திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 21 முதல் 23 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெறுகிறார். ஓவியர்: கோசிமோ ரொஸ்ஸேல்லி. காலம்: 1480 அளவில். காப்பிடம்: வத்திக்கான் நகரம்.


விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 23 வரை

அதிகாரம் 21[தொகு]

அடிமைகள்[தொகு]

(இச 15:12-18)


1 அவர்களுக்கு நீ அளிக்க வேண்டிய
நீதிச்சட்டங்கள் பின்வருமாறு:
2 நீ ஒரு எபிரேய அடிமையை வாங்கினால்,
அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் அடிமை வேலை செய்வான்.
ஏழாம் ஆண்டு அவன் எதுவும் தராமல் விடுதலைபெற்று வெளியேறுவான்.
3 தனித்து வந்திருந்தால் தனித்து வெளியேறுவான்;
மனைவியோடு வந்திருந்தால் அவனுடைய மனைவியும்
அவனோடு புறப்பட்டுச் செல்வாள்.
4 தலைவன் அவனுக்குப் பெண் கொடுத்திருக்க
அவள்வழி அவனுக்குப் புதல்வரோ புதல்வியரோ பிறந்திருந்தால்,
மனைவியும் பிள்ளைகளும் அவளுடைய தலைவனுக்கே சொந்தமானவர்.
எனவே அவன் மட்டும் தனித்து வெளியேறுவான்.
5 அந்த அடிமை,
"நான் என் தலைவனுக்கும் என் மனைவிக்கும்
என் பிள்ளைகளுக்கும் அன்பு காட்டுகிறேன்;
நான் விடுதலை பெற்றவனாய் வெளியேறிச் செல்ல மாட்டேன்" எனக் கூறுமிடத்து,
6 அவனை அவனுடைய தலைவன் கடவுளிடம் கூட்டிக்கொண்டு வருவான்.
தலைவன் அவனைக் கதவருகில்
அல்லது வாயில் நிலைக்கால் மட்டும் கூட்டிவந்து
அவனது காதில் தோல் தைக்கும் ஊசியால் துளைபோடுவான்.
அவன் எக்காலமும் அவனுக்குப் பணிவிடை செய்வான். [1]
7 ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றிருந்தால்,
ஆண் அடிமைகள் வெளியேறிச் செல்வதுபோல் அவள் செல்லலாகாது.
8 தலைவன் தனக்காக அவளை வைத்திருக்க,
அவள் அவனுக்குப் பிடிக்காதவளாய் நடந்து கொண்டால்,
அவள் மீட்கப்படுவதை அவன் ஏற்றுக்கொள்ளட்டும்;
ஆனால், அன்னியருக்கு அவளை விற்றுவிட
அவனுக்கு அதிகாரமில்லை;
அது அவளுக்குத் துரோகம் இழைப்பதாகும்.
9 அவன் தன் மகனுக்காக அவளை நிச்சயித்திருந்தால்,
ஒரு மகளை நடத்தும் முறைப்படி அவன் அவளுக்குச் செய்யவேண்டும்.
10 அவனுடைய மகன் தனக்கென
வேறொருத்தியை வைத்துக்கொண்டிருந்தால்,
உணவு, உடை, மணஉறவின் கடமைகள்
இவற்றில் அவளுக்குக் குறை வைக்கலாகாது.
11 இம்மூன்றையும் தலைவன் அவளுக்குச் செய்யவில்லையெனில்,
அவள் பணம் எதுவும் தராமல் புறப்பட்டுப் போய்விடலாம்.

வன்முறைச் செயல்கள்[தொகு]


12 மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்பட வேண்டும். [2]
13 அவர் சாகடிக்கப் பதுங்கி இராதிருந்தும்
அவரது கையாலேயே கொல்லப்படக் கடவுள் விட்டிருந்தால்,
அத்தகையவர் தப்பியோட ஓர் இடத்தை நான் ஏற்பாடு செய்வேன். [3]
14 ஆனால் பிறர்மேல் வெகுண்டெழுந்து,
சதித்திட்டத்தால் அவரைச் சாகடிக்கிற எவரும்
என் பலிபீடத்தினின்று அப்புறப்படுத்தப்பட்டு கொல்லப்படுவார்.


15 தம் தந்தையையோ தம் தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.


16 ஒருவர் மற்றொருவரைக் கடத்திச் சென்று விற்றுவிட்டாலோ,
அவரைத் தம் பிடிக்குள் இன்னும் வைத்திருந்தாலோ,
அந்த ஆள் கொல்லப்பட வேண்டும். [4]


17 தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும். [5]


18 இருவர் சண்டையிடுகையில்,
ஒருவர் மற்றவரைக் கல்லாலோ கை முட்டியாலோ தாக்கியும்,
தாக்கப்பட்டவர் சாகாமல் படுக்கையில் கிடந்து,
19 பின்னர் எழுந்து, கோல் ஊன்றி வெளியே நடக்கத் தொடங்கினால்,
தாக்கியவர் குற்றப்பழி அற்றவர் ஆவார்.
ஆயினும் அவரது வேலையிழப்பை முன்னிட்டு
அவருக்கு இழப்பீடு கொடுக்கவும்
அவரை முழுமையாகக் குணமாக்கவும் வேண்டும்.


20 ஒருவர் தம் அடிமையை
அல்லது அடிமைப்பெண்ணைக் கோலால் அடிக்க,
அவர் அங்கேயை இறந்துவிட்டால்,
அந்த உரிமையாளர் பழிவாங்கப்படுவார்.
21 ஆனால், இரண்டு அல்லது மூன்று நாள்கள் இன்னும் உயிரோடிருந்தால்,
அவர் பழிவாங்கப்படார்.
ஏனெனில் அடிமை அவரது சொத்து.


22 ஆள்கள் சண்டையிடுகையில்,
கர்ப்பிணியான பெண்ணுக்கு அடிபட,
வேறு யாதொரு கேடும் இன்றிப்
பேறுகாலத்துக்குமுன் பிரசவமாகிவிட்டால்,
அப்பெண்ணின் கணவன் கேட்கிறபடி தண்டம் விதிக்கப்பட்டு,
நடுநிலையாளர் வழியாக அது கொடுக்கப்பட வேண்டும்.
23 ஆனால் கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர்;
24 கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்;
கைக்குக் கை; காலுக்குக் கால்; [6]
25 சூட்டுக்குச் சூடு; காயத்துக்கு காயம்;
கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.
26 ஒருவர் தம் அடிமைகளில் ஆணையோ பெண்ணையோ, அடிக்க,
அடிபட்டவர்க்குக் கண்கெட்டுப்போனால்
கண்ணுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பி விடவேண்டும்.
27 ஒருவர் தம் அடிமைப் பெண்ணின் பல்லை உடைத்துவிட்டால்,
பல்லுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பிவிடவேண்டும்.

உரிமையாளரின் கடமைகள்[தொகு]


28 மாடு தன் கொம்பினால் குத்தி,
ஒருவனோ ஒருத்தியோ இறந்துவிட்டால்,
அம்மாடு கொல்லப்பட வேண்டும்.
அதன் இறைச்சி உண்ணப்படலாகாது.
மாட்டின் சொந்தக்காரர் குற்றமற்றவராவார்.
29 ஆனால் மாட்டுக்குக் குத்தும் பழக்கம் முன்னரே இருந்திருக்க,
அதன் சொந்தக்காரரை எச்சரித்திருந்தும்,
அவர் ஆவன செய்யாதிருந்த நிலையில்,
அது ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்று போட்டால்,
அம்மாடு கல்லால் எறிந்து கொல்லப்படும்.
அதன் உரிமையாளரும் கொல்லப்படுவார்.
30 மாறாக, தம் உயிரின் மீட்புக்காக விதிக்கப்பட்ட அனைத்தையும் அவர் கொடுப்பார்.
31 மகனாயினும் மகளாயினும் கொம்பினால் குத்திக் கொல்லப்பட்டால்,
இந்த நீதிச்சட்டத்திற்கேற்ப ஆகட்டும்.
32 அடிமையை அல்லது அடிமைப்பெண்ணை
மாடொன்று குத்திக்கொன்று போட்டால்,
அதன் உரிமையாளர் அடிமையின் தலைவருக்கு
முப்பது வெள்ளிக்காசு ஈடுகட்டுவார்.
மாடும் கல்லால் எறிந்து கொல்லப்படும்.
33 ஒருவர் குழியொன்றைத் திறந்துவிட்டபின்னரோ
அல்லது புதிதாகக் குழியொன்றை வெட்டிய பின்னரோ
அதனை மூடி வைக்காதிருக்க,
மாடோ கழுதையோ அதில் விழுந்துவிட நேரிட்டால்,
34 அதன் உரிமையாளருக்குக் குழியின் சொந்தக்காரர்
பணம் ஈடுகட்டி செத்ததை எடுத்துக்கொள்வார்.
35 ஒருவரின் மாடு பிறர் மாட்டைக் காயப்படுத்திக் கொன்றுவிட்டால்,
உயிரோடிருக்கும் மாட்டை விற்றுப் பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள்.
செத்ததையும் அவர்கள் கூறுபோட்டுக் கொள்வார்கள்.
36 ஆனால் மாடு குத்தும் பழக்கமுடையது என முன்னரே தெரிந்திருந்தும்,
அதன் உரிமையாளர் எதுவும் செய்யாதிருந்தால்,
அவர் மாட்டுக்கு மாடு என ஈடுகொடுக்கத்தான் வேண்டும்.
செத்தது அவரைச் சேரும்.


குறிப்புகள்

[1] 21:2-6 = லேவி 25:39-46.
[2] 21:12 = லேவி 24:17.
[3] 21:13 = எண் 35:10-34; இச 19:1-13; யோசு 20:1-9.
[4] 21:16 = இச 24:7.
[5] 21:17 = லேவி 20:9; மத் 15:4; மாற் 7:18.
[6] 21:24 = லேவி 24:19-20; இச 19:21; மத் 5:38.


அதிகாரம் 22[தொகு]

ஈடுதருதல் பற்றிய சட்டங்கள்[தொகு]


1 ஆட்டையோ மாட்டையோ ஒருவர் திருடி வெட்டி விட்டால்
அல்லது விற்றுவிட்டால்
ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும்,
ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவர்.


2 திருடர் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டுத்
தாக்குண்டு இறந்து போனால் அவருக்காக இரத்தப்பழி இல்லை.
3 கதிரவன் உதித்தபின் இது நிகழ்ந்திருந்தால், இரத்தப்பழி உண்டு.
அவர் ஈடுகொடுத்தே ஆகவேண்டும்.
திருட்டுக்கு ஈடாக அவரிடம் எதுவுமே இல்லையெனில் அவர் விற்கப்படுவார்.
4 அவர் திருடின மாடோ கழுதையோ ஆடோ
உயிருடன் அவர் கையில் கண்டுபிடிக்கப்பட்டால்
இருமடங்காக ஈடு கொடுப்பார்.


5 ஒருவர் இன்னொருவர் வயலிலோ,
திராட்சைத் தோட்டத்திலோ கால்நடைகளை மேயவிட்டால்,
அல்லது அவிழ்த்து விட்டவை பிறர் வயலில் மேய்ந்துவிட்டால்,
தம் வயலின் சிறந்த விளைச்சலினின்றும்,
தம் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த பலனினின்றும் ஈடுசெய்வார்.


6 தீப்பிடித்து, முட்புதர்களில் பரவி,
தானியக் குவியலோ விளைந்த பயிரோ வயலோ எரிந்துவிட்டால்,
தீயை மூட்டியவர் ஈடுகொடுத்தே ஆகவேண்டும்.


7 ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ
பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க,
அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய்,
திருடர் கண்டுபிடிக்கப்பட்டால்
திருடர் இருமடங்காக ஈடு செய்ய வேண்டும்.
8 திருடர் கண்டுபிடிக்கப்படாவிடில்,
பிறர் பொருள்களில் வீட்டுத் தலைவர் கை வைத்தாரா இல்லையா
என மெய்ப்பிக்க அவர் கடவுள்முன் நிற்பார்.


9 நம்பிக்கைத் துரோகம் எதிலும் -
அது மாடு, கழுதை, ஆடு, உடை அல்லது வேறு எதுபற்றியதானாலும் -
'இது என்னுடையது' என இருவரும் கூறினால்
வழக்கு கடவுளிடம் வர வேண்டும்.
கடவுள் யாரைக் குற்றவாளியாகத் தீர்ப்பிடுவாரோ
அவர் இருமடங்காகப் பிறருக்கு ஈடுசெய்ய வேண்டும்.


10 ஒருவர் பிறரிடம் கழுதை, மாடு, ஆடு,
அல்லது வேறொரு விலங்கைப் பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்கையில்
அது இறந்துபோனால், அல்லது காயப்பட்டுவிட்டால்,
அல்லது யாரும் பார்க்காத வேளையில் ஓட்டிச் செல்லப்பட்டால்,
11 அவர் பிறரது உடைமையில் தாம் கைவைக்கவில்லை என்பதற்கு
ஆண்டவர்மேல் இடும் ஆணை அவர்களுடைய வழக்கை முடிவு செய்யும்.
உரிமையாளர் அதை ஏற்றுக் கொள்வார்.
மற்றவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை.
12 ஆனால் அவருடன் இருக்கும்போது அது திருடப்பட்டால்,
அதன் உரிமையாளருக்கு அவர் ஈடு செய்ய வேண்டும்.
13 அது விலங்கினங்களால் பீறித் துண்டாக்கப்பட்டிருந்தால்,
பீறப்பட்டத்தைச் சான்றாகக் கொண்டுவருவார்.
அவர் ஈடுசெய்ய வேண்டியதில்லை.


14 ஒருவர் பிறரிடமிருந்து இரவலாகப் பெற்றுக்கொண்டது,
உரிமையாளர் அதன் அருகில் இல்லாத வேளையில் காயப்பட்டுவிட்டால்
அல்லது இறந்துவிட்டால்
அவர் அதற்கு ஈடு செய்யத்தான் வேண்டும்.
15 உரிமையாளர் அதன்கூட இருந்திருந்தால்,
அவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை.
அது வாடகைக்கு எடுக்கப்பட்டதென்றால்
வாடகை செலுத்தப்பட்டால் போதும்.

ஒழுக்க நெறிகள்[தொகு]


16 திருமண ஒப்பந்தமாகாத கன்னிப்பெண்ணை
ஒருவன் வசப்படுத்தி அவளோடு படுத்தால்,
மனைவிக்குரிய பரியம் கொடுத்து அவளை வைத்துக் கொள்ள வேண்டும்.
17 ஆனால், அவள் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலும் மறுத்தால்,
கன்னிப் பெண்ணுக்குரிய பரியத்துக்குச் சமமான பணம் அவன் கட்டவேண்டும். [1]


18 சூனியக்காரி எவளையும் உயிரோடு விட்டுவைக்காதே. [2]


19 விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும். [3]


20 ஆண்டவருக்கேயன்றி,
வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும். [4]


21 அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே!
அவனைக் கொடுமைப்படுத்தாதே.
ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள்.
22 விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. [5]
23 நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து
அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால்,
நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.
24 மேலும் என் சினம் பற்றியெரியும்.
நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன்.
இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர்.
உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.


25 உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு
நீ பணம் கடன் கொடுப்பாயானால்,
நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே.
அவரிடம் வட்டி வாங்காதே. [6]
26 பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால்,
கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு.
27 ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை.
உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே.
வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்?
அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன்.
ஏனெனில் நான் இரக்கமுடையவர். [7]


28 கடவுளை நீ பழிக்காதே.
உன் மக்களின் தலைவனைச் சபிக்காதே. [8]
29 உன் பெருகிய விளைச்சலையும்,
வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே.
உன் புதல்வருள் தலைப்பேறானவனை எனக்கு அர்ப்பணிப்பாய்.
30 உன் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில்
நீ அவ்வாறே செய்வாய்.
குட்டி ஏழு நாள் தன் தாயோடு இருக்கட்டும்.
எட்டாம் நாளன்று அதை எனக்கு அளிப்பாய்.
31 என் முன்னிலையில் நீங்கள் தூயவராய் இருங்கள்.
வயல் வெளியில் பீறப்பட்டுக் கிடக்கும் இறைச்சியை
நீங்கள் உண்ண வேண்டாம்.
அதை நாய்களுக்குப் போடுங்கள். [9]


குறிப்புகள்

[1] 22:16-17 = இச 22:28-29.
[2] 22:18 = இச 18:10,11.
[3] 22:19 = லேவி 18:23; 20:15-16; இச 27:21.
[4] 22:20 = இச 17:2-7.
[5] 22:21-22 = விப 23:9; லேவி 19:33-34; இச 24:17-18; 27:19.
[6] 22:25 = லேவி 25:35-38; இச 15:7-11; 23:19-20.
[7] 22:26-27 = இச 24:10-13.
[8] 22:28 = திப 23:5.
[9] 22:31 = லேவி 17:15.

அதிகாரம் 23[தொகு]

நீதியும் இரக்கமும்[தொகு]


1 பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம்.
அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி,
நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம். [1]
2 கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே.
வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு
நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்!
3 எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே. [2]


4 உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ
கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால்
நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு.


5 உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை
சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால்,
அந்நிலையில் அவரை விட்டகலாதே!
அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய். [3]


6 உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில்
நீதியைத் திரித்து விடாதே.
7 தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு.
குற்றமற்றவரையும், நேர்மையாளரையும்
கொலை செய்ய வேண்டாம்.
ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன்.
8 கையூட்டு வாங்காதே.
கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும்.
நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும். [4]


9 அன்னியரை நீ ஒடுக்காதே.
அன்னியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்.
ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராக இருந்தீர்கள். [5]

ஓய்வு ஆண்டும் ஓய்வு நாளும்[தொகு]


10 ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து
அதன் விளைச்சலைச் சேமித்து வைப்பாய்.
11 ஏழாம் ஆண்டு அதை, ஓய்வு கொள்ளவும்
தரிசாகக் கிடக்கவும் விட்டுவிடுவாய்.
உன் மக்களில் வறியவர்கள் தானாக விளைவதை உண்ணட்டும்.
அவர்கள் விட்டுவைப்பதை வயல்வெளி உயிரினங்கள் உண்ணும்.
உன் திராட்சைத் தோட்டத்திற்கும்,
உன் ஒலிவ தோட்டத்திற்கும் இவ்வாறே செய்வாய். [6]


12 ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்;
ஏழாம் நாளிலோ ஓய்ந்திருப்பாய்.
இதனால் உன் மாட்டுக்கும் உன் கழுதைக்கும் ஓய்வுகிடைக்கும்;
உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அன்னியரும் இளைப்பாறுவர். [7]
13 நான் உங்களுக்கு சொன்ன யாவற்றையும் கடைப்பிடியுங்கள்.
பிற தெய்வங்களின் பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டாம்.
அது உங்கள் வாயில் ஒலிக்கவும் வேண்டாம்.

முப்பெரும் விழாக்கள்[தொகு]

(விப 34:18-26; இச 16:1-17)

br>14 ஆண்டில் மூன்று முறை நீ எனக்கு விழா எடுப்பாய்.
15 புளிப்பற்ற அப்ப விழாவை நீ கொண்டாட வேண்டும்.
நான் உனக்குக் கட்டளையிட்டபடி
ஆபிபு மாதத்தில் குறிக்கப்பட்ட காலத்தில்
ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பம் உண்பாய்.
ஏனெனில், அப்போது நீ எகிப்திலிருந்து வெளியேறினாய்.
எவரும் வெறுங்கையராக என் திருமுன் வரவேண்டாம். [8]


16 வயலில் நீ விதைத்து,
உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, 'அறுவடைவிழா'வும்,
ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து
உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் 'சேகரிப்பு விழா'வும் எடுக்க வேண்டும். [9]
17 ஆண்டில் மூன்றுமுறை உன் ஆண்மகவு ஒவ்வொன்றும்
தலைவராகிய ஆண்டவர் திருமுன் வரவேண்டும்.


18 எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப்
புளித்த மாவுடன் படைக்காதே.
என் விழாவிலுள்ள கொழுப்பு
காலைவரைக்கும் இருக்கக்கூடாது.


19 உன் நிலத்தின் முதற்கனிகளில் முதன்மையானவற்றை
உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்வாய்.
குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்காதே. [10]

வாக்குறுதிகள், அறிவுரைகள்[தொகு]


20 வழியில் உன்னைப் பாதுகாக்கவும்,
நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும்,
இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
21 அவர்முன் எச்சரிக்கையாயிரு;
அவர் சொற்கேட்டு நட;
அவரை எதிர்ப்பவனாய் இராதே.
உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார்.
ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது.


22 நீ அவர் சொல் கேட்டு நடந்தால்,
நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால்,
நான் உன் எதிரிகளுக்கு எதிரியும்,
உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்.


23 ஏனெனில், என் தூதர் உனக்குமுன் சென்று உன்னை
எமோரியர், இத்தியர், பெரிசியர், கானானியர்,
இவ்வியர், எபூசியர் இவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்போது
நான் அவர்களை அழித்தொழிப்பேன்.
24 நீ அவர்கள் தெய்வங்களைப் பணிந்து கொள்ளவோ,
அவைகளுக்கு வழிபாடு செய்யவோ,
அவைகளுக்குரிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம்.
மாறாக அவற்றை அழித்தொழித்து
அவற்றின் சிலைத்தூண்களை உடைத்துத் தள்ளுவாய்.
25 நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபடவேண்டும்.
அவர் உன் உணவு தண்ணீர் இவற்றின் மேல் ஆசி வழங்குவார்.
அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார்.
26 குறைகாலப் பிள்ளைப்பேறும் மலடும் உன் நாட்டில் இரா.
உன் வாழ்நாள்களின் எண்ணிக்கையை நான் நிறைவு செய்வேன்.
27 'என் பேரச்சத்தை' உனக்கு முன்னர் அனுப்பி,
உன்னை எதிர்ப்படும் எல்லா மக்களையும்
நான் கதிகலங்கச் செய்வேன்.
உன் பகைவர் அனைவரும் உனக்குப் புறம்காட்டச் செய்வேன்.
28 உனக்கு முன் நான் குளவிகளை அனுப்பி வைப்பேன்.
அவை இவ்வியரையும் கானானியரையும்
இத்தியரையும் உனக்கு முன்னின்று துரத்திவிடும்.
29 ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று
நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன்.
துரத்தினால், நிலம் தரிசாகிவிடும்.
உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும்.
30 எனவே நீ பலுகிப்பெருகி நாட்டைக் கைப்பற்றும் வரை
சிறிது சிறிதாக அவர்களை உனக்கு முன்னின்று துரத்திவிடுவேன்.
31 உன் எல்லைகள், செங்கடல்முதல் பெலிஸ்தியர் கடல்வரைக்கும்,
பாலைநிலம் முதல் யூப்பிரத்தீசு நதிவரைக்கும்,
விரிந்து கிடக்கச் செய்வேன்.
ஏனெனில் அந்நாட்டின் குடிமக்களை
நான் உன் கையில் ஒப்படைப்பேன்.
நீயும் அவர்களை உன் முன்னின்று துரத்திடுவாய்.
32 நீ அவர்களுடனோ அவர்களுடைய தெய்வங்களுடனோ
எந்த உடன்படிக்கையும் செய்யாதே!
33 அவர்கள் உன் நாட்டில் குடியிருக்க வேண்டாம்.
இல்லையெனில் நீ எனக்கு எதிராகப் பாவம் செய்ய அவர்கள் காரணமாவர்.
நீ அவர்கள் தெய்வங்களை வழிபடுவது உனக்குக் கண்ணியாக அமையும்.


குறிப்புகள்

[1] 23:1 = விப 17:16; லேவி 19:11-12; இச 5:20.
[2] 23:3 = லேவி 19:15.
[3] 23:4-5 = இச 22:1-4.
[4] 23:6-8 = லேவி 19:15; இச 16:9.
[5] 23:9 = விப 22:21; லேவி 19:33-34; இச 24:17-18; 27:19.
[6] 23:10-11 = லேவி 25:1-7.
[7] 23:12 = விப 20:9-11; 31:15; 34:21; 35:2; லேவி 23:3; இச 5:13-14.
[8] 23:15 = விப 12:14-20; லேவி 23:6-8; எண் 28:17-25.
[9] 23:16 = லேவி 23:15-21,39-43; எண் 28:26-31.
[10] 23:19 = விப 34:26; இச 14:21; 26:2.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 24 முதல் 25 வரை