உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
"முன்னைய உடன்படிக்கையின்படி வழிபாட்டுக்குரிய ஒழுங்குகளும் மண்ணுலகைச் சார்ந்த திருஉறைவிடமும் இருந்தன. அத்திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் 'தூயகம்' என்பது பெயர். இரண்டாம் திரைக்குப் பின், "திருத்தூயகம்" என்னும் கூடாரம் இருந்தது. அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன் தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன." (எபிரேயர் 9:1-4)

எபிரேயர் (Hebrews)

[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9

[தொகு]

மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாடு

[தொகு]


1 முன்னைய உடன்படிக்கையின்படி வழிபாட்டுக்குரிய ஒழுங்குகளும்
மண்ணுலகைச் சார்ந்த திருஉறைவிடமும் இருந்தன.
2 அத்திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன.
இவ்விடத்திற்குத் 'தூயகம்' என்பது பெயர். [1]
3 இரண்டாம் திரைக்குப் பின், "திருத்தூயகம்" என்னும் கூடாரம் இருந்தது. [2]
4 அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன் தகடு வேய்ந்த
உடன்படிக்கைப் பேழையும் இருந்தன.
இப்பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும்
ஆரோனின் தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. [3]
5 பேழையின்மேலே மாட்சிமிகு கெருபுகள்
இரக்கத்தின் இருக்கைக்கு நிழலிட்டுக் கொண்டிருந்தன.
இவை பற்றி இப்போது விரிவாய்க் கூற இயலாது. [4]


6 இவை இவ்வாறு அமைந்திருக்க,
குருக்கள் தங்கள் வழிபாட்டுப் பணிகளை நிறைவேற்ற
முன்கூடாரத்தில் மட்டுமே எப்போதும் நுழைவார்கள். [5]
7 இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார்.
அப்போது அவர் தமக்காகவும் மக்கள் அறியாமையால் செய்த பிழைக்காகவும்
இரத்தத்தைக் கொண்டு போய்ப் படைப்பார். [6]
8 மேற்கூறியவற்றின்மூலம் தூய ஆவியார்,
முன்கூடாரம் நீடித்து இருக்கும்வரை,
தூயகத்திற்குச் செல்லும் வழி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை
என்பதைக் காட்டுகிறார்.
9 இக்கூடாரம் இக்கால நிலையைச் சுட்டிக் காட்டுகிறது.
ஏனெனில் இக்காலத்தில் செலுத்தப்படும் காணிக்கைகளும் பலிகளும்
வழிபடுகிறவரின் மனச்சான்றை நிறைவுக்குக் கொண்டுவர இயலாதனவாகும்.
10 இவை உடலைச் சார்ந்த ஒழுங்குகளே.
உண்பது பற்றியும் குடிப்பது பற்றியும்
பல்வேறு வகையான தூய்மைப்படுத்தும் சடங்குகள் பற்றியும் எழுந்த இவை
சீரமைப்புக் காலம் வரைதான் நீடிக்கும்.


11 ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார்.
அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன.
அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது.
அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல;
அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.
12 அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள்,
கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே.
அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று
எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.
13 வெள்ளாட்டுக் கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும்
கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது,
சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். [7]
14 ஆனால் கிறிஸ்துவின் இரத்தம்,
வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு,
சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து
நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது!
ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே
கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.


15 இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார்.
கடவுளால் அழைக்கப்பட்டவர்கள்
அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று
இந்த உடன்படிக்கை உண்டானது.
இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.


16 ஏனெனில் விருப்ப ஆவணம் ஒன்று இருக்கிறது என்றால்
அதனை எழுதியவர் இறந்துவிட்டார் என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
17 சாவுக்குப் பின்னரே விருப்ப ஆவணம் உறுதிபெறும்.
அதை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அது செல்லுபடியாகாது.
18 அதனால்தான் முன்னைய உடன்படிக்கையும்
இரத்தம் சிந்தாமல் தொடங்கப்படவில்லை.
19 திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம்
மக்கள் அனைவருக்கும் மோசே எடுத்துரைத்தபின்,
கன்றுக்குட்டிகள், வெள்ளாட்டுக்கடாக்கள்
இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து
கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால்
உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்;
20 தெளிக்கும்போது,


"கடவுள் உங்களோடு செய்துள்ள
உடன்படிக்கையின் இரத்தம் இதோ"


என்றார். [8]
21 அவ்வாறே, கூடாரத்தின் மீதும் வழிபாட்டுக் கலன்கள் அனைத்தின்மீதும்
அவர் இரத்தத்தைத் தெளித்தார். [9]
22 உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே
இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன.
இரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. [10]

கிறிஸ்துவின் பலி பாவங்களைப் போக்குகிறது

[தொகு]


23 ஆதலின், விண்ணகத்தில் உள்ளவற்றின் சாயல்களே
இத்தகைய சடங்குகளால் தூய்மை பெறவேண்டுமென்றால்,
மண்ணகத்தில் உள்ளவை
இவற்றிலும் சிறந்த பலிகளால் அல்லவா தூய்மை பெறவேண்டிருக்கும்!
24 அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும்
உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான
இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல்
விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.
அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்.
25 தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார்.
அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார்.
அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.
26 அவ்வாறு செய்திருப்பாரென்றால்,
உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும்.
அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து,
பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.
27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர்.
பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.
28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு,
ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.
அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார்.
ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல,
தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.


குறிப்புகள்

[1] 9:2 = விப 26:1-30; 25:31-40, 23-30.
[2] 9:3 = விப 26:31-33.
[3] 9:4 = விப 30:1-6; 25:10-16; 16:33; எண் 17:8-10; இச 10:3-5.
[4] 9:5 = விப 25:18-22.
[5] 9:6 = எண் 18:2-6.
[6] 9:7 = லேவி 16:2-34.
[7] 9:13 = லேவி 16:15,16; எண் 19:9, 17-19.
[8] 9:19,20 = விப 24:6-8.
[9] 9:21 = லேவி 8:15.
[10] 9:22 = லேவி 17:11.


அதிகாரம் 10

[தொகு]

6. இயேசு கிறிஸ்துவின் பலியின் மேன்மை

[தொகு]


1 வரப்போகும் நலன்களின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை;
அது அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது.
எனவேதான், ஆண்டுதோறும் இடைவிடாமல் செலுத்தப்படும்
அதே பலிகளால் வழிபட வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்க அதற்கு வலிமையில்லை.
2 அவ்வாறு இருந்திருந்தால், பலி செலுத்துவது நின்றிருக்கும் அல்லவா?
ஏனெனில், வழிபடுபவர்கள் ஒரே முறையில் தூய்மை அடைந்திருந்தால்,
பாவத்தைப்பற்றிய உணர்வே அவர்களிடம் இராதே!
3 மாறாக, பாவங்கள் நீங்கவில்லை என்பதை அந்தப் பலிகள் ஆண்டுதோறும்
நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கின்றன.
4 ஆம், காளைகள், வெள்ளாட்டுக் கடாக்கள் இவற்றின் இரத்தம்
பாவங்களைப் போக்க முடியாது.


5 அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது,


"பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை,


ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்.
6 எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
7 எனவே நான் கூறியது:
என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.


என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது"


என்கிறார். [1]
8 திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும்


"நீர் பலிகளையும் காணிக்கையையும் எரிபலிகளையும்


பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை;


இவை உமக்கு உகந்தவையல்ல"


என்று அவர் முதலில் கூறுகிறார்.


9 பின்னர்


"உமது திருவுளத்தை நிறைவேற்ற,
இதோ வருகின்றேன்"


என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார்.
10 இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து
ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம்
நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.


11 ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது
மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார்.
அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. [2]
12 ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக
என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு,
கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்.
13 அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். [3]
14 தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால்
என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.


15-16 இதுபற்றித் தூய ஆவியாரும்,


"அந்நாள்களுக்குப்பிறகு
அவர்களோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே:
என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்;


அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்" [4]


என்று நமக்குச் சான்று பகர்கிறார்.
இவ்வாறு சொன்ன பின்,
17 "அவர்களது தீச்செயலையும்
அவர்களுடைய பாவங்களையும்


இனிமேல் நினைவுகூர மாட்டேன்"


என்றும் கூறுகிறார்.
18 எனவே பாவமன்னிப்பு கிடைத்தபின்
பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.

கடவுளிடம் நெருங்கி வருதல்

[தொகு]


19-20 சகோதர சகோதரிகளே,
இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம்.
இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.
ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார்.
இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.
21 மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற
பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.
22 ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும்
தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய்,
நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும்
அவரை அணுகிச் செல்வோமாக. [5]
23 நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.
எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித்
தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.
24 அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும்
ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.
25 சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை.
நாம் அவ்வாறு செய்யலாகாது;
ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக.
இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்;
எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.


26 உண்மையை அறிந்தபின்னரும், வேண்டுமென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால்,
இனி நமக்கு வேறு எந்தப் பாவம்போக்கும் பலியும் இராது.
27 மாறாக, அச்சத்தோடும் நாம் எதிர்பார்த்திருக்கும் தீர்ப்பும்,
பகைவர்களைச் சுட்டெரிக்கும் கடவுளது சீற்றமுமே எஞ்சியிருக்கும். [6]
28 மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்தவர், இரக்கம் பெறாமல்,
இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தின்படி சாக வேண்டியிருந்தது. [7]
29 அப்படியென்றால், கடவுளுடைய மகனையே காலால் மிதித்தவர்,
தம்மைத் தூய்மைப்படுத்திய உடன்படிக்கையின் இரத்தத்தையே தீட்டு என்று கருதியவர்,
அருள்தரும் ஆவியாரையே பழித்தவர்
எத்துணைக் கொடிய தண்டனையைப் பெற வேண்டியவர் என்பதை எண்ணிப் பாருங்கள். [8]

30 "பழி வாங்குவதும் கைம்மாறளிப்பதும்
எனக்கு உரியன"


என்றும்


"ஆண்டவரே தம் மக்களுக்குத்
தீர்ப்பு அளிப்பார்"


என்றும் உரைத்தவர் யார் என்பது நமக்குத் தெரியுமன்றோ? [9]
31 வாழும் கடவுளின் கைகளில் அகப்படுவது அஞ்சத்தக்கது அல்லவா?


32 முன்னைய நாள்களை நினைவு கூருங்கள்.
நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட
துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்.
33 சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி,
வேடிக்கைப் பொருளானீர்கள்.
வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.
34 கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள்.
உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள்.
ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.
35 உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள்.
இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு.
36 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி,
அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை.


37 இன்னும்,


'மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது;


வரவிருக்கிறவர் வந்து விடுவார், காலம் தாழ்த்தமாட்டார்.
38 நேர்மையுடன் நடக்கும் என் அடியார்,
நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்.
எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால்


அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.' [10]


39 நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல.
மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.


குறிப்புகள்

[1] 10:5-7 = திபா 40:6-8.
[2] 10:11 = விப 29:38.
[3] 10:12,13 = திபா 110:1.
[4] 10:16 = எரே 31:33.
[5] 10:22 = லேவி 8:30; எசே 36:25.
[6] 10:27 = எசா 26:11.
[7] 10:28 = இச 17:6; 19:15.
[8] 10:29 = விப 24:8.
[9] 10:30 = இச 32:35,36.
[10] 10:37,38 = அப 2:3,4.


(தொடர்ச்சி): எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 11 முதல் 13 வரை