உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
"குழல் அல்லது யாழ் ஆகிய உயிரற்ற இசைக்கருவிகளால் எழுப்பப்படும் ஒலிகளுள் வேறுபாடு இல்லையெனில் குழல் எழுப்பும் ஒலி எது, யாழ் எழுப்பும் ஒலி எது என்பதை எப்படி அறிய முடியும்? எக்காளம் தெளிவாக முழங்காவிடில் யார் போருக்குத் தயாராவார்? அவ்வாறே நீங்களும் பரவசப்பேச்சு பேசும்போது, பேசும் வார்த்தைகள் தெளிவாயிராவிடில், நீங்கள் பேசியது என்ன என்று எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்? ஏனெனில் உங்கள் பேச்சுதான் காற்றோடு காற்றாய்ப் போய்விடுகிறதே!" (1 கொரிந்தியர் 14:7-9

1 கொரிந்தியர் (1 Corinthians)

[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13

[தொகு]


1 நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்
அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும்
ஓசையிடும் தாளமும் போலாவேன்.


2 இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும்,
மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும்,
அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,
மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும்
என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. [1]


3 என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும்
என் உடலையே சுட்டெரிப்பதற்கென [2] ஒப்புவித்தாலும்
என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.


4 அன்பு பொறுமையுள்ளது;
நன்மை செய்யும்;
பொறாமைப்படாது;
தற்புகழ்ச்சி கொள்ளாது;
இறுமாப்பு அடையாது.


5 அன்பு இழிவானதைச் செய்யாது;
தன்னலம் நாடாது;
எரிச்சலுக்கு இடம் கொடாது;
தீங்கு நினையாது.


6 அன்பு தீவினையில் மகிழ்வுறாது;
மாறாக உண்மையில் அது மகிழும்.


7 அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்;
அனைத்தையும் நம்பும்;
அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்;
அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.


8 இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்;
பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்;
அறிவும் அழிந்துபோம்.
ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.


9 ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது;
நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.


10 நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.


11 நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்;
குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்;
குழந்தையைப்போல எண்ணினேன்.
நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.


12 ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல்
மங்கலாய்க் காண்கிறோம்;
ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம்.
இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்;
அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். [3]


13 ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.


குறிப்புகள்

[1] 13:2 = மத் 17:20; 21:21; மாற் 11:23.
[2] 13:3 - "பெருமையடைவதற்கென" எனப் பல முக்கிய
கையெழுத்துப் படிகளில் காணப்படுகின்றது.
[3] 13:12 = 1 யோவா 3:2.


அதிகாரம் 14

[தொகு]

பரவசப்பேச்சு பேசுதலும் இறைவாக்குரைத்தலும்

[தொகு]


1 அன்பு செலுத்த முயலுங்கள்.
ஆவியார் அருளும் கொடைகளையும்
குறிப்பாக இறைவாக்குரைக்கும் கொடையையும் ஆர்வமாய் நாடுங்கள்.
2 ஏனெனில் பரவசப்பேச்சு பேசுகிறவர் மக்களிடமல்ல, கடவுளிடமே பேசுகிறார்.
அவர் பேசுவது எவருக்கும் விளங்குவதில்லை.
அவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மறைபொருள்களைப் பேசுகிறார்.
3 ஆனால் இறைவாக்கு உரைப்பவரோ மக்களிடமே பேசுகிறார்.
அவர் பேசுவது அவர்களுக்கு வளர்ச்சியையும் ஊக்கத்தையும் ஆறுதலையும் அளிக்கிறது.
4 பரவசப்பேச்சு பேசுகிறவர் தம்மை மட்டுமே வளர்ச்சியுறச் செய்கிறார்.
ஆனால் இறைவாக்குரைப்பவர் திருச்சபையை வளர்ச்சியுறச் செய்கிறார்.


5 நீங்கள் அனைவரும் பரவசப்பேச்சு பேசுவதை நான் விரும்புகிறேன்.
ஆனாலும் நீங்கள் இறைவாக்குரைப்பதையே நான் அதிகமாக விரும்புகிறேன்.
பரவசப்பேச்சு பேசுகிறவர் திருச்சபையைக் கட்டியெழுப்பும் நோக்குடன்
தாம் பேசுவதை விளக்க வேண்டும்.
இல்லையெனில் பரவசப்பேச்சு பேசுபவரைவிட
இறைவாக்குரைப்பவரே மேலானவர்.
6 எனவே சகோதர சகோதரிகளே,
நான் உங்களிடம் வந்து திருவெளிப்பாடு, மெய்யறிவு,
இறைவாக்கு, போதனை இவற்றில் எதைக் குறித்தும் பேசாமல்,
பரவசப் பேச்சை மட்டும் பேசினால், என்னால் நீங்கள் அடையும் பயனென்ன?


7 குழல் அல்லது யாழ் ஆகிய உயிரற்ற இசைக்கருவிகளால்
எழுப்பப்படும் ஒலிகளுள் வேறுபாடு இல்லையெனில்
குழல் எழுப்பும் ஒலி எது, யாழ் எழுப்பும் ஒலி எது என்பதை
எப்படி அறிய முடியும்?
8 எக்காளம் தெளிவாக முழங்காவிடில் யார் போருக்குத் தயாராவார்?
9 அவ்வாறே நீங்களும் பரவசப்பேச்சு பேசும்போது,
பேசும் வார்த்தைகள் தெளிவாயிராவிடில்,
நீங்கள் பேசியது என்ன என்று எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
ஏனெனில் உங்கள் பேச்சுதான் காற்றோடு காற்றாய்ப் போய்விடுகிறதே!
10 இவ்வுலகில் எத்தனையோ வகையான மொழிகள் உள்ளன.
அவற்றுள் பொருள் தராத மொழியே இல்லை.
11 எனவே ஒரு மொழியில் தெரிவிக்கப்பட்டதை நான் அறியாதவனாய் இருப்பின்,
அம்மொழியைப் பேசுகிறவருக்கு நான் ஓர் அன்னியனாய் இருப்பேன்.
அவரும் எனக்கு அன்னியராய்த்தான் இருப்பார்.
12 இது போலவே நீங்களும் இருக்கிறீர்கள்.
தூய ஆவியார் அருளும் கொடைகளை ஆர்வமாய் நாடும் நீங்கள்
திருச்சபையைக் கட்டி எழுப்பும் கொடைகளையே தேடி
அவற்றில் வளர்ச்சியடையுங்கள்.


13 பரவசப்பேச்சு பேசுகிறவர் அதனை விளக்குவதற்கான
ஆற்றலைப் பெற இறைவனிடம் வேண்டட்டும்.
14 எனவே நான் பரவச நிலையில் இறைவனிடம் வேண்டும்போது
என்னிடம் செயலாற்றும் தூய ஆவியாரே இறைவேண்டல் செய்கிறார்.
என் அறிவுக்கு அங்கு வேலை இல்லை.
15 இந்நிலையில், நான் செய்ய வேண்டியதென்ன?
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன்;
அறிவோடும் இறைவேண்டல் செய்வேன்.
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன்;
அறிவோடும் திருப்பாடல் பாடுவேன்.
16 இல்லையேல் நீங்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுக்
கடவுளைப் போற்றும்போது
அங்கு அமர்ந்திருக்கும் பொது மக்கள்
நீங்கள் நன்றி செலுத்திச் செய்யும் இறைவேண்டலுக்கு
எவ்வாறு "ஆமென்" எனச் சொல்ல முடியும்?
நீங்கள் சொல்வதுதான் அவர்களுக்கு விளங்கவில்லையே!
17 நீங்கள் நன்றாகத்தான் நன்றி செலுத்தி இறைவனிடம் வேண்டுகிறீர்கள்.
ஆனால் அது பிறரது வளர்ச்சிக்கு உதவவில்லையே!


18 நான் உங்கள் அனைவரையும் விட மிகுதியாகப் பரவசப்பேச்சு பேசுகிறேன்.
அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
19 ஆயினும் நான் திருச்சபையில் பரவச நிலையில்
பல்லாயிரம் சொற்களைப் பேசுவதைவிட
மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாலைந்து சொற்களை
அறிவோடு சொல்வதையே விரும்புகிறேன்.


20 அன்பர்களே, சிந்திப்பதில் நீங்கள் சிறுபிள்ளைகள்போல் இராதீர்கள்.
தீங்கு செய்வதில் குழந்தைகள் போலவும்
சிந்திப்பதில் முதிர்ச்சி அடைந்தவர்கள் போலவும் இருங்கள்.
21 "'வேற்றுமொழியினராலும்
புரியாதமொழி கொண்டோர் மூலமும் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார்.
அப்போதும் எனக்கு அவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள்'


என்கிறார் ஆண்டவர்"


என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. [1]
22 எனவே பரவசப்பேச்சு பேசுவது நம்பிக்கை கொண்டோருக்கு அல்ல,
நம்பிக்கை கொண்டிராதோருக்கே அடையாளமாக இருக்கிறது.
இறைவாக்கு உரைப்பதோ நம்பிக்கை கொண்டிராதோருக்கு அல்ல,
நம்பிக்கை கொண்டோருக்கே அடையாளமாக இருக்கிறது.

23 இப்படியிருக்க, திருச்சபை முழுவதும் ஒன்றாகக்கூடி இருக்கும்போது
எல்லாரும் பரவசப்பேச்சு பேசினால்
அப்போது அங்கு நுழையும் பொது மக்கள் அல்லது நம்பிக்கை கொண்டிராதவர்கள்
உங்களைப் பித்துப்பிடித்தவர்கள் எனச் சொல்ல மாட்டார்களா?
24 நீங்களெல்லாரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டு இருக்கும்போது
நம்பிக்கை கொண்டிராத ஒருவரோ
அல்லது பொது மக்களுள் ஒருவரோ அங்கு நுழைந்தால்,
ஒவ்வொருவரும் உரைக்கும் இறைவாக்கு அவரது குற்றத்தை அவருக்கு எடுத்துக் காட்டும்;
அவரைத் தீர்ப்புக்கு உட்படுத்தும்.
25 அவர் உள்ளத்தில் உறைந்து கிடப்பவை வெளியாகும்.
அப்பொழுது அவர் முகங்குப்புற விழுந்து கடவுளைப் பணிந்து,
"உண்மையில் கடவுள் உங்களிடையே உள்ளார்" என அறிக்கை செய்வார். [2]

அனைத்தையும் ஒழுங்காய் செய்தல்

[தொகு]


26 அப்படியானால் சகோதர சகோதரிகளே,
செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் கூடிவரும்போது ஒருவர் திருப்பாடலைப் பாடலாம்;
ஒருவர் கற்றுக் கொடுக்கலாம்;
ஒருவர் திருவெளிப்பாடுகளை எடுத்துரைக்கலாம்;
ஒருவர் பரவசப்பேச்சு பேசலாம்;
ஒருவர் அதை விளக்கிக் கூறலாம்.
இவை அனைத்தும் திருச்சபையைக் கட்டியெழுப்பும் வகையில் நடைபெற வேண்டும்.
27 பரவசப்பேச்சு பேசுவதாயிருந்தால் இருவர் பேசலாம்;
மிஞ்சினால் மூவர் பேசலாம்.
ஆனால் ஒருவர் பின் ஒருவராகப் பேச வேண்டும். ஒருவர் அதற்கு விளக்கம் கூற வேண்டும்.
28 ஆனால் விளக்கம் கூறுபவர் இல்லையெனில்
அவர்கள் திருச்சபையில் அமைதி காக்கட்டும்;
தங்கள் உள்ளத்தில் கடவுளோடு பேசட்டும்.
29 இறைவாக்கினரைப் பொறுத்தவரையில் இருவர் அல்லது மூவர் பேசட்டும்;
மற்றவர்கள் அவர்கள் கூறியதை ஆய்ந்து பார்க்கட்டும்.
30 அங்கு அமர்ந்திருக்கும் வேறொருவருக்கு திருவெளிப்பாடு அருளப்பட்டால்
முன்பு பேசிக்கொண்டிருந்தவர் அமைதியாகிவிட வேண்டும்.
31 நீங்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராக இறைவாக்கு உரைக்கலாம்.
அப்போதுதான் நீங்கள் அனைவரும் கற்றுக் கொள்ளவும் ஊக்கம் பெறவும் இயலும்.
32 இறைவாக்கினர்கள் பெறும் ஏவுதல்கள், அவர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவைதான்.
33 ஏனெனில் கடவுள் குழப்பத்தை ஏற்படுத்துபவரல்ல; அமைதியை ஏற்படுத்துபவர்.


இறைமக்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருக்கும் ஒழுங்குக்கேற்ப,
34 சபையில் பெண்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
அவர்களுக்குப் பேச அனுமதி இல்லை.
மாறாகத் திருச்சட்டம் கூறுவது போல அவர்கள் பணிந்திருக்க வேண்டும். [3]
35 அவர்கள் எதையேனும் அறிய விரும்பினால்,
அதை வீட்டில் தங்கள் கணவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளட்டும்.
பெண்கள் திருச்சபையில் பேசுவது வெட்கத்திற்குரியதாகும்.


36 கடவுளின் வார்த்தை உங்களிடமிருந்தா வந்தது?
அல்லது அது உங்களிடம் மட்டுமா வந்தடைந்தது?
37 தாம் ஓர் இறைவாக்கினர்
அல்லது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர் என ஒருவர் நினைத்தால்,
நான் உங்களுக்கு எழுதுபவற்றை அவர் ஆண்டவரின் கட்டளையாக ஏற்றுக் கொள்ளட்டும்.
38 இவற்றை எவராவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டமாட்டார்.


39 எனவே அன்பர்களே, இறைவாக்கு உரைக்க ஆர்வமாய் நாடுங்கள்.
பரவசப்பேச்சு பேசுவதையும் தடுக்காதீர்கள்.
40 ஆனால் அனைத்தும் பாங்காகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும்.


குறிப்புகள்

[1] 14:21 = எசா 28:11,12.
[2] 14:25 = எசா 45:14; செக் 8:23.
[3] 14:34 = 1 திமொ 2:11,12.


(தொடர்ச்சி):கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை