திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 19 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து

அதிகாரம் 19


இயேசுவும் சக்கேயுவும் 1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் ' என்றார்.6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.7 இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர்.8 சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார்.9 இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் ' என்று சொன்னார்.


மினா நாணய உவமை (மத் 25:14 - 30) 11 இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:12 ' உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார்.13 அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, 'நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார்.ஒரு 'மினா' என்பது நூறு திராக்மா மதிப்புள்ள நாணயம். ஒரு திராக்மா என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இனையான கிரேக்க வெள்ளி நாணயம். 14 அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ' இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை ' என்று சொல்லித் தூது அனுப்பினர்.15 இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.16 முதலாம் பணியாளர் வந்து, ' ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன் ' என்றார்.17 அதற்கு அவர் அவரிடம், ' நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும் ' என்றார்.18 இரண்டாம் பணியாளர் வந்து, ' ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன் ' என்றார்.19 அவர், ' எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும் ' என்று அவரிடமும் சொன்னார்.20 வேறொருவர் வந்து, ' ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன்.21 ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர் ' என்றார்.22 அதற்கு அவர் அவரிடம், ' பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா?23 அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே ' என்றார்.24 பின்பு அருகில் நின்றவர்களிடம், ' அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள் ' என்றார்.25 அதற்கு அவர்கள், ' ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே ' என்றார்கள்.26 அவரோ, ' உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் ' என உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.27 மேலும் அவர், ' நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள் ' என்று சொன்னார். '


6. எருசலேம் பணி வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல் (மத் 21:1 - 11; மாற் 11:1 - 11; யோவா 12:12 - 19) 28 இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.29 ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார்.30 அப்போது அவர் அவர்களிடம், ' எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.31 யாராவது உங்களிடம், ' ஏன் அவிழ்க்கிறீர்கள்? ' என்று கேட்டால், ' இது ஆண்டவருக்குத் தேவை ' எனச் சொல்லுங்கள் ' என்றார்.32 அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள்.33 அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், ' கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார்கள்.34 அதற்கு அவர்கள், ' இது ஆண்டவருக்குத் தேவை ' என்றார்கள்;35 பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள்.36 அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள்.37 இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்;38 ' ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக! ' என்றனர்.39 அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, ' போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும் ' என்றனர்.40 அதற்கு அவர் மறுமொழியாக, ' இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.41 இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.42 ' இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.43 ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்;44 உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரை மட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை ' என்றார்.


இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல் (மத் 21:12 - 17; மாற் 11:15 - 19; யோவா 2:13 - 22) 45 இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.46 அவர்களிடம், ' என் இல்லம் இறைவேண்டலின் வீடு ' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள் ' என்று கூறினார்.47 இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள்.48 ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

அதிகாரம் 20


இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால் (மத் 21:23 - 27; மாற் 11:27 - 33) 1 ஒருநாள் இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருந்தபோது தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அங்கு வந்தார்கள்.2 அவர்கள் அவரை நோக்கி, ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும் ' என்றார்கள்.3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள்.4 திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? ' என்று கேட்டார்.5 அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை? ' எனக் கேட்பார்;6 ' மனிதரிடமிருந்து வந்தது ' என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர் ″ என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.7 எனவே அவர்கள், ' எங்கிருந்து வந்தது எனத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள்.8 இயேசுவும் அவர்களிடம், ' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் ' என்றார்.


கொடிய குத்தகைக்காரர் உவமை (மத் 21:33 - 46; மாற் 12:1 - 12) 9 பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்: ' ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார்.10 பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.11 மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.12 மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர்.13 பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், ' நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள் ' என்று சொல்லிக்கொண்டார்.14 தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும் ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.15 எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்?16 அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார். ' அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், ' ஐயோ! அப்படி நடக்கக் கூடாது ' என்றார்கள்.17 ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று ' என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?18 அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார்; அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார் ' என்றார்.19 மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும் தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்களுக்கு அஞ்சினார்கள்.


சீசருக்கு வரி செலுத்துதல் (மத் 22:15 - 22; மாற் 12:13 - 17) 20 ஆகவே அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்; நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண ஒற்றர்களை அனுப்பி வைத்தார்கள்; அவரை ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஒப்புவிப்பதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.21 ஒற்றர்கள் அவரிடம், ' போதகரே, நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே. நீர் ஆள் பார்த்துச் செயல்படாதவர்; கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்.22 சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா? ' என்று கேட்டார்கள்;23 அவர்களுடைய சூழ்ச்சியை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களிடம்,24 'ஒரு தெனாரியத்தை எனக்குக் காட்டுங்கள்; இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?' என்று கேட்டார். அவர்கள், 'சீசருடையவை' என்றார்கள்.ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இனையான உரோமை வெள்ளி நாணயம். 25 அவர் அவர்களை நோக்கி, ' அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்று சொன்னார்.26 மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை; அவருடைய மறுமொழியைக் கண்டு அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.


உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி (மத் 22:23 - 33; மாற் 12:18 - 27) 27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.30 இரண்டாம்,31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? ' என்று கேட்டனர்.34 அதற்கு இயேசு அவர்களிடம், ' இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ' ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று கூறியிருக்கிறார்.38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே ' என்றார்.39 மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, ' போதகரே, நன்றாகச் சொன்னீர் ' என்றனர்.40 அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.


தாவீதின் மகன் பற்றிய விளக்கம் (மத் 22:41 - 46; மாற் 12:35 - 37) 41 அப்போது இயேசு அவர்களை நோக்கி, ' மெசியா தாவீதின் மகன் என்று கூறுவது எப்படி?42 ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில், ' ஆண்டவர், என் தலைவரிடம்,43 ' நான் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் ' என்றுரைத்தார் ' எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?44 எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி? ' என்று கேட்டார்.


மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை (மத் 23:1 - 36; மாற் 12:38 - 40, லூக் 11:37 - 54) 45 மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோது இயேசு தம் சீடர்களிடம்,46 ' மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால் அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் விரும்புகிறார்கள். 47 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல் நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே ' என்றார்.

அதிகாரம் 21


ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை (மத் 12:41 - 44) 1 இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.2 வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.இங்கு 'காசு' என்பது ஒரு தெனாரியத்தில் 1|128 பகுதி மதிப்புடைய 'லெப்டாமன்' ஆகும். 3 அவர் ' இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.4 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ' என்றார்.


எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல் (மத் 24:1 - 2; மாற் 13:1 - 2) 5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.


வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல் (மத் 24:3 - 14; மாற் 13:3 - 13) 7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.


எருசலேம் அழிவு பற்றி முன்னறிவிப்பு (மத் 24:15 - 28; மாற் 13:14 - 19) 20 ' எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.21 அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம்.22 ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.23 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும்.24 அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.


மானிடமகன் வருகை (மத் 24:32 - 35; மாற் 13:24 - 27) 25 ' மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.26 உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.27 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. '


அத்தி மர உவமை (மத் 24:32 - 35; மாற் 13:28 - 31) 29 இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்: ' அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள்.30 அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.31 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.32 அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.33 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. '


மானிடமகன் வரும் நாள் 34 மேலும் இயேசு, ' உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.35 மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.36 ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் ' என்றார்.37 இயேசு பகல் நேரங்களில் கோவிலில் கற்பித்துவந்தார். இரவு நேரங்களிலோ ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று தங்கி வந்தார்.38 எல்லா மக்களும் கோவிலில் அவர் சொல்வதைக் கேட்கக் காலையிலேயே அவரிடம் வருவார்கள்.

அதிகாரம் 22


7. இயேசு துன்புற்று இறந்து உயிர்த்தெழுதலும் விண்ணேற்றமடைதலும் இயேசுவைக் கொல்ல சதித்திட்டம் (மத் 26:1 - 5, 14 - 16; மாற் 14:1 - 2, 10 - 11; யோவா 11:45 - 53) 1 அப்போது பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நெருங்கி வந்தது.2 தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு கொலை செய்யலாமென்று வழி தேடிக்கொண்டிருந்தனர்; ஏனெனில் மக்களுக்கு அஞ்சினர்.3 அந்நேரத்தில் பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்தான்.4 யூதாசு தலைமைக் குருக்களிடமும் காவல் தலைவர்களிடமும் சென்று அவர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்து பேசினான்.5 அவர்கள் மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.6 அவனும் அதற்கு ஒத்துக்கொண்டு மக்கள் கூட்டம் இல்லாதபோது, அவர்களிடம் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்.


பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல் (மத் 26:17 - 25; மாற் 14:12 - 21; யோவா 13:21 - 30) 7 புளிப்பற்ற அப்ப விழாக்கொண்டாடும் நாளும் வந்தது. அன்றுதான் பாஸ்கா ஆடு பலியிடப்பட வேண்டும்.8 இயேசு பேதுருவிடம் யோவானிடமும், ' நாம் பாஸ்கா விருந்துண்ண நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள் ' என்று சொல்லி அனுப்பினார்.9 அதற்கு அவர்கள், ' நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டிற்குள் நீங்களும் சென்று,11 அந்த வீட்டின் உரிமையாளரிடம், ' நான் என் சீடர்களோடு பாஸ்காவிருந்து உண்பதற்கான அறை எங்கே? என்று போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார் ' எனக் கூறுங்கள்.12 அவர் மேல்மாடியில் தேவையான வசதிகள் அமைந்த ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அங்கே ஏற்பாடு செய்யுங்கள் ' என்றார்.13 அவர்கள் சென்று தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு, பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.


ஆண்டவரின் திருவிருந்து (மத் 26:26 - 30; மாற் 14:22 - 26; 1கொரி 11:23 - 25) 14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.15 அப்போது அவர் அவர்களை நோக்கி, ' நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.16 ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.17 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், ' இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.18 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்றார்.20 அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, ' இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.21 என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.22 மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு ' என்றார்.23 அப்பொழுது அவர்கள், ' நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார் ' என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.


யார் பெரியவர்? 24 மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.25 இயேசு அவர்களிடம், ' பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.26 ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.27 யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.28 நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.29 என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.30 ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.


பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல் (மத் 26:31 - 35; மாற் 14:27 - 31; யோவா 13:36 - 38) 31 ' சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.32 ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து ' என்றார்.33 அதற்கு பேதுரு, ' ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன் ' என்றார்.34 இயேசு அவரிடம், ' பேதுருவே, இன்றிரவு, ″ என்னைத் தெரியாது ″ என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.


பணப்பையும் வாளும் 35 இயேசு சீடர்களிடம், ' நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா? ' என்று கேட்டார். அவர்கள், ' ஒரு குறையும் இருந்ததில்லை ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.37 ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ' கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார் ' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன ' என்றார்.38 அவர்கள் ' ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன ' என்றார்கள். இயேசு அவர்களிடம், ' போதும் ' என்றார்.


ஒலிவ மலையில் இயேசு (மத் 26:36 - 46; மாற் 14:32 - 42) 39 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.40 அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், ' சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், ' என்றார்.41 பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்;42 ' தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ' என்று கூறினார்.43 (அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.)அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 45 அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.46 அவர்களிடம், ' என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார்.


இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும் (மத் 26:47 - 56; மாற் 14:43 - 50; யோவா 18:3 - 11) 47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.48 இயேசு அவனிடம், ' யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? ' என்றார்.49 அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, ' ஆண்டவரே, வாளால் வெட்டலாமா? ' என்று கேட்டார்கள்.50 அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.51 இயேசு அவர்களைப் பார்த்து, ' விடுங்கள், போதும் ' என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.52 அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, ' ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்?53 நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது ' என்றார்.


பேதுரு மறுதலித்தல் (மத் 26:57 - 58, 69 - 75; மாற் 14:53 - 54, 66 -72; யோவா 18:15 - 18, 25 - 27) 54 பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.55 வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.56 அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, ' இவனும் அவனோடு இருந்தவன் ' என்றார்.57 அவரோ, ' அம்மா, அவரை எனக்குத் தெரியாது ' என்று மறுதலித்தார்.58 சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், ' நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ' என்றார். பேதுரு, ' இல்லையப்பா ' என்றார்.59 ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், ' உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான் ' என்று வலியுறுத்திக் கூறினார்.60 பேதுருவோ, ' நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது ' என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.61 ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; ' இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,62 வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.


இயேசுவை ஏளனம் செய்தல் (மத் 26:67 - 68; மாற் 14:65) 63 இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.64 அவரது முகத்தை மூடி, ' உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல் ' என்று கேட்டார்கள்.65 இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.


தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு (மத் 26:59 - 66; மாற் 14:55 - 64; யோவா 18:19 - 24) 66 பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.67 அவர்கள், ' நீ மெசியா தானா? எங்களிடம் சொல் ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;68 நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.69 இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார் ' என்றார்.70 அதற்கு அவர்கள் அனைவரும், ' அப்படியானால் நீ இறைமகனா? ' என்று கேட்டனர். அவரோ, ' நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள் ' என்று அவர்களுக்குச் சொன்னார்.71 அதற்கு அவர்கள், ' இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே ' என்றார்கள்.

அதிகாரம் 23


இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல் (மத் 27:1 - 2, 11 - 14; மாற் 15:1 - 5; யோவா 18:28 - 38) 1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.3 பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க, அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார்.4 பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ' இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை ' என்று கூறினான்.5 ஆனால் அவர்கள், ' இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான் ' என்று வலியுறுத்திக் கூறினார்கள்.


ஏரோது முன்னிலையில் இயேசு 6 இதைக் கேட்ட பிலாத்து, ' இவன் கலிலேயனா? ' என்று கேட்டான்;7 அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.8 இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.9 அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.10 அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.11 ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.12 அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.


இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல் (மத் 27:15 - 26; மாற் 15:6 - 15; யோவா 18:39 - 19:16) 13 பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.14 அவர்களை நோக்கி, ' மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.15 ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.16 எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் ' என்றான்.17 (விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.)அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனம் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 18 திரண்டிருந்த மக்கள் அனைவரும், ' இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும் ' என்று கத்தினர்.19 பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.21 ஆனால் அவர்கள், ' அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள்.22 மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, ' இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் ' என்றான்.23 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.24 அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.25 கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.


இயேசுவைச் சிலுவையில் அறைதல் (மத் 27:32 - 44; மாற் 15:21 - 32; யோவா 19:17 - 27) 26 அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.27 பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.28 இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, ' எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.29 ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது ' மலடிகள் பேறுபெற்றோர் ' என்றும் ' பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் ' என்றும் சொல்வார்கள்.30 அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ' எங்கள் மேல் விழுங்கள் ' எனவும் குன்றுகளைப் பார்த்து, ' எங்களை மூடிக்கொள்ளுங்கள் ' எனவும் சொல்வார்கள்.31 பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்! ' என்றார்.32 வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.33 மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.34 அப்போது (இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' என்று சொன்னார். ) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.அடைப்புக் குறிக்குள் உள்ள சொற்றொடர் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள்.36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர்.38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான்.40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான்.42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான்.43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார்.44 ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.45 கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.46 ' தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.47 இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், ' இவர் உண்மையாகவே நேர்மையாளர் ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.48 இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.49 அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


இயேசுவின் அடக்கம் (மத் 27:57 - 61; மாற் 15:42 - 47; யோவா 19:38 - 42) 50 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.51 தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.52 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.53 அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.54 அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம்.'ஆயத்த நாள்' என்பது ஓய்வுநாளுக்கு முந்திய நாளைக் குறிக்கிறது. 55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,56 திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

அதிகாரம் 24


இயேசு உயிர் பெற்று எழுதல் (மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; யோவா 20:1 - 10) 1 வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;2 கல்லறை வாயிலிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.4 அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.5 இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, ' உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.7 மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே ' என்றார்கள்.8 அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு9 கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள்.10 அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள்.11 அவர்கள் கூற்றுவெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை.12 ஆனால் பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.


எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல் (மாற் 16:12 - 13) 13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. 'அறுபது ஸ்தாதியம்' என்பது கிரேக்க பாடம். 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார்.19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள்.25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார்.27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள்.33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள்.35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.


இயேசு சீடருக்குத் தோன்றுதல் (மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; யோவா 20:19 - 23; திப 1:6 - 8) 36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார்.37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38 அதற்கு அவர், ' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்;40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார்.42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்;45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46 அவர் அவர்களிடம், ' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் ' என்றார்.


இயேசு விண்ணேற்றம் அடைதல் (மற் 16:19 - 20; திப 1:9 - 11) 50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.