திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/தீத்துக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்." (தீத்து 1:5)

தீத்துக்கு எழுதிய திருமுகம் (Titus) [1][தொகு]

முன்னுரை

ஆயர்பணித் திருமுகங்களில் மூன்றாவதாக வருவது தீத்துக்கு எழுதிய இந்தத் திருமுகம். விவிலிய வரிசையில் மூன்றாவதாக வந்தாலும் இதுவே முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அவை எழுதப்பட்ட காலத்தை அடிப்படையாகக்கொண்டு அல்ல, அவற்றின் அளவை அடிப்படையாகக் கொண்டே வரிசைப்படுத்தினார்கள். தீத்து என்பவர் பிற இனத்துக் கிறிஸ்தவர். அவர் பவுலுடன் அந்தியோக்கியாவிலிருந்து எருசலேம் சென்றார் (கலா 2:1; திப 15:2); பவுலின் மூன்றாம் பயணத்தின்போது உடன் சென்றார் (2 கொரி 1:13; 7:6; 13:4).

அவர் கிரேத்துத் தீவின் ஆயராக விளங்கும்போது இத்திருமுகம் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. அங்கே மூப்பர்கள், ஆயர்களை நியமிக்கும் பொறுப்பு இவரிடம் இருந்தது.

உள்ளடக்கம்[தொகு]

கிரேத்துத் தீவில் திருச்சபை வளர்ச்சி குன்றிய சூழ்நிலையில் தீத்து சரியான உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பணிக்கிறார் இத்திருமுக ஆசிரியர் (1:15-16); கிரேத்துச் சபையிலுள்ள முதியவர், இளைஞர், அடிமைகள் ஆகியோருக்கு எப்படிப் போதிப்பது என எடுத்துக் காட்டுகிறார்; இறுதியாகக் கிறிஸ்தவ நல்லொழுக்கத்துடன் அமைதியுடனும் அன்புடனும் இருத்தல், பகைமை, வாக்குவாதம், பிளவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தல் ஆகியவை குறித்துப் பேசுகிறார்; கிரேத்து மக்கள் தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ளக் கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பலியே முன் மாதிரி என்கிறார்.

தீத்து[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1-4 406
2. கிரேத்துவில் தீத்துவின் பணி 1:5-16 406 - 407
3. திருச்சபையில் பல்வேறு குழுக்களின் கடமைகள் 2:1-15 407
4. அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் 3:1-11 407 - 408
5. முடிவுரை 3:12-15 408

தீத்து (Titus)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

வாழ்த்து[தொகு]


1-4 அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில்
என் உண்மைப் பிள்ளை தீத்துக்கு,
கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:


தந்தையாம் கடவுளிடமிருந்தும்
நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும்
நம்பிக்கை கொள்ளவும்
நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும்
நான் திருத்தூதனாய் இருக்கிறேன்.
இந்நிலை வாழ்வை, பொய் கூறாத கடவுள்,
காலங்கள் தொடங்கு முன்னே வாக்களித்தார்.
ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத்
தம் செய்தியை வெளிப்படுத்தினார்.
இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி
நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. [1]

2. கிரேத்துவில் தீத்துவின் பணி[தொகு]

திருச்சபைத் தலைவர்கள்[தொகு]


5 நான் உனக்குப் பணித்தபடியே
கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து,
நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.
6 இம்மூப்பர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும்
ஒரு மனைவியைக் கொண்டவராயும் [2]
நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும்.
தாறுமாறாக வாழ்பவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவோ
கட்டுக்கடங்காதவர்களாகவோ இருக்கக் கூடாது.
7 ஏனெனில் சபைக் கண்காணிப்பாளர்கள் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால்,
அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும்.
அகந்தை, முன் கோபம், குடிவெறி, வன்முறை,
இழிவான ஊதியத்தின்மேல் ஆசை ஆகியவை இவர்களிடம் இருக்கக்கூடாது.
8 மாறாக, அவர்கள் விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு,
நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.
9 அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மைச் செய்தியைப்
பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
அப்பொழுது அவர்கள் நலந்தரும் போதனையை அறிவுறுத்தவும்
எதிர்த்துப் பேசுவோரின் தவற்றை எடுத்துக் காட்டவும் வல்லவர்களாய் இருப்பார்கள். [3]


10 ஏனெனில், பலர், குறிப்பாக விருத்தசேதனத்தில் நம்பிக்கை கொண்டோர்
கட்டுகடங்காதவராயும் வீண்வாதம் செய்பவராயும் ஏய்ப்பவராயும் இருக்கின்றனர்.
11 அவர்களது வாயை அடைக்கவேண்டும்.
அவர்கள் இழிவான ஊதியத்திற்காகத் தகாதவற்றைக் கற்பித்துக்
குடும்பம் குடும்பமாகச் சீர்குலையச் செய்கிறார்கள்.
12 அவர்களுடைய இறைவாக்கினர் ஒருவரே,
"கிரேத்தர்கள் ஓயாப் பொய்யர்கள்,
கொடிய காட்டுமிராண்டிகள்,
பெருந்தீனிச் சோம்பேறிகள்" என்று கூறியுள்ளார்.
13-14 அவரது சான்று உண்மையே.
எனவே உண்மையைப் புறக்கணிக்காமலும்,
14 யூதப் புனைகதைகளிலும் மனிதக் கட்டளைகளிலும் கவனம் செலுத்தாமலும்,
விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி
அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.
15 தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையே.
மாசுபடிந்த மனத்தோருக்கும் நம்பிக்கை கொண்டிராதோருக்கும் எதுவுமே தூய்மையாயிராது.
அவர்கள் மனமும் மனச்சான்றும் கூட மாசுபடிந்தவை.
16 கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் அறிக்கை இடுகிறார்கள்.
ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன.
அவர்கள் அருவருக்கத் தக்கவர்கள்; கீழ்ப்படியாதவர்கள்;
எந்த நற்செயலையும் செய்யத் தகுதியற்றவர்கள்.


குறிப்புகள்

[1] 1:4 = 2 கொரி 8:23; கலா 2:3; 2 திமொ 4:10.
[2] 1:6 - இதனை "ஒரேமுறை திருமணம் செய்தவராயும்" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[3] 1:6-9 = 1 திமொ 3:2-17.


அதிகாரம் 2[தொகு]

3. திருச்சபையில் பல்வேறு குழுக்களின் கடமைகள்[தொகு]


1 நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு.
2 வயது முதிர்ந்த ஆண்கள் அறிவுத்தெளிவு, கண்ணியம்,
கட்டுப்பாடு உடையவர்களாய் இருந்து
நம்பிக்கை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றை நன்கு காத்துக்கொள்ளச் சொல்.
3 அவ்வாறே வயது முதிர்ந்த பெண்களும் தூய நடத்தை உடையவர்களாய்,
புறங்கூறாதவர்களாய், குடிவெறிக்கு அடிமை ஆகாதவர்களாய்,
நற்போதனை அளிப்பவர்களாய் இருக்குமாறு கூறு.
4 இவ்வாறு கற்றுக் கொடுப்பதால்
இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி,
5 கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய்
வீட்டுவேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த்
தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள்.
அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.


6 அவ்வாறே இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூறு.
7 நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு;
நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு.
8 யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு.
அப்பொழுது எதிரிகள் நம்மைப்பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள்.


9 அடிமைகள் தங்கள் தலைவர்களுக்கு அனைத்திலும் பணிந்து நடந்து,
அவர்களுக்கு உகந்தவர்களாய் இருக்கவேண்டும்; எதிர்த்துப் பேசலாகாது எனக் கூறு.
10 அவர்கள் கையாடல் செய்யாது,
முழு நம்பிக்கைக்குரிய நல்லவர்கள் என்று நடத்தையில் காட்ட வேண்டும்.
அப்பொழுது நம் மீட்பராம் கடவுளின் போதனை எல்லா வகையிலும் சிறப்புப் பெறும்.


11 ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
12 நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக்
கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும்
இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம்.
13 மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம்.
நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.
14 அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு,
நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத்
தம்மையே ஒப்படைத்தார். [*]


15 நீ இவைபற்றிப் பேசு;
முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள்.
யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே.


குறிப்பு

[*] 2:14 = விப 19:5; இச 4:20; 7:6; 14:2; 1 பேது 2:9.


(தொடர்ச்சி): தீத்துக்கு எழுதிய திருமுகம்: அதிகாரம் 3