திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யாக்கோபு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 3 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது. காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர். ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை." (யாக்கோபு 3:5-8)

யாக்கோபு எழுதிய திருமுகம் (James) [1][தொகு]

முன்னுரை

இத்திருமுகம் உலகெங்கும் சிதறுண்டு வாழும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தினருக்கும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் யூதக் கிறிஸ்தவர்கள், ஆயினும் திருமுகம் தரும் போதனை யூதக் கிறிஸ்தவர்களுக்கும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தவே அமைந்துள்ளது.

இத்திருமுகம் கிறிஸ்தவ நடைமுறை வாழ்வுக்கான அறிவுரை எனினும் பழைய ஏற்பாட்டின் ஞானநூல்களின் தன்மையைக் கொண்டுள்ளது. இது எழுதப்பட்ட காலத்தைக் கணிப்பது கடினம். வெவ்வேறு விவிலிய அறிஞர்கள் கி.பி. 50இலிருந்து 100 வரையுள்ள வெவ்வேறு காலக் கணிப்புகளைக் கொடுக்கிறார்கள்.

ஆசிரியர்[தொகு]

யாக்கோபு திருமுகத்தின் ஆசிரியர் தம்மைப் பற்றிக் "கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு" என்று குறிப்பிடுகிறார் (1:11). மரபுக் கருத்துப்படி யாக்கோபு ஆண்டவரின் சகோதரர்; எருசலேம் திருச்சபையின் தலைவர்; பவுலுடன் தொடர்பு கொண்டிருந்தவர் (கலா 1:19; 2:9,12; திப 15:13).

ஆனால் இக்கருத்துக்களைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்; ஏனெனில் கடிதத்தின் நடை, கருத்துக்கள், இயேசுவோடுள்ள நெருக்கமான உறவு பற்றிய குறிப்பின்மை போன்றவற்றின் அடிப்படையில் இத்திருமுகத்தின் ஆசிரியர் வேறு ஒரு யாக்கோபாக இருக்கலாம் என எண்ணுகிறார்கள்.

உள்ளடக்கம்[தொகு]

இத்திருமுகத்தின் முக்கியக் கருத்து கிறிஸ்தவர் ஒருவர் தம் அன்றாடக் கடமைகளைப் பிழையின்றிச் செய்து முடிக்க வேண்டும் என்பதாகும். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு தன்னல மறுப்பையும் தூய வாழ்வையும் உள்ளடக்கியது (1:1-27). நம்பிக்கை, பிறரன்பு போன்றவை செயல்களில் காட்டப்பட வேண்டும். செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை (2:1-26). நாவை அடக்குதல், அமைதி வாழ்விற்கான ஆர்வம் ஆகியவை ஒருவரை ஞானியாகவும், தூயவராகவும் மாற்றுகின்றன (3:1-18). பாவம் பிளவின் காரணம். திருமுகத்தின் இறுதியில் அனைவருக்கும் எழுச்சியுரை தரப்படுகிறது (4-5).

யாக்கோபு[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1 435
2. சோதனைகள் 1:2-18 435
3. அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் 1:19 - 5:20 435 - 440

யாக்கோபு (James)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 3 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

வாழ்த்து[தொகு]


1 சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு,
கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு
வாழ்த்துக் கூறி எழுதுவது: [1]

2. சோதனைகள்[தொகு]

நம்பிக்கையும் ஞானமும்[தொகு]


2 என் சகோதர சகோதரிகளே,
பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள்
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள்.
3 உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும்.
4 உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும்.
அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
5 உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்;
அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார்.
அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்.
6 ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும்.
ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்.
7-8 எனவே இத்தகைய இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள்
ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.

ஏழ்மையும் செல்வமும்[தொகு]


9 தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள்
தாங்கள் உயர்வுபெறும்போது மகிழ்ச்சியடைவார்களாக!
10 செல்வச் செழிப்பில் இருப்பவர்கள்
தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக!
ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப்போல மறைந்தொழிவார்கள்.
11 கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம்.
அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும்.
அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர். [2]

கடவுளும் சோதனையும்[தொகு]


12 சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்.
ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது,
தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த
வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்.
13 சோதனை வரும்போது,
'இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது' என்று யாரும் சொல்லக்கூடாது.
ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை.
அவரும் எவரையும் சோதிப்பதில்லை.
14 ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர்.
அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது.
15 பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது.
பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.
16 என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம்.
17 நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம்,
ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.
அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை;
அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல.
18 தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி
உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

3. அறிவுரைகளும் எச்சரிக்கைகளும்[தொகு]

இறைவார்த்தையைக் கேட்டலும் செயல்படுதலும்[தொகு]


19 என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்:
ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும்
பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்டவேண்டும்.
20 ஏனெனில் மனிதரின் சினம்
கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது.
21 எனவே எல்லா வகையான அழுக்கையும்,
உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி,
உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
அதுவே உங்களை மீட்க வல்லது.
22 இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து
உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.
அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
23-24 ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர்,
கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று
உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்து விடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர்.
25 ஆனால் நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து
அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்துவிடுவதில்லை;
அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்;
தம் செயல்களால் பேறு பெற்றவர் ஆவார்கள்.
26 தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக்கொண்டிருப்போர்
தம் நாவை அடக்காமலிப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்.
இத்தகையோருடைய சமயப் பற்று பயனற்றது.
27 தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும்
மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில்,
துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும்
உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.


குறிப்புகள்

[1] 1:1 = மத் 13:55; மாற் 6:3; திப 15:13; கலா 1:19.
[2] 1:10,11 = எசா 40:6-7.

அதிகாரம் 2[தொகு]

ஏழைகளை மதித்தல்[தொகு]


1 என் சகோதர சகோதரிகளே,
மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள்
ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்.
2 பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும்
அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும்
உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
3 அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி
அவரைப் பார்த்து,
"தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று சொல்கிறீர்கள்.
ஏழையிடமோ, "அங்கே போய் நில்" என்றோ
அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார்" என்றோ சொல்கிறீர்கள்.
4 இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி,
தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?


5 என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
நான் சொல்வதைக் கேளுங்கள்:
உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும்
தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை
உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா?
6 நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்?
செல்வர் அல்லவா?
7 கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா?


8 "உன்மீது நீ அன்புகூர்வதுபோல்
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!"


என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது.
இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. [1]
9 மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்;
நீங்கள் குற்றவாளிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.
10 ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினாலும்
அவர் அனைத்தையும் மீறிய குற்றத்துக்குள்ளாவார்.
11 ஏனெனில் "விபசாரம் செய்யாதே" என்று கூறியவர்
"கொலை செய்யாதே" என்றும் கூறியுள்ளார்.
நீங்கள் விபசாரம் செய்யாவிட்டாலும்
கொலை செய்வீர்களென்றால் சட்டத்தை மீறியவர்களாவீர்கள். [2]
12 விடுதலையளிக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட வேண்டியவர்களுக்கு ஏற்றதாய்
உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல் வேண்டும்.
13 ஏனெனில் இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும்.
இரக்கமே தீர்ப்பை வெல்லும்.

நம்பிக்கையும் நற்செயல்களும்[தொகு]


14 என் சகோதர சகோதரிகளே,
தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர்
அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன?
அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?
15 ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி
போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது,
அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல்
உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து,
16 "நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்;
பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன?
17 அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால்
தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.


18 ஆனால், "ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல
இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன" என யாராவது சொல்லலாம்.
அதற்கு என் பதில்:
செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள்.
நானோ என் செயல்களின் அடிப்படையில்
நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
19 கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான்.
பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன.
20 அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என
நான் எடுத்துக்காட்ட வேண்டுமா?
21 நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள்.
தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது
அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்? [3]
22 அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும்,
செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும்
இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா?


23 "ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்.
அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்" [4]


என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.
மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார்.
24 எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல,
செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது.


25 அவ்வாறே, இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று
வேறு வழியாக அனுப்பியபோது,
செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்! [5]


26 உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே.


குறிப்புகள்

[1] 2:8 = லேவி 19:18.
[2] 2:11 = விப 20:13,14; இச 5:17,18.
[3] 2:21 = தொநூ 22:1-14.
[4] 2:23 = தொநூ 15:6; 2 குறி 20:7; எசா 41:8.
[5] 2:25 = யோசு 2:1-21.

அதிகாரம் 3[தொகு]

நாவடக்கம்[தொகு]


1 என் சகோதர சகோதரிகளே,
உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம்.
போதகர்களாகிய நாங்கள் மிகக் கண்டிப்பான
தீர்ப்புக்கு உள்ளாக வேண்டுமென உங்களுக்குத் தெரியும்.
2 நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம்.
பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர்.
அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்தவல்லவர்கள்.
3 குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம்.
இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம்.
4 கப்பல்களைப் பாருங்கள்.
அவை எத்துணை பெரியனவாக இருந்தாலும்ட,
கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும்,
கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக் கொண்டு
தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர்.
5அ மனித நாவும் அதைப்போல ஒரு சிறிய உறுப்புதான்.
ஆனால் பெரிய காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமையடிக்கிறது.
5ஆ பாருங்கள், சிறியதொரு தீப்பொறி
எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது.
6 நாவும் தீயைப் போன்றதுதான்.
நெறிகெட்ட உலகின் உருவே அது.
நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா
நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது.
அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது;
எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது.
7 காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன
ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர்.
8 ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது;
சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது.
9 தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே;
கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே. [*]
10 போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன.
என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.
11 ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?
12 என் அன்பர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும்
திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா?
அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது.

மெய்ஞ்ஞானம்[தொகு]


13 உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால்,
ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும்.
14 உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும்
கட்சி மனப்பான்மையும் இருக்குமானால்
அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்.
உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம்.
15 இத்தகைய ஞானம் விண்ணிலிருந்து வருவது அல்ல;
மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு சார்ந்தது;
16 பேய்த் தன்மை வாய்ந்தது.
பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில்
குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும்.
17 விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும்.
மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்;
இணங்கிப் போகும் தன்மையுடையது;
இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது;
நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது.
18 அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து
நீதியென்னும் கனி விளைகிறது.


குறிப்பு

[*] 3:9 = தொநூ 1:26.


(தொடர்ச்சி): யாக்கோபு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 4 முதல் 5 வரை