திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 14 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து

அதிகாரம் 14 நீர்க்கோவை நோயாளி குணமடைதல்1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.2 அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.3 இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, ' ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா? ' என்று கேட்டார்.4 அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.5 பிறகு அவர்களை நோக்கி, ' உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா? ' என்று கேட்டார்.6 அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.


விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதன7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:8 ' ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.


பெரிய விருந்து உவமை(மத் 22:1 - 10) 15 இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், ' இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர் ' என்றார்.16 இயேசு அவரிடம் கூறியது: ' ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார்.17 விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ' வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது ' என்று சொன்னார்.18 அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், ' வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ' என்றார்.19 ' நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ' என்றார் வேறொருவர்.20 ' எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது ' என்றார் மற்றொருவர்.21 பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ' நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும் ' , என்றார்.22 பின்பு பணியாளர், ' தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது ' என்றார்.23 தலைவர் தம் பணியாளரை நோக்கி, ' நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும்.24 அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன் ' என்றார். '


இயேசுவின் சீடர் யார்?(மத் 10:37 - 38) 25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.


உவர்ப்பற்ற உப்பும்(மத் 5:13; மாற் 9:50) 34 ' உப்பு நல்லது; ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?35 அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது. அது வெளியே கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ' .

அதிகாரம் 15


காணாமற்போன ஆடு பற்றிய உவமை(மத் 18:12 - 14) 1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:4 ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார்.7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.


காணாமற்போன திராக்மா உவமை8 'பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?ஒரு திராக்மா என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இனையான கிரேக்க வெள்ளி நாணயம். 9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார்.10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். '


காணாமற்போன மகன் உவமை11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17 அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '

அதிகாரம் 16


முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார்.7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.'நூறு கோரோசு' என்பது கிரேக்க பாடம். 8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '


திருச்சட்டமும் இறையாட்சியும்(மத் 11:12 - 13) 14 பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.15 அவர் அவர்களிடம் கூறியது: ' நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.16 திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்.17 திருச்சட்டத்திலுள்ள ஓர் எழுத்தின் கொம்பு அழிவதைவிட விண்ணும் மண்ணும் ஒழிவது எளிதாகும்.18 ' தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.


செல்வரும் இலாசரும்19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '

அதிகாரம் 17


இயேசுவின் அறிவுரைகள்(மத் 18:6 - 9; மாற் 9:42 - 48) 1 இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ' பாவச்சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு!2 அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.3 எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.4 ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ' நான் மனம் மாறிவிட்டேன் ' என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள். ' 5 திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ' எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் ' என்று கேட்டார்கள்.6 அதற்கு ஆண்டவர் கூறியது: ' கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ' நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில் ' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.7 ' உங்கள் பணியாளர் உழுது விட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ' நீர் உடனே வந்து உணவருந்த அமரும் ' என்று உங்களில் எவராவது சொல்வாரா?8 மாறாக, ' எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம் ' என்று சொல்வாரல்லவா?9 தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?10 அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ' நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் ' எனச் சொல்லுங்கள். '


பத்து தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார்.19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.


இறையாட்சி வருதல்(மத் 24:23 - 28, 37 - 41) 20 இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, ' இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.21 இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது ' என்றார்.22 பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: ' ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.23 அவர்கள் உங்களிடம், ' இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! ' என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்.24 வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.25 ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.26 நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்.27 நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.28 அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.29 லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.30 மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.31 ' அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.33 தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்.34 நான் உங்களுக்குச் சொல்கிறேன்: அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.35 இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.36 (இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.)' அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனம் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 37 அவர்கள் இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, இது எங்கே நிகழும்? ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும் ' என்றார்.

அதிகாரம் 18


நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.


பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.


சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்(மத் 19:13 - 15; மாற் 10:13 - 16) 15 குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர்.16 ஆனால் இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து, ' சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.17 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று சீடர்களிடம் கூறினார்.


இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான தலைவர்(மத் 19:16 - 30; மாற் 10:17 - 31) 18 அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம், ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்.19 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே!20 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? விபசாரம் செய்யாதே. கொலை செய்யாதே. களவு செய்யாதே. பொய்ச் சான்று சொல்லாதே. உன் தாய் தந்தையை மதித்து நட ' என்றார்.21 அவர், ' இவை அனைத்தையும் நான் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன் ' என்றார்.22 இதைக் கேட்ட இயேசு அவரிடம், ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ' என்றார்.23 இவற்றைக் கேட்டு அவர் மிகவும் வருத்தமுற்றார். ஏனெனில் அவர் மிகுந்த செல்வம் உடையராய் இருந்தார்.24 அவர் மிகவும் வருத்தமுற்றதைப் பார்த்த இயேசு, ' செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது எவ்வளவு கடினம்!25 செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ' என்றார்.26 இதைக் கேட்டவர்கள், ' பின் யார்தான் மீட்புப் பெற முடியும்? ' என்று கேட்டார்கள்.27 இயேசு, ' மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும் ' என்றார்.28 பேதுரு அவரிடம், ' பாரும், எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்பற்றினோமே ' என்றார்.29 அதற்கு அவர் அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும் 30 இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார் ' என்றார்.


இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்(மத் 20:17 - 19; மாற் 10:32 - 34) 31 இயேசு பன்னிருவரையும் தம் அருகில் அழைத்து, அவர்களிடம், ' இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்; மானிடமகனைப் பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை யாவும் நிறைவேறும்.32 அவர் பிற இனத்தவரிடம் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து அவமானப்படுத்தி அவர் மீது துப்புவார்கள்.33 அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்துக் கொலை செய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார் ' என்றார்.34 இவற்றில் எதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் கூறியது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது. ஏனெனில், அவர் சொன்னது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை.


பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுதல்(மத் 20:29 - 34; மாற் 10:46 - 52) 35 இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.36 மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், ' இது என்ன? ' என்று வினவினார்.37 நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.38 உடனே அவர், ' இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று கூக்குரலிட்டார்.39 முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், ' தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.40 இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும்,41 ' நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர் ' என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், ' ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் ' என்றார்.42 இயேசு அவரிடம், ' பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்றார்.43 அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.