திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 34 முதல் 35 வரை

விக்கிமூலம் இலிருந்து
சீனாய் மலைமேல் மோசே (விப 34:29-35). சுவர்ப் படிமக்கல் ஓவியம். ஆண்டு: கி.பி. 547க்கு முற்காலம். காப்பிடம்: தூய வித்தாலே கோவில், ரவேன்னா, இத்தாலியா.


விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

அதிகாரங்கள் 34 முதல் 35 வரை

அதிகாரம் 34[தொகு]

திருச்சட்டக் கற்பலகைகள் - இரண்டாம் பிரதி[தொகு]

(இச 10:1-5)


1 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள்.
நீ உடைத்துப்போட்ட முன்னைய பலகைகளின்மேல் இருந்த
வார்த்தைகளையே நான் இப்பலகைகளின் மேல் எழுதுவேன்.
2 முன்னேற்பாடு செய்து கொண்டு, காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல்.
அங்கே மலையுச்சியில் என்முன் வந்து நில்.
3 உன்னோடு வேறெவனுமே ஏறிவர வேண்டாம்.
மலையெங்கிலும் எவனுமே காணப்படலாகாது.
அந்த மலைக்கு எதிரே ஆடு மாடுகள் மேயவும் கூடாது" என்றார்.
4 அவ்வாறே, மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை
வெட்டி எடுத்துக்கொண்டார்.
ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி,
அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார்.
தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.
5 ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து,
அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு,
'ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார்.


6 அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில்,
"ஆண்டவர்! ஆண்டவர்!
இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்;
சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்;
நம்பிக்கைக்குரியவர்.
7 ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்;
கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்;
ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல்
தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும்
பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும்,
மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்" என அறிவித்தார். [1]


8 உடனே மோசே விரைந்து
தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,
9 "என் தலைவரே!
நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால்,
இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும்,
என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும்.
எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து
எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார்.

உடன்படிக்கையைப் புதுப்பித்தல்[தொகு]

(விப 23:14-19; இச 7:1-5; 16:1-17)


10 அப்பொழுது ஆண்டவர் கூறியது:
"நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன்.
எந்த நாட்டிலும் எந்த மக்களினத்திற்கும் செய்யாத
அரும்பெரும் செயல்களை
நான் உன் மக்கள் அனைவர் முன்னிலையிலும் செய்வேன்.
உன்னைச் சூழ்ந்துள்ள மக்களினத்தவர் அனைவரும்
ஆண்டவரின் செயல்களைக் காண்பர்.
ஏனெனில், நான் உன்னோடிருந்து
திகிலூட்டும் செயல்களைச் செய்வேன்.


11 இன்று நான் உனக்குக் கட்டளையிடுவனவற்றைக் கடைப்பிடி.
இதோ, நான் உன் முன்னிலையினின்று எமோரியரையும்,
கானானியரையும், இத்தியரையும்
பெரிசியரையும், இவ்வியரையும், எபூசியரையும் துரத்திவிடுவேன்.
12 நீ சென்று சேரப்போகிற நாட்டில் வாழ்வோருடன்
உடன்படிக்கை செய்யாதவாறு எச்சரிக்கையாயிரு.
ஏனெனில், அது சிக்கவைக்கும் கண்ணியாக உன்னிடையே இருக்கும்.
13 அவர்களின் பலிபீடங்களை இடித்துத் தள்ளுங்கள்.
அவர்களின் சிலைத் தூண்களை உடைத்தெறியுங்கள்.
அசேராவின் கம்பங்களை வெட்டி வீழ்த்துங்கள். [2]
14 நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது,
ஏனெனில் 'வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காதவர்' என்பதே ஆண்டவர் பெயர்.
ஆம், அவர் 'வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்'.
15 நீ அந்நாட்டில் வாழ்வாரோடு உடன்படிக்கை செய்யாதே.
ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்கள் பின்னே
வேசித்தனமாய் நடந்து
தங்கள் தெய்வங்களுக்குப் பலியிடுகையில்
உன்னை அழைக்க அவர்கள் பலிப்பொருளை நீயும் உண்ண நேரிடலாம்.
16 மேலும் உன் புதல்வருக்கு அவர்களிடமிருந்து பெண்கொள்ள நேரிடலாம்.
அவர்கள் புதல்வியர் தங்கள் தெய்வங்கள் பின்னே
வேசித்தனமாய் நடப்பர்.
உன் புதல்வரையும் தங்கள் தெய்வங்கள் பின்னே
வேசித்தனமாய் நடக்கச் செய்வர்.


17 உனக்கெனத் தெய்வங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம். [3]
18 புளிப்பற்ற அப்ப விழாவைக் கொண்டாட வேண்டும்.
ஆபிபு மாதத்தில் குறிப்பிட்ட காலத்தில்,
என் கட்டளைக்கிணங்க ஏழு நாள்கள்
புளிப்பற்ற அப்பத்தையே உண்ண வேண்டும்.
ஏனெனில் ஆபிபு மாத்தில் நீ எகிப்திலிருந்து வெளியேறி வந்தாய். [4]
19 கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் என்னுடையன.
ஆடு, மாடு, கால்நடைகளின் ஆண் தலையீறு அனைத்தும் எனக்குரியனவே. [5]
20 கழுதையின் தலையீற்றுக்கு ஈடாக ஒரு செம்மறிக் குட்டியைக் கொடுத்து
அதை மீட்க வேண்டும்.
அது மீட்கப்படவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு.
உன் பிள்ளைகளில் ஒவ்வொரு தலைமகனையும் மீட்க வேண்டும.
எவருமே என்முன் வெறுங்கையோடு காணப்படல் ஆகாது. [6]


21 ஆறு நாள்கள் நீ வேலை செய்.
ஏழாம் நாளில் ஓய்வு கொள்.
உழும் பருவத்திலும் அறுவடைப் பருவத்திலும் கூட ஓய்ந்திரு. [7]
22 கோதுமை அறுவடை முதற்பலன் போது வாரங்களின் விழாவையும்,
ஆண்டின் இறுதியில் சேகரிப்பு விழாவையும் கொண்டாட வேண்டும். [8]
23 உங்களுள் ஒவ்வொரு ஆண்மகனும்
ஆண்டில் மூன்று தடவை தலைவரும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய
ஆண்டவர் திருமுன் வர வேண்டும்.
24 ஏனெனில், நான் வேற்றினத்தாரை
உன் முன்னிருந்து துரத்திவிட்டு உன் எல்லையை விரிவுபடுத்துவேன்.
நீ ஆண்டில் மும்முறை உன் கடவுளாகிய ஆண்டவர்
திருமுன் நிற்க வரும்போது,
உன் நாட்டை எவனுமே பிடித்துவிடப் போவதில்லை.
25 எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப்
புளித்த மாவுடன் படைக்காதே.
பாஸ்காவிழாப் பலியில் எதுவும் காலைவரை எஞ்சியிருக்கக் கூடாது. [9]
26 உன் நிலத்தின் முதற் பலன்களில் முதன்மையானவற்றை
உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்கு கொண்டு செல்வாய்.
குட்டியை அதன் தாய்ப்பாலில் வேக வைக்காதே". [10]


27 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"நீ இவ்வார்த்தைகளை எழுதிக்கொள்.
இவ்வார்த்தைகளின்படி நான் உன்னோடும்
இஸ்ரயேலோடும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளேன்" என்றார்.
28 அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார்.
அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை;
தண்ணீர் பருகவும் இல்லை.
உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை
அவர் பலகையின் மேல் எழுதினார்.

மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிவரல்[தொகு]


29 மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில்,
உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும்
தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார்.
மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம்
ஒளிமயமாய் இருந்தது.
ஆனால் மோசே அதை அறியவில்லை.
30 ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும்
மோசேயைப் பார்த்தபோது,
அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு
அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.
31 ஆனால் மோசே அவர்களைக் கூப்பிட்டார்.
ஆரோனும் மக்கள்கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும்
அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார்.
32 பின்னர் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர்.
அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த
அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார்.
33 மோசே அவர்களோடு பேசி முடித்தபின்,
தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக்கொண்டார்.
34 மோசே ஆண்டவரோடு உரையாடும்படி
அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை
முக்காட்டை எடுத்து விடுவார்.
அங்கிருந்து வெளியே வந்து,
அவருக்குக் கட்டளையிடப்பட்டவற்றை அவர்
இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார்.
35 இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது,
மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாயிருக்கும்.
மோசே ஆண்டவரோடு பேசச் செல்லும்வரை
தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார். [11]


குறிப்புகள்

[1] 34:6-7 = விப 20:5-6; எண் 14:18; இச 5:9-10; 7:9-10.
[2] 34:13 = இச 16:21.
[3] 34:17 = விப 20:4; லேவி 19:4; இச 5:8; 27:15.
[4] 34:18 = விப 12:14-20; லேவி 23:6-8; எண் 28:16-25.
[5] 34:19 = விப 13:2.
[6] 34:20 = விப 13:13.
[7] 34:21 = விப 20:9-10; 23:12; 35:12; லேவி 23:3; இச 5:13-14.
[8] 34:22 = லேவி 23:15:21; 39:43; எண் 28:26-31.
[9] 34:25 = விப 12:10.
[10] 34:26 = இச 24:21; 26:2.
[11] 34:29-35 = 2 கொரி 3:7-16.


அதிகாரம் 35[தொகு]

ஓய்வுநாள் பற்றிய ஒழுங்கு முறைகள்[தொகு]


1 மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுதிரட்டி
அவர்களை நோக்கி,
"நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத்
தந்துள்ள வார்த்தைகள் இவைகளே:
2 ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம்.
ஏழாம் நாளோ, ஆண்டவருக்காக நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டிய
புனிதமான 'சாபாத்து';
அன்று வேலை செய்பவன் எவனும் கொல்லப்பட வேண்டும். [*]
3 ஓய்வு நாளில் உங்கள் உறைவிடங்கள் எதிலும்
நெருப்பு மூட்டக் கூடாது" என்றார்.

கூடாரத்திற்கான காணிக்கைகள்[தொகு]

(விப 25:1-9)


4 மீண்டும் மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும்
பின்வருமாறு கூறினார்:
"நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத்
தந்துள்ள வார்த்தைகள் இவைகளே:
5 ஆண்டவருக்காக உங்களிடமிருந்து
காணிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
தாராளமனமுடையோர் அனைவரும் ஆண்டவருக்காகக்
கொண்டு வரவேண்டிய காணிக்கைகளாவன:
பொன், வெள்ளி, வெண்கலம்,
6 நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு,
வெள்ளாட்டு உரோமம்,
7 செந்நிறப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள்,
வெள்ளாட்டுத் தோல்கள், சித்திம் மரம்,
8 விளக்குக்கான எண்ணெய்,
திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமணவகைகள்,
9 ஏப்போதுக்கும், மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிக்கற்கள்,
பதித்து வைக்கும் கற்கள்.

கூடாரத்திற்கான பொருள்கள்[தொகு]

(விப 39:32-43)


10 மேலும் உங்களுள் திறன்படைத்தோர் அனைவரும் vவ்ஆண்டவர் கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய முன்வரட்டும்.
அவையாவன:
11 திருஉறைவிடம், அதன் கூடாரம்,
மேல் விரிப்பு, கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள்,
தூண்கள், பாதப்பொருத்துக்கள்,
12 பேழை, அதன் தண்டுகள்,
இரக்கத்தின் இருக்கை, அதை மறைக்கும் தொங்கு திரை,
13 மேசை, அதன் தண்டுகள்,
அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,
14 ஒளிவிளக்குத் தண்டு,
அதன் துணைக்கலன்கள், அகல்கள், விளக்குக்கான எண்ணெய்,
15 தூபப் பீடம், அதன் தண்டுகள்,
திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம்,
கூடார வாயிலிலுள்ள தொங்கு திரை,


16 எரிபலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல்,
தண்டுகள், துணைக் கலன்கள்,
தண்ணீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
17 முற்றத்தின் திரைகள், அங்குள்ள தூண்கள்,
பாதப்பொருத்துகள், முற்றத்தின் வாயிலுக்கான தொங்கு திரை,
18 திரு உறைவிடத்திற்கான முளைகள், முற்றத்திற்கான முளைகள்,
அவற்றின் கயிறுகள்,
19 திருத்தலப் பணிவிடைக்காக அழகுறப் பின்னப்பட்ட உடைகள்,
குரு ஆரோனுக்கான திரு உடைகள்,
குருத்துவப் பணிக்காக அவன் புதல்வருக்குரிய உடைகள் ஆகியவைகளே.

மக்கள் காணிக்கை கொணர்தல்[தொகு]


20 பின்னர் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும்
மோசே முன்னிருந்து அகன்றது.
21 உள்ளார்வம் உடையோர்,
உள்ளுணர்வால் உந்தப்பெற்றோர் அனைவரும் முன்வந்து
சந்திப்புக் கூடார வேலைக்காகவும்,
அதிலுள்ள அனைத்துத் திருப்பணிகளுக்காகவும்
திருவுடைகளுக்காகவும் ஆண்டவருக்குக் காணிக்கை கொடுத்தனர்.
22 ஆண்களும் பெண்களுமாகத்
தாராள மனமுடையோர் அனைவரும் காப்புகள், காதணிகள்,
மோதிரங்கள், அணிகலன்கள் ஆகிய
பொன்கலன்கள் அனைத்தையும் கொண்டு வந்தனர்.
யாவரும் அப்பொன்னை ஆரத்திப்பலியாக ஆண்டவருக்கு உயர்த்தினர்.
23 அவர்கள் தம்மிடம் காணப்பட்ட நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்,
மெல்லிய நார்ப்பட்டு, வெள்ளாட்டு உரோமம்,
செந்நிறமாகப் பதனிடப்பட்ட ஆட்டுக் கிடாய்த் தோல்கள்,
வெள்ளாட்டுத் தோல்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்.
24 வெள்ளியையும் வெண்கலத்தையும் காணிக்கையாகக்
கொண்டு வர முடிந்தவர் அனைவரும்
அவற்றை ஆண்டவருக்குக்
காணிக்கையாகக் கொண்டு வந்தனர்.
ஏதாவது வேலைக்குப் பயன்படக் கூடிய சித்திம் மரம்
யாரிடமாவது காணப்பட்டால், அதையும் அவர்கள் கொண்டு வந்தனர்.
25 திறன் மிக்க பெண்களெல்லாம் தங்கள் கைகளாலேயே நூல் நூற்று,
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்,
மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை நெய்து கொண்டு வந்தனர்.
26 உள்ளார்வமும் திறனும் உடைய பெண்கள் அனைவரும்
வெள்ளாட்டு உரோமத்தால் நெய்தார்கள்.
27 ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும்
வேண்டிய பன்னிற மணிக்கற்களையும், பதிக்கும் கற்களையும்,
28 திருப்பொழிவு எண்ணெய்க்கும் நறுமணத் தூபத்துக்கும் தேவையான
பரிமள வகைகளையும், விளக்குக்கு எண்ணெயையும்
தலைவர்கள் கொண்டு வந்தார்கள்.
29 ஆண்டவர் மோசே வழியாகச் செயல்படுத்த வேண்டுமென்று
கட்டளையிட்டிருந்த அனைத்துப் பணிகளுக்கும்
தேவையானவற்றைக் கொண்டுவருமாறு,
ஆண் பெண் அனைவரும் உள்ளார்வத்தால் தூண்டப்பட்டனர்.
இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்குத்
தன்னார்வக் காணிக்கை கொண்டு வந்தனர்.

கூடாரக் கலைஞர்கள்[தொகு]

(விப 31:1-11)


30 மோசே இஸ்ரயேல் மக்களை நோக்கி,
"ஆண்டவர் தாமே கூர் என்பவரின் மகனான ஊரியின் புதல்வன்
பெட்சலேலைப் பெயர் சொல்லி அழைத்திருப்பதைப் பாருங்கள்.
31 ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம்,
தொழில் திறமை அனைத்தும் உண்டாகுமாறு
அவரை இறை ஆவியால் நிரப்பியுள்ளார்.
32 திட்டமிடும் நுட்பத்தால் பொன் வெள்ளி வெண்கல வேலை செய்யவும்,
33 பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும்,
மரத்தைச் செதுக்கவும்,
மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் அருளியுள்ளார்.
34 கற்பிக்கும் திறமையையும் அவர் உள்ளத்தில் வைத்துள்ளார்.
அதே திறமையைத் தாண் குலத்தைச் சார்ந்த
அகிசமாக்கின் மகன் ஒகொலியாபுக்கும் அருளியுள்ளார்.
35 உலோக வேலை, கலை வேலை அனைத்தையும்,
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலிலும்,
மெல்லிய நார்ப்பட்டிலும் செய்யும்
பூந்தையல் வேலையையும், பின்னல் வேலையையும்,
அனைத்துத் தொழிலையும் திட்டமிடும் நுட்ப வேலையையும்
செய்வதற்குரிய உயர் திறனால் அவர்களை நிரப்பியுள்ளார்" என்றார்.


குறிப்பு

[*] 35:2 = விப 20:8-11; 23:12; 31:15; 34:21; லேவி 23:3; இச 5:12-14.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 36 முதல் 37 வரை