திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்". - மாற்கு 1:12-13

மாற்கு நற்செய்தி (Mark) [1][தொகு]

முன்னுரை

ஆசிரியர்[தொகு]

மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு. மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் கூடி வழிபட்டு வந்தனர் (திப 12:12). மாற்கு 14:51,52இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்தூதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில்தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து.

சூழல்[தொகு]

நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி. 64ஆம் ஆண்டில் இருந்து 70ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு, பவுல் போன்ற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக்கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்நற்செய்தி நூல் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்படதாகத் தெரிகிறது. இந்நூலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய மரபுகளை, சிறப்பாக அவருடைய வல்ல செயல்கள், உவமைகள், கூற்றுகள் ஆகியவற்றைத் தமக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகத் தொகுத்து எழுதியுள்ளார். இவ்வாறு இயேசுவே மெசியா, இறைமகன் என்னும் உறுதியில் பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் வளர இந்நூல் பெரிதும் உதவியாக அமைகிறது.

உள்ளடக்கம்[தொகு]

"கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி" என்னும் தொடக்கச் சொற்களே நற்செய்தி நூலுக்குத் தலைப்பாக அமைகின்றன.

இந்நூலின் முதல் பகுதியில் இயேசு கிறிஸ்து மாட்சிமை மிக்க இறைமகனாகிய மெசியா (1:1) என்பதையும் மனம்மாறும் மக்கள் பாவமன்னிப்புப் பெற்று, இறையாட்சியில் உரிமைக் குடிமக்களாகும் தகுதி பெறுகின்றனர் (1:15) என்பதையும் இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கலிலேயாவில் மக்கள் திரளுக்குப் பணிபுரியும் இயேசு, சீடர்களோடு இணைந்து செயல்பட்டு, பேய்கள் மற்றும் சமயத் தலைவர்களின் அதிகாரத்தை அடக்குகின்றார் என்பதை, மற்ற நற்செய்தி ஆசிரியர்களைவிட விளக்கமாக இவர் எடுத்துரைக்கிறார்.

இயேசு கிறிஸ்து மக்கள் அனைவருக்கும் மீட்பு வழங்கும் துன்புறும் மானிட மகன் (10:45) என்ற கருத்து, இரண்டாம் பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது. "இயேசு கிறிஸ்து துன்பங்கள் பட்டு இறந்து உயிர்பெற்றெழுந்து மீட்பரானார்" என்னும் தொடக்க காலத் திருச்சபையின் மையப் போதனையை, இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில், இந்நூல் ஆசிரியர் விரித்துக் கூறுகின்றார்.


மாற்கு நற்செய்தி[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
பகுதி 1. முன்னுரை 1:1-13 64
பகுதி 2: இயேசுவே மெசியா (1:14 - 8:30)

1. இயேசுவும் மக்கள் கூட்டமும்
2. இயேசுவும் சீடர்களும்
3. இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல்
4. இயேசு மெசியா என்னும் அறிக்கை

1:14 - 3:6
3:7 - 6:6அ
6:6ஆ - 8:26
8:27-30

64 - 79
பகுதி 3: இயேசுவே மானிட மகன் (8:31 - 16:8)

1. பயணம் செய்யும் மானிடமகன்
2. எருசலேமில் மானிடமகன்
3. மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல்

8:31 - 10:52
11:1 - 13:37
14:1 - 16:8

79 - 98
பகுதி 4. முடிவுரை 16:9-20 98 - 99

மாற்கு நற்செய்தி (Mark)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

திருமுழுக்கு யோவானின் உரை[தொகு]

(மத் 3:1-12; லூக் 3:1-9, 15-17; யோவா 1:19-28)


1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:

2 "இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்;


அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். [1]
3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது;
ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்;


அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்"


என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. [2]
4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து,
பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித்
திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.
5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும்
அவரிடம் சென்றனர்;
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு
யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்;
தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்;
வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். [3]
7 அவர் தொடர்ந்து,
"என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார்.
குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட
எனக்குத் தகுதியில்லை.
8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்;
அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்"
எனப் பறைசாற்றினார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்[தொகு]

(மத் 3:13-17; லூக் 3:21-22)


9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள
நாசரேத்திலிருந்து வந்து
யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே
வானம் பிளவுபடுவதையும்
தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.
11 அப்பொழுது,
"என் அன்பார்ந்த மகன் நீயே,
உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று
வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. [4]

இயேசு சோதிக்கப்படுதல்[தொகு]

(மத் 4:1-11; லூக் 4:1-13)


12 உடனே தூய ஆவியால் அவர்
பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்;
அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;
அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார்.
வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

2. இயேசுவே மெசியா[தொகு]

இயேசுவும் மக்கள் கூட்டமும்[தொகு]

கலிலேயாவில் இயேசு பணி தொடங்குதல்[தொகு]

(மத் 4:12-17; லூக் 4:14-15)


14 யோவான் கைதுசெய்யப்பட்டபின்,
கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே
இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.
15 "காலம் நிறைவேறிவிட்டது.
இறையாட்சி நெருங்கி வந்து விட்டது;
மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்"
என்று அவர் கூறினார். [5]

முதல் சீடர்களை அழைத்தல்[தொகு]

(மத் 4:18-22; லூக் 5:1-11)


16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது
சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார்.
மீனவர்களான அவர்கள் கடலில்
வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
17 இயேசு அவர்களைப் பார்த்து,
"என் பின்னே வாருங்கள்;
நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.
18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு
அவரைப் பின்பற்றினார்கள்.
19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது
செபதேயுவின் மகன் யாக்கோபையும்
அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார்.
அவர்கள் படகில் வலைகளைப்
பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்.
அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக்
கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு
அவர் பின் சென்றார்கள்.

தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்தல்[தொகு]

(லூக் 4:31-37)


21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள்.
ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று
கற்பித்து வந்தார்.
22 அவருடைய போதனையைக் குறித்து
மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி,
அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில்
தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.
24 அவரைப் பிடித்திருந்த ஆவி,
"நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை?
எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?
நீர் யார் என எனக்குத் தெரியும்.
நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது.
25 "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று
இயேசு அதனை அதட்டினார்.
26 அப்பொழுது அத்தீய ஆவி
அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப்
பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.
27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று,
"இது என்ன? இது அதிகாரம் கொண்ட
புதிய போதனையாய் இருக்கிறதே!
இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்;
அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று
தங்களிடையே பேசிக் கொண்டனர்.
28 அவரைப் பற்றிய செய்தி
உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும்
இயேசு பலருக்குக் குணமளித்தலும்
[தொகு]

(மத் 8:14-17; லூக் 4:38-41);;


29 பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு
வெளியே வந்து
யாக்கோபு, யோவானுடன் சீமோன்,
அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார்.
உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.
31 இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து
அவரைத் தூக்கினார்.
காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று.
அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.


32 மாலை வேளையில்,
கதிரவன் மறையும் நேரத்தில்
நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும்
மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.
33 நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.
34 பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை
அவர் குணப்படுத்தினார்.
பல பேய்களையும் ஓட்டினார்;
அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால்
அவற்றை அவர் பேசவிடவில்லை.

ஊர்கள் தோறும் நற்செய்தி முழக்கம்[தொகு]

(லூக் 4:42-44)


35 இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து
தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும்
அவரைத் தேடிச் சென்றார்கள்.
37 அவரைக் கண்டதும்,
"எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்கள்.
38 அதற்கு அவர்,
"நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள்.
அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்;
ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார்.
39 பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று
அவர்களுடைய தொழுகைக் கூடங்களில்
நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார். [6]

தொழுநோயாளர் நலமடைதல்[தொகு]

(மத் 8:1-4; லூக் 5:12-16)


40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து,
"நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று
முழந்தாள் படியிட்டு வேண்டினார்.
41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு
தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம்,
"நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார்.
42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க,
அவர் நலமடைந்தார்.
43 பிறகு அவரிடம்,
"இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும்.
ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி,
நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள
காணிக்கையைச் செலுத்தும்.
44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று
மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். [7]
45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று
இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார்.
அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும்
வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை;
வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார்.
எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும்
அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.


குறிப்புகள்

[1] 1:2 = மலா 3:1.
[2] 1:3 = எசா 40:3; யோவா 1:23.
[3] 1:6 = 2 அர 1:8.
[4] 1:11 = திபா 2:7; எசா 42:1; மத் 3:17; 12:18; மாற் 9:7; லூக் 3:22.
[5] 1:15 = மத் 3:2.
[6] 1:39 = மத் 1:23; 9:35.
[7] 1:44 = லேவி 14:1-32.


அதிகாரம் 2[தொகு]

முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்தல்[தொகு]

(மத் 9:1-8; லூக் 5:17-26)


1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார்.
அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.
2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று.
அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.
3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை
நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.
4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால்
அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை.
எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே
வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி,
முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.
5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு,
முடக்குவாதமுற்றவரிடம்,
"மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.


6-7 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர்,
"இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?
இவன் கடவுளைப் பழிக்கிறான்.
கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?"
என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை
இயேசு தம்முள் உணர்ந்து,
அவர்களை நோக்கி,
"உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?
9 முடக்குவாதமுற்ற இவனிடம்
'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா?
'எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட' என்பதா? எது எளிது?
10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க
மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை
நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,
11 "நான் உனக்குச் சொல்கிறேன்,
நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு

உனது வீட்டுக்குப் போ" என்றார்.
12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
எல்லாரும் காண வெளியே சென்றார்.
இதனால் அனைவரும் மலைத்துப்போய்,
"இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

லேவியை அழைத்தல்[தொகு]

(மத் 9:9-3; லூக் 5:27-32)


13 இயேசு மீண்டும் கடலோரம் சென்றார்.
மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே,
அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.
14 பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது
அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில்
அமர்ந்திருந்ததைக் கண்டார்;
அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்றார்.
அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
15 பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது
வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர்
இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.
16 அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப்
பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு,
அவருடைய சீடரிடம்,
"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?"
என்று கேட்டனர்.
17 இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி,
"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை.
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.

நோன்பு பற்றிய கேள்வி[தொகு]

(மத் 9:14-17; லூக் 5:33-39)


18 யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர்.
சிலர் இயேசுவிடம்,
"யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க,
உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்று கேட்டனர்.
19 அதற்கு இயேசு அவர்களை நோக்கி,
"மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள்
நோன்பு இருக்கமுடியுமா?
மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம்
அவர்கள் நோன்பிருக்க முடியாது.
20 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப்
பிரியவேண்டிய காலம் வரும்.
அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
21 எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை.
அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்;
கிழிசலும் பெரிதாகும்.
22 அதுபோலப் பழைய தோற்பைகளில்,
எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை.
ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்;
மதுவும் தோற்பைகளும் பாழாகும்.
புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது" என்றார்.

ஓய்வுநாளில் கதிர் கொய்தல்[தொகு]

(மத் 12:1-8; லூக் 6:1-5)


23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது.
அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். [1]
24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம்,
"பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை
ஏன் இவர்கள் செய்கிறார்கள்?" என்று கேட்டனர்.
25 அதற்கு அவர் அவர்களிடம்,
"தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப்
பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை
நீங்கள் வாசித்ததே இல்லையா?
26 அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது
தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று,
குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத
அர்ப்பண அப்பங்களைத்
தாம் உண்டதுமன்றித்
தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்றார். [2] [3]
27 மேலும் அவர் அவர்களை நோக்கி,
"ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது;
மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. [4]
28 ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.


குறிப்புகள்

[1] 2:23 = இச 23-25.
[2] 2:25,26 = 1 சாமு 21:1-6.
[3] 2:26 = லேவி 24:9.
[4] 2:27 = இச 5:14.


(தொடர்ச்சி): மாற்கு நற்செய்தி: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை