திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
"சில நாள்களுக்குப் பின்பு பெலிக்சு தம் யூத மனைவியாகிய துருசில்லாவுடன் வந்தார். அவர் பவுலை வரவழைத்து, கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது பற்றி அவர் கூறியவற்றைக் கேட்டார். நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபோது பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து, 'இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்' என்று கூறினார்." - திருத்தூதர் பணிகள் 24:24-25

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]


1 பவுல் தலைமைச் சங்கத்தாரை உற்றுப் பார்த்து,
"சகோதரரே! நான் இந்நாள்வரை கடவுள் முன்னிலையில்
என் மனச்சான்றுக்கிசைய முற்றிலும் நேர்மையாக வாழ்ந்து வந்தேன்" என்றார்.
2 அப்பொழுது தலைமைக் குருவாகிய அனனியா அவரது வாயில் அடிக்கும்படியாக
அருகில் நிற்பவர்களைப் பணித்தார்.
3 பவுல் அவரிடம்,
"வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! கடவுள் உம்மை அடிப்பார்.
திருச்சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பளிக்க அமர்ந்திருக்கும் நீர்
அச்சட்டத்துக்கு முரணாக என்னை அடிக்க
எப்படி ஆணை பிறப்பிக்கலாம்?" என்று கேட்டார்.
4 அருகில் நின்றவர்கள்,
"கடவுளின் தலைமைக் குருவைப் பழிக்கிறாயே?" என்று கேட்டார்கள்.
5 அதற்குப் பவுல்,
"சகோதரரே! இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது.
ஏனெனில் 'உன் மக்களின் தலைவரைச் சபிக்காதே' என
மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார். [1]
6 அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும்,
மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து,
"சகோதரரே! நான் ஒரு பரிசேயன்.
பரிசேய மரபில் பிறந்தவன்;
இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு
விசாரிக்கப்படுகிறேன்" என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். [2]
7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும்
சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது.
எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.
8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும்
உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்;
பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர். [3]
9 அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது.
பரிசேயப் பிரிவினைச்சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து,
"இவரிடம் தவறொன்றையும் காணோமே!
வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!" என வாதாடினர்.
10 வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்து விடுவர் என
ஆயிரத்தவர் தலைவர் அஞ்சி
படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக்
கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.
11 மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று,
"துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல
உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்" என்றார்.

பவுலுக்கெதிரான சூழ்ச்சி[தொகு]


12 பொழுது விடிந்ததும் யூதர்கள் ஒன்று கூடி,
"நாங்கள் பவுலைக் கொல்லும் வரை உண்ணவோ, குடிக்கவோ மாட்டோம்" எனத்
தங்களிடையே சூளுரைத்துக் கொண்டார்கள்.
13 இவ்வாறு, சூழ்ச்சி செய்தவர்கள் எண்ணிக்கை நாற்பதுக்குக் கூடுதல் இருக்கும்.
14 அவர்கள் தலைமைக் குருவிடமும் மூப்பரிடமும் சென்று,
"நாங்கள் பவுலைக் கொல்லும் வரை எதுவும் உண்ண மாட்டோம் என்று
ஆணையிட்டு சூளுரைத்துள்ளோம்.
15 எனவே இப்போது நீங்களும் தலைமைச் சங்கத்தாரும்
மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்குடன்
அவரை உங்களிடம் கூட்டிக்கொண்டு வருவதாக
ஆயிரத்தவர் தலைவரிடம் தெளிவுபடுத்துங்கள்.
அவர் உங்களிடம் வந்து சேருமுன் அவரைக் கொன்றுவிட
நாங்கள் ஆயத்தமாயிருப்போம்" என்றார்கள்.
16 இச் சூழ்ச்சியைப் பற்றிப் பவுலின் சகோதரி மகன் கேள்விப்பட்டு,
கோட்டைக்குள் சென்று இதனைப் பவுலிடம் அறிவித்தார்.
17 பவுல் நூற்றுவர் தலைவர்களுள் ஒருவரை வரவழைத்து,
"இந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் செல்லுங்கள். அவரிடம் இவர் ஏதோ ஒன்று அறிவிக்க வேண்டுமாம்" என்றார்.
18 அவரும் அந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் சென்று அவரிடம்,
"கைதியான பவுல் என்னை வரவழைத்து
இந்த இளைஞரை உம்மிடம் கூட்டிக் கொண்டு வருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.
இவர் ஏதோ ஒன்று உம்மிடம் சொல்ல வேண்டுமாம்" என்றார்.
19 ஆயிரத்தவர் தலைவர் அவர் கையைப் பிடித்துத் தனியே கூட்டிச் சென்று,
"நீ என்னிடம் என்ன அறிவிக்க வேண்டும்?" என்று வினவினார்.
20 அவர், "யூதர்கள் பவுலை மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்கம் உடையவர்கள் போல்
அவரைத் தலைமைச் சங்கத்திற்கு நாளை கொண்டுவர
உம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென உடன்பாடு செய்து கொண்டுள்ளார்கள்.
21 நீர் அவர்களுக்கு இணங்க வேண்டாம்.
ஏனெனில் அவர்களுள் நாற்பதுக்கும் அதிகமானோர் சூழ்ச்சி செய்து
நாங்கள் பவுலைக் கொல்லும் வரை உண்ணவும்,
குடிக்கவும் மாட்டோம் எனச் சூளுரைத்துள்ளனர்.
உம்முடைய முடிவை அறிந்து கொள்ளத் தகுந்த ஏற்பாடுகளுடன்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னார்.
22 அப்போது ஆயிரத்தவர் தலைவர் இளைஞரிடம்,
"இவற்றை என்னிடம் தெரிவித்ததாக நீர் எவருக்கும் சொல்லாதீர்"
என்று கூறி அவரை அனுப்பிவிட்டார்.

பவுல் செசரியாவுக்கு ஆளுநர் பெலிக்சிடம் அனுப்பப்படுதல்[தொகு]


23 பின்பு ஆயிரத்தவர் தலைவர் நூற்றுவர் தலைவருள் இருவரை வரவழைத்து,
"இருநூறு படை வீரருடனும் எழுபது குதிரை வீரருடனும்
இரவு ஒன்பது மணிக்குச் செசரியா செல்லுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
24 பவுலை ஏற்றிச் செல்ல விலங்குகளையும் பார்த்து வையுங்கள்.
அவரை ஆளுநர் பெலிக்சிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டும்" என்றார்.
25 அவர் பெலிக்சுக்குப் பின்வருமாறு ஒரு கடிதத்தையும் எழுதினார்:
26 "மாண்புமிகு ஆளுநர் பெலிக்சு அவர்களுக்குக் கிலவுதியு லீசியாவின் வாழ்த்துக்கள்.
27 யூதர்கள் இம்மனிதரைப் பிடித்துக் கொல்லவிருந்த நேரத்தில்,
இவர் ஒரு உரோமைக் குடிமகன் என்பதை அறிந்து
படைவீரர்களுடன் சென்று இவரை நான் விடுவித்தேன்.
28 அவர்கள் இவர்மேல் குற்றம் சாட்டக் காரணம் என்ன என்று அறிந்து கொள்ள
நான் இவரைத் தலைமைச் சங்கத்துக்குக் கூட்டிச் சென்றேன்.
29 அவர்களுடைய திருச்சட்டம் சார்ந்த கருத்து வேறுபாடுகளின் காரணமாகத்தான்
இவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
சாவுக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் இவரிடத்தில் நான் காணவில்லை.
30 இவருக்கு எதிராக யூதர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்
என்னும் செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்ட உடனே
இவரை உம்மிடம் அனுப்பி வைக்கிறேன்.
இவருக்கு எதிராக குற்றம் சாட்டியோர் கூற வேண்டியவற்றை
உம்முன் வந்து கூறவும் கட்டளையிட்டுள்ளேன்."


31 படைவீரர்கள் தங்களுக்குப் பணிக்கப்பட்டவாறே
இரவிலேயே பவுலைக் கூட்டிக் கொண்டு அந்திப்பத்திரிக்குப் போனார்கள்.
32 மறுநாள் குதிரை வீரரைப் பவுலுடன் அனுப்பி விட்டு
மற்றவர்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
33 அவர்கள் செசரியா வந்தபோது அக்கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துப்
பவுலையும் அவர்முன் நிறுத்தினார்கள்.
34 ஆளுநர் கடிதத்தை வாசித்தபின்
பவுல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரெனக் கேட்டு
அவர் சிலிசியாவைச் சேர்ந்தவரென அறிந்து கொண்டார்.
35 பின்பு "உன்னைக் குற்றம் சாட்டுபவர்கள் இங்கு வந்து சேர்ந்ததும்
நான் உன் வழக்கைக் கேட்பேன்" என்று கூறி
ஏரோதின் மாளிகையில் அவரைக் காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தார்.


குறிப்புகள்

[1] 23:5 = விப 22:28.
[2] 23:6 = திப 26:5; பிலி 3:5.
[3] 23:8 = மத் 22:23; மாற் 12:18; லூக் 20:27.


அதிகாரம் 24[தொகு]

பவுலுக்கு எதிரான வழக்கு[தொகு]


1 ஐந்து நாளுக்குப்பின் தலைமைக்குருவான அனனியாவும் சில மூப்பர்களும்
வழக்குரைஞரான தெர்த்துல் என்பவரும் வந்து
பவுலுக்கெதிராக ஆளநரிடம் முறையிட்டார்கள்.
2-3 தெர்த்துல் அழைக்கப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டத் தொடங்கிக் கூறியது:
"மாண்புமிகு பெலிக்சு அவர்களே!
உம்மால் தான் நாட்டில் பேரமைதி நிலவுகிறது.
உம் தொலை நோக்கால்தான் இந்நாடு எல்லா இடங்களிலும்
எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.
இதனை நாங்கள் மிக்க நன்றியுணர்வோடு ஏற்றுக் கொள்கிறோம்.
4 இனியும் உம்முடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.
நான் கூற விரும்புவதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்;
நீர் பொறுமையுடன் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
5 தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம்.
இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்;
நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான்.
6 திருக்கோவிலை இவன் தீட்டுப்படுத்த முயன்றபோது
இவனை நாங்கள் பிடித்துக் கொண்டோம்.
[6ஆ - 8அ] [1]
8ஆ நீர் விசாரணை செய்தால் நாங்கள் இவன் மேல் சுமத்தும் குற்றம் அனைத்தும்
உண்மை என அறிய முடியும்."
9 யூதர்களும் அவரோடு சேர்ந்து இக்குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே எனக் கூறினார்கள்.

பெலிக்சின் முன்னிலையில் பவுல் தம் நிலையை விளக்குதல்[தொகு]


10 பவுல் பேசுமாறு ஆளுநர் சைகை காட்ட, அவர் கூறியது:
"பல ஆண்டுகளாக நீர் இந்த நாட்டின் நடுவராக இருந்து வருகிறீர் என்பதை
நான் அறிந்து நம்பிக்கையோடு என் நிலையை விளக்குகிறேன்.
11 நான் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குச் சென்று
பன்னிரண்டு நாள் கூட ஆகவில்லை என்பதை நீரே விசாரித்து அறிந்து கொள்ளலாம்.
12 நான் கோவிலில் எவரோடாவது விவாதித்ததையோ,
நகரிலோ தொழுகைக்கூடத்திடலோ மக்களிடையே கலக மூட்டியதையோ,
இவர்கள் யாருமே கண்டதில்லை.
13 இப்போது இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளையும்
உம்முன் இவர்களால் மெய்ப்பிக்க முடியாது.
14 ஆனால் இந்த ஒன்று மட்டும் உம்மிடம் நான் ஒப்புக்கொள்கிறேன்.
இவர்கள் ஒரு கட்சி எனக் கூறிவரும் கிறிஸ்தவ நெறியின்படியே,
நான் என் மூதாதையரின் கடவுளை வழிபட்டு வருகிறேன்;
திருச்சட்டத்திலும், இறைவாக்கினர் நூல்களிலும் உள்ள அனைத்திலும்
நம்பிக்கை கொண்டுள்ளேன்.
15 நேர்மையாளரும் நேர்மையற்றோரும் உயிர்த்தெழுவர் என்று
அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள்.
அதே எதிர்நோக்கைக் கடவுள் எனக்கும் கொடுத்துள்ளார்.
16 அவர்களைப் போல நானும் கடவுள் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும்
எப்போதும் குற்றமற்ற மனச்சான்றோடு வாழ முயலுகிறேன்.
17 பல ஆண்டுகளுக்குப் பின் என் இனத்தார்க்குப் பண உதவி செய்யவும்
பலி செலுத்தவும் நான் இங்கு வந்தேன்.
18 நான் கோவிலில் தூய்மைச் சடங்கு செய்துகொண்டிருந்தபோது
இவர்கள் என்னைக் கண்டார்கள்.
அப்போது அங்கு மக்கள் கூட்டமோ அமளியோ இல்லை. [2]
19 ஆனால் ஆசியாவிலிருந்து வந்த யூதருள் சிலர் அங்கிருந்தனர்.
எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால்
அவர்கள் உமக்குமுன் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.
20 அல்லது நான் தலைமைச் சங்கத்தரால் விசாரிக்கப்பட்டபோது
என்னிடம் என்ன குற்றம் கண்டார்களென
இங்கிருப்பவர்களாவது எடுத்துச் சொல்லட்டும்.
21 சங்கத்தார் நடுவில் நின்று, 'இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால்தான்
இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன்'
என்று உரத்த குரலில் கூறினேன்.
இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்." [3]


22 கிறிஸ்தவ நெறியைப் பற்றி மிகத் திட்டவட்டமாக அறிந்திருந்த பெலிக்சு,
"ஆயிரத்தவர் தலைவரான லீசியா வரும்போது உங்களை விசாரிப்பேன்"
என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
23 அதோடு அவர், "பவுலைக் காவலில் வையுங்கள்; ஆனால் கடுங்காவல் வேண்டாம்;
பணிவிடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்" என
நூற்றுவர் தலைவரிடம் பணித்தார்.

பவுல் காவலில் வைக்கப்படுதல்[தொகு]


24 சில நாள்களுக்குப் பின்பு பெலிக்சு தம் யூத மனைவியாகிய துருசில்லாவுடன் வந்தார்.
அவர் பவுலை வரவழைத்து,
கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது பற்றி அவர் கூறியவற்றைக் கேட்டார்.
25 நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபோது
பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து,
"இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்" என்று கூறினார்.
26 அதே வேளையில் பவுல் தமக்குப் பணம் கொடுப்பாரென அவர் எதிர்பார்த்தார்;
ஆகையால் அடிக்கடி பவுலை வரவழைத்து அவரோடு உரையாடி வந்தார்.
27 இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் பெலிக்சுக்குப் பின்
பொர்க்கியு பெஸ்து ஆளுநர் பதவியேற்றார்.
பெலிக்சு யூதரது நல்லெண்ணத்தைப் பெற பவுலைக் கைதியாக விட்டுச் சென்றார்.


குறிப்புகள்

[1] [24:6ஆ-8அ] - 6ஆ 'நாங்கள் எங்கள் திருச்சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்க விரும்பினோம்.
7 ஆனால் ஆயிரத்தவர் தலைவரான லீசியா வந்து
வலுக்கட்டாயமாக இவனை எங்களிடமிருந்து கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
8அ இவனுக்கு எதிராகக் குற்றம் சாட்டுவோர் உம்மிடம் வர
ஆணை பிறப்பித்தார்'
என சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.
[2] 24:17,18 = திப 21:17-28.
[3] 24:21 = திப 23:6.


(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை