உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/பேதுரு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 4 முதல் 5 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்." (1 பேதுரு 5:8-9)

1 பேதுரு (1 Peter)

[தொகு]

அதிகாரங்கள் 4 முதல் 5 வரை

அதிகாரம் 4

[தொகு]

மாற்றம் பெற்ற வாழ்க்கை

[தொகு]


1 எனவே, கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார்.
அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை
நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள்.
ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர்.
2 அவர்கள் தங்கள் ஊனுடல் வாழ்வின் எஞ்சிய காலமெல்லாம்
மனிதருடைய தீயநாட்டங்களுக்கு இசையாமல் கடவுளின் திருவுளப்படி வாழ்கின்றார்கள்.
3 பிற இனத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம்
நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும்.
அப்பொழுது நீங்கள் காமவெறி, இச்சை, மதுமயக்கம்,
களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலைவழிபாடு ஆகியவற்றில் காலத்தைக் கழித்தீர்கள்.
4 இப்போதோ நீங்கள் அவர்களோடு சேர்ந்து அத்தகைய தாறுமாறான வழிகளில் நடப்பதில்லை.
இதை அவர்கள் கண்டு வியப்படைகிறார்கள்; இதனால் உங்களைப் பழிக்கிறார்கள்.
5 ஆனால், உயிருள்ளோருக்கும் இறந்தோருக்கும்
தீர்ப்பளிக்க ஆயத்தமாய் இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.
6 இறந்தோர் ஊனுடலில் மனிதருக்குரிய தீர்ப்புப் பெறுவர்;
ஆவியில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவர்.
இதற்காகவே இறந்தோருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.

அருள்கொடைகளின் பொறுப்பாளர்கள்

[தொகு]


7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது.
எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும்
அறிவுத் தெளிவோடும் இருங்கள்.
8 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்.
ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். [1]
9 முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.
10 நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள்.
எனவே உங்களுள் ஒவ்வொருவருக்கும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.
11 ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால்,
அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும்.
ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால்,
கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்;
இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக்
கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார்.
அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.

4. துன்புறுத்தப்படுவோருக்கு அறிவுரை

[தொகு]

கிறிஸ்தவ வாழ்வில் துன்பங்கள்

[தொகு]


12 அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது,
ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள்.
13 மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள்
இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள்.
அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில்
இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.
14 கிறிஸ்துவின்பொருட்டுப் பிறர் உங்கள்மீது
வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள்.
ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி [2] உங்கள் மேல் தங்கும்.
15 ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள்,
நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ,
பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது.
16 மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால்,
அதற்காக வெட்கப்படலாகாது.
அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.


17 ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது.
நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால்,
கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?


18 "நேர்மையாளரே மீட்கப்படுவது அரிதென்றால்,


இறைப்பற்றில்லாதோரும், பாவிகளும்


தண்டனை பெறுவது திண்ணமன்றோ!" [3]


19 ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள்
நன்மை செய்வதில் நிலைத்திருந்து
படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.


குறிப்புகள்

[1] 4:8 = நீமொ 10:12.
[2] 4:14 - "கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி" என்னும் சொற்றொடர்
சில முக்கிய கையெழுத்துப் படிகளில்
"கடவுளின் மாட்சியும் வல்லமையும் மிக்க தூய ஆவி" என்று காணப்படுகிறது.
[3] 4:18 = நீமொ 11:31.


அதிகாரம் 5

[தொகு]

மூப்பர்களுக்கும் மக்களுக்கும் அறிவுரை

[தொகு]


1 கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும்,
வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்கு கொள்ளப் போகிறவனுமாகிய நான்,
உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை:
2 உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்;
கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்;
ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். [1]
3 உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள்.
4 தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.


5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள்.
ஒருவர் மற்றவரோடு பழகும்போது
எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில்,


"செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்;
தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்." [2]


6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்;
அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். [3]
7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள்.
ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.


8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள்.
உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக்
கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.
9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்.
உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள்
உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்
என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?
10 எல்லா அருளும் நிறைந்த கடவுள்,
இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள
உங்களை அழைத்திருக்கிறார்.
சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி,
வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.

5. முடிவுரை

[தொகு]

இறுதி வாழ்த்து

[தொகு]


12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச்
சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன்.
உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச்
சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். [4]
13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும்,
என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.
இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!


குறிப்புகள்

[1] 5:2 = யோவா 21:15-17.
[2] 5:5 = நீமொ 3:31.
[3] 5:6 = மத் 23:12; லூக் 14:11; 18:14.
[4] 5:12 = திப 15:22,40.


(1 பேதுரு திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 3 வரை