திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஒரு வீட்டைக் கட்டி எழுப்புகிறவருக்கு அவ்வீட்டைவிட அதிக மதிப்பு உண்டு. அதுபோல, இயேசுவும் மோசேயைவிட அதிக மேன்மை பெறத் தகுதி உடையவராகிறார். ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே." (எபிரேயர் 3:3-4)

எபிரேயர் (Hebrews)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

3. இயேசு கிறிஸ்து மோசேக்கும் யோசுவாவுக்கும் மேலானவர்[தொகு]

இயேசு மோசேயைவிட மேலானவர்[தொகு]


1 எனவே, தூய சகோதர சகோதரிகளே,
விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே,
நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான
இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள்.
2 கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார்.
அவ்வாறே இவரும் தம்மை நியமித்த கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். [1]
3 ஒரு வீட்டைக் கட்டி எழுப்புகிறவருக்கு அவ்வீட்டைவிட அதிக மதிப்பு உண்டு.
அதுபோல, இயேசுவும் மோசேயைவிட அதிக மேன்மை பெறத் தகுதி உடையவராகிறார்.
4 ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல,
எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே.
5 ஊழியன் என்னும் முறையில் மோசே
கடவுளின் குடும்பத்தார் அனைவரிடையேயும் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார்.
கடவுள் பின்னர் அறிவிக்கவிருந்தவற்றுக்குச்
சான்று பகர்வதே அவரது ஊழியமாயிருந்தது.
6 ஆனால், கிறிஸ்து
மகன் என்னும் முறையில் கடவுளின் குடும்பத்தார்மேல் அதிகாரம் பெற்றுள்ளார்.
துணிவையும் எதிர்நோக்கோடு கூடிய பெருமையையும் நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால்
கடவுளுடைய குடும்பத்தாராய் இருப்போம்.

கடவுள் தரும் ஓய்வு[தொகு]


7 எனவே, தூய ஆவியார் கூறுவது:


"இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால்,


8 பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின்போது இருந்ததுபோல,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9 அங்கே உங்கள் மூதாதையர்
நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும்
என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
10 எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு,
'எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது;
என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்;
எனவே நான் சினமுற்று
11 "நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்"


என்று ஆணையிட்டுக் கூறினேன்' என்றார் கடவுள்." [2]


12 அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம்,
வாழும் கடவுளை விட்டு விலகும்.
இத்தகைய தீய உள்ளம்
உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
13 உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு,
கடின உள்ளத்தினர் ஆகாதவாறு,
ஒவ்வொரு நாளும் "இன்றே" என எண்ணி,
நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.
14 தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை
இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால்
நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.


15 "இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால்,


கிளர்ச்சியின்போது இருந்ததுபோல,


உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்."


என்று கூறப்பட்டுள்ளது. [3]


16 அவரது குரலைக் கேட்டும் கிளர்ச்சி செய்தவர்கள் யார்?
மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து வெளியேறினவர்கள் அனைவரும் அல்லவோ?
17 நாற்பது ஆண்டுகள் கடவுள் சீற்றம் கொண்டது யார்மீது?
பாவம் செய்தவர்கள் மீதல்லவோ?
அவர்களுடைய பிணங்கள் பாலை நிலத்தில் விழுந்து கிடந்தன அல்லவோ?


18 "நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள்
நுழையவே மாட்டார்கள்"


என்று யாரைப்பற்றி ஆணையிட்டுக் கூறினார்?
கீழ்ப்படியாதவர்களைப் பற்றியன்றோ? [4]
19 அவர்கள் நம்பிக்கை கொண்டிராததால்தான்
அதை அடைய முடியாமற்போயிற்று என்பது தெரிகிறது.


குறிப்புகள்

[1] 3:2 = எண் 12:7.
[2] 3:7-11 = திபா 95:7-11.
[3] 3:15 = திபா 95:7,8.
[4] 3:16-18 = எண் 14:1-35.


அதிகாரம் 4[தொகு]


1 ஆதலின், கடவுள் தரும் ஓய்வைப் பெறுவது பற்றி
அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைத்திருப்பதால்,
உங்களுள் எவரேனும் அதை அடையத் தவறிவிடக்கூடாது என எண்ணுகிறேன்.
இது குறித்து நாம் கவனமாயிருப்போமாக.
2 ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே,
நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை;
ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை.
3 இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே.
இதைக் குறித்தே,


"நான் சினமுற்று,


'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவேமாட்டார்கள்'


என்று ஆணையிட்டுக் கூறினேன்"


என எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன. [1]
4 ஏனெனில் மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம்நாள் பற்றி,


"கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து,
ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்"


என்று கூறப்பட்டுள்ளது.
5 மேலும், மேற்சொன்ன சொற்றொடரில்,


"அவர்கள் நான் அளிக்கும்


இளைப்பாற்றியின் நாட்டிற்குள்


நுழையவே மாட்டார்கள்"


என்றிருக்கிறது. [2]
6 எனவே, இந்த ஓய்வைப் பெறவேண்டியவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
ஆனால், அந்நற்செய்தியை முன்னர் கேட்டவர்கள்
தங்கள் கீழ்ப்படியாமையால் அந்த ஓய்வைப் பெறவில்லை.
7 ஆகவேதான் முன்பு கூறப்பட்டதுபோலவே,


"இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால்
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்"


என்று நீண்டகாலத்திற்குப் பின்பு
தாவீதின் வழியாக அவர் எடுத்துரைத்து
"இன்று" என வேறொரு நாளைக் குறிப்பிடுகிறார். [3]
8 யோசுவா அவர்களை ஓய்வுபெறச் செய்திருந்தார் என்றால்,
அதன்பின் கடவுள் வேறொரு நாளைப் பற்றிப் பேசியிருக்க மாட்டார். [4]
9 ஆதலால், கடவுளுடைய மக்கள் ஓய்வெடுக்கும் காலம்
இனிமேல்தான் வரவேண்டியிருக்கிறது.
10 ஏனெனில், கடவுள் தம் வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுப்பது போலவே,
கடவுள் தரும் ஓய்வைப் பெற்றுவிட்டவர்
தம் வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கிறார். [5]
11 ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி,
எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக.

கடவுளுடைய வார்த்தை[தொகு]


12 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது;
இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது;
ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது;
எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது;
உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
13 படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை.
அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.
நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்.

4. இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை[தொகு]

மாபெரும் தலைமைக் குரு இயேசு[தொகு]


14 எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை
நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால்
நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!
15 ஏனெனில், நம் தலைமைக் குரு
நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல;
மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்;
எனினும் பாவம் செய்யாதவர்.
16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும்,
ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும்,
அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.


குறிப்புகள்

[1] 4:4 = தொநூ 2:2.
[2] 4:5 = திபா 95:11.
[3] 4:7 = திபா 95:7,8.
[4] 4:8 = இச 31:7; யோசு 22:4.
[5] 4:10 = தொநூ 2:2.


(தொடர்ச்சி): எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை