திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
எரியும் முட்செடி நடுவே கடவுள் மோசேயை அழைக்கிறார் (விப 3:1-12). விவிலிய வரைவு ஓவியம். ஆண்டு:1728. வெளியீட்டு இடம்: ஓலாந்து

விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

மோசேயின் அழைப்பு[தொகு]


1 மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின்
ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார்.
அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின்
மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு
கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.
2 அப்போது ஆண்டவரின் தூதர்
ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார்.
அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது.
ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.
3 "ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை?
இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக
நான் அப்பக்கமாகச் செல்வேன்" என்று மோசே கூறிக்கொண்டார்.
4 அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார்.
'மோசே, மோசே' என்று சொல்லிக்
கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க,
அவர் "இதோ நான்" என்றார்.
5 அவர், "இங்கே அணுகி வராதே;
உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு;
ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" என்றார்.
6 மேலும் அவர்,
"உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள்,
ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" என்றுரைத்தார்.
மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால்
தம் முகத்தை மூடிக்கொண்டார்.


7 அப்போது ஆண்டவர் கூறியது:
எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்;
அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு
அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்;
ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.
8 எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும்,
அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு -
அதாவது கானானியர், இத்தியர், எமோரியர்,
பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு -
அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.
9 இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது.
மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.
10 எனவே இப்போதே போ;
இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை
எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக
நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன். [1]
11 மோசே கடவுளிடம்,
"பார்வோனிடம் செல்வதற்கும்,
இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?" என்றார்.
12 அப்போது கடவுள், "நான் உன்னோடு இருப்பேன்.
மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது
நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள்.
நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே" என்றுரைத்தார்.


13 மோசே கடவுளிடம்,
"இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று
உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்
என்று நான் சொல்ல,
'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால்,
அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார். [2]
14 கடவுள் மோசேயை நோக்கி,
'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார்.
மேலும் அவர்,
"நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர்
என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார். [3]
15 கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
"நீ இஸ்ரயேல் மக்களிடம்,
'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் -
ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் -
என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல்.
இதுவே என்றென்றும் என் பெயர்;
தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!
16 போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி
அவர்களை நோக்கி, "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் -
ஆபிரகாமின் கடவுள், யாக்கோபின் கடவுள் -
எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்:
உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும்
நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.
17 எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர்,
பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு -
பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு -
உங்களை நடத்திச் செல்வேன்" என்று அறிவிப்பாய்.
18 அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர்.
நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள்.
அவனை நோக்கி, "எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார்.
இப்போதே நாங்கள் பாலை நிலத்தில்
மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும்.
ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப்
பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.
19 கைவன்மையைக் கண்டாலன்றி,
எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும்.
20 எனவே என் கையை ஓங்குவேன்.
நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும்
எகிப்தினைத் தண்டிப்பேன்.
அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.


21 அப்போது இம்மக்களை எகிப்தியர் பார்வையில்
விரும்பத்தக்கவர் ஆக்குவேன்.
நீங்கள் வெறுமையாய்ப் போகப்போவதே இல்லை.
22 ஏனெனில் ஒவ்வொருத்தியும் தன் அண்டை வீட்டுக்காரியிடமும்,
தன் வீட்டிலுள்ள அன்னியப் பெண்ணிடமும்
வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும்
மேலாடைகளையும் கேட்டு வாங்கிக் கொள்வாள். [4]
23 அவற்றை உங்கள் புதல்வருக்கும்,
உங்கள் புதல்வியருக்கும் அணிவியுங்கள்.
இவ்வாறு நீங்கள் எகிப்தைச் சூறையாடிச் செல்வீர்கள்".


குறிப்புகள்

[1] 3:2-10 = திப 7:30-34.
[2] 3:13 = விப 6:2-3.
[3] 3:14 = திவெ 1:4,8.
[4] 3:21-22 = விப 12:35-36.


அதிகாரம் 4[தொகு]

மோசே பெற்ற வியத்தகு ஆற்றல்[தொகு]


1 மோசே மறுமொழியாக,
"இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்;
என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள்.
ஏனெனில் 'ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை'
என்று சொல்வார்கள்" என்று கூறினார்.
2 ஆண்டவர் அவரை நோக்கி,
"உன் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டார்.
'ஒரு கோல்' என்றார் அவர்.
3 'அதைத் தரையில் விட்டெறி' என ஆணை விடுத்தார் ஆண்டவர்.
அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார்.
அது ஒரு பாம்பாக மாறியது.
அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
4 ஆண்டவர் அவரை நோக்கி,
"நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு" என்றார்.
- அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார்.
அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.-
5 "இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் -
ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் -
உனக்குக் காட்சியளித்தார் என
அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே".


6 மேலும் ஆண்டவர் அவரை நோக்கி,
"உன் கையை உன் மடிக்குள் இடு" என்றார்.
அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார்.
அதை வெளியே எடுத்தபோது, அந்தோ,
அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.
7 பின்னர் ஆண்டவர்,
"உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு" என்றார்.
அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார்.
மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது,
இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.
8 அப்போது ஆண்டவர்,
"அவர்கள் உன்னை நம்பாமலும்
முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால்,
பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
9 அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல்
உன் பேச்சையும் கேட்காமல் போனால்,
நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய்.
நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்" என்றார்.


10 மோசே ஆண்டவரிடம்:
"ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ,
பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்!
ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்" என்றார்.
11 ஆண்டவர் அவரிடம்,
"மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்?
அவனை ஊமையாக அல்லது செவிடாக
அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்?
ஆண்டவராகிய நான்தானே!
12 ஆகவே, இப்போதே போ!
நானே உன் நாவில் இருப்பேன்;
நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்" என்றார்.
13 அதற்கு அவர்,
"வேண்டாம், ஆண்டவரே!
தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!" என்றுரைத்தார்.
14 இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு
பின்வருமாறு கூறினார்:
"லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா?
அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும்.
இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான்.
அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.
15 நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய்.
நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு
நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.
16 உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால்,
அவன் உனக்கு வாயாக இருப்பான்.
நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.
17 இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய்.
இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!"

மோசே எகிப்திற்குத் திரும்புதல்[தொகு]


18 மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று,
அவரை நோக்கி,
"எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும்,
அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்" என்று கூற,
இத்திரோ மோசேயைப் பார்த்து, "சமாதானமாய்ப் போய்வா" என்றார்.
19 மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி,
"எகிப்திற்குத் திரும்பிப் போ;
ஏனெனில் உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள்
எல்லோரும் இறந்துவிட்டனர்" என்றுரைத்தார்.
20 எனவே மோசே தம் மனைவியையும்
தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு
எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.
21 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
"பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின்,
நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும்
பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு.
22 நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன்.
அவன் மக்களைப் போகவிடமாட்டான்.
நீ பார்வோனிடம்,
'ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை.
23 நான் உனக்குக் கூறிவிட்டேன்:
என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு!
அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை,
உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன்' என்று சொல்வாய்". [*]


24 ஆண்டவர் மோசேயை வழியில்
ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.
25 அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத்
தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து
அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு,
"நீர் எனக்கு இரத்த மணமகன்" என்றாள்.
26 பின்பு ஆண்டவர் அவரைவிட்டு விலகினார்.
அப்போது அவள்,
"விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன்" என்றாள்.
27 இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி,
"மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் போ" என்றார்.
அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.
28 தம்மை அனுப்பியபொழுது,
ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப் பற்றியும்
ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும்
மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.
29 மோசேயும் ஆரோனும்
இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.
30 ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த
எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார்.
அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார்.
மக்களும் நம்பினர்.
31 ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும்
அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும்
மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர்.


குறிப்பு

[*] 4:23 = விப 12:29.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை