திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
நைல் நதியில் தண்ணீர் இரத்தமாக மாறுகிறது; எகிப்தியர் நல்ல நீர் தேடி கிணறு தோண்டுகிறார்கள். விவிலிய ஓவியம் அடங்கிய தட்டு. காலம்: 1560-1570. காப்பிடம்: பெர்லீன், செருமனி.

விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக வைத்துள்ளேன்.
உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான்.
2 நான் உனக்குக் கட்டளை இடுவதையெல்லாம்
நீ எடுத்துச் சொல்வாய்.
பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களைப் போகவிடும்படி
அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான்.
3 நான் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்துவதோடு
எகிப்து நாட்டில் என்னுடைய அடையாளங்களையும்
அருஞ்செயல்களையும் பெருகச் செய்வேன். [1]
4 பார்வோன் உங்களுக்குச் செவிசாய்க்க மாட்டான்.
எனவே நான் எகிப்திற்கு எதிராகக் கை ஓங்குவேன்.
பெரும் தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றியபின்
என் மக்களாகிய இஸ்ரயேல் என்னும் படைத்திரளை
எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்வேன்.
5 எகிப்திற்கு எதிராகக் கை ஓங்கி அவர்கள் நடுவினின்று
இஸ்ரயேல் மக்களை நான் வெளியேறச் செய்யும்போது
'நானே ஆண்டவர்' என எகிப்தியர் அறிந்து கொள்வர்" என்றார்.
6 தங்களுக்கு ஆண்டவர் என்ன கட்டளையிட்டாரோ
அதையே மோசேயும் ஆரோனும் செய்தனர்.
7 பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது
மோசேக்கு வயது எண்பது; ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்று.

ஆரோனின் கோல்[தொகு]


8 ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி,
9 "அருஞ்செயல் ஒன்று காட்டி உங்களை மெய்ப்பியுங்கள்"
என்று பார்வோன் உங்களை நோக்கிக் கூறினால் நீ ஆரோனிடம், 'உன் கோலை எடுத்து, பார்வோன் முன்னிலையில் விட்டெறி.
அது பாம்பாக மாறும்' என்று சொல்" என்றார்.
10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று
ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்கச் செயல்பட்டனர்.
ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும்
அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும்,
அது பாம்பாக மாறியது.
11 பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான்.
எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும்
தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.
12 அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட,
அவை பாம்புகளாக மாறின.
ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.
13 பார்வோனின் மனமோ கடினப்பட்டது.
ஆண்டவர் முன்னுரைத்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

எகிப்தில் பத்துப் பெருந்துன்பங்கள்[தொகு]


14 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
"பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது.
மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான்.
15 எனவே காலையில் நீ பார்வோனிடம் போ.
அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான்.
அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்;
பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.
16 நீ அவனிடம் கூற வேண்டியது:
எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர்
என்னை உம்மிடம் அனுப்பிவைத்துள்ளார்;
அவர் சொல்வது:
'பாலைநிலத்தில் எனக்கு வழிபாடு செய்யும்படி
என் மக்களைப் போகவிடு.
நீயோ இதுவரை செவிசாய்க்கவில்லை.
17 என் கையிலுள்ள கோலால் நானே நைல்நதி நீரை அடிப்பேன்.
அது இரத்தமாக மாறும். [2]
18 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக
நைல்நதி நாற்றமெடுக்கும்.
எகிப்தியர் நைல்நதி நீரைக் குடிக்க முடியாமல் திணறுவர்.
இவற்றால் 'நானே ஆண்டவர்' என நீ அறிந்துகொள்வாய்'
என்று ஆண்டவர் கூறுகிறார்" என்று சொல்.
19 மேலும் ஆண்டவர் மோசேயிடம்,
"நீ ஆரோனை நோக்கி
'உனது கோலை எடு;
எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள்,
குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய
அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு!
அவை இரத்தமாக மாறும்.
ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும்
கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும் என்று சொல்" என்றார்.


20 அவ்வாறே, ஆண்டவர் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் செய்தனர்.
ஆரோன் கோலை உயர்த்திப் பார்வோன்
மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில்
நைல்நதி நீரில் அடித்தார்.
நைல்நதி முழுவதும் இரத்தமாக மாறியது.
21 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக
நைல்நதி நாற்றமெடுத்தது.
எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று.
எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.
22 இது போலவே எகிப்திய மந்திரவாதிகளும்
தம் வித்தைகளால் செய்து காட்டினர்.
எனவே பார்வோனின் மனம் கடினப்பட்டது.
ஆண்டவர் அறிவித்திருந்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
23 பார்வோன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.
அவன் மனம் இதையும் பொருட்படுத்தவில்லை.
24 எகிப்தியர் எல்லோரும் நைல்நதிப் பகுதிகளில்
குடிநீருக்காகத் தோண்டினர்.
ஏனென்றால், நைல்நதி நீரைப் பருக அவர்களால் முடியவில்லை.
25 ஆண்டவர் நைல்நதியை அடித்து நாள்கள் ஏழு கடந்தன.


குறிப்புகள்

[1] 7:3 = திப 7:36.
[2] 7:17 = திவெ 16:4.

அதிகாரம் 8[தொகு]

தவளைகள்[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது:
"நீ பார்வோனிடம் போய் அவனிடம்,
'ஆண்டவர் கூறுகிறார்:
எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு'.
2 அவர்களை அனுப்ப நீ மறுத்தால்,
இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன்.
3 தவளைகள் நைல்நதியை நிரப்பி,
பின்னர் உன் வீட்டிற்குள்ளும், உன் படுக்கை அறைக்குள்ளும்,
உன் படுக்கையிலும், உன் அலுவலர் உன் குடிமக்கள் வீட்டிலும்,
உன் அடுப்புகளிலும், மாவுபிசையும் தொட்டிகளிலும் ஏறிவந்துவிடும்.
4 உன் மேலும், உன் குடிமக்கள் மேலும்,
உன் அலுவலர் அனைவர் மேலும் தவளைகள் ஏறும்' என்று சொல்."
5 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ ஆரோனிடம்,
'கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும்
கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி,
எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய்' என்று சொல்" என்றார்.
6 ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே,
தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.
7 மந்திரவாதிகளும் தங்கள் வித்தைகளால் இது போலவே செய்து
எகிப்திய நிலத்தின்மேல் தவளைகள் ஏறிவரச் செய்தனர்.
8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து,
"என்னிடமிருந்தும், என் குடிமக்களிடமிருந்தும்
தவளைகளை அகற்றிவிடுமாறு ஆண்டவரை மன்றாடுங்கள்.
ஆண்டவருக்குப் பலியிடுமாறு நான் மக்களை அனுப்பிவிடுவேன்" என்று கூறினான்.
9 மோசே பார்வோனை நோக்கி,
"தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு
ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும்
உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென
என்னிடம் தெரியப்படுத்தும்" என்று கூறினார்.
10 அவன், "நாளைக்கு" என்றான்.
அதற்கு மோசே, "எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யாரும் இல்லை
என நீர் அறிந்து கொள்வதற்காக உம் சொற்படியே ஆகும்;
11 உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும்,
உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும்
தவளைகள் ஒழிந்துபோகும்;
ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்" என்றார்.
12 மோசேயும், ஆரோனும் பார்வோனை விட்டகன்றனர்.
பின்பு, பார்வோனின் மேல் ஆண்டவர் வரவிட்டிருந்த
தவளைகளைக் குறித்து மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
13 ஆண்டவரும் மோசேயின் மன்றாட்டின்படியே செய்தருளினார்.
ஆக, வீடுகள், முற்றங்கள், வயல்கள் ஆகியவற்றில்
தவளைகள் மடிந்து போயின.
14 அவற்றைக் குவியல் குவியலாக திரட்டினர்;
எனவே அந்நாடு நாற்றமெடுத்தது.
15 தொல்லை ஓய்ந்தது என்று கண்ட பார்வோன்
தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
ஆண்டவர் சொன்னபடி அவன் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை.

கொசுக்கள்[தொகு]


16 மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கி,
"நீ ஆரோனிடம், 'நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி!
அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும்' என்று சொல்" என்றார்.
17 அவ்வாறே அவர்களும் செய்தனர்.
கோல் ஏந்திய தம் கையை நீட்டி ஆரோன் நிலத்தின் புழுதியை அடிக்க,
மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொசுக்கள் தோன்றின.
எகிப்து நாடெங்கும், நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறிற்று.
18 கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும்
தங்கள் வித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்;
ஆனால், அது அவர்களால் இயலாமற் போயிற்று.
கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன.
19 மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி,
"இது கடவுளின் கைவன்மையே" என்றனர்.
ஆயினும் பார்வோனுடைய மனம் கடினப்பட்டது.
ஆண்டவர் அறிவித்தபடியே அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. [*]

ஈக்கள்[தொகு]


20 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி,
"அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்து நில்.
அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான்.
அப்போது அவனை நோக்கிச் சொல்:
ஆண்டவர் கூறுவது இதுவே:
'எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு;
21 என் மக்களை நீ போகவிடவில்லையென்றால்,
இதோ உன்மேலும், உன் அலுவலர் மேலும்,
உன் குடிமக்கள் மேலும், உன் வீட்டின் மேலும், ஈக்கள் வரச்செய்வேன்.
எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும்.
22 அந்நாளில், என் மக்கள் தங்கியிருக்கும்
கோசேன் நிலப்பகுதியை வேறுபடுத்திக் காட்டுவேன்.
அங்கு ஈக்கள் எவையுமே இரா.
இதனால் இந்நாட்டில் நானே ஆண்டவர் என நீ அறிந்து கொள்வாய்.
23 மேலும் என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே
நான் வேறுபாடு காட்டுவேன்.
நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்'" என்றார்.
24 அவ்வாறே ஆண்டவரும் செய்து முடித்தார்.
ஈக்கள் பார்வோன் வீட்டிலும், அவனுடைய அலுவலர் வீட்டிலும்,
எகிப்து நாடெங்கும் திரளாய்ப் பெருகின.
ஈக்களால் நாடே பாழாகிவிட்டது.


25 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து,
"போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்குப் பலியிடுங்கள்" என்றான்.
26 அதற்கு மோசே, "அது முறையல்ல;
அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை
எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும்.
எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன்
நாங்கள் அப்படிப் பலியிட்டால்
அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?
27 பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து,
எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு,
அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்" என்றார்.
28 அப்பொழுது பார்வோன்,
"உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு
நீங்கள் பாலைநிலத்தில் பலியிட நான் உங்களைப் போகவிடுவேன்.
ஆனால், வெகுதூரம் சென்று விடாதீர்கள்;
மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்" என்றுரைத்தான்.
29 மோசே மறுமொழியாக,
"நான் உம்மிடமிருந்தும் போய்,
பார்வோனிடமிருந்தும் அவன் அலுவலரிடமிருந்தும்
அவன் குடிமக்களிடமிருந்தும் நாளைய தினமே
ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என்று ஆண்டவரை மன்றாடுவேன்.
ஆனால் ஆண்டவருக்குப் பலியிடுமாறு மக்களை அனுப்பாமல்
பார்வோன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற வேணடாம்" என்று கூறினார்.


30 மோசே பார்வோனை விட்டு அகன்றார்;
ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
31 மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார்.
பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும்
அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின.
ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.
32 இம்முறையும் பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
மக்களை அவன் போகவிடவில்லை.


குறிப்பு

[*] 8:19 = லூக் 11:20


(தொடர்ச்சி):விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை