திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை
திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)
[தொகு]அதிகாரங்கள் 11 முதல் 12 வரை
அதிகாரம் 11
[தொகு]எருசலேம் திருச்சபையில் பேதுருவின் அறிக்கை
[தொகு]
1 பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொண்டதைப் பற்றித்
திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள்.
2 பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது,
விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர்.
3 "நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று
அவர்களுடன் உணவு உண்டீர்?" என்று குறைகூறினர்.
4 பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார்.
5 "நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது
மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன்.
பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு
வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.
6 அதை நான் கவனமாக நோக்கியபோது,
தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன,
காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன்.
7 'பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு'
என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன்.
8 அதற்கு நான், 'வேண்டவே வேண்டாம் ஆண்டவரே,
தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும்
என் வாய்க்குள் சென்றதில்லை' என்றேன்.
9 இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக,
'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே'
என்று அக்குரல் ஒலித்தது.
10 இப்படி மும்முறை நடந்தபின்பு
யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன.
11 அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர்
நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர்.
12 தூய ஆவியார் என்னிடம்,
'தயக்கம் எதுமின்றி அவர்களோடு செல்' என்று கூறினார்.
உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம்.
13-14 அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும்,
அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்;
14 நீரும் உம்வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை
அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார்.
15 நான் பேசத் தொடங்கியதும்
தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்தது போல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது.
16 அப்போது, 'யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்;
ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'
என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்தேன். [1]
17 இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டபோது
நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக்
கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால்
கடவுளைத் தடுக்க நான் யார்?" என்றார். [2]
18 இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்;
வாழ்வுக்கு வழியான மனம்மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார்
என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
அந்தியோக்கிய திருச்சபை
[தொகு]
19 ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால்
மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர்.
அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்;
வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை. [3]
20 அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர்.
அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி
ஆண்டவராகிய இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.
21 ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள்.
பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர்.
22 இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே
அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள்.
23 அவர் அங்குச் சென்றபோது,
கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்;
மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு
அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
24 அவர் நல்லவர்;
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்
பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
25 பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்;
26 அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார்.
அவர்கள் ஒராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து
பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள்.
அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச்
சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
27 அப்போது ஒருநாள் எருசலேமிலிருந்து
இறைவாக்கினர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்தார்கள்.
28 அவர்களுள் அகபு என்னும் பெயருடைய ஒருவர் எழுந்து நின்று
தூய ஆவியாரால் ஏவப்பட்டவராய்
உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று முன்னுரைத்தார்.
அது கிளாதியு பேரரசர் காலத்தில் ஏற்பட்டது. [4]
29 அப்பொழுது சீடர்கள் ஒவ்வொருவரும்
தங்களால் இயன்ற பொருளுதவியை
யூதேயாவில் வாழ்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு அனுப்பத் தீர்மானித்தனர்.
30 அப்பொருளுதவியைப் பர்னபா, சவுல் ஆகியோர் வாயிலாக
மூப்பர்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள். [5]
- குறிப்புகள்
[1] 11:16 = திப 1:5.
[2] 11:17 = திப 15:9.
[3] 11:19 = திப 8:1-4; 21:4.
[4] 11:28 = திப 21:10.
[5] 11:30 = கலா 2:1.
அதிகாரம் 12
[தொகு]யாக்கோபு கொலை செய்யப்படுதலும் பேதுரு சிறையிடப்படுதலும்
[தொகு]
1 அக்காலத்தில் ஏரோது அரசன்,
திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான்.
2 யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான்.
3 அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன்
தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான்.
அது புளிப்பற்ற அப்பவிழா நாள்களில் நடந்தது.
4 அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு
நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான்.
பாஸ்கா விழாவுக்குப்பின் மக்கள் முன்பாக
அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். [1]
5 பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது
திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.
பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படல்
[தொகு]
6 ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில்,
பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே
இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.
காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்துகொண்டிருந்தார்கள்.
7 அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார்.
அறை ஒளிமயமாகியது.
அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, "உடனே எழுந்திடும்" என்று கூற,
சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.
8 வானதூதர் அவரிடம்,
"இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக் கொள்ளும்" என்றார்.
அவரும் அவ்வாறே செய்தார்.
தூதர் அவரிடம், "உமது மேலுடையை அணிந்து கொண்டு
என்னைப் பின்தொடரும்" என்றார்.
9 பேதுரு வானதூதரைப் பின் தொடர்ந்து சென்றார்.
தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை.
ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார்.
10 அவர்கள் முதலாம் காவல் நிலையையும்,
இரண்டாம் காவல் நிலையையும் கடந்து
நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது
அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது.
அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள்.
உடனே வானதூதர் அவரைவிட்டு அகன்றார்.
11 பேதுரு தன்னுணர்வு பெற்றபோது,
"ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து,
யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு
என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்" என்றார்.
12 அவர் யாவற்றையும் புரிந்துகொண்டவராய்
மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார்.
அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
13 அவர் வெளிக் கதவைத் தட்டியபோது
ரோதி என்னும் பெயருடைய பணிப்பெண், தட்டியது யாரெனப் பார்க்க வந்தார்.
14 அது பேதுருவின் குரல் என்பதை உணர்ந்ததும்
மகிழ்ச்சியால் வாயிலைத் திறக்காமல் உள்ளே ஓடி,
பேதுரு வாயில் அருகே நிற்கிறார் என்று அறிவித்தார்.
15 அவர்கள் அவரை நோக்கி,
"உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?" என்று கேட்டார்கள்.
ஆனால் அவர், "அது உண்மையே" என்று வலியுறுத்திக் கூறினார்.
அதற்கு அவர்கள், "அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்" என்றார்கள்.
16 பேதுரு விடாமல் தட்டிக் கொண்டேயிருந்தார்.
கதவைத் திறந்தபோது, அவர்கள் அவரைக் கண்டு மலைத்துப் போனார்கள்.
17 அவர்கள் அமைதியாயிருக்குமாறு பேதுரு கையால் சைகை காட்டி
ஆண்டவர் எவ்வாறு தம்மைச் சிறையிலிருந்து வெளியே கூட்டி வந்தார் என்பதை
அவர்களுக்கு எடுத்துரைத்து
யாக்கோபுக்கும் மற்றச் சகோதரர் சகோதரிகளுக்கும்
இதை அறிவிக்குமாறு கூறினார்.
பின்பு அவர் புறப்பட்டு வேறோர் இடத்துக்குப் போய்விட்டார்.
18 பொழுதுவிடிந்ததும், பேதுருவுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிப்
படைவீரர்களிடையே பெருங்குழப்பம் ஏற்பட்டது.
19 ஏரோது அவரைத் தேடிப் பார்க்கச் செய்தான்.
அவரைக் காணாததால் காவலரை விசாரித்து
அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.
பின்பு பேதுரு யூதேயாவை விட்டுச்
செசரியா சென்று அங்கே தங்கினார்.
எரோதின் சாவு
[தொகு]
20 ஏரோது தீர், சீதோன் மக்கள் மீது கடுஞ்சினம் கொண்டிருந்தான்.
அவர்கள் மனமொத்தவர்களாய் ஏரோதுவைக் காண வந்தார்கள்.
அவர்கள் அரண்மனை அந்தப்புர அதிகாரியான பிலாஸ்துவின் நல்லெண்ணத்தைப் பெற்று
அரசனோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார்கள்.
ஏனெனில் அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்துதான்
அவர்கள் உணவுப்பொருள்களைப் பெற்றுவந்தார்கள்.
21 குறித்த நாளில் ஏரோது அரச ஆடை அணிந்து
மேடையில் அமர்ந்து அவர்களுக்கு உரையாற்றினான்.
22 அப்போது மக்கள், "இது மனிதக் குரல் அல்ல;
கடவுளின் குரல்" என்று ஆர்ப்பரித்தனர்.
23 உடனே ஆண்டவரின் தூதர் அவனை அடித்தார்.
ஏனெனில் அவன் கடவுளைப் பெருமைப்படுத்தவில்லை;
அவன் புழுத்துச் செத்தான்.
24 கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது.
25 பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின்,
மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு,
எருசலேமிலிருந்து [2] திரும்பிச் சென்றனர்.
- குறிப்புகள்
[1] 12:4 = விப 12:1-27.
[2] 12:25 - "எருசலேமிலிருந்து...சென்றனர்" என்னும் சொற்றொடர்
சில முக்கிய கையெழுத்துப் படிகளில் "எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்" என்று உள்ளது.
(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை