைநிலத்தில் பலியிட நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால், வெகுதூரம் சென்று விடாதீர்கள்; மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்" என்றுரைத்தான்.
29 மோசே மறுமொழியாக, "நான் உம்மிடமிருந்தும் போய், பார்வோனிடமிருந்தும் அவன் அலுவலரிடமிருந்தும் அவன் குடிமக்களிடமிருந்தும் நாளைய தினமே ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என்று ஆண்டவரை மன்றாடுவேன். ஆனால் ஆண்டவருக்குப் பலியிடுமாறு மக்களை அனுப்பாமல் பார்வோன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற வேணடாம்" என்று கூறினார்.


30 மோசே பார்வோனை விட்டு அகன்றார்; ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
31 மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார். பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும் அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின. ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.
32 இம்முறையும் பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். மக்களை அவன் போகவிடவில்லை.

குறிப்பு:

[தொகு]

[*] 8:19 = லூக் 11:20


அதிகாரம் 9

[தொகு]

கால்நடைகள் சாவு

[தொகு]


1 மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ பார்வோனிடம் சென்று அவனிடம் சொல்; எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு வழிபாடு செலுத்துவதற்காக என் மக்களைப் போகவிடு!
2 நீ அவர்களைப் போகவிடாமல் இன்னும் தடைசெய்தால்,
3 நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.
4 ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும், எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டுவார். எனவே இஸ்ரயேல் மக்களுக்குரியவை அனைத்திலும் எவையுமே மடிந்துபோகா.
5 'நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார்' என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்."
6 அதன்படி எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன. இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை.
7 பார்வோன் ஆளனுப்பி விசாரித்தான். இஸ்ரயேலரின் கால்நடைகளில் ஒன்றுகூடச் சாகவில்லை. ஆயினும் பார்வோனின் மனம் கடினப்பட்டது. மக்களை அவன் போகவிடவில்லை.

கொப்புளங்கள்

[தொகு]


8 மேலும் ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, "அடுப்பிலிருந்து சாம்பலை உங்கள் கைகள் நிறைய வாரிக் கொள்ளுங்கள். பார்வோன் முன்னிலையில் மோசே அதனை வானத்தில் தூவட்டும்.
9 எகிப்து நாடெங்கும் அது மெல்லிய தூசியாகப் பரவி மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொப்புளங்களாகி வெடித்துப் புண்ணாகும்" என்றார்.
10 அவர்களும் அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர். மோசே வானத்தில் அதனைத் தூவினார். மனிதர் மேலும் விலங்குகள்மேலும் அது வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறிற்று.[1]
11 கொப்புளம் தோன்றியதால் மந்திரவாதிகள் மோசேயின் முன் நிற்க இயலவில்லை. ஏனெனில், மந்திரவாதிகள் மேலும் எல்லா எகிப்தியர்மேலும் கொப்புளம் கண்டிருந்தது.
12 ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.

கல்மழை

[தொகு]


13 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: அதிகாலையில் எழுந்து பார்வோன் முன்னிலையில் வந்துநின்று அவனை நோக்கிச் சொல்: எபிரேயரின் கடவுளான ஆண்டவர் சொல்வது இதுவே. எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு.
14 இல்லையெனில் இம்முறை கொள்ளைநோய்களை எல்லாம் உன்மேலும் உன் அலுவலர்மேலும் உன் குடிமக்கள்மேலும் நானே ஏவி விடுவேன். இந்நாடெங்கும் எனக்கு நிகர் யாருமே இல்லை என்பதை இதனால் நீ அறிந்து கொள்வாய்.
15 கையை ஓங்கி, உன்னையும் உன் குடிமக்களையும் கொள்ளை நோய்களால் இதற்குள் தாக்கியிருப்பேன். நீயும் இந்நாட்டிலிருந்து ஒழிந்து போயிருப்பாய்.
16 எனினும், என் வல்லமையைக் காட்டவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.[2]
17 நீயோ, என் மக்களைப் போகவிடாத அளவுக்கு இன்னும் தலைதூக்கி நிற்கின்றாய்.
18 எகிப்து நிறுவப்பட்டது தொடங்கி இன்றுவரை அங்கே இருந்திராத அளவுக்கு மிகக் கொடிய கல்மழையை அதில் நாளையதினம் இந்நேரத்தில் பெய்யச் செய்வேன்.
19 எனவே, உன் கால்நடைகளையும் வயல் வெளியில் உனக்குரிய எல்லாவற்றையும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகச்செய்ய இப்போதே ஆளனுப்பிவிடு! வீட்டிற்குக் கொண்டு சேர்க்கப்படாமல் வயல்வெளியில் விடப்பட்ட மனிதர் அனைவர் மேலும் விலங்குகள் அனைத்தின் மேலும் கல்மழை பெய்ய, எல்லோரும் மடிவர்.
20 பார்வோனின் அலுவலரில் ஆண்டவரின் வார்த்தையை மதித்தவர் தம் அடிமைகளையும், தம் கால்நடைகளையும் வீடுகளுக்குள் ஓட்டிவிட்டனர்.
21 ஆண்டவர் வார்த்தையை மதிக்காதவர் தங்கள் அடிமைகளையும் கால்நடைகளையும் வயல்வெளியில் விட்டுவிட்டனர்.


22 ஆண்டவர் மோசேயை நோக்கி, "எகிப்து நாடெங்கும் - எகிப்து நாட்டிலுள்ள மனிதர், விலங்கு, வயல்வெளியிலுள்ள பயிர்பச்சை இவற்றின் மேல் - கல்மழை பொழியுமாறு உன் கையை வானோக்கி நீட்டு" என்றார்.
23 மோசே தம்கோலை வானோக்கி நீட்டவே, ஆண்டவர் இடி முழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார். நிலத்தில் நெருப்பு பாய்ந்து வந்தது. எகிப்து நாடெங்கும் கல்மழை பெய்வித்தார் ஆண்டவர்.
24 கல்மழை பெய்தது. ஒரு நாடாக எகிப்து உருவான காலந்தொடங்கி அந்நாள்வரை அங்கு இருந்திராத அளவு மிகக் கடுமையான கல்மழை பெய்ய அதனிடையே மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது.[3]
25 எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை வயல்வெளியில் இருந்த அனைத்தையும் கல்மழை தாக்கியது; மேலும் வயல்வெளியில் பயிர்பச்சை யாவற்றையும் பாழ்படுத்தியது; வயல்வெளி மரங்கள் அனைத்தையும் முறித்தெறிந்தது.
26 இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.

27 பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டான். அவன் அவர்களை நோக்கி, "நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர்.
28 எனவே ஆண்டவரிடம் மன்றாடுங்கள். இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்; நான் உங்களைப் போக விடுவேன். இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்" என்றான்.
29 மோசே அவனை நோக்கி, "நாளைக்கு வெளியே போனபின், நான் என் கைகளை ஆண்டவரை நோக்கி எழுப்புவேன். இடிமுழக்கங்கள் ஓய்ந்து போகும். கல்மழையும் நின்றுவிடும். இதனால் இந்நாடு ஆண்டவருடையது என்பதை நீர் அறிந்து கொள்வீர்.
30 ஆனால் உம்மையும் உம் அலுவலரையும் பொறுத்தமட்டில், இன்னும் நீங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அஞ்சிநடப்பதாகவே இல்லை என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
31 அப்போது சணல் பயிரும், வாற்கோதுமைப் பயிரும் அடிபட்டுப் போயின. வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது. சணல் பூத்து இருந்தது.
32 ஆனால் கோதுமையும், மாக்கோதுமையும் அடிபட்டுப் போகவில்லை; ஏனெனில் அவை பின்னர் கதிர்விடுவன.
33 மோசே பார்வோனை விட்டகன்று நகருக்கு வெளியே வந்தார். தம் கைகளை ஆண்டவர்பால் நீட்டினார். உடனே இடிமுழக்கங்களும் கல்மழையும் ஓய்ந்தன. நாட்டில் மழை பெய்வதும் நின்றது.
34 மழையும் கல்மழையும் இடிமுழக்கங்களும் ஓய்ந்து போனதைக் கண்டான் பார்வோன். ஆயினும் அவன் மேலும் தொடர்ந்து பாவம் செய்தான்; தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். அவனைப் போலவே அவனது அலுவலரும் நடந்து கொண்டனர்.
35 பார்வோனின் மனம் இறுகிவிட்டதால், மோசே வழியாய் ஆண்டவர் அறிவித்தபடியே அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

குறிப்புகள்:

[தொகு]


[1] 9:10 = திவெ 16:2.
[2] 9:16 = உரோ 9:17
[3] 9:24 = திவெ 8:7; 16:21.


அதிகாரம் 10

[தொகு]

வெட்டுக்கிளிகள்

[தொகு]


1 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ பார்வோனிடம் போ. நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும் கடினப்படுத்தியதன் நோக்கம்,
2 என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்றார்.


3 மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்று அவனை நோக்கி, "எபிரேயரின் கடவுளான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எவ்வளவு காலம் நீ எனக்குப் பணிய மறுப்பாய்? எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு.
4 ஏனெனில், நீ என் மக்களை அனுப்பிவிட மறுத்தால்,
5 நாளைய தினமே உன் எல்லைகளுக்குள் வெட்டுக்கிளிகள் வரச்செய்வேன். யாருமே தரையைப் பார்க்கமுடியாத அளவுக்கு அவை நாட்டை நிரப்பிவிடும். கல்மழைக்குத் தப்பி உங்களுக்கென எஞ்சி நிற்பதை அவை தின்று தீர்க்கும். வயல்வெளியில், தளிர்விடும் உங்கள் மரங்கள் அனைத்தையும் அவை தின்றழிக்கும்.
6 வீடுகளும், உன் அலுவலர் அனைவரின் வீடுகளும், எகிப்தியர் அனைவரின் வீடுகளும் அவற்றால் நிரம்பும். இது, உன் தந்தையரும் உன் தந்தையரின் தந்தையரும் இந்நாட்டில் வாழத் தொடங்கிய நாள்முதல் இன்று வரை கண்டிராத ஒன்றாகும்" என்றார். பின்னர் மோசே பார்வோனை விட்டகன்றார்.


7 பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி, "எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ? தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும். எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?" என்றனர்.
8 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர். அவன் அவர்களை நோக்கி, "போங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால், போகவேண்டியவர் யார் யார்?" என்று கேட்டான்.
9 அதற்கு மோசே, "எங்களிடையேயுள்ள இளைஞரோடும் முதியவரோடும் நாங்கள் போவோம். எங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும், எங்கள் ஆட்டுமந்தையோடும் எங்கள் மாட்டு மந்தையோடும் நாங்கள் போவோம். ஏனெனில் இது எங்களுக்கு 'ஆண்டவரின் திருவிழா' ஆகும்" என்றார்.
10 பார்வோன் அவர்களை நோக்கி, "உங்களை உங்கள் குழந்தைகளோடு நான் அனுப்பி வைத்தால், ஆண்டவர் தாம் உங்களைக் காக்க வேண்டும்! பாருங்கள், உங்கள்முன் உள்ளது தீமையே!
11 இதெல்லாம் வேண்டாம். உங்களில் ஆண்கள் மட்டும் போய் ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். நீங்கள் விரும்பியதும் இதுவே!" என்றான். இதன் பின் பார்வோன் அவர்களைத் தன் முன்னிலையிலிருந்து துரத்திவிட்டான்.
12 ஆண்டவர் மோசேயை நோக்கி, "கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப் பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக எகிப்து நாட்டின் மேல் உன் கையை நீட்டு" என்றார்.
13 மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கோலை நீட்டவே, ஆண்டவரும் அன்றைய பகல் இரவு முழுவதும் நாட்டில் கீழ்க்காற்று வீசச்செய்தார். காலையானபோது கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.
14 மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின. இதுபோன்று அதற்கு முன்போ பின்போ இருந்ததில்லை.
15 அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருண்டு போயிற்று. கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும், மரத்தின் பழங்கள் அனைத்தையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடெங்குமே மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும் பச்சையாக எதுவுமே விட்டுவைக்கப்படவில்லை.[1]
16 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து அவர்களை நோக்கி, "உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் தவறு செய்து விட்டேன்.
17 இந்த ஒருமுறையும் என் பிழையைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்" என்றான்.
18 மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.
19 அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில்[2] வீசியெறிந்தது. வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.
20 ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார். அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

காரிருள்

[தொகு]


21 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், "எகிப்து நாட்டின்மேல் இருள் ஏற்படவும் இருளில் அவர்கள் தடுமாறவும் உன் கையை வானோக்கி நீட்டு" என்றார்.
22 மோசே வானத்தை நோக்கித் தம் கையை நீட்டினார். மூன்று நாள்களாக எகிப்து நாட்டைக் காரிருள் கவ்வியிருந்தது.[3]
23 மூன்று நாள்களாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. தான் அமர்ந்த இடத்திலிருந்து எவனும் எழும்பவும் இல்லை. மாறாக, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் உறைவிடங்களில் வெளிச்சம் இருந்தது.
24 பார்வோன் மோசேயை வரவழைத்து, "நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள். உங்கள் ஆட்டு மந்தையையும் மாட்டு மந்தையையும் மட்டும் விட்டுச் செல்லுங்கள். உங்களுடன் உங்கள் குழந்தைகளும்கூடப் போகலாம்" என்று சொன்னான்.
25 அதற்கு மோசே, "எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் செலுத்துவதற்கான பலிகளையும் எரிபலிகளையும் எங்கள் கையில் விட்டுவிடும்.
26 எங்கள் கால்நடைகள் எங்களோடு வரவேண்டும்; ஒன்றுகூட இங்கே தங்கலாகாது. எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செலுத்தத் தேவையானதை நாங்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்வோம். ஆண்டவருக்கு எப்படி வழிபாடு செலுத்துவோம் என்று நாங்கள் அங்குச் செல்லும்வரை எங்களுக்கே தெரியாது" என்றார்.
27 ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப் போகச் செய்ததால், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.
28 பார்வோன் மோசேயை நோக்கி, "என்னிடமிருந்து போய்விடு. இனிமேல் நீ என் முகத்தில் விழிக்காதபடி பார்த்துக்கொள். ஏனெனில், என் முகத்தில் விழிக்கும் நாளில் நீ சாவாய்" என்றான்.
29 அதற்கு மோசே, "நீர் கூறியதற்கேற்ப நான் இனிமேல் உம் முகத்தில் விழிக்கப்போவதில்லை" என்றார்.

குறிப்புகள்:

[தொகு]


[1] 10:14-15 = திவெ 9:2-3.
[2] 10:19 எபிரேயத்தில் , 'நாணற்கடல்' என்பது பொருள்.
[3] 10:12 = திபா 105:28; திவெ 16:10.


அதிகாரம் 11

[தொகு]

தலைமகன் சாவு முன்னறிவிப்பு

[தொகு]


1 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார்வோன் மேலும் எகிப்தின்மேலும் இன்னும் ஒரு கொள்ளை நோய் வரச்செய்வேன். அவன் உங்களை முற்றிலும் போகவிடுவதோடு இங்கிருந்து உங்களைத் துரத்தி விரட்டிவிடுவான்.
2 எனவே மக்கள் கேட்கும்படி அறிவியுங்கள். ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவனிடமிருந்தும் ஒவ்வொருத்தியும் தனக்கு அடுத்திருப்பவளிடமிருந்தும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும்" என்றார்.
3 எகிப்தியருக்கு இம்மக்கள்மேல் நல்லெண்ணம் உண்டாகச் செய்தார் ஆண்டவர். மேலும் மோசே எகிப்து நாட்டில் பார்வோனின் அலுவலர் முன்பும் குடிமக்களின் முன்பும் மிகப் பெரியவராகத் திகழ்ந்தார்.
4 மோசே பின்வருமாறு அறிவித்தார்: "ஆண்டவர் கூறுவது இதுவே: நள்ளிரவு வேளையில் நானே எகிப்தின் நடுவே புறப்பட்டுச் செல்வேன்.
5 அப்போது எகிப்து நாட்டில், அரியணையில் வீற்றிருக்கும் பார்வோனின் தலைமகன் முதல் மாவரைக்கும் கற்களுக்குப்பின் அமர்ந்திருக்கும் அடிமைப் பெண்ணின் தலைமகன்வரை உள்ள முதற்பேறு அனைத்தும் விலங்குகளின் ஆண்பால் தலையீற்று அனைத்தும் இறந்துவிடுவர்.
6 இதுவரை இருந்திராததும் இனி இருக்கப்போகாததுமான பெரும் புலம்பல் எகிப்து நாடெங்கும் கேட்கும்.
7 இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் பொறுத்தமட்டில், அங்குள்ள மனிதர்முதல் விலங்குவரை, எவருக்குமே எதிராக எந்த நாயும் குரைக்காது. இதனால் ஆண்டவர் எகிப்தியரையும் இஸ்ரயேலரையும் வேறுபடுத்திச் செயலாற்றுகிறார் என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
8 அப்போது உன் பணியாளர்களாகிய இவர்கள் எல்லோரும் எனக்குப் பணிந்து என்முன் தலைவணங்கி நின்று, 'உம்மைப் பின்பற்றும் மக்கள் அனைவரோடும் நீர் வெளியேறிவிடும்' என்று கூறுவர். அதன்பின் நான் வெளியேறிச் செல்வேன்." இதன்பின் பொங்கிய சினத்தோடு மோசே பார்வோனை விட்டகன்றார்.


9 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார்வோன் உனக்குச் செவி சாய்க்கமாட்டான். எகிப்து நாட்டில் என் அருஞ்செயல்கள் பெருகிட இது ஏதுவாகும்" என்றுரைத்தார்.
10 மோசேயும் ஆரோனும் இவ்வருஞ்செயல்கள் அனைத்தையும் பார்வோன்முன் செய்தனர். ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்ததால், அவன் இஸ்ரயேல் மக்களைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை!


அதிகாரம் 12

[தொகு]

பாஸ்கா - கடந்து செல்லல்

[தொகு]


1 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:
2 உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!
3 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
4 ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.
5 ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.
6 இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.
7 இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.
8 இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
9 அதைப் பச்சையாகவோ நீரில் வேகவைத்தோ உண்ணாமல், தலைகால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி, அதனை உண்ணுங்கள்.
10 அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்கவேண்டாம். காலைவரை எஞ்சியிருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்.
11 நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது 'ஆண்டவரின் பாஸ்கா'.
12 ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!
13 இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.

புளிப்பற்ற அப்ப விழா

[தொகு]


14 இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
15 ஏழு நாள்களுக்குப் புளிப்பற்ற அப்பங்களையே உண்ணுங்கள்! முதல் நாளிலேயே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து அகற்றி விடுங்கள். ஏனெனில் முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரை புளித்த அப்பத்தை உண்பவன் இஸ்ரயேலிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.
16 முதல் நாளிலும், ஏழாம் நாளிலும் நீங்கள் புனித அவை கூடுவதற்கு அழையுங்கள். இந்நாள்களில் எவ்வேலையும் செய்ய வேண்டாம்; ஒவ்வொருவரும் உண்ணத் தேவையானதை மட்டும் நீங்கள் தயார் செய்யலாம்.
17 புளிப்பற்ற அப்ப விழாவை நீங்கள் கொண்டாடிவர வேண்டும். ஏனெனில் இந்த நாளில்தான் உங்கள் படைத்திரளை நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்தேன். நீங்கள் இந்நாளைத் தலைமுறைதோறும் கொண்டாடி, நிலையான நியமமாகக் கொள்ளுங்கள்.
18 முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை தொடங்கி அம்மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரை புளிப்பற்ற அப்பம் உண்ணுங்கள்.
19 ஏழு நாள்களாக உங்கள் வீடுகளில் புளித்த மாவு காணப்படவே கூடாது. ஏனெனில் புளித்த அப்பத்தை உண்பவன், அன்னியனானாலும் நாட்டின் குடிமகனானாலும், இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.
20 நீங்கள் புளித்த அப்பம் உண்ணாமல் உங்கள் உறைவிடங்களில் எல்லாவற்றிலும் புளிப்பற்ற அப்பத்தையே உண்ணுங்கள்.

முதல் பாஸ்கா

[தொகு]


21 மோசே இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கூறியது: "நீங்கள் போய் உங்கள் குடும்பங்களுக்குத் தேவையானபடி ஓர் ஆட்டுக்குட்டியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பாஸ்கா ஆட்டினை அடியுங்கள்.
22 ஈசோப்புக் கொத்தை எடுத்து, கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்து, கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள். காலைவரையிலும் தன் வீட்டின் கதவைத் தாண்டி உங்களில் எவனும் வெளியே போகக் கூடாது.
23 ஆண்டவர் எகிப்தைத் தாக்குமாறு கடந்து செல்கையில், கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் இரத்தத்தைக்கண்டு அக்கதவைக் கடந்து செல்வார். 'அழிப்பவன்' உங்கள் வீடுகளில் புகுந்து தாக்குமாறு அவர் அனுமதிக்கமாட்டார்.
24 இவ்வார்த்தையை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நிலையான நியமமாகக் கடைப்பிடியுங்கள்.
25 ஆண்டவர் வாக்களித்தபடியே அவர் உங்களுக்குத் தரவிருக்கும் நாட்டிற்குள் நீங்கள் வந்து சேர்ந்தபின், இவ்வழிபாட்டை நீங்கள் நிறைவேற்றி வாருங்கள்.
26 உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்து, 'இவ்வழிபாட்டின் கருத்து என்ன?"' என்று கேட்கும்போது,
27 நீங்கள், 'இது ஆண்டவரின் பாஸ்காப் பலி; அவர் எகிப்தியரைச் சாகடித்தபோது எகிப்திலுள்ள இஸ்ரயேல் மக்களின் வீடுகளைக் கடந்து சென்றார்; இவ்வாறு நம் வீடுகளுக்கு அவர் மீட்பளித்தார்' என்று கூறுங்கள்." மக்களும் தலைவணங்கித் தொழுதனர்.
28 இஸ்ரயேல் மக்கள் போய், மோசேக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தனர்.

தலைமகன் சாவு

[தொகு]


29 நள்ளிரவில் அரசனாக இருந்த பார்வோனின் தலைமகன் தொடங்கி சிறையில் கிடந்த கைதியின் தலைமகன்வரை எகிப்து நாட்டின் எல்லா ஆண்பால் தலைப்பிறப்பையும் மற்றும் விலங்குகளின் அனைத்து ஆண்பால் தலையீற்றுகளையும் ஆண்டவர் சாகடித்தார்.
30 பார்வோனும், அவனுடைய அனைத்து பணியாளர்களும், எகிப்தியர் அனைவரும் விழித்தெழுந்தனர். எகிப்தில் பெரும் அழுகுரல் கேட்டது. ஏனெனில் சாவு இல்லாத வீடு எதுவுமே இல்லை!
31 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் இரவிலேயே கூப்பிட்டு அவர்களிடம், "நீங்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து என் மக்களிடமிருந்து வெளியேறிச் செல்லுங்கள். போங்கள், நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்.
32 நீங்கள் கேட்டபடியே உங்கள் ஆட்டுமந்தையையும் உங்கள் மாட்டு மந்தையையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். போய்விடுங்கள்; எனக்கும் ஆசி கூறுங்கள்" என்றான்.


33 நாட்டிலிருந்து விரைவில் போய்விடுமாறு எகிப்தியர் இஸ்ரயேல் மக்களை அவசரப்படுத்தினர்; 'நாங்கள் எல்லோருமே சாகிறோம்' என்றனர்.
34 மக்கள், பிசைந்த மாவு புளிக்கும் முன்னரே அதை எடுத்து, மாவு பிசையும் பாத்திரங்களில் வைத்து, தங்கள் போர்வைகளில் கட்டித் தோள்கள் மேல் எடுத்துச் சென்றனர்.
35 இஸ்ரயேல் மக்கள் மோசேயின் வார்த்தையின்படி செயல்பட்டனர். அவர்கள் எகிப்தியரிடமிருந்து வெள்ளி அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கினர்.
36 ஆண்டவர் எகிப்தியரின் பார்வையில் இம்மக்களுக்குத் தயவு கிடைக்கச் செய்தமையால் அவர்களும் இவர்கள் கேட்டதைக் கொடுத்தனர். இவ்வாறு எகிப்தியரை இவர்கள் கொள்ளையிட்டனர்.

விடுதலைப் பயணத் தொடக்கம்

[தொகு]


37 இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.
38 மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன.
39 எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவைக்கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில் மாவு இன்னும் புளிக்காமலிருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற்போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை!
40 எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்!
41 நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது.
42 எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவே.

பாஸ்கா விதிமுறைகள்

[தொகு]


43 ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "பாஸ்காவின் ஒழுங்குமுறை இதுவே; அன்னிய மக்கள் எவரும் இதை உண்ணலாகாது.
44 ஆனால் வெள்ளிக் காசுக்கு வாங்கின அடிமை எவனுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்தபின் அவன் இதை உண்ணலாம்.
45 குடியேறியவரும் கூலியாள்களும் இதை உண்ண வேண்டாம்.
46 ஒரே வீட்டிற்குள் இது உண்ணப்படவேண்டும். இறைச்சி எதுவும் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படலாகாது. எந்த எலும்பையும் நீங்கள் முறிக்கக் கூடாது.
47 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுமே இதைக் கொண்டாட வேண்டும்!
48 அன்னியன் ஒருவன் உன்னோடு தங்கியிருக்க, அவன் ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாட விரும்பினால், அவன்வீட்டு ஆண்கள் அனைவருக்கும் விருத்தசேதனம் செய்தல் வேண்டும். அதன்பின் அவன் கொண்டாட முன்வரலாம். அவன் நாட்டுக் குடிமகன்போல் ஆவான். ஆனால், விருத்தசேதனம் செய்து கொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக.
49 நாட்டுக் குடிமக்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அன்னியருக்கும் சட்டம் ஒன்றே."
50 மோசேக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் இட்ட ஆணைப்படி இஸ்ரயேல் மக்கள் அனைவரும் செயல்பட்டனர்.
51 அதே நாளில், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை அவரவர் அணிவகுப்புகளின்படி எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தார்.

அதிகாரம் 13

[தொகு]

தலைமகன் அர்ப்பணம்

[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி உரைத்தது:
2 "தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்; இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை" என்றார்.[1]

புளிப்பற்ற அப்ப விழா

[தொகு]


3 மோசே மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறிச் சென்ற இந்நாளை நினைவு கூருங்கள். இந்நாளில்தான் ஆண்டவர் தம் கைவன்மையால் உங்களை இங்கிருந்து வெளியேறவைத்தார். நீங்கள் புளித்த அப்பம் உண்ணலாகாது.
4 ஆபிபு மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள்.
5 கானானியர், இத்தியர், எமோரியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டை ஆண்டவர் உனக்குத் தருவதாக உன் மூதாதையருக்கு வாக்களித்திருந்தார். பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டுக்கு அவர் உன்னை அழைத்துச் சென்றபின், இதே மாதத்தில் நீ இவ்வழிபாட்டைச் செய்வாயாக.
6 ஏழுநாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ணவேண்டும். ஏழாம் நாளை 'ஆண்டவரின் விழா'வாகக் கொண்டாட வேண்டும்.
7 ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும். புளித்த அப்பம் உன்னிடம் காணப்படக்கூடாது. உன் எல்லைக்குள் எங்குமே புளித்த மாவு காணப்படக்கூடாது.
8 அந்நாளில் நீ உன் மகனிடம், 'நான் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது ஆண்டவர் எனக்குச் செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு' என்று சொல்.
9 ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்.
10 எனவே ஆண்டுதோறும் இந்த நியமத்தை அதன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும்.

தலைப்பேறு அர்ப்பணம்

[தொகு]


11 உனக்கும் உன் மூதாதையருக்கும் ஆண்டவர் வாக்களித்தபடியே, அவர் கானானியரின் நாட்டிற்குள் உன்னை அழைத்துச் சென்று அதை உனக்குக் கொடுக்கும்போது,
12 கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கென ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். உன் கால் நடைகளில் ஆண் தலையீற்று அனைத்தும் ஆண்டவருக்கே உரியது.[2]
13 ஓர் ஆட்டைக் கொடுத்துக் கழுதையின் ஆண் தலையீற்றை மீட்பாய்; அதை நீ மீட்கவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு. உன் ஆண் பிள்ளைகளுள் எல்லாத் தலைப்பேற்றையும் நீ மீட்க வேண்டும்.
14 'இதன் பொருள் என்ன' என்று பிற்காலத்தில் உன் மகன் உன்னிடம் கேட்டால், நீ அவனை நோக்கி, 'ஆண்டவர் தம் கைவன்மையால் அடிமை வீடாகிய எகிப்திலிருந்து எம்மை வெளியேறச் செய்தார்.
15 பார்வோன் மனமிறுகி எம்மைப் போகவிட மறுத்தபோது, எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண் தலைப்பிறப்பு அனைத்கையும் ஆண்டவர் சாகடித்தார். எனவே கருப்பை திறக்கும் ஆண்பிறப்பு அனைத்தையும் நான் ஆண்டவருக்குப் பலியிட்டு என் ஆண்பிள்ளைகளுள் தலைபபேறு அனைத்தையும் மீட்கிறேன்' என்று சொல்.
16 இது உன் கையில் அடையாளமாகவும் உன் கண்களுக்கிடையில் சீட்டுப்பட்டமாகவும் அமையட்டும். ஏனெனில், தம் கைவன்மையால் ஆண்டவர் எம்மை எகிப்திலிருந்து வெளியேற வைத்தார்.

மேகத் தூண், நெருப்புத் தூண்

[தொகு]


17 மக்களைப் பார்வோன் அனுப்பியபோது, பெலிஸ்தியர் நாட்டு நெடுஞ்சாலைதான் நேர்வழி எனினும், அதன் வழியாகக் கடவுள் அவர்களை நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், "போரைக் கண்டு இம்மக்கள் மனம் தளர்ந்து எகிப்திற்கே திரும்பிவிடுவார்கள்" என்றார் கடவுள்.
18 கடவுள் மக்களைப் பாலைநிலச் சுற்று வழியாக செங்கடலுக்குப் போகச் செய்தார். இஸ்ரயேல் மக்கள் படை அணிபோல எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
19 மேலும் யோசேப்பின் எலும்புகளை மோசே தம்மோடு எடுத்துச் சென்றார். ஏனெனில், "கடவுள் உங்களைச் சந்திக்கும்போது இங்கிருந்து என் எலும்புகளை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்" என்று யோசேப்பு இஸ்ரயேல் மக்களிடம் கூறி, அதுபற்றி அவர்களிடம் உறுதிமொழி பெற்றிருந்தார்.[3]
20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணமாகிப் பாலைநிலத்தின் எல்லையோரமாயுள்ள ஏத்தாமில் கூடாரம் அடித்தனர்.
21 ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த மேகத் தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலிலும் இரவிலும் அவர்கள் பயணம் செய்வதற்காக அவர் அவர்கள்முன் சென்று கொண்டிருந்தார்.
22 பகலில் மேகத் தூணும் இரவில் நெருப்புத் தூணும் மக்களைவிட்டு அகலவேயில்லை.

குறிப்புகள்:

[தொகு]


[1] 13:2 = எண் 3:13; லூக் 2:23.
[2] 13:12 = விப 34:19-20; லூக் 2:23.
[3] 13:19 = தொநூ 50:25; யோசு 24:32.

அதிகாரம் 14

[தொகு]

செங்கடலைக் கடத்தல்

[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம்,
2 "இஸ்ரயேல் மக்கள் திரும்பிச் சென்று மிக்தோலுக்கும் பாகால் செபோனின் அருகிலுள்ள கடலுக்கும் இடையே அமைந்த பிககிரோத்துக்கு எதிரே கடல் அருகில் பாளையம் இறங்கும்படி அவர்களிடம் சொல்.
3 பார்வோன் இஸ்ரயேல் மக்களைக் குறித்து, பாலைநிலம் குறுக்கிட்டதால் அவர்கள் இன்னும் நாட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருப்பார்கள் என்று கருதுவான்.
4 பார்வோனின் மனத்தை நான் இறுகிப்போகச் செய்வேன்; அவனும் அவர்களைத் துரத்திக்கொண்டே வருவான். அப்போது பார்வோனையும் அவன் படைகளையும் வென்று நான் மாட்சியுறுவேன். நானே ஆண்டவர் என எகிப்தியரும் உணர்ந்து கொள்வர்" என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செயல்பட்டனர்.
5 மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது, பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும் இம்மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது. "நாம் இப்படிச் செய்து விட்டோமே! நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை ஏன்தான் அனுப்பிவிட்டோம்?" என்று அவர்கள் பேசிக்கொண்டனர்.
6 எனவே அவன் தன் தேரைப் பூட்டித் தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
7 தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான்.
8 ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்; அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான். இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர்.
9 பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கியிருந்த அவர்களை நெருங்கினர்.


10 பார்வோன் நெருங்கி வந்து கொண்டிருக்க, இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி எகிப்தியர் தங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் அச்சமுற்றவராய் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்.
11 அவர்கள் மோசேயை நோக்கி, "எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே!
12 'எங்களை விட்டுவிடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்' என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்" என்றனர்.
13 மோசே மக்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை.
14 ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்" என்றார்.


15 ஆண்டவர் மோசேயை நோக்கி, "ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்.
16 கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.
17 நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.
18 பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, 'நானே ஆண்டவர்' என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார்.


19 இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது.
20 அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.


21 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.
22 வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.[*]
23 எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.
24 பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.
25 அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், "இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர்.


26 ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார்.
27 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.
28 திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.
29 ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.
30 இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.
31 எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

குறிப்பு:

[தொகு]


[*] 14:22 =1 கொரி 10:1-2; எபி 11:29.

அதிகாரம் 15

[தொகு]

மோசேயின் வெற்றிப் பாடல்

[தொகு]


1 அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:[1] ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
2 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.[2]
3 போரில் வல்லவர் ஆண்டவர்; 'ஆண்டவர்' என்பது அவர் பெயராம்.
4 பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.
5 ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.
6 ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.
7 உம் மாபெரும் மாட்சியால் உம் எதிரிகளைத் தகர்த்தெறிந்தீர்; உமது சீற்றக் கனலைக் கக்கித் தாளடிபோல் அவர்களை எரித்துவிட்டீர்.
8 உம் நாசியின் மூச்சால் நீர்த்திரள்கள் குவிந்தன; பேரலைகள் சுவரென நின்றன; கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.
9 எதிரி சொன்னான்: 'துரத்திச் செல்வேன்; முன் சென்று மடக்குவேன்; கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்; என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்; என் வாளை உருவுவேன்; என் கை அவர்களை அழிக்கும்.'
10 நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்; கடல் அவர்களை மூடிக்கொண்டது; ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.
11 ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்? தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர், அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?
12 நீர் உமது வலக்கையை நீட்டினீர். நிலம் அவர்களை விழுங்கி விட்டது.
13 நீர் மீட்டுக்கொண்ட மக்களை உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்; உம் ஆற்றலால் அவர்களை உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச் சென்றீர்.
14 இதைக் கேள்வியுற்ற மக்களினங்கள் அனைவரும் கதிகலங்கினர்; பெலிஸ்தியாவில் குடியிருப்போரை நடுக்கம் ஆட்கொண்டது.
15 ஏதோம் தலைவர்கள் அச்சமுற்றனர்; மோவாபு தலைவர்களும் நடுநடுங்கினர்; கானானில் குடியிருப்போர் நிலை குலைந்தனர்.
16 அச்சமும் திகிலும் அவர்களை ஆட்கொண்டன; ஆண்டவரே, உம் மக்கள் கடந்து செல்லும் வரை, அதாவது நீர் உடைமையாக்கிக் கொண்ட மக்கள் கடந்து செல்லும்வரை, உம் கைவன்மை கண்டு அவர்கள் கல்போன்று மலைத்து நின்றனர்.
17 ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.
18 ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.

மிரியாமின் பாடல்

[தொகு]


19 பார்வோனின் குதிரைகள், தேர்கள் குதிரைவீரர் அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க, ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார். இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
20 இறைவாக்கினளும் ஆரோனின் தங்கையுமான மிரியாம் கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள்பின் சென்றனர்.
21 அப்போது மிரியாம், "ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்" என்று பல்லவியாகப் பாடினாள்.

கசப்பு நீர்

[தொகு]


22 பின்பு மோசே இஸ்ரயேலரை செங்கடலிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்தார். அவர்கள் மூன்று நாள்கள் சூர் பாலைநிலத்தில் பயணம் செய்தனர். அங்குத் தண்ணீர் எதுவுமே தென்படவில்லை.
23 பின்னர் அவர்கள் மாராவைச் சென்றடைந்தனர். மாராவிலிருந்த தண்ணீரைப் பருக அவர்களால் இயலவில்லை. அது கசப்பாக இருந்தது. இதனால்தான் அவ்விடத்திற்கு [3]மாரா என்ற பெயர் வழங்கியது.
24 'நாங்கள் எதைத்தான் குடிப்போம்' என்று கூறி, மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.
25 அவரும் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார்.
26 மேலும் அவர், "உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்" என்றார்.
27 பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.

குறிப்புகள்:

[தொகு]


[1] 15:1 = திவெ 15:3.
[2] 15:2 = திபா 118:14; எசா 12:2.
[3] 15:23 எபிரேயத்தில், 'கசப்பு' என்பது பொருள்.

அதிகாரம் 16

[தொகு]

மன்னா, காடை

[தொகு]


1 இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.
2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.
3 இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, "இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றனர்.


4 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.[1]
5 ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்" என்றார்.
6 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, "நீங்கள், எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள்.
7 காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள். ஏனெனில் ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார். இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார்" என்றனர்.
8 பின் மோசே, "ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல; ஆண்டவருக்கே எதிரானவை" என்றார்.


9 மோசே ஆரோனிடம், "நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி, ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்" என்றார்.
10 அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.
11 ஆண்டவர் மோசேயை நோக்கி,
12 "இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், 'மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்' என்று சொல்" என்றார்.


13 மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.
14 பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.
15 இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி மன்னா [2]என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:[3]
16 மேலும் ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி [4] வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
17 இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில் மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு; குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.
18 ஆனால் இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை. ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.[5]
19 மோசே அவர்களைப் பார்த்து, "இதில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது" என்றார்.
20 ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார்.
21 மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஏனெனில் வெயில் ஏறஏற அது உருகிவிடும்.


22 ஆனால் ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர். கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.
23 அப்போது அவர் அவர்களை நோக்கி, "கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்; ஆண்டவரின் புனிதமான 'சாபத்து' [6]. எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்; எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.[7]
24 மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம் வீசவும் இல்லை; புழு வைக்கவும் இல்லை.
25 மோசே அவர்களிடம், "இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்; இன்று ஆண்டவரின் ஓய்வுநாள். எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.
26 ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்; ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது" என்று அறிவித்தார்.


27 ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை.
28 ஆண்டவர் மோசேயை நோக்கி, "எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?
29 கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால் ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்; ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது" என்றார்.
30 ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்.


31 இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை 'மன்னா' என்று பெயரிட்டழைத்தனர். அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.[8]
32 ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்: நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக அதில் இரண்டு படி [9]அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது, பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர்.
33 பின்பு மோசே ஆரோனை நோக்கி, "நீர் ஒரு கலசத்தை எடுத்து அதில் இரண்டுபடி அளவு மன்னாவை எடுத்து வையும். தலைமுறைதோறும் அழியாமல் காக்குமாறு அதனை ஆண்டவர் திருமுன் எடுத்து வையும்" என்றார்.[10]
34 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, ஆரோன் அதனை உடன்படிக்கைப் பேழையில் பாதுகாப்பாக வைத்தார்.
35 இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டளவாக, குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை, மன்னா உண்டனர். கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.[11]
36 இரண்டு படி [12] என்பது ஏப்பா' [13] என்பதில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.

குறிப்புகள்:

[தொகு]


[1] 16:4 = யோவா 6:31.
[2] 16:15 எபிரேயத்தில், 'மான்-கூ' என்பது பாடம்:அதற்கு 'இது என்ன?' என்பது பொருள்.
[3] 16:15 = 1 கொரி 10:3.
[4] 16:16 'ஓர் ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[5] 16:18 = 2 கொரி 8:15.
[6] 16:23 எபிரேயத்தில் 'ஓய்வு' என்பது பொருள்.
[7] 16:23 = விப 20:8-11.
[8] 16:31 = எண் 11:7-8.
[9] 16:32 'ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[10] 16:33 = எபி 9:4.
[11] 16:35 = யோசு 5:12.
[12] 16:36 'ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[13] 16:36 'ஏப்பா' என்பது இருபது படி ஆகும்.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 16 முதல் 18 வரை




ப‌குப்பு:திருவிவிலிய‌ம்